தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

மலர்மன்னன்



(விராட் ஹிந்து சபா மாபெரும் ஹிந்து பேரவை என்னும் அனைத்துலக அமைப்பின் ஆண்டு மாநாடு சென்னையில் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆங்கிலத்தைப் பொது மொழியாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டின் இரண்டு நாட்களும் மலர் மன்னன் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தார். மேலும் தமிழ்ச் சமுதாயத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் என்ற தலைப்பில் தமிழிலேயே ஒரு கருத்தரங்கிற்கும் மாநாட்டில் ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை வகித்ததோடு, தமிழில் தாமே ஒரு கட்டுரையினையும் மலர்மன்னன் படித்தார். கருத்தரங்கில் தலித் சமுதாயமும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் தலித் சமூகப் போராளி “தடா’ பெரியசாமியும் பெரியார் ஜின்னா அம்பேத்கர் சந்திப்புகள் என்ற தலைப்பில் ராம கிருஷ்ண ராவ் என்னும் ஆய்வாளரும் கட்டுரைகள் படித்தனர். கருத்தரங்கில் மலர் மன்னன் படித்த கட்டுரை இது.)
தமிழ் நாட்டில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால வரலாற்றுப் பின்னணியுள்ள திராவிட இயக்கத்தின் முன்னோடியான, தென்னிந்திய மக்கள் சங்கத்தைச் சென்னையில் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முப்பதுபேர் கூடிய ஒரு கூட்டத்தில் சர் பிட்டி தியாகராயச் செட்டி, டாக்டர் டி.எம். நாயர் ஆகிய இருவரும் முன்னின்று நிறுவியபோது, அவர்களின் நோக்கம் ஹிந்து சமய எதிர்ப்பாக இல்லை. ஹிந்து சமூகத்தை பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று இரு கூறுகளாகப் பிரித்துப்போட்டு, பிராமணர் அல்லாதார் ஹிந்துக்கள் அல்ல என்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களின் சங்கத்திற்கு இருக்கவில்லை. ஹிந்து சமயத்தினை மட்டுமே எதிர்க்கும் வகையில் பாரபட்சமான நாத்திகப் போக்கினை அது மேற்கொள்ளவும் இல்லை. பிராமணர் அல்லாதார் பிரச்சினையை சமயப் பிரச்சினையாக அல்லாமல் சமூகப் பிரச்சினையாகவே அது முன்வைத்தது.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான தென்னிந்திய மக்கள் சங்கத்திற்கு அதற்கும் முன்னதாகவே இரு முன்னோடிகள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தன என்றாலும், ஒரு தொடர் நிகழ்வாகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என அறியப்படும் தென்னிந்திய மக்கள் சங்கம் இருப்பதால் அதனையே திராவிட இயக்கத்தின் முன்னோடி எனக் கொள்வது ஆய்வுக்கு வசதியாக இருக்கும்.
1 917 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இச்சங்கம் தனது நோக்கங்களைப் பின் வருமாறு வகுத்துக் கொண்டிருப்பதாக அறிவித்தது:
தென்னிந்தியாவில் பிராமணர் அல்லாத அனைத்து ஜாதியினரும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல், பொருள் சேர்க்கை, நல்லொழுக்கம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கான சூழலை உருவாக்கி வளர்த்தல்
தென்னிந்தியாவில் பிராமணர் நீங்கலாக அனைத்து ஜாதியினரின் நலன்களையும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான கோரிக்கைகளை உண்மையுடனும், உரிய காலத்திலும் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் பிரதிநிதியாக இயங்குவது
இவற்றுக்கான பொதுக் கருத்தை உருவாக்க எவரும் தமது சொந்தக் கருத்தினைச் சுதந்திரமாக எடுத்துக் கூறும் வகையிலான பொதுக் கூட்டங்கள் நடத்துதல், சுற்றறிக்கைகள், துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல்

இவ்வாறு அது தனது நோக்கங்களை வரையறுத்துப் பதிவு செய்த வேளையில் அதனை விளக்கிப் பேசிய தியாகராயச் செட்டியாரும் தங்களுக்கு பிராமணர் மீது எவ்வித துவேஷமும் இல்லையென்றும், அவர்களுக்குத் தங்களது வலக் கரத்தினை நேசக் கரமாக நீட்ட எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் கூறினார். எனினும், “பிராமணர்கள் பிற ஜாதியாருக்குத் தாம் இழைத்து வந்துள்ள கேடுகளுக்கு வருத்தம் தெரிவிப்பார்களேயானால்’ என்று ஒரு நிபந்தனையினை அவர் அப்போது சொல்லவும் தவறவில்லை. ஆனால் பிராமணர் அல்லாத ஜாதியினருக்கு பிராமணர்கள் விளைத்த கேடுகள் என்ன என்பதை அவர் விளக்கவில்லை.

அரசுத் துறைகளில் பதவி உயர்வு போன்ற வாய்ப்புகள் வருகையில் அவற்றுக்குத் தகுதி வாய்ந்த அலுவலர்களின் பெயர்களைப் பரிந்துரைத்து மேலிட முடிவுக்கு அனுப்பும் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் சிலரேனும் ஜாதி அபிமானம் காரணமாகத் தம் ஜாதியினரைப் பரிந்துரைத்திருக்கக் கூடும். ஆனால் இவ்வாறான ஜாதி அபிமானம் பொதுவாக எல்லா ஜாதியினரிடையேயும் காணப்படுவதால் இந்த முறைகேட்டிற்கு பிராமணர்களிடம் மட்டுமே குறை காண்பது எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

தியாகராய செட்டியாரின் கூற்றுப்படிப் பார்த்தால் பிராமணர்கள் அல்லாத ஜாதியாருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் அனைத்தையும் பிராமணர்கள் பறித்துக் கொண்டதுபோன்ற ஒரு சித்திரம் தோன்றுகிறது என்றாலும், அன்றைய சூழலில் வாய்ப்புகளுக்குத் தேவையான தகுதிகளை பிராமணர் அல்லாத ஜாதியில் அதிகம்பேர் வளர்த்துக் கொள்ளாத நிலையில், பிராமணர்கள் போட்டியின்றியே வாய்ப்புகளைப் பெறும் நிலைதான் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் அப்பொழுது பிராமணர் அல்லாத ஜாதியினர் இருந்ததாகக் கருதுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை. கல்வி என்பது அனைவருக்குமே பணம் செலவு செய்துபெறத் தக்கதாகத்தான் இருந்தது. படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக் கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஜாதி வேறுபாடின்றிக் கிடைப்பதும் சாத்தியமாகவே இருந்தது. எனவே பிற ஜாதியாருக்கு பிராமணர்கள் கேடுகள் இழைத்து வந்ததாகக் கூறியமைக்குப் பிரமாணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும், சங்க காலம் தொட்டு, இட ஒதுக்கீடு ஏதும் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, பிராமணரல்லாத பல்வேறு ஜாதியாரில் கல்வி கேள்விகளில் சிறந்த பலர் இருக்கவே செய்துள்ளனர். அவர்களில் இன்று மிகவும் பிற்பட்ட வகுப்பாராகக் கருதப்படுவோரும் அடக்கம். பல்வேறு கால கட்டங்களில் அரசவைகளிலும் அலுவலகங்களிலும் பிராமணரல்லாதாரும் பொறுப்பு மிக்க பதவிகளில் இருந்து வந்துள்ளமைக்குச் சான்றுகள் உள்ளன. சேக்கிழாரும் தாயுமானவரும் உடனே நம் நினைவுக்கு வருவர். மிக உயர்ந்த தலைமை நிர்வாகப் பதவிகளில் பிராமணரல்லாத அவர்கள் இருக்க முடிந்துள்ளமையால் அடுத்த நிலையில் உள்ள பல்வேறு பதவிகளிலும் வெவ்வேறு பிராமணரல்லாத ஜாதியினர் அமர்ந்திருக்கக் கூடும் என அறியலாம். பிற்காலத்தில் கிழக்கிந்திய கும்பினி ஆட்சியிலும் அவ்வாறே பல பிராமணரல்லாதார் பொறுப்புகளை வகித்துள்ளனர். வேத நாயகம் பிள்ளை கிறிஸ்தவராக மதம் மாறிய குடும்பத்தில் பிறந்தவராக இருப்பினும் தமது ஜாதி அடையாளத்தை விடாத நிலையில் நீதி பரிபாலனத் துறையில் மாவட்ட நீதிபதியாக இருந்துள்ளார். பிரஞ்சிந்திய அரசாக விளங்கிய புதுச்சேரியில் ஆனந்த ரங்கப் பிள்ளை மிகுந்த செல்வாக்குடையவராக, கவர்னரின் துபாஷியாக இருந்துள்ளார். கிறிஸ்தவ மிஷனரிகளின் ஊக்குவிப்பில் தாழ்த்தப் பட்டோரும் பிற்படுத்தப் பட்டோரும் மெக்காலே பாடத் திட்ட வழியில் கல்வி கற்று அரசுப் பணிகளில் சேர முடிந்திருக்கிறது.

