தமிழ் மீடியாவும் கூப்பாடும்

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

ஆர் கே


தலைப்பிற்கு மன்னிக்கவும். அது எந்த வகையிலும் நான் மிக மரியாதை கொண்டுள்ள தமிழுக்கோ அல்லது நிஜ தமிழர்களுக்கோ விடும் பாணமல்ல. ஆனால் தமிழரென்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டையே சிறிது சிறிதாக சுரண்டி, கலப்படம் செய்து அதன் பயனாக பெரும்பாலான தமிழர்கள் தங்கள் நிஜ அடையாளம் எது எனத் தெரியாத நிலைக்கு ஆக்கிய புண்ணியவான்களைத் தான் சாடுகிறது இத்தலைப்பு.

முதலில் திரைப்படம்.

‘டேய்ய்ய் வாஆடா’ எனக் கத்தும் நடிகர் யார்? எனக் கேட்டால் தமிழன் குழம்பி விடுவான். ஏனென்றால் எல்லாருமே அப்படித்தான் கத்துகிறார்கள். அது கதாநாயகனாகட்டும், நாயகியாகட்டும், மிக முக்கியமாக நகைச்சுவை நடிகர்கள் (!) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நபர்களாகட்டும், இவர்களால் கத்தாமல் ஒரு காட்சியில் நடிக்க முடியாது. எந்த நகைச்சுவைக் காட்சியானாலும் அது கடைசியில் அடி உதையில் தான் போய் முடிய வேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழரும் எதிர்பார்க்கிறார். அது அவ்வாறு முடியாமல் போனால் அவர் படும் ஏமாற்றம் கொஞ்சநஞ்சமல்ல.

நகைச்சுவை காட்சியில் அடி உதை இன்றியமையாதது என்பதைத் தமிழ் திரைப்பட உலகம் ஏனோ மிக ஆழமாக நம்புகிறது. அவ்வாறு முடியாத காட்சிகள் ஒரு முழுமையடைந்ததாகவே உணர முடியவில்லை அவர்களால்.
ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் ஆரம்பத்தில் வெகு நேர்த்தியாக பரிமளித்துப் பின் இந்த அடி உதை கலாச்சாரத்தில் போய் விழுந்து விடுவார்.

விளைவு?

தமிழன் வெகு நன்றாக பாடம் படிப்பவன். இதையெல்லாம் அவன் வெகு வேகமாகக் கற்றுக் கொண்டு விடுவான். ஏதாவது கல்லூரி வாசலில் போய் நின்று பாருங்கள் (சட்டக் கல்லூரி வேண்டாம்). மிக நெருங்கிய நண்பர்கள் சிலர் கூடிப் பேசிக் கொண்டிருக்கையில் யாராவது ஒருவர் கை நீட்டாமல் பேசினால் அன்று மழை பெய்யும் என உறுதியாகக் கூறலாம்.

நம்புங்கள். நான் பல திரையரங்குகளில் என் நண்பர்கள் வற்புறுத்தலுக்கேற்ப சென்று தலைவலியில் அவதிப்பட்டிருக்கிறேன். அவர்கள் அனைவரும் இத்தகைய உலகப் பிரசித்தி (!) பெற்ற காட்சிகளில் வவுரு நோக சிரிக்கையில் நான் ஏதடா இது கஷ்ட காலம் என்றிருப்பேன். டேய்ய்ய்..இது ஜோக்குடா…! என்று அவர்களால் நினைவுறுத்தப்பட்டு (!) ஒரு மாதிரியாகவும் பார்க்கப்பட்டேன்.

(நான் பல பாடாவதி ஹிந்திப் படங்களைப் பார்த்துமிருக்கிறேன் என்பது தனிக் கதை)

மொழி போன்ற படங்கள் இதற்கு விதிவிலக்கு. சமீபத்தில் கூப்பாடுக் காட்சிகள் இல்லாமல் வெளிவந்த படம் அது ஒன்றே, எனக்குத் தெரிந்த வரை.

அடுத்தது சின்னத்திரை

திரைப்படங்களுக்குச் சற்றும் குறைவில்லாத, சில சமயங்களில் அதை மிஞ்சும் அளவிற்குக் கூப்பாடு போடுவது சின்னத்திரை. தமிழ் விளம்பரங்கள் (மொழிபெயர்ப்பு வரிசைகள், மற்றும் சில நிஜமான நல்ல விளம்பரங்கள் நீங்கலாக) பலவற்றில் தெரியும் இந்த வகை வகையான கூப்பாடு.

