தவசிகள்

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

முனைவர். செண்பகம் ராமசுவாமி


கூட்டம் மெளனமாகிக் கிடப்பது ஒரு அரிய காட்சிதான்!

எவ்வளவு உரக்கக் கூக்க்குரலிட்டும் ஆரவாரித்தும் திரியக் கூடிய ஒரு மனிதக்கூட்டம் இது! ஓசையிட்டே வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கரைத்துக் கொண்டிருக்கும் சப்தக்கூட்டமல்லவா இது! எவ்வளவு அடங்கிப்போய், ஜீவனிருப்பதற்கு அடையாளமான மூச்சின் அசைவு தவிர, சடங்களாய், அசைவற்று இவர்கள் வீறிருக்கின்றனர்.

அவர்களின் பக்கத்தே ஓடும் ஆறுகூடச் சலசலக்காது அமைதியாகவே நடந்து கொண்டிருந்தது.

அவர்கள் எல்லோருமே தவசிகள்! அமைதியாக வாழ்வதென்று சங்கல்பமெடுத்து வந்தவர்கள்.

கிடைக்கும் வசதிகளைப் போட்டியின்றிப் பகிர்ந்துகொண்டு, ‘மனம் அமைதி பெறுக ‘ ‘உலகம் வாழ்க ‘ – எனத் துதி பாடியபடி ஒரு கூட்டு வாழ்க்கை நடத்துபவர்கள்.

இவர்களுக்கு ஒரு குருநாதன் இருக்கிறார்.

தன்னைக் குருவாக நினைக்காது, அவர்களில் ஒருவனாகவே பாவித்துக்கொண்டு, ஒரு தோழமையுணர்வுடன், அனைவரையும் அரவணைத்துச்செல்லும் அன்புமயமான குருநாதர் இவர்.

இவரிடம் மந்திர தந்திரங்கள் இல்லை. உலகத்துள் இவையெல்லாம் இல்லை. இவற்றுக்குத் தேவையுமில்லை என்பவர் இவர். உலக நேசிப்பும் மன அமைதியுமே இவர் கற்றுத் தரும் ஞான பாடங்கள்.

தவசிகள் அனைவரும் பிரபஞ்சத்தின் அமைதியான அங்கங்களாக வாழ்ந்துகொண்டு பிரபஞ்ச வாழ்வை அறிய முயன்றுகொண்டிருந்தார்கள். இந்தக்கூட்டு வாழ்வில் கலந்து கொண்டிருக்கும் 48 தவசிகளும் உலகப் பரப்பின் ஏதேதோ மூலைகளிலிருந்து வந்து இணைந்தவர்கள்.

இவர்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்துப்போனது. திரும்பவும் ஊர் வாழ்க்கையில் இணையும் ஆர்வம் இவர்கள் யாருக்குமே தோன்றாமல் போனதும் ஒரு அதிசயம்தான்!

குருநாதர் அடிக்கடி சொல்லுவார், ‘நண்பர்களே! இது ஒரு கட்டாய வாழ்க்கையில்லை. நாமாக விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது. எந்த நிமிடத்தில் உங்களில் யாருக்காவது சலிப்புத் தோன்றுகிறதோ, அவர்கள் உடனே ஊருக்குள் போய்விடலாம். என்னிடம் சொல்லவேண்டுமென்பதுகூட இல்லை. அந்தப் புன்னை மரத்தில் ஒரு கோடு இழுத்துவிட்டுப் போய்விடுங்கள் ‘. ஆனால் புன்னை மரத்தில் கோடு கிழிக்கப் படவே இல்லை.

ஒரு இலையுதிர்காலத்தில் தவசிகள் வழக்கம்போல விறகுக்குச்சிகளைச் சேமித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு தவசி சொல்வான்: ‘நமக்கென்று தனித் தேவைகளே இல்லையே. தனித் தேவைகளும் போட்டிகளும் ஏற்படுமானால் கிடைத்தவர்க்கு ஆனந்தமும் கிடைக்காதவர்க்குச் சலிப்பும் ஏற்படும். ‘

‘உண்மைதான்! உண்மைதான்! ‘ என்று எல்லோரும் ஆமோதித்தார்கள். அவர்களுக்குள் தனித்தேவைகளும் போட்டிகளும் ஏற்படும்படியாக, ஒருநாள் அவர்களுக்கு அருவிவழியே சின்னஞ்சிறு பெண் கிடைத்தாள். அவள் பூமிக்கு வந்து நான்கு வருடங்கள் கூட இருக்காது.

அருவி வழியே ஏன் வந்தாள், எப்படி வந்தாள் என்பது அவள் உட்பட எல்லோருக்கும் ஒரு புதிராகவே போய்விட்டது.