மெக்காலே பாடத் திட்ட வழியில் கல்வி கற்று அரசுப் பணிகளில் அமர வாய்ப்புப் பெறுவதில் மற்ற அனைவரையும் பிராமணர்கள் முந்திக் கொண்டமைக்கு இன்னொரு காரணமும் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் வரையிலுங்கூட நமது சமுதாயம் நில உடமைச் சமுதாயமாகவே இருந்து வந்துள்ளது. ஒருவரது நில உடமையே அவரது செல்வத்திற்கும், சமூக அங்கீகாரத்திற்கும் அளவு கோலாக இருந்துள்ளது. பிராமணர்கள் பெரும்பாலும் பூர்விகத்தில் அரசர்களின் மானியமாகப் பெற்ற நிலத்திற்கு உடமையாளர்களாக இருந்த போதிலும், அதன் காரணமாகவே கூடத் தீவிர முனைப்பு இன்றி, நிலத்தைக் குத்தகைக்கு விட்டு குத்தகைதாரர் அளக்கும் நெல்லைப் பெறுவதிலேயே திருப்தியடைந்து விடுபவர்களாக இருக்கையில், பிற ஜாதியார் பெரும்பாலும் தமது சுய உழைப்பின் பலனாகப் பெற்ற நிலத்தின் அருமையினை உணர்ந்து, கஷ்டமோ, நஷ்டமோ எதுவாயினும் நிலத்தையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந் தனர். விவசாயமே பிரதான தொழிலாக அமைந்திருந்த நிலையில், எத்தனை சிரமங்கள் இருப்பினும் அதனைத் தொடர்வதிலேயே அவர்கள் முனைப்பாக இருந்தனர்.

ஆண்டு முழுவதும் பாடெடுத்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் தராத விவசாயத்தை நம்பியிருப்பதைக் காட்டிலும் அரசுப் பணிகளை மேற்கொண்டு, நிரந்தரமாகவும், மாதா மாதமும் குறிப்பிட்ட வருமானம் பெறுவது மேலானது என பிராமணர்கள் கண்டு
கொண்டனர். அன்றைய கால கட்டத்தில் ஊதியம் குறைவாகவே இருந்த போதிலும் வாழ்க்கையினைத் திருப்திகரமாக நடத்துவதற்கு அது போதுமானதாகவே இருந்தது. மேலும் அரசுப் பணி சமூகத்தில் அந்தஸ்தையும் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பையும் அளித்தது. பிராமணரல்லாத ஜாதியினர் இவற்றைக் கண்கூடாகக் கண்ட போதிலும், கை கட்டிச் சேவகம் புரிவதைக் கவுரவக் குறைவாகக் கருதியதோடு, நிலத்தின் பா லுள்ள பிணைப்பின் காரணமாகவும், மெக்காலே பாடத் திட்ட வழியில் கல்வி கற்று அரசுப் பணிகளைத் தேடுவதில் ஆர்வம் குன்றியிருந்தனர்.

மெக்காலே பாடத் திட்ட வழியில் கல்வி கற்ற பிராமணர்கள் அது பிற துறைகளிலும் பல வாயில்களைத் திறந்துவிடுவதைக் கண்டு கொண்டனர். அவற்றுள் குறிப்பிடத் தக்கது, சட்டக் கல்வி எனலாம். அதில் பல பிராமணர்கள் மிகவும் ஈடுபாடு காட்டியமையால் வழக்குரைஞர் பணியில் பிராமணர்கள் கூடுதலாக வாய்ப்பினப் பெற்றனர். எனினும் வழக்குரைஞர் துறையிலும் எதிராஜ் போலத் திறமை மிக்க வழக்குரைஞர்கள் தடையின்றிப் புகழுடன் தொழிலை நடத்தி வர முடிந்துள்ளது. ஈடுபாடு இருப்பின் எந்த ஜாதியாரும் எந்தத் துறையிலும் ஈடுபடத் தடையேதும் இல்லாத நிலையும் எவரது வாய்ப்பையும் வேறு எவரும் பறித்துக் கொண்டு விடும் மேலாதிக்கம் எந்த ஜாதிப் பிரிவினருக்கும் இல்லாத நிலையும் அன்றைய சமுதாயத்தில் இருந்ததாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிந்து சமூகத்தின் ஜாதிப் படிக்கட்டில் மேலேயிருக்கும் ஜாதிகள் தமக்குக் கீழே அடுத்த படியிலேயே இருக்கக் கூடிய ஜாதிகளை மாற்றுக் குறைவாகக் கருதும் மனப்போக்கு இருக்கவே செய்கிறது. ஆகவே பிராமண ஜாதியாருக்கு மட்டுமே பிற ஜாதியார் மீது அத்தகைய இழிவுணர்வு இருந்ததாகக் கருதுவதற்கும் இடமில்லை. ஹிந்து சமூக ஜாதிக் கட்டுமானத்தில் மேலிருந்து கீழாக வருகையில் பிராமணர்களுக்கு அடுத்த படியாக உள்ள ஜாதியினர் தமக்குமேலேயிருக்கும் ஜாதியினரான பிராமணர்களுக்கு இணையாக இருக்க விழையும் அதே நேரத்தில் தமக்குக் கீழே அடுத்த நிலையில் இருக்கும் ஜாதியாரைத் தமக்கு இணையாகக் கொள்ளும் மனப்பான்மையினைப் பெற்றிருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த மனப்போக்கே உச்சி முதல் அடி நுனி வரை எல்லாப் படி நிலைகளிலும் காணப்படுகிறது. எல்லா ஜாதியாரிடமும் காணப்படும் இந்த மனப் போக்கினைக் களைவதில் கவனம் செலுத்துவதுதான் இன்றைய அவசியமாகும்.

அரசுத் துறைகளிலும், நீதி பரிபாலனத் துறையிலும் கல்விக் கூடங்களிலும், பதவிப் பொறுப்புகளில் அன்று பிராமணர்களின் எண்ணிக்கை பிராமணர் அல்லாத ஜாதியாரைவிடக் கூடுதலாக இருந்தமைக்குக் காரணம் உத்தியோக வாய்ப்புகளைப் பெற்று நிரந்தரமான மாத ஊதியம் பெற்று நிம்மதியாகக் காலங் கழிப்பதற்கு பிராமணர்கள் முன்னுரிமை கொடுத்த வேளையில், சொந்தமாகத் தொழில், வாணிபம் போன்ற முயற்சிகளில் இறங்கி முன்னேற்றம் காண்பதில் பிராமணர் அல்லாத ஜாதியினருக்கு நாட்டம் இருந்ததேயாகும். அன்றைய காலகட்டத்தில், பல்வேறு தொழில்கள், வாணிபங்கள் ஆகியவற்றிலும், பின்னர் தாமே சுயமாகத் தொழில் தொடங்கத் தக்க வகையில் பட்டறைகளில் பணியாற்றித் தேர்ச்சிபெறும் நிலையிலும் பிராமணர் அல்லாத ஜாதியினரே மிக அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில், பிராமணர்கள் பெற முடியாதவாறு தொழில், வாணிபம், ஆகிய துறைகளில் எல்லா வாய்ப்புகளையும் பிராமணர் அல்லாத ஜாதியினர் அபகரித்துக் கொண்டதாகக் கூறுவது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அவ்வளவு அபத்தமாகத்தான் அரசுத் துறைகளிலும், கல்விக்கூடங்களிலும், நீதி பரிபாலனத் துறையிலும் உள்ள வேலை வாய்ப்புகளை பிராமணர் அல்லாத ஜாதியினர் பெற இயலாதவாறு பிராமணர்கள் பறித்துக் கொண்டதாகக் கருதுவதும் அமையும்.

