சின்னக்கருப்பன்
சென்ற நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோது, காவிரித் தண்ணீர் ஒப்பந்தம் தமிழ்நாட்டுக்கு சாதகமாக எழுதப்பட்டது . அப்போது மைசூர் சமஸ்தானத்தில் இருந்த மைசூர் ராஜாவை தலையில் தட்டி வெள்ளையர்கள் எழுதிய காவிரி நதி நீர்ப் பங்கீடு மிகவும் தமிழகத்துக்கு சாதகமானது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த வெள்ளையர்கள், அவர்கள் ஆளும் பகுதியில் விளைச்சலும் வளமையும் இருந்தால்தான் தமிழகத்தில் இன்னும் நிறையச் சுரண்டலாம் என்று அப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.
1947ல் வெள்ளையர்கள் இந்தியாவிலிருந்து செல்லும்போதோ, அல்லது மொழி வாரி மாநிலங்கள் அமையும்போதோ, கர்னாடகம் அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று கதறி பொதுவான ஒப்பந்தம் ஒன்றை எழுத வைத்திருக்கலாம். ஆனால் அப்போது ஆட்சியில் காங்கிரஸ் இருந்தது. மெட்ராஸ் பிரசிடென்ஸி ஒரு பெரும் மாகாணமாக இருந்ததால், அதனை எதிர்த்து கர்னாடகத்தால் ஏதும் சொல்லமுடியாமல் போயிருந்திருக்கலாம்.
அதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் திராவிட முன்னேற்றக் கழகம் உட்கார்ந்ததிலிருந்து பிரச்னைதான். அப்போதெல்லாம் மிகவும் கவனமாக கர்னாடகம் தொடர்ந்து அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே மாநிலத்திலும் ஆட்சிப்பொறுப்பு கொடுத்தது. இதனால் மாநிலத் தலைமை தனக்குத் தேவையான விஷயத்தை முதலமைச்சர் அளவில் கர்னாடகம் தொடர்ந்து ஒப்பந்த விதிகளை மீறினாலும் கண்டுகொள்ளாமல் இருந்தது. தமிழர்கள் மட்டும் மத்திய அரசுக்கு காங்கிரசுக்கு தொடர்ந்து ஆதரவளித்தாலும் மாநிலத்தில் ஒரு மாநிலக் கட்சியையே உட்காரவைத்தார்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அண்ணா பேச்சு, கலைஞர் வசனம், எம்ஜியார் சண்டை , ஜெயலலிதா பேச்சு என்று ஆயிரம் காரணங்கள். இந்த காரணங்கள் எல்லாம் இல்லாமல் தொடர்ந்து கர்னாடகம் தன் பொருளாதார நலன்களுக்குச் சாதகமாக இருக்கும் மாநில அரசுகளையே அரசுக்கட்டிலில் உட்காரவைத்தது.
இப்போது காவிரி நதி நீர்ப் பங்கீடு பற்றி நிரந்தர ஒப்பந்தம் எழுதிவிடுவார்களோ என்றுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. அதிமுகவின் ஜெயலலிதாவும், காங்கிரசின் கிருஷ்ணாவும் ஒப்பந்தம் எழுதினால், யாருக்குச் சாதகமாக எழுதப்படும் என்று யோசிக்கக்கூட வேண்டாம். நீதிமன்றத்தில் கொடுத்த நதிநீர் அளவைக் குறைத்து கொடுக்க உடனே கிருஷ்ணாவும், மத்திய அரசும் உடனே காவிரி நடுவர் ஆணையம் கூட்டியதைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம், என்ன நடக்கும் என்று.
இப்போதைக்குத் தேவை, உறுதியாக தமிழக நலன்களைக் காப்பாற்றும் ஒரு தலைமை. அதிமுகவிடமும் திமுகவிடமும் என்னதான் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கு சாதகமாக மத்திய அரசு இல்லை. ஏனெனில் இவை எப்போதும் மத்திய அரசுக்கட்டிலில் உட்காரப்போவதில்லை. ஆகவே, இப்போதைக்குத் தேவை தேசியக் கட்சி ஒன்று தமிழகத்தில் பதவிக்கு வருவதுதான்.
தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள்தான் தேசிய அளவில் ஆட்சியில் அமரக்கூடியவை. இப்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தால், அல்லது பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் காவிரி நதி நீர் பங்கீடு தமிழகத்து ஆதரவாக எழுதப்படும் என்பது உண்மைதான். ஆனால் அது வரும் என்று நம்பும் அளவுக்கு எந்த விதமான மக்கள் ஆதரவும் இல்லை. மத்தியில் தான் தி மு க வுடன் கூட்டு , மானில அளவில் நாங்கள் தனி என்று சொல்லி ஆயிரம் வாக்குக்கு மேல் இவர்களால் வாங்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் அது மக்களுக்கு மிகவும் தெரிந்த கட்சியும் அல்ல. முஸ்லீம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் எதிரான கட்சி என்ற பிம்பம் சரிசெய்யப் படும் என்று தோன்றவில்லை. தம்மை இந்துக்களாய்க் காண்பவர்கள் கூட பா ஜ க மாதிரி வெளிப்படையாய் மற்ற மதங்களை எதிர்த்து இந்து மதத்தை வளர்க்கப் போகிறோம் என்று சொல்லும் கட்சியை நம்பத் தயாரில்லை.
காங்கிரஸ் தமிழர்களுக்கு தெரிந்த கட்சி. காமராஜ், ராஜாஜி, ம பொ சி என்று பல முக்கிய தலைவர்கள் வளர்த்த கட்சி. இப்போது, தொண்டர்கள் இல்லையென்றாலும் தலைவர்கள் ஏராளம் கொண்ட கட்சி. மற்ற கட்சிகளில் எல்லாம் தொண்டர்கள்தான் அடித்துக்கொள்வாரக்ள். தமிழக காங்கிரஸில் தலைவர்களே உள்ளாடை கிழிய அடித்துக்கொள்வார்கள். உண்மைதான்.
இருந்தாலும், காங்கிரசுக்கு தமிழகம் போடும் ஓட்டுத்தான், காவிரி நதி நீர்ப் பங்கீடு தமிழகத்துக்கு ஆதரவாக எழுதப்பட வைக்கும்.
மேலும் சமீபத்தில், காவிரியில் தண்ணீரை தமிழகத்துக்கு கொடுத்ததற்காக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கர்னாடக விவசாயிகள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். இது தமிழகத்துக்கு நல்லதல்ல. இது போன்ற விஷயங்கள் கமுக்கமாக நடந்து முடிந்தால்தான் நல்லது. இந்த பிரச்னை காரணமாக அடுத்த தேர்தலில் கர்னாடகம் பாஜகவுக்கு ஓட்டுப் போடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
ஆனால், மத்திய அரசில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை பலருக்கு இல்லை. ஏற்கெனவே ஏராளமாக நடந்து முடிந்திருக்கும் தேர்தல்களில் பல இடங்களில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது நிச்சயம் காங்கிரஸ்தான் அடுத்த பொதுத்தேர்தலில் மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று தோன்றுகிறது. அப்போது தமிழகம் காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு காங்கிரஸ் மாநில ஆட்சியில் பதவியில் உட்கார்ந்தால் இன்னும் நல்லது. அதாவது கர்னாடகாவில் பாஜக, தமிழகத்தில் காங்கிரஸ் என்று இருந்தால், நிச்சயம் தமிழ்நாட்டுக்குச் சாதகமாகத்தான் காவிரி ஒப்பந்தம் எழுதப்படும். அப்போது ஒரு 99 வருடத்துக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு மீண்டும், அதிமுக, திமுக, எம்ஜியார் சண்டை போன்ற சமாச்சாரங்களை சந்தோஷமாக பார்த்துக்கொண்டிருக்கலாம்.
ஆகவே, காவிரியில் தண்ணீர் வர போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!
***
காங்கிரசுக்கு தமிழர்கள் ஓட்டுப்போட வேண்டும் என்று நான் சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது அதற்குள்ளே இருக்கும் உட்கட்சி பூசல், கோஷ்டிச் சண்டை ஆகியவை.
விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன்.