உதாரணத்திற்கு ஒரு டிஷ் டீவி (இன்னும் இதற்கு பொன்னான தமிழ் மொழிபெயர்ப்பு வரவில்லையென நினைக்கிறேன். ஒரு வேளை தட்டுச் சின்னத்திரை அல்லது பாத்திரச் சின்னத்திரை, வானியங்கித் தட்டு என்று மேதாவித்தனமான பெயர்கள் வந்தாலும் வரலாம்) விளம்பரம். அதில் அந்த நடிகை போடும் குதியும் ஆட்டமும், அதன் தொடர்ச்சியில் அவர் பாடுவது தமிழிலா அல்லது ஏதாவது கரீபியன் தீவில் வாழும் பழங்குடியினரின் மொழியா என்று தெரியவே தெரியாது. ஆனால் கூப்பாடு மட்டும் கண்டிப்பாக இருக்கும். இதில் வீட்டுக்கு வீடு வேறு கேட்க வேண்டும் இதை!

அதே போல இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக வெளிவரும் முத்தான திரைப்படம் பற்றிய அறிவிப்புகள். இதிலே கும்மிடிப்பூண்டி தாண்டி யாருமே இந்த முத்தான திரைப்படங்களைப் பார்க்க மாட்டார்கள் (சில பல தமிழ் நாட்டிலேயே வாழும் தமிழர்கள் உட்பட) என்பது அவர்களுக்கும் தெரியும். இதில் இந்திய அளவில் விளம்பரம்! அதிலும் அந்த அறிவிப்பாளர் போடும் கூப்பாடு!

வணக்க்க்க்க்க்கம் என்று கடித்துக் குதறிக்கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர்.

நாங்க படிக்கிறது இந்த பேப்பர். அப்போ நீங்க? என்று அனைவரும் சேர்ந்து கூப்பாடு போடுவது எப்படி இருக்கிறது என்று கேளுங்கள், பார்க்காதீர்கள். பிறகு எப்படி இருக்கிறது அது என எண்ணிப் பாருங்கள்.

தொடர் நிகழ்ச்சிகள் பற்றித் தனித் தொடரே எழுதலாம். அதிலும் அவ்வவ்போது யாராவது ஆஆஆஆ என்று பாடத் தொடங்கி வெறுப்பேத்துவார். இதில் ‘மெகா’ என்ற பதத்தைத் தமிழ்ப் படுத்தாமல் விட்டுவிட்டு இப்போது நெடுந்தொடர் என அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலே பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகளின் கூப்பாடு. ஏதோ அந்தப் பண்டிகையே இவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது போல ‘நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள், சுதந்திர தினத்தைப் போற்றுங்கள்’ என்று அறிவுரை வேறு!

தமிழா! உன் இயல்பை விட்டு நீ ஏதோ மாய உலகில் இருக்கின்றாய். உனக்குத் தெரிய வேண்டுமானால் அருமையான பழைய தமிழ் படங்களைப் பார். தெரியும் எப்படிக் கூப்பாடு போடாமல் படமெடுப்பது, எப்படி மரியாதையாகப் பழகுவது, முக்கியமாக, எப்படி நகைச்சுவைக் காட்சிகளின் தரத்தைக் கூட்டுவது என்பதெல்லாம்.

நம் பண்பாடு உலகில் மிகப் பழைமையானது மட்டுமல்ல. மிகச் சிறந்ததும் கூட. இந்திய நாட்டில் சமஸ்க்ருதத்திற்கு இணையான மொழி தமிழ். பகுத்தறிவு சிங்கங்கள் சண்டைக்கு வர வேண்டாம். உலக மொழியாளர்கள் சொன்ன உண்மை இது. தமிழர் மிகச் சிறந்தவர். நம் திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களில் எண்ணிறந்த தமிழ்த் தவப்புதல்வர்களுண்டு. சுப்பிரமணிய பாரதி, கொடி காத்த குமரன், கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமணிய சிவா, வீர வாஞ்சிநாதன் என சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழர் சிறக்காத ஊரில்லை, தொழிலில்லை, தொழில்நுட்பமில்லை, அறிவியலில்லை, இலக்கியமில்லை, இலக்கணமில்லை, வள்ளுவனும் கம்பனுமே இதற்குச் சான்று. கணித மேதை ராமானுஜமே இதற்கு சாட்சி. சமீபத்தில் சந்திராயன் ஏவியவரும் தமிழரே. நமது அப்துல் கலாம் ஒரு தவத் தமிழன்.

நாம் சிறிது விழித்துக் கொண்டு நமது பாரம்பரியப் பெருமையை அணிவதோடு மட்டுமல்லாது அதன்படி வாழத் தலைப் படுவோமாக.

வாழ்க தமிழ். வாழ்க பாரதம். வாழ்க தமிழர். வளர்க அவர்தம் பெருமைகள்!


rkwinner@gmail.com

Series Navigation

ஆர் கே

ஆர் கே