மேலும், தென்னிந்திய மக்கள் சங்கத்தை நிறுவியவர்களுக்கு ஜாதி என்னும் கட்டமைப்பை உடைத்து ஜாதிப் பிரிவினைகளற்ற சமுதாயமாக ஹிந்து சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற இலட்சியம் ஏதும் இருக்கவில்லை. பிராமணர் அல்லாத ஜாதியினருக்குத் தானே பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்பதில்தான் அச்சங்கத்தின் கவனம் சென்றது. அவ்வாறு சென்றபோது, ஜாதிக் கட்டமைப்பில் இறுதிப் படியில் அனைத்து ஜாதியாராலும் புறக் கணிக்கப்பட்டு இழிவு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோரையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு இல்லை. இன்னும் தெளிவாகக் குறிப்பிட வேண்டுமானால், பிராமணருக்கு அடுத்த படிநிலையில் இருந்த உயர் ஜாதியாராக அங்கீகாரம் பெற்ற ஜாதியினரும் பிராமணர்களுக்கு இணையான வாய்ப்புகளைப் பெறச் செய்ய வேண்டும் எனபதில்தான் அதன் கவனம் பெருமளவில் இருந்தது.
அன்றைய கால கட்டத்தில், தமிழ் மொழி வழங்கும் பகுதி என்ற அடிப்படையில் தமிழர்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, தமிழ் நாடு என்பதாக ஒரு தனி மாநிலம் இல்லை. இன்றைய ஒரிஸ்ஸா மாநிலத்தின் தென் கிழக்கு ஓர மாவட்டங்கள் தொடங்கி, நிஜாம் சமஸ்தானம் நீங்கலான முழு ஆந்திரப் பிரதேசம், மைசூர் சமஸ்தானமும் வடக்கு, மேற்கு, வடமேற்கு கர்நாடகப் பகுதிகள் சேராத இன்றைய கர்நாடகமும், திருவாங்கூர்கொச்சி சமஸ்தானம் நீங்கலான கேரளமும் இவற்றுடன் தமிழ்நாடும் இணைந்து “சென்னை ராஜதானி’ என்ற பரந்துபட்ட நிலப்பரப்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆளுகையிலும் நிர்வாகத்திலும் அது இருந்தது.
இந்தப் பின்னணியுடன் காணும்போது, தென்னிந்திய மக்கள் சங்கத்தை முன்னின்று தொடங்கியவர்களும், அதன் முதற் கூட்டத்தில் கலந்துகொண்ட முப்பதுபேர்களில் மிகப் பெரும்பான்மையினரும் தமிழர்கள் அல்ல என்பது புலப்படும். எனினும், பிற்கலத்தில் அதன் வழித் தோன்றலான திராவிட இயக்கம் தமிழ் நாட்டில்தான் வேர் பிடித்து வளர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரத் திருப்பங்களில் ஒன்றாகும். தென்னிந்திய மக்கள் சங்கத்தில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் நாட்டில் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டு வீட்டில் அதனைப் பேசுபவர்களுமே முன்னிலை வகித்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. பிற்காலத்தில் அது தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பு என்று தேர்தலில் போட்டியிடும் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்ற பிறகு அது அமைத்து வந்த அமைச்சர் குழுவின் தலைமைப் பதவியில் அமர்ந்தவர்கள்கூடப் பெரும்பாலும் ஆந்திரரேயன்றித் தமிழர்கள் அல்லர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தென்னிந்திய மக்கள் சங்கம் தேர்தலில் போட்டியிடும் கட்சியாகத் தனது பெயரை மாற்றிக் கொண்டபோது “லிபரல்’ என்ற ஆங்கிலச் சொல்லைத்தான் பயன்படுத்தியது. ஆனால் அதனை “விடுதலை’ என்று மொழியாக்கம் செய்தால் அக்கட்சிக்கு ஒரு விடுதலை இயக்கம் என்ற முரணான தோற்றம் ஏற்பட்டுவிடும் என்பதால் லிபரல் என்ற சொல்லுக்குரிய இன்னொரு பொருளான நடுநிலை என்பதைப் பயன்படுத்தியுள்ளேன். ஏனெனில் அக்கட்சிக்கு நாடு விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை என்பதோடு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றிலும் ஆதரவாகவும் அது இருந்ததுடன், அகில இந்திய காங்கிரஸ் மகாசபை, ஹோம் ரூல் இயக்கம் போன்ற நாட்டு விடுதலையில் நாட்டம் கோண்டிருந்த கட்சிகளைக் கடுமையாக எதிர்த்தும் வந்தது.
முன்னரே குறிப்பிட்டவாறு, தென்னிந்திய மக்கள் சங்கம் தொடங்கப்பட்டபோது அதன் நோக்கம் பிராமணர் அல்லாத ஜாதியினர் அனைவரின் பொதுவான நலனைக் கருத்தில் கொள்வதாக இருந்ததேயன்றி, பிற்காலத்தில் அதன் எச்சமாக நீடித்த திராவிட இயக்கம் பிராமணர்களைக் கடுமையாகத் தூற்றியும் அவர்கள் மீது பகைமை பாராட்டி, பிராமணர் அல்லாத ஜாதியினருக்கு பிராமணர் மீது தீராத வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதாகவும் அமைந்ததுபோல இருக்கவில்லை. சென்னை ராஜதானியில் அன்றைக்கு இருந்த சட்ட மன்றக் கவுன்சிலில் பிராமணர் அல்லாதோருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் வேண்டும், அப்போதுதான் பிராமணர் அல்லாத பல்வேறு ஜாதியினரின் நலன்களை முன்வைத்து, உரிய நடவடிக்கைள் எடுக்குமாறு அரசாங்கத்தரிடம் வலியுறுத்துவது சாத்தியமாக இருக்கும் என்று கோருவதுதான் அதன் குறிக்கோளாக இருந்தது. பின்னர் அது அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும், கல்விக் கூடங்களிலும் பிராமணர் அல்லாத ஜாதியினருக்குக் கூடுதல் வாய்ப்புக் கோருவதாகப் பக்குவம் அடைந்தது. இதனையொட்டி 1921 ஆம் ஆண்டு சென்னை ராஜாதானியின் பிரதம அமைச்சராகப் பனகல் அரசர் ராமராயனிங்கர் இருந்தபோது, அரசுப் பணிகளில் பிராமணர் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை எண் 613 பிறப்பிக்கப்பட்டது. முதலில் நெடுஞ்சாலைத் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒதுக்கீடு பின்னர் பிற துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டது.
தென்னிந்திய மக்கள் சங்கம் தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தபோது, பிராமணர்களையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற முயற்சிகூட மேற்கொள்ளப்பட்டது என்பது கவனத்திற்குரியது.
தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பு கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்றாகப் பிளவுபட நேர்ந்து, அதன்பின் 1929 ஆம் ஆண்டு மீண்டும் அவை ஒன்று கூடிய மாநாட்டில் பிராமணர்களைத் தமது அமைப்பில் சேர்த்துகொள்ளலாகாது என்ற விதியைக் கைவிட்டு விடவேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. நெல்லூரில் நடைபெற்ற கூட்டமைப்பின் பனிரண்டாவது மாநாட்டில் செயற்குழுவின் சார்பில் இத்தீர்மானம் முன்மொழியப்பட்டபோது, கட்சியின் தலைவாராக இருந்த பி. முனுசாமி நாயுடு அதனை ஆதரித்துப்பேசினார்.
“” ஒரு குறிப்பிட்ட பிரிவினரை நாம் பிரித்து வைத்திருப்போமேயானால் ராஜதானியின் மொத்த நலனுக்காகவும் வாதாடும் அரசியல் அமைப்பாக இருக்கும் தகுதி நமக்கு இருக்காது. எனவே பிராமணர்கள் கட்சியில் சேருவதற்கு உள்ள தடையைக் கைவிட்டுவிட வேண்டும். மேலும் நிர்வாக சீர்திருத்தங்களின் பயனாக ராஜதானிக்குச் சுயாட்சி உரிமை அளிக்கப் படுமேயானால் அப்பொழுது அனைத்து ஜாதியாருக்கும் பிரதிநிதியாக ராஜதானி முழுமைக்குமான ஆட்சிப் பொறுப்பினை நாம் வகிப்பது எவ்வாறு பொருத்தமாக இருக்கும்? நமது கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முன்வரும் பிராமணர்களைக் கட்சியில் அனுமதிப்பதில் தவறென்ன? தடையினை நீக்குவதால் பிராமணர்கள் நமது கட்சிக்கு வந்துவிடப் போவதில்லை என்றே வைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு நமது கட்சியில் சேரத் தடை ஏதும் இல்லை என்ற நிலைப் பாட்டை நாம் ஏற்றுவிட்டோமானால் நாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரித்தானவர்கள் என்ற விமர்சனம் மறைந்துவிடும்” என்று முனுசாமி நாயுடு தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். இவர், கூட்டமைப்பு ஆட்சி அமைத்தபோது அமைச்சர் குழுவில் பிரதம அமைச்சராக இருந்தவர்.