தவசிகளுக்கு இவள் மிகவும் பிடித்தமான வளர்ப்புப் பிராணியாகி விடவே, தவசிகள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஓர் இனிமை படர்வதை உணர்ந்தார்கள்.

ஊருக்குள் சென்று குழந்தை ஏதாவது காணாமல் போனதா என்று அறிந்து வரச் சொன்னார் ஞானகுரு.

உருப்படியான தகவலில்லை. குழந்தை தவசிகளின் சொத்தாகிவிட்டது.

பெண் வளர வளர தவசிகளிடையே அவள் வழிபடு பொருளாகிவிட்டாள். ஞானகுருவின் அன்றாட உபதேசங்களில் பெண் என்னும் ஆதிசக்தியின் விழிவிரிப்பில்தான் உலகம் தவழத் தொடங்கியது என்பதும், பெண்ணைக் கடவுளாகப் பார்ப்பது மட்டுமே தவசிகளின் உயிர்க்கொள்கை என்பதும் இடம்பெறலாகின.

பெண் புஷ்பவதியானாள். மணலளவும் விகற்பமில்லாது தவசிகளிடம் அவள் இதை வெளியிட்டாள்.

தவசிகள் தங்கள் தங்கள் குடும்பப்பெண்களை நினைத்துக் கொண்டனர். ‘தெய்வம் கூடப் பருவம் அடையுமா ? ‘- என்பதாக எல்லாத் தவசிகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆனாலும் பெண்ணை வழிபடுவது மூர்க்கத்தனமாக வளர்ந்து கொண்டு போனது. இந்த மூர்க்க அபிஷேகத்தில், வழிபாட்டில், பெண்ணின் ஆணவம் அளவில்லாமல் வளர்ந்து போனது. அவள் இட்டதே அக்காட்டின் சட்டமாயிற்று. ஆனாலும் பெண்ணைத் தொட்டு வணங்க யாருக்கும் துணிவில்லை. அவளின் பார்வைப் பரிவுக்கு எல்லோருமே தியானம் செய்தார்கள்.

அவள் ஒரு தவசியைப் பார்த்துச்சிரித்தால், மற்றவர்கள் புகைந்து போனார்கள். ஞானகுருவிடம் அவள் அறிவைத் துளாவினால், குருநிந்தனை கூடச் செய்யத் தலைப் பட்டார்கள்.

தாமரைப் பூ வேண்டுமென்றால் 48 தலைகள் தடாகத்தில் தெரிந்தன.

அன்னை கேட்கிறாள்!

இவையே அவர்கள் சத்தமாகச் சொல்லிக் கொண்டவை.

அவளின் காலடியில் பூக்கள் கொட்டப்பட்டன.

அவளின் பாதங்கள் பட்ட மண்ணை நாள்தோறும் பூஜைப் பொருளாக தலையில் தெளித்துக் கொண்டனர்.

சக்தி வழிபாடு உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பொழுது, பெண் மெல்ல ஒருநாள் ‘தவசிகளே எனக்கொரு நாதன் வேண்டும் ‘ என்றாள்.

தவசிகள் சிறிதுநேரம் மூச்சடைத்துப் போனார்கள்.

‘எங்களில் ஒருவர் ‘… என்ற ஈனக்குரல் வந்த திக்கை நோக்கி அவள் வெறித்த விதத்தில் எல்லோரும் அடங்கிப் போனார்கள். ‘நீங்கள் என் அடிமைகள், என்னுடைய பக்தர்கள் ‘ – அந்தப் பார்வையின் மொழி அவர்களுக்குப் புரிந்து விடவே அவர்கள் அமைதியாகக் கலைந்தார்கள்.

மறுநாள் புன்னை மரத்தில் நாற்பத்தேழு கோடுகள் போடப்பட்டிருந்தன.

நாற்பத்தெட்டாவது கோட்டை வரையப் போன ஞானகுருவைப் பெண் அழைத்தாள்.

‘உம்மை நான் ஆட்கொள்கிறேன் ‘.

வருடங்கள் கழித்து, பழைய தவசிகளில் சிலரும் புதுத் தவசிகள் சிலரும் ஒன்றுகூடி, காடு வந்த பொழுது, காடு ஓர் ஊராகிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.

அவர்கள் தவசிகள்! இது கண்டு மனம் சலிக்கவில்லை.

அவர்கள் புதியதொரு காட்டை நோக்கிப் புறப்பட்டுப் போனார்கள். புதியதொரு ஞானகுருவுடன்.

ஞானகுரு சொல்வார்: ‘ஏதாவது சோதனை வரும் வரை தவசிகளாக இருப்பதில் சிரமமேயில்லை. ‘

***

Series Navigation

முனைவர் செண்பகம் ராமசுவாமி

முனைவர் செண்பகம் ராமசுவாமி