கூட்டமைப்பின் மூத்த தலைவராகவும், முன்பு கட்சியின் சார்பில் கல்வி அமைச்சராகவும் இருந்த ஏ.பி. பாத்ரோ, அவரது கருத்தை வரவேற்று, தடையை விலக்குவது என்பதாக இருந்த தீர்மானத்திற்கு, ஜாதி வித்தியாசமின்றி, கூட்டமைப்பின் கொள்கைகளை ஏற்கும் எவரும் அதன் உறுப்பினராகலாம் என்ற திருத்தத்தை முன்வைத்தார்.
எனினும், இதற்குள் காங்கிரஸ் மகாசபையில் பிராமணர் ஆதிக்கம் மிகுந்திருப்பதாகக் குற்றம் சாட்டி அதிலிருந்து வெளியேறிக் கூட்டமைப்பில் சேர்ந்து விட்டிருந்த ஈ.வே.ரா. அவர்கள், தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார்.
“” பிற கட்சிகளிலுள்ள பிராமணர் அல்லாத ஜாதியினர், அங்கு பிராமணர்கள் மேலாதிக்கம் செலுத்துவதைக் கண்டு சலிப்புற்று நமது கூட்டமைப்பை நோக்கிப் படிப்படியாக வந்துகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இப்படியொரு திருத்தம் செய்வது மதியீனம்” என்று ஈ.வே.ரா. அவர்கள் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினார். அவரைப் பின்னாளில் நேருவின் தலைமையில் அமைந்த இடைக்கால மத்திய அமைச்சரவையில் சிறிது காலம் நிதி அமைச்சராக இருந்தவரான ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆதரித்தார்.
இதையொட்டி, வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துவிட்ட போதிலும், கட்சியில் பிராமணர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற குரல் 1934 வரை தெளிவாக ஒலித்து வந்தது.
முன்னரே குறிப்பிட்டவாறு, காலனியாதிக்கத்தின் தொடக்க காலத்தில் பிராமணர்கள் ஆங்கில முறைக் கல்வியினைக் கற்பதில் முந்திச் சென்று, அதன் பயனாக அரசுத் துறைகளிலும், நீதி பரிபாலன மன்றங்களிலும் கல்விக் கூடங்களிலும் வேலை வாய்ப்பினைப் பெறுவதில் ஆர்வம் காட்டினர். பிராமணர் அல்லாத பிற சாதியினரோ, தொழில், வாணிபம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, அவற்றில் முன்னேறுபவர்களாக இருந்தனர். எனவே அரசுப் பணிகளிலும் பிற துறைகளிலும் இடங்களை நிரப்புகையில் போதிய அளவுக்கு பிராமணர் அல்லாத சாதியினர் இருக்கவில்லை என்பதுதான் அன்றைக்கு இருந்த உண்மை நிலையாகும். எனினும், பிராமணர் அல்லாதோரில் பணிகளுக்குரிய தகுதி வாய்ந்தோருக்கு வாய்ப்பு கிடைத்தே வந்தது. ஆயினும், நியமனங்கள் வருகையில் பிராமணர்கள் முந்திகொள்வது வழக்கமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. பிராமணர்கள் உரிய கல்வி பெற்றுப் பணிகளுக்கு ஏற்ற தகுதி வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் உயர் அதிகாரிகளான ஆங்கிலேயர் மனதில் பதிந்துவிட்டிருந்ததால் பதவி நியமனங்கள் வரும்போது, பிராமணர்களையே தேர்வு செய்யும் மனப் போக்கும் அவர்களிடம் இருந்தது. அந்த வாய்ப்பை பிராமணர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றே கூற வேண்டும். இந்நிலையினை மாற்றி, பிராமணர் அல்லாத சாதியினரில் குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ற தகுதி வாய்ந்தவர்கள் இருப்பின் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் தொடக்கத்தில் தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது. இதையொட்டி முடிவாகிய பணி ஒதுக்கீடுகளில் பிராமணர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் மகாசபையில் பிராமணர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறாகள் என்ற சினத்துடன் அதிலிருந்து விலகி வந்த ஈ.வே.ரா., அந்தக் கோபாவேசத்திலிருந்து விடுபட இயலாதவராக இருந்தமையால் காங்கிரசிலிருந்து விலகி தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பில் சேர்ந்த பிறகு அங்கும் தமது பிராமண எதிர்ப்பைத் தொடரலானார். எனவேதான் அவர் தலைமையில் பின்னர் திராவிட இயக்மாக அது தொடர்ந்தபோது பிராமணர்களைத் துவேஷிப்பதையே முழு நேரக் குறிக்கோளாகக் கொண்ட இயக்க மாகிவிட்டது. பிராமணர் மீதான துவேஷமே ஏதோ பிராமணர்கள்தான் ஹிந்து சமயத்தைக் கட்டிக் காப்பதான எண்ணம் காரணமாக, நாளடைவில் ஹிந்து சமய விரோத இயக்கமாகவும் பின்னர் அது உருவெடுத்தது.
முதலில் சமூக நலனுக்கான தென்னிந்திய மக்கள் சங்கமாகவும் பின்னர் அரசியல் ஈடுபாடுள்ள தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பாகவும் அமைந்த இயக்கம்”ஜஸ்டிஸ்’ என்ற பெயரில் தனது அதிகாரப் பூர்வ இதழினை நடத்தி வந்ததால் அதுவே பின்னர் கட்சிப் பெயாராகவும் அறியப்படலாயிற்று. அந்தக் கால கட்டத்திலும் அக்கட்சியினைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் பலரும் ஹிந்து சமய நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றினைக் கடைப்பிடிப்பவர்களகவும் ஹிந்து கலாசாரக் கூறுகளை மதித்துப் போற்றிப் பின்பற்றுபவர் களகவுமே இருந்தனர். அவர்களின் இல்லங்களில் விசேஷ காலங்களில் பிராமணப் புரோகிதர்கள் முறைப்படித் தீ வளர்த்து வேள்வி செய்யும் வழக்கமும் இருந்து வந்தது. பிராமணர்களையோ ஹிந்து சமயத்தையோ வெறுத்து ஒதுக்கும் போக்கு அவர்களிடம் காணப்படவில்லை.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி என்றே பிரபலம் அடைந்து விட்டிருந்த தென்னிந்திய நடுநிலைக் கூட்டமைப்பானது, தேசிய உணர்வை ஊட்டி மக்களைப் பெருமளவில் கவர்ந்துவிட்டிருந்த காங்கிரசுக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் தோல்வியடைந்ததும், சமூகத்தில் கௌரவ அந்தஸ்துடன் இருந்து வந்த ஜஸ்டிஸ் கட்சி முன்னணியினர் பலரும் மனச் சோர்வும் குழப்பமும் அடைந்தவர்களாகக் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். சிலர், “ஜெயிப்பவன் கட்சி நம் கட்சி’ என்கிற இயல்பான மனப்போக்கிற்கு இணங்கத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ஜஸ்டிஸ் கட்சி இவ்வாறாகப் பலவீனப்படிருந்த நிலையில், சுய மரியதை இயக்கம் என்று பிராமணர்களுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி, ஜஸ்டிஸ் கட்சியுடன் இணைந்திருந்த ஈ.வே.ரா. அவர்களுக்கு வெகு எளிதாகக் கட்சியைக் கைப்பற்றித் தன்வயப்படுத்திக் கொள்வது சாத்தியமாகிவிட்டது. வசீகரமான பேச்சாற்றலாலும் எழுத்தாலும் குறிப்பாக இளைய தலைமுறையினரைக் கவரும் திறமை மிக்க அண்ணா அவர்களின் துணையும் அப்போது அவருக்குக் கிடைத்ததால் மேலும் எளிதாக ஜஸ்டிஸ் கட்சியைத் தம் கட்டுப்பாட்டின்கீழ் அவர் கொண்டு வந்துவிட்டார். ஜஸ்டிஸ் கட்சி என்ற முத்திரை மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டதோடு, அதன் பிரிட்டிஷ் ஆட்சியாளரை ஆதரிக்கும் போக்கின் காரணமாக மக்களுடைய வெறுப்பிற்கும் ஆளாகிவிட்டிருந்தபடியால் “ஜஸ்டிஸ் கட்சி’ என்ற பெயரைக் கைவிட்டு, திராவிடர் கழகம் என்ற புதிய பெயரைக் கட்சிக்குச் சூட்ட வேண்டியதாயிற்று. தமது காங்கிரஸ் எதிர்ப்பின் விளைவாகத் தமது கட்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு காட்டுவதே யன்றி, அதற்கு அடிபணிந்து கிடப்பது அல்ல என்ற நம்பிகையினை மக்களிடையே தோற்றுவிக்கவேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தனக்கு விசுவாசமாக இருப்போரைப் பாராட்டும்விதமாக அளித்து வந்த திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைத் தம் கட்சியிலுள்ள பெருந்தனக்காரர்கள் துறந்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்ணா புத்த்திசாலித்தனமாக நிறைவேறச் செய்து எஞ்சியிருந்த ஜஸ்டிஸ் கட்சியினர் வெளியேறிச் செல்வதற்கும் வழிசெய்தார்.

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்

தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 2

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

மலர்மன்னன்


இவ்வாறு பிராமணர் அல்லாதவர்களின் நலனுக்கான கட்சி என அறியப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகம் என்ற பெயரில் முற்றிலுமாக ஈ.வே.ரா. அவர்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகுதான் அவருக்குத் தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிராமண ஆதிக்க அனுபவம் காரணமாக பிராமணர்களை முழு மூச்சுடன் எதிர்க்கும் கட்சியாக உருவெடுத்தது. ஈ.வே.ரா. அவர்களின் நாத்திக உணர்வின் காரணமாக அவரது பிராமண எதிர்ப்பு நாளடைவில் ஹிந்து மத எதிர்ப்பாகவும் பரிணாமமடைந்தது. ஹிந்து சமூகக் கட்டமைப்பில் பிராமணர்கள் குருமார்களுக்குரிய மேல்தட்டில் இருப்பதால் பிராமணர்கள்தான் ஹிந்து சமயத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருப்பவர்கள் என்கிற தீர்மானமே அவரது பிராமண எதிர்ப்பு ஹிந்து மத எதிர்ப்பாகவும் மாறக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
1940 ஆம் ஆண்டுகளில் ஈ.வே.ரா. தலைமையிலான திராவிட இயக்கம் ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகத் தன்னை அறிவித்துக் கொண்டு அந்தப் பெயரில் தமிழ் நாடு முழுவதும் மாநாடுகளும் பொதுக் கூட்டங்களும் நடத்தி மக்கள் ஆதரவைத் திரட்டுவதில் மும்முரமாக முனைந்தது. ஜாதிகளற்ற சமுதாயத்தை அமைக்கவேண்டுமென்று அது கூறி வந்த போதிலும் அதற்கான வழிமுறைகளையோ செயல் திட்டங்களையோ அது செயல்படுத்தவில்லை. வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவ்வப்போது சீர்திருத்தத் திருமணம் என்ற பெயரில் பிராமணப் புரோகிதர்களுக்குப் பதிலாகத் தனது பேச்சாளர்களைக் கொண்டு திருமணம் செய்வித்து புதிய ஜாதிகள் உருவாக வழி செய்ததேன்றி, ஜாதிகளை முற்றிலுமாகக் களைவதற்கான நேரடி நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதற்கான சிந்தனைத் தடத்தில் கூட அது செல்லவில்லை. பிராமணர் அல்லாத ஜாதியினரைத் திரட்டி அவர்களுக்கு கல்வி, அரசுப் பணி ஆகியவற்றில் ஒதுக்கீடு கிடைக்கச் செய்வதைத்தான் அது தனது பணியாகக் கொண்டிருந்தது.
ஜாதிகள் இல்லை எனவும் ஜாதிகள் அற்ற சமுதாயத்தைத்தோற்றுவிக்க வேண்டும் எனவும் ஒருபுறம் பிரசாரம் செய்துவரும் திராவிட இயக்கம், ஜாதிகளின் அடிப்படையில் ஒதுக்கீடு கோருவதில் முழு மூச்சுடன் தான் இறங்குவது தனது குறிக்கோளுக்கு முரணானது என உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக, ஜாதிகள் அற்ற சமுதாயம்தான் தனது லட்சியம் என்றாலும் ஜாதிகள் இருக்கும் வரை பிராமணர் அல்லாத ஜாதிகளின் நலனுக்காகப் போராடி வரப் போவதாக அது சமாதானம் சொல்ல வேண்டியதாயிற்று. ஜாதிகளின் பெயரால் சலுகைகள் கோருவதும் ஜாதிகளின் அடிப்படையில் நலன்களை வலியுறுத்துவதும் தொடருமானால் ஜாதிகளும் நிரந்தரமாக இருந்து வரத்தான் செய்யும் என்ற இயற்கை நியதியை அது கருத்தில் கொள்ளவில்லை. “திருமணமானால் பைத்தியம் தெளியும், பைத்தியம் தெளிந்தால் திருமணம் ஆகும்’ என்ற பழமொழிக்கு ஒப்பவே தனது கொள்கை இருந்து வருவதை அது உணர்ந்ததாகத் தெரியவில்லை.
“ஒதுக்கீடு முறையின் பயனைப்பெற்று முன்னிலைக்கு வந்துவிட்டவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு ஜாதியின் அடிப்படையில் ஒதுக்கீடு கோரும் உரிமை இருக்கலாகாது என்ற நடைமுறையினை மேற்கொண்டால் இன்னும் முன்னிலைக்கு வராத அதே ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதலான வாய்ப்புக் கிட்டும்’ என்ற கருத்தைக் கூட ஏற்காமல், சமூக நீதி என்ற பெயரில் பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ளாமல் ஜாதியின் அடிப்படையிலேயே தொடர்ந்து ஒதுக்கீடுகளை அளித்து வரவேண்டும் என்று பிடிவாதமாக வலியுறுத்தும் போக்கினைத் தான் மேற்கொள்வதால் சமுதாயத்தில் ஜாதிகளின் இருப்பு என்றென்றும் நீடித்துக் கொண்டுதானிருக்கும் என்ற பிரத்தியட்ச நிலையினை திராவிட இயக்கம் கண்டுகொள்வதில்லை.
ஜாதிகளின் அடிப்படையில் ஒதுக்கீடு அளிப்பதில் ஜாதியை மட்டுமே கருத்தில்கொண்டு ஒதுக்கீடு அமைய வேண்டும் என்று வற்புறுத்துவதால் இன்று தனக்கென்று சங்கம் தொடங்காத ஜாதியே தமிழகத்தில் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் தமிழ் நாட்டில் ஜாதியுணர்வு மிகுந்து, ஜாதி அபிமானம் என்பது ஜாதி வெறியாகவே மாறத் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஜாதியும் சங்கம் அமைத்துக் கொண்டு, தன் கை வசம் உள்ள வாக்குகளின் எண்ணிக்கையினைச் சுட்டிக் காட்டி அரசியல் கட்சிகளை வற்புறுத்தி, ஒதுக்கீடு சலுகைக்கான பட்டியலில் இடம் பெறுவதால் பட்டியலில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, காலப் போக்கில் ஒவ்வொரு ஜாதியும் பெறும் ஒதுக்கீட்டுகான இடங்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் காரணமாக ஒதுக்கீட்டுச் சலுகைகள் பெறும் ஜாதிகளிடையே போட்டியும் பொறாமையும் வெறுப்பும் பகைமையும் உருவாவது தவிர்க்க முடியாததாகிறது. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இப்படியொரு நிலைமை தோன்றி, மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் தமது ஜாதியைச் சேர்க்க வேண்டும் என்று குஜ்ஜார் ஜாதியினரும், அவர்களைச் சேர்த்தால் தங்களுக்கு வாய்ப்பு குறைந்துவிடுமாதலால் அவர்களைச் சேர்க்கக் கூடாது என்று மீனா ஜாதியரும் போராட்டத்தில் இறங்கியது நினைவிருக்கும்.
முற்பட்ட ஜாதியினர் என்று தம்மைக் குறித்துப் பெருமிதம் கொண்டிருந்த ஜாதியினர் கூட இட ஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்று வாய்ப்புகளில் முன்னுரிமை பெறவேண்டும் என்பதற்காகப் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுவிட, அதன் விளைவாகப் பிற்பட்ட ஜாதியினர் பட்டியலில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை மிகுந்து விடவும், அதனைச் சமாளிப்பதற்காக மிகவும் பிற்பட்டோர் என்பதாக ஒரு பட்டியலை உருவாக்க வேண்டிய தாகி, இன்று மிகவும் பிற்பட்டோர் பட்டியலிலும் ஜாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பட்டியல் பெருத்துக் கொண்டே செல்வதைக் காணலாம்.
ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டுக் கொள்கையினைக் கடைப்பிடிப்பது காலப் போக்கில் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சமுதாயம் பல ஜாதிக் கூறுகளாகப் பிளவுண்டு, ஒன்றோடொன்று மோதிக்கொண்டு சாயும் அளவுக்கு நிலைமை மோசமாகக் கூடும்.
இந்த உண்மைகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது, தமிழ் நாட்டில் இன்று ஜாதி என்னும் அமைப்பும் ஜாதி உணர்வும் உறுதிப்பட்டிருப்பதற்கு, ஜாதி மறுப்பைத் தனது கொள்கை யெனக் கொண்டுள்ள திராவிட இயக்கமே பொறுப்பாகிவிட்டிருப்பது புலப்படுகிறது.
ஆனால் அதற்கு மாறாக, ஹிந்து தர்ம சாஸ்திரங்கள் வகுத்துக் கூறும் வர்ணாசிரம தர்மம்தான் ஜாதிகளின் இருப்புக்கும் அவற்றிடையே பிரிவினையும் ஏற்றத் தாழ்வுகளும் இருப்பதற்கும் காரணம் என்று ஹிந்து சமயத்தின் மீது குறை காண்பதில் திராவிட இயக்கம் முனைப்பாக இருந்து வந்துள்ளது. பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து வர்ண பேதம் செய்வதுதான் வர்ணாசிரமம் என்று திராவிட இயக்கம் குற்றம் சுமத்துகிறது. எனவே இது எந்த அளவுக்குச் சரியானது என ஆராய வேண்டியது அவசியமாகிறது.
முதலில் “வர்ண’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு என்ன பொருள் என்பதைக் காண்போம். “நிறம்’ என்று அதற்குப் பொருள் கூறுவது பாமரத் தன்மையாகும். குணத்தைப் புலப்படுத்துவதற்கு நிறத்தைக் குறிப்பிடுவதுண்டு எனினும், அதனிலும் பார்க்க நுட்பமான பொருள்கள் “வர்ண’ என்ற சொல்லுக்கு இருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
வர்ண என்பதன் வேர்ச் சொல் “வர்’ என்பதாகும். இதன் பொருள்,தேர்ந்து கொள்வது என்பதாகும். இணைத்தல், ஒழுங்கு செய்தல் என்றும் அதற்குப் பொருள் காண முடியும். ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் எல்லா மொழிகளிலும் உள்ளதுதான் என்பதை அறிவோம்.
தொன்மையான ருக் வேதத்தில் இடம் பெறும் புருஷ ஸூக்தத்தில்தான் முதன் முதலில் நான்கு வர்ணம் என்ற பாகுபாடு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதில் “வர்ண’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பிரபஞ்சத்தை ஒரு விராட் புருஷனாக, அதாவது பிரமாண்டமான மனிதனாக உருவகித்து, அவனது முகத்திலிருந்து பிரம்ம அல்லது பிராமணவும், புஜங்கள், மார்பிலிருந்து பிற்காலத்தில் க்ஷத்திரிய என்று மாறிய ரஜன்யவும், வயிறு, தொடைகளிலிருந்து வைசியவும், கால்கள், பாதங்களிலிருந்து ஷýத்திரவும் வெளிப்பட்டதாக புருஷ ஸூக்தம் கூறுகிறது. இவ்வாறு கூறுகையில் ஒன்று மேம்பட்டது, ஒன்று தாழ்ந்தது என்று அவற்றுக்கிடையே ஏற்றத் தாழ்வு எதையும் அது கற்பிக்கவில்லை. மேலும், இவ்வாறான நான்கு பெயர்கள் மனிதப் பிரிவுகளைக் குறிக்கிறதா அல்லது குணங்களைக் குறிக்குமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. ஒரு பிரமாண்ட மனிதன் என்னும் குறியீட்டிலிருந்து மேலும் நான்கு விதமான மனிதர்கள் புறப்பட்டு வருவதாகக் கொள்வதைவிட நால்வகை குண விசேஷங்கள் வெளிப்படுவதாகக் கருதுவதுதான் பொருத்தமாகவும், குறியீடின் அழகியலை ஒட்டியும் இருக்கும் என்பதைக் கண்டுகொள்ள வேண்டும்.
பிராமண வர்ணம் அறிவு சார்ந்த அம்சங்களையும், ரஜன்ய அல்லது க்ஷத்திரிய வர்ணம் உடல் வலிமை சார்ந்த அம்சங்களையும், வைசிய வர்ணம் வயிற்றுப் பாட்டுக்கான அம்சங்களையும் சூத்திர வர்ணம் உடல் உழைப்பால் ஆற்ற வேண்டிய அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த நான்கு வகையான அம்சங்களும் ஒருவரிடமே இருப்பதும் சாத்தியமேயாகும். அறிவு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி ஞானத்தை வளர்த்துக் கொள்வதிலும் தனது விஷய ஞானத்தைப் பிறருக்கு அளிக்கும் போதும் பிராமண குணத்தைப் பிரதிபலிப்பவன், தன்னைச் சார்ந்தோருக்குப் புகலிடம் அளித்துக் காப்பாற்றுகையில் க்ஷத்திரியனாக இருக்கிறான். தனக்கும், தன்னைச் சார்ந்தோருக்கும் உணவும் உடையும் உறயுள்ளும் அளிப்பதற்காக ஒரு பணியில் ஈடுபடுகையில் வைசியனாகச் செயல்படுகிறான். தான் சார்ந்துள்ள சமூகத்தினரின் நலனுக்காகத் தொண்டாற்ற முன்வருகையில் அவனே சூத்திரனும் ஆகிறான். இதில் ஏற்றத் தாழ்வு எங்கே வருகிறது?
நால்வகையான குண அம்சம் என்ற மானிட இயல்பை சமூக அமைப்பிற்குப் பொருத்திப் பார்க்கும்போதுதான் அது சமுதாயத்தின் நான்கு பிரிவுகளாக அமைகின்றது. இவ்வாறு நான்கு பிரிவுகள் உருவாகும்போது, அப்பிரிவில் சேர்க்கப்படுபவர்கள் ஒவ்வொருவரும் பிறப்பால் அன்றி அவரவர் விருப்பம், ஈடுபாடு ஆகியவற்றைப் பொருத்து, தமது பிரிவைத் தேர்ந்துகொள்கிறார்கள் என்பதைத்தான் வர்ண என்ற சொல்லின் வேரான “தேர்ந்து கொள்ளல்’ என்ற சொல் உறுதி செய்கிறது. ஒழுங்கு செய்தல் என்ற வேர்ச் சொல்லும் அவ்வாறான முடிவுக்கே செல்கிறது எனலாம். ஒருவரின் இயல்பு ஈடுபாடு ஆகியவற்றுக்கு இணங்க அவருக்குரிய பிரிவில் சேர்த்து சமுதாயத்தை ஒழுங்கு செய்தல் என்று இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னரே குறிப்பிட்டதற்கு இணங்க, பிரதான குணங்களின் அடிப்படையில் சமூக அமைப்பில் உருவாகும் மனிதப் பிரிவுகளில் உயர்வு தாழ்வு ஏதும் இருப்பதாக புருஷ ஸூக்தமோ பிற்கால ஹிந்து தர்ம சாஸ்திரங்களோ குறிப்பிடவில்லை. முகத்திலுள்ள வாயிலிருந்து வெளிபட்டதாலேயே ஒரு குணாம்சம் மேன்மையானது என்றும் பாதங்களிலிருந்து வெளிப்பட்டதால் ஒரு குணாம்சம் இழிவானது என்றும் அதில் குறிப்பு ஏதும் இல்லை. ஒவ்வொரு குணாம்சத்தின் இயல்புதான் அங்கு விவரிக்கப்படுகிறது.
மேலும், மனித உடலில் ஒர் உறுப்பு மேலானது என்றும் இன்னொன்று இழிவானது என்றும் கருதுவது பொருளற்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, இந்த வர்ணப் பிரிவானது ஒரு கருதுகோள் என்ற நிலையில் அமைந்துள்ளதே யன்றி, அது நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. அவ்வாறே இருப்பினும் மிகவும் இலகுத் தன்மை வாய்ந்ததாகவே அது இருந்திருக்க வேண்டும். ஏனெனில், குண மாறுதல்க ளுக்கு ஏற்ப வர்ண மாற்றம் ஏற்பட முடிந்திருக்கிறது. க்ஷத்திரிய குல மன்னனாக இருந்து தவக் கோலம் பூண்டு துறவியாக மாறிய விசுவாமித்திரன் குண மாறுதலுக்கு ஏற்ப பிராமணப் பிரிவிற்கு மாறியதாக இதிகாசம் தெரிவிக்கிறது.
ஆட்டை அறுத்து இறைச்சியினை விற்பவனிடம் அரச குலத்தவன் ததுதுவ விசாரம் செய்து உபதேசம் பெற்ற கதையும் நம்மிடம் உண்டு.
நான்கு குண விசேஷங்களுக்கு அப்பால் ஐந்தாவதாகவொரு குண விசேஷம் அடையாளம் காணப்படுகிறது. இது பொதுவாக அமைந்த குண விசேஷங்களுக்குட்படாமல் அதற்கு வெளியே ஆனால் தொடர்பற்றுப் போய்விடாமல் உள்ளதாகப் பிற்கால தர்ம சாஸ்திரங்களில் காணப்படுகிறது. சமூக நிலையில் அதனைப் பொருத்திப்பார்க்கையில், “பஞ்சம’ என்பதாக அது அமைகின்றது. ஆனால் அதுவுங்கூட இழிவானது என்றோ, புறக்கணிக்கப்பட வேண்டியது என்றோ கருதப் படவில்லை. வனவாசிகள், வேடுவர்கள், நாடோடிகள் போன்ற மனிதக் கூட்டமே பஞ்சம என்கிற அடையாளத்தைப் பெற்றது. ஆனால அவையுங்கூட வர்ண மாற்றத்திற்குத் தகுதி வாய்ந்தனவாகவே இருந்துள்ளன. வேடுவராக இருந்த வால்மீகி ராம காதையை இயற்றி சமூக அங்கீகாரம் பெற முடிந்திருக்கிறது. அதே போல சூத்திரர் என்ற பிரிவின் கீழ் வரக் கூடிய மீனவரான வியாசர் மகா பாரதம் இயற்றி சமூகத்தில் அவரது இயல்பிற்குரிய பிரிவில் இணைய முடிந்துள்ளது. அவரது பிறப்பு அதற்குத் தடையாக இருக்கவில்லை. ராமபிரான் வனவாசம் கொள்ளச் செல்கையில் வேட்டுவ குலத்திலோ படகோட்டிகள் குலத்திலோ பிறந்த குகனை மார்புறத் தழுவித் தன் தம்பியருள் ஒருவனாகக் கொள்ளும்போது, அவனது வர்ணமும் மாறிப் போகிறது.
வர்ண என்ற சொற்பிரயோகம் உபநிடதங்களில்தான் முதலில் இடம் பெறுகிறது. சண்டோக்கிய உபநிடத்தில் தன்னிடம் பயில விரும்பி வரும் இளைஞனிடம் குரு கௌதமர் அவனது வர்ணம் எதுவென்று அறிய வேண்டி, அவன் தந்தை பெயர் என்னவென்று வினவுகிறார். தனது தாய் பலரிடம் சேவகம் செய்ததாகவும், அதனால் அவனுடைய தந்தை யார் எனக் கூற இயலாது என்று தன் தாய் கூறியிருப்பதாகவும் இளைஞன் தெரிவிக்கிறான். உன் பெயர் சத்திய காமன், என் பெயர் ஜாபாலி அவ்வளவுதான் கூற முடியும் என்று தன் தாய் தன்னிடம் கூறியதைத் தெரிவிக்கும் இளைஞனை, வெளிப்படையாக உண்மையினைக் கூறும் அவனது குண நலனுக்காகவே குரு ஏற்றுக் கொள்வதாக உபநிடதம் கூறுகிறது. குருவால் கல்விப் பயிற்சிக்குரிய மாணவனாக ஏற்றுக்கொள்ளப்படும் ஜாபாலன் மாடுகளை மேய்த்துப் பராமரிக்கும் பணியில்தான் அமர்த்தப்படுகிறான். அது சூத்திர அல்லது வைசிய வர்ணத்திற்குரியதுதான் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
பாகவதமும் சமுதாயத்தில் பொருத்திப் பார்க்கும் வர்ணம் பற்றிப் பேசுகிறது. “ஒருவனை அவனது குணவியல்புகளின் அடிப்படையில்தான் அவனுக்குரிய வர்ணத்தில் சேர்க்க வேண்டுமேயன்றி, அவனது பிறப்பைக் கருத்தில்கொண்டு அல்ல’ என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது (7.21.35).
அடுத்து, பகவத் கீதையில் கண்ணபிரான் வர்ண பேதம் பற்றிப் பேசுகிறான். “எனது உறவினர்களான க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொன்று போடச் சொல்கிறாய். போர்க்களத்தில் அவர்களை நான் வீழ்த்திவிட்டால் க்ஷத்திரிய வம்சத்தில் ஆண்களின் எண்ணிக்கை குன்றும். அதனால் வர்ணக் கலப்பு ஏற்பட்டுவிடும்’ என்று அர்ஜுனன் சொல்கிறபொழுதுதான் கண்ணபிரான் தனது பிரசித்திபெற்ற வர்ணாசிரம தர்மத்தை விளக்குகிறான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
“”நான்கு வகை குணங்களும் அவற்றையொட்டிய செயல்பாடுகளும் சேர்ந்த வர்ணாசிரம தர்மத்தை நிறுவியவன் நானே” என்று பிரகடனம் செய்யும் கண்ணபிரான் அடுத்து, “”ஆனால் அதன் நடவடிக்கைகளில் எனக்குப் பங்கில்லை” என்றும் அறிவிக்கிறான். வர்ணம் என்னும் குண பேதங்களின் அடிப்படையில் அவற்றைப் பொருத்தி மனிதன் தனக்கென உருவாக்கிகொண்ட சமுதாய அமைப்பிற்கு அவனே பொறுப்பு என இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய புரிதலின் காரணமாகத்தான் டாக்டர் அம்பேத்கரும் காந்தியைப் பற்றித் தாம் ஒரு முறை ஆற்றிய உரையில், “வர்ணம் என்பது பிறப்பால் வருவது அல்ல என்று பகவத் கீதை மிகத் தெளிவாகவே தெரிவிக்கிறது, காந்தி அதனை உணராமல் வழக்கமாகப் பழமையாளர் கூறும் விளக்கத்தையே தாமும் கூறுகிறார்’ என்று தெரிவித்தார்.
பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சேர்ந்தவனாக ஒருவனை முடிவு செய்வதானால் அவனது குணவிசேஷங்களைப் பரிசீலித்து அவை அந்தக் குறிப்பிட்ட வர்ணத்திற்கு ஏற்ப உள்ளனவா என்று ஆராய்ந்து, அதன் பிறகே அவனை அந்த வர்ணத்திற்குரியவனாக முடிவு செய்ய வேண்டும் என்று மகாபாரதம் கூறுகிறது. இந்த விதியின் அடிப்படையில்தான் துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் பிறப்பு பற்றித் தெரியவராத நிலையில், சூத்திரன் எனக் கொள்ளத் தக்க தேர்ப்பாகனால் அவன் எடுத்து வளர்க்கப்பட்டதால், சூத்திரனாகவே கொள்ளப்பட்ட போதிலும், க்ஷத்திரிய குண வியல்புகளை அவன் வெளிப்படுத்தியமையைச் சான்றாகக் காட்டி, கர்ணனை ஓர் சமஸ்தானத்திற்கு அரசனாக நியமித்ததன் மூலம், க்ஷத்திரிய வர்ணத்திற்குரியவனாக்கு கிறான்.
வர்ணம் என்ற குணம் சார்ந்த பிரிவுகள் பின்னர் சமூக அமைப்பில் நான்கு பிரிவுகளாகப் பொருத்தப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும் என ஆய்வது அவசியமாகிறது. சமூகத்தின் தொடர் இருத்தலுக்கு அவசியமாக கல்விகேள்விளை வழங்குவதற்கு ஒரு பிரிவும், சமுதாயத்தைக் கட்டிக் காப்பதற்கு ஒரு பிரிவும், அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்தலும், திரட்டி வழங்கலுமான பணிக்கு ஒரு பிரிவும், உடல் உழைப்பை வழங்குவதற்கு ஒரு பிரிவும் இருப்பது முக்கியம் என உணரப்பட்டு, இந்நால்வகை குணங்கள் எவரெவரிடம் தனித்தனியாகக் கூடுதலாகக் காணப்படுகிறதோ அவர்களை அந்தந்தப் பிரிவுகளில் சேர்த்துவிட்டால் சமுதாயத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்தான் குண விசேஷங்களுக்குரிய வர்ணத்தை சமூகப் பிரிவுகளாக அமைத்துக் கொள்ளும் ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்.
சிலருக்குக் கல்வி கேள்விகளிலும் வேறு சிலருக்கு உடற் பயிற்சி, போர்க் கலைகளிலும், இன்னும் சிலருக்குப் பொருள் உற்பத்தி, பொருள் தேடல் ஆகியவற்றிலும், சிலருக்கு உடல் உழைப்பிலும் ஈடுபாடு இருப்பது மனித இயல்பேயாகும். இந்த ஈடுபாட்டினை வர்ண குண பேதங்களுடன் பொருத்திப் பார்த்து, சமூகப் பிரிவுகளுடன் அவை இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.
வர்ணமானது, வர்ணாசிரமம் என்று அறியப்படுகிறது. ஆசிரமம் என்பது வாழ்வியலின் ஒரு கட்டம் அல்லது நிலை என்பதைக் குறிப்பதாகும். மனித வாழ்க்கையின் செயல்பாடுகள் பிரம்மசரியம், கிருஹஸ்தம் வானப் பிரஸ்தம், சந்யாசம் என நால்வகை ஆசிரமங்களாக அமைவது போலவே தனி மனிதப் பண்பை யொட்டி அன்றாடத் தனி மனித இயக்க நிலைகளில், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நால்வகை குண விசேஷங்களுக்குரிய செயல்பாடுகள் அமைகின்றன. தனி மனிதனின் விரிவாக்கமே சமூகம் ஆதலால் அதன் சீரான இயக்கத்திற்கும் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர குண விசேஷங்களின் அடிப்படையில் பிரிவுகளை அமைதுக் கொள்வது நலமெனக் கருதப் பட்டிருக்க வேண்டும். எவ்வகைக் குண விசேஷம் எவரிடம் கூடுதலாக உள்ளது எனக் கண்டு, அதற்கு ஏற்ப உரிய பிரிவுகளில் நியமனம் நடைபெற்றிருக்கவேண்டும். இதைத்தான் முன்பு சுட்டிக் காட்டிய ஸ்ரீமத் பாகவதத்தின் வரிகள் உணர்த்துகின்றன.
இவ்வாறு நால்வகை குண விசேஷங்களான வர்ணாசிரமத்தின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக அமைந்த சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினையும் சேர்ந்தவகள் அப்பிரிவில் நீடிக்கவும், அவர்களின் சந்ததியாரும் அதே பிரிவுகளில் நீடிக்கும் நிலை உருவாகியிருக்க வேண்டும். இதன் விளைவாகவே வர்ணமும் ஜாதியைப் போல் பிறப்பினால் வருவது என்ற எண்ணமும், வர்ணமும் ஜாதியும் ஒன்றே என்னும் மயக்கமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆராயும் வேளையில், வர்ணமும் ஜாதியும் ஒன்றல்ல என்பது தெளிவாகவே புலப்படும். வர்ணம் என்பது, தனி மனித மனப் போக்கு, நாட்டம், இயல்பு ஆகியவை குறித்துத் தீவிரமான சிந்தனையும் ஆய்வுக் கண்ணோட்டமும் மேற்கொள்ளப் பட்டதன் பயனாக நிர்ணயிக்கப்பட்ட குணப் பாகுபாடு ஆகும். ஒரே நபரிடம் சந்தர்ப்பச் சூழலுக்கு ஏற்ப அது வெவ்வேறாகவும் காணப்படும். அதாவது ஒருவரே ஒரு சந்தர்ப்பத்தில் பிராமணனாகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில் சூத்திரனாகவும் இருப்பது சாத்தியம்.
ஜாதி என்பதோ, இவ்வாறான நோக்கு எதுவும் இன்றித் தானாக உருவான பிரிவாகும். மனித இனம் சேர்ந்து வாழும் மந்தை வாழ்க்கையில் உள்ள இயற்கை ஈடுபாட்டின் காரணமாகச் சிறு சிறு குழுக்களாக வாழத் தொடங்கியதுதான் ஜாதிகளின் தொடக்கமாக இருக்க வேண்டும். மானிடவியலை ஆராயும்போது, இவ்வாறான மனிதக் குழுக்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒவ்வொரு கைவினையில் இயல்பாகவே தேர்ச்சிபெற்று அதன் விளைவாகக் கைவினைத் தொழிலின் தன்மைக்கு ஏற்ப ஜாதியாக அடையாளம் பெற்றிருக்கவேண்டும் என முடிவெடுக்கலாம். இவ்வாறாக, வெவ்வேறு கைவினைத் தொழில்களில் சிறந்த ஜாதிகள் தமது தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகத் தமக்கிடையே பணட மாற்று செய்துகொள்ளத் தொடங்கி, பிறகு, வசதியை முன்னிட்டு ஒன்றாக இணைந்து வாழத் தொடங்கவும் அதுவே காலப் போக்கில் தொழிலை முன்னிலைப் படுத்தும் ஜாதிப் பிரிவுகள் உள்ள சமூகமாக உருவாகியிருக்க வேண்டும். இவ்வாறு தேவை அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவான சமுதாயங்களுக்கிடையே கருத்து வேறுப்பாடுகளோ, பகைமையோ, தனது தனித் தன்மையைக் காத்துக் கொள்ள வேண்டும் என்னும் வேட்கையோ எழுந்த நிலையில் அருவமான எல்லைக் கோடுகள் சமுதாயங்களைத் தனித் தனிப் பிரதேசங்களாகப் பிரித்துக் காட்டவும், வர்ண அடிப்படையில் நான்கு பிரிவுகளாக அமைந்த சமூகங்களும், ஜாதி அடிப்படையில் அமைந்த சமூகங்களும் இணைந்து ஒரு புதிய சமூக அமைப்பு தோன்றியிருக்கக் கூடும். இதன் காரணமாகவே வர்ணப் பிரிவினையும் ஜாதிப் பிரிவுகளையும் ஒன்றெனக் கொள்ளும் மனப் போக்கு உருவாகி ஜாதிப் பிரிவினைகளுக்கு வர்ணாசிரமத்தைக் குறை கூறும் போக்கும் உருவாகியுள்ளது.
ஜாதி என்னும் குழு அமைப்பே பிறப்பின் பிரகாரம் வருவது. வர்ணம் ஒருவரை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற இடம் அளிக்கும் அளவுக்கு இலகுத் தன்மைகொண்டது. ஆனால் ஜாதி தன்னில் பிறந்த ஒருவர் என்னவாகிலும் தன்னை விட்டு நீங்கிச் செல்ல அனுமதிக்காத அளவுக்குப் பிடிவாதத் தன்மை வாய்ந்தது.
சிறு சிறு மக்கள் திரள்கள் ஒரு சமுதாயமாக் இனைந்த போதிலும் தமது தனித் தன்மையை இழக்க விரும்பாமல் பிடிவாதமாக அதனை இறுகப் பற்றிக் கொண்டமையால்தான் ஒவ்வொரு ஜாதியிலுங்கூடப் பல உட்பிரிவுகள் நீடித்திருக்கக் காண்கிறோம்.
ஜாதியானது தனது தனித் தன்மையை விடாது பற்றிக் கொண்டு அதனைக் குறித்து சமயங்களில் அகம்பாவமும் சமயங்களில் அவமான உணர்வும் கொள்வது. இதன் காரணமாகப் பிற ஜாதிகளுடன் மோதி பலப் பரீட்சை செய்ய முற்படுவது. தனது எண்ணிக்கை பலத்தைப்பெருக்கிக் கொண்டு மேலாதிக்கம் செய்ய முற்படுவது. தனது திறனைக் காட்டி மற்ற ஜாதியாரைத் தனக்குக் கீழாக அமுக்கி வைதுக் கொள்ளவும் அது முற்படும். இத்தகைய இயல்பு கொண்ட ஜாதி அமைப்பானது, சமுதாயத்திற்கு நன்மையைக் காட்டிலும் தீங்கையே கூடுதலாக விளைவிக்கிறது. ஆனால் இத்தகைய ஜாதி அமைப்பினைத்தான் திராவிட இயக்கம் கட்டிக் காத்து வருவதுடன், ஜாதி அமைப்பிற்கு வர்ணாசிரமத்தைக் குறை கூறவும் முற்படுகிறது.
வர்ணாசிரமம் குண பேதங்களை நிறுவி அவற்றுக் கேற்பச் செயல்பாடுகள் அமைவதை நிர்ணயிப்பதேயன்றி, அவற்றுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிப்பதல்ல. ஆனால் ஜாதியமைப்பு இறுமாப்பு, இகழ்ச்சி போன்ற உனர்வுகளுக்கு ஆட்பட்டு சமுதாயத்தில் பிளவுகள் ஏற்படக் காரணமாகிறது. எனினும், சமூக நீதி, இட ஒதுக்கீடு என்ற பெயர்களில் ஜாதிப் பிரிவுகளை நிரந்தரப்படுத்தும் நிலைப்பாட்டில் திராவிட இயக்கம் தன்னை நிறுத்தி வைத்துக் கொண்டுள்ளது. இது எவ்வகையில் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்பதை திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் அதன் ஆதரவாளர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஜாதியமைப்பு வலுப்பெற்று நீடித்திருக்குமாறு தனது நிலைப்பாட்டை அமைத்துக் கொண்டுள்ள திராவிட இயக்கம், வர்ணாசிரமப் பிரிவுகளுக்கு அளிக்கும் ஒரு விளக்கம் ஆய்வுக்கு ஒவ்வாத வகையில் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டிள்ளது.

ஹிந்து தர்ம சாஸ்திரங்கள் வர்ண பேதங்களை நிர்ணயித்தபோது நான்கு பிரிவுகளுமே தன்னைச் சார்ந்தவை என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகியுள்ளன. குணபேதத்தின் அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை ஹிந்து சமூகம் நிறுவிக் கொண்டபொழுது, சூத்திரர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும் தன்னைச் சார்ந்தவையாகத்தான் கொண்டுள்ளது. ஆனால் திராவிட இயக்கமானது, வர்ண பேதத்தில் பிராமணரை மட்டும் அவர்கள் வேறு இனம் சார்ந்தவர்கள் என்பதுபோல அந்நியப் படுத்திவிட்டு, எஞ்சிய க்ஷத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக சூத்திரர் என்ற ஒரே பிரிவாகவும் ஒரு தனி இனமாகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

திராவிட இயக்கத்தின் கற்பிதமான ஆரிய திராவிட இன வாதக் கோட்பாட்டின்படியே ஆராய்ந்தால்கூட, ஆரியக் கோட்பாடு என வர்ணிக்கப்படும் வர்ணக்கொள்கையில் காணப்படும் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்கள் அனைத்துமே ஆரிய இனத்திற்குட்பட்டவையாக அங்கீகாரம் உள்ளவைதான் என்பது விளங்கும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே பஞ்சமர் என்பதாகக் கூறப்படும் ஐந்தாவது பேதத்தைக்கூட அது தன்னில் உள்ளடக்கியதாகக் கொண்டுள்ளதையும் ராம காதையினை இயற்றிய வால்மீகியின் வரலாற்றை நினைவுகொள்கையில் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

‘ஆரிய’ என்பது சீரிய பண்பு நலன்களைச் சுட்டுவதாகவும், “திராவிட’ என்ற சொல் புவியியல் ரீதியான வட்டாரத்தையும் அதில் வழங்கும் மொழியினையும் குறிப்பிடுவனவாக இருப்பினும், ஹிந்து சமுதாயத்தில் பிளவினை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காகவே அவற்றை இருவேறு இணங்களாகக் காட்டுவதில் ஏறத் தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தானத்திற்கு வந்த கிறிஸ்தவ மத மாற்றப் பிரசாரகர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததில் வியப்பில்லை. மேலும் ஆரியர்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்று சித்திரிப்பதிலும், ஒரு வசதி இருந்தது. ஹிந்துஸ்தானம் என்று அறியப்படுகிற நிலப்பரப்பு எவரும் சொந்தம் கொண்டாட முடியாத புறம்போக்கு என்றும், மற்றவர்களைப் போலவே தாமும் அதனுள் புகுந்து கைக்கு எட்டியதை ஆக்கிரமித்துக் கொள்வதில் தவறில்லை என்றும் சாதிக்க முடிந்தது. ஆரியர் வருவதற்குமுன் பழங்குடியினரான திராவிடர்கள் வசித்து வந்தனர் என்றும் அவர்களை ஆரியர் வெற்றிகொண்டு தென்திசை நோக்கி விரட்டியடித்தனர் என்றும் கதை சொன்னதில் திராவிடர்கள் ஹிந்துக்கள் அல்ல என்றும் எனவே அவர்களுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியைச் சொல்லி அரவணைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் வாதிக்க முடிந்தது. எவ்வித முகாந்திரமும் இன்றி, பிராமணர்களை மட்டும் அவர்கள் சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துபவர்களாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக அவர்களை மட்டும் ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தி மற்ற பிரிவினர் அனைவரையும் ஒட்டு மொத்தமாக சூத்திரர் என்று ஒரே பிரிவாக அமைத்ததில் ஹிந்து சமூகத்தை இரண்டாகப் பிளந்து சூத்திரர் என்ற பிரிவினரிடையே மத மாற்றப் பணியை மேற்கொள்வது எளிதாக இருந்தது.

ஹிந்துஸ்தானத்தின் மொழிப் பிரிவுகளை ஆரியம், திராவிடம் என வகைப்படுத்தியது ஐரோப்பிய மொழியியலாளர்கள்தாம். ஆனால் அதனைக் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் தங்கள் வசதிக்காக இனப் பிரிவுகளாக நிறுவ முற்பட்டனர். இனப் பிரிவுகளை வகைப்படுத்துவது மானிடவியலாளரேயன்றி, மொழியியலாளர் அல்ல என்பது கருத்தில் கொள்ளப்படாமல், இடைவிடாத பிரசாரத்தின் காரணமாக அதுவே ஓர் உண்மையென உறுதிப் பட்டது.

கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை எளிதில் மத மாற்றம் செய்துவிடுவதற்கான வசதிக்காக நிறுவிய ஆரியதிராவிடப் பிரிவுக் கோட்பாட்டைத் தனது சமூக சீர்திருத்தப் பிரசாரத்திற்கென திராவிட இயக்கம் இரவல் வாங்கிக் கொண்டதை ஒரு நகை முரண் என்றே கொள்ளவேண்டும். எவ்வித ஆதாரமும் இன்றித் தமிழ் நாட்டு பிராமணர்களை அவர்கள் தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் அந்நியர் எனவும் வந்தேறிகள் எனவும் வர்ணித்து, சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான துவேஷப் பிரசாரத்தை முடுக்கிவிட்டு, அவர்கள் மீது மற்ற பிரிவினருக்கு வெறுப்பூட்டுவதே திராவிட இயக்கத்தின் சமூக சீர்திருத்தப் பணியாக அமைந்தது.
சுயமான கருதுகோள் இன்றி உள் நோக்கத்துடன் வெளியார் கற்பித்த ஒரு ஆதாரமற்ற கோட்பாட்டைத் தனதென வரித்துக் கொண்டு திராவிட இயக்கம் செயல்பட்டதால் அது மண்ணில் வேரூன்ற மாட்டாமல் ஒரு நூற்றாண்டு கூட உயிர் தரித்திருக்க இயலாமல் பட்டுப் போயிற்று. ஆனால் அது சமூகத்தின் ஒரு சாரார் மீது இடைவிடாமல் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த துவேஷப் பிரசாரம் மட்டும் எல்லாத் துறைகளிலும் ஊடுருவி ஒரு பார்த்தீனியமாக எங்கும் பரவி விட்டிருப்பதுதான் இன்றைய நிதர்சனமாகும்.
++++
மலர்மன்னன் இரண்டாவது மாடி, 67/12 பள்ளிப்பட்டு பிரதான சாலை, சென்னை 600 113 தொலைபேசி எண்: 4351 4248 மொபைல்: 98844 00699/ 97899 62333

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்