பத்திரிகையாளர்களும் , மாற்றுக் கட்சிக் காரர்களும் இதனை கோஷ்டிப் பூசல் என்று இழிவுபடுத்திப் பேசினாலும், இந்தப் பூசலின் பின்னே இருக்கிற ஒரு உண்மையைக் காண மறுத்து விடுகிறார்கள் அல்லது மறந்துவிடுகிறார்கள். கோஷ்டிப் பூசல் எங்கு வரும் ? கோஷ்டிகள் இருக்கும் கட்சியில் தான் வரும். கோஷ்டிகள் எங்கு வரும் ? ஜனநாயகம் இருக்கும் இடத்தில் தான், கோஷ்டிப் பூசல் வரும். தி மு க, அ தி மு க, ம தி மு க, , பா ம க-வில் கோஷ்டிப் பூசல் வராது. ஏன் ? இவை ஜனநாயக அடிப்படையில் கட்டப் பட்ட கட்சிகள் அல்ல. ஒரு தலைவனை அல்லது ஒரு தலைவியை மையமாய் வைத்துக் கட்டப் பட்ட கட்சிகள்.
கருணாநிதி வைத்தது தான் தி மு க வில் சட்டம். மாறனின் நலம் கருதி, பா ஜ கவுடன் உறவு பூண்டால், தி மு க கட்சித் தொண்டன் பேசாமல் இருக்க வேண்டிய கட்டாயம். மாறனுக்கு நன்மை , தமிழ் நாட்டிற்கும், தி மு கவிற்கும் என்ன பலன் என்று தொண்டன் கேட்டுவிட முடியுமா ? ஸ்டாலின், அழகிரி குடும்பச் சண்டை தான் இங்கே கோஷ்டிப் பூசல், குடும்பச்சண்டை தான் கட்சி உட்சண்டை.
ஜெயலலிதா வைத்தது தான் அ தி மு க வில் சட்டம். திடாரென்று ஒரு நாள் அம்மா ‘மத மாற்றத் தடைச் சட்டம் ‘ கொண்டு வருகிறார்கள். து அ தி மு க வின் அடிமட்டத் தொண்டர்களிடையே விவாதிக்கப் பட்டதா ? வாக்கெடுப்பு செய்தார்களா ? தேர்தல் அறிக்கையிலோ அல்லது, அ தி மு க வின் கொள்கை அறிக்கையிலோ இது இடம் பெற்றதா ? யாரும் கேள்வி கேட்க முடியாது.
ராமதாஸ் திடாரென்று ரஜனியை எதிர்த்து அறிக்கை விடுகிறார். ஏற்கனவே பா ம க வின் முக்கிய பதவிகள் மகன், மருமகள் என்று பகிர்ந்து கொடுத்தாயிற்று. தமக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு மற்ற பதவிகள். தொண்டர்கள், என்ன தலைவரே ரஜனியை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று எதிர்த்துக் கேட்க முடியுமா ? கேட்டால் ராமதாஸ் விட்டு விடுவாரா ?
இவர்களின் கட்சியெல்லாமே, தலைவர் எவ்வழி தொண்டர் எவ்வழி என்ற செக்கு மாட்டுக் கூட்டங்கள், கருணாநிதிதான் முதல்வராக வேண்டுமா, ஜெயலலிதா தான் முதல்வராக வேண்டுமா, வேறு ஆட்களே இல்லையா, என்று எந்தக் கட்சித் தொண்டனாவது மூச்சு விட முடியுமா ? இந்தத் தலைவர்கள் தான் இந்தக் கட்சிகளில் ஒன்று (1). மற்ற எல்லோருமே ஒன்றைத் தொடர்ந்து வரும் பூஜ்யங்கள் தான்.
ஆனால் காங்கிரசின் கோஷ்டிப் பூசல் அப்படிப்பட்டதல்ல. இது ஜனநாயகத்தின் அடையாளம். அதிகாரம் அல்லது முனைப்பு வேண்டி தம்முடைய குழு, ஜாதி, ஊர்க்காரர்கள் — முன்னேற்றத்திற்காக பாடுபட ஒரு குழுத் தலைவர் முனையும் போது நிச்சயம் கோஷ்டிப் பூசல் வரத்தான் செய்யும். இது தான் ஜனநாயக இயக்கத்தில் ஆரோக்கியம். ( இதுவே மத்தியில் ஆட்சியில் வரக்கூடிய பாஜகவில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறையாகக் காண்கிறேன். அதில் காங்கிரஸ் அளவுக்குக் கோஷ்டிப் பூசல் இல்லை.)
சரி காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும் ? வருடத்துக்கு ஒரு முதலமைச்சர் நிச்சயம். இந்த முதலமைச்சர் வந்ததுமே அடுத்த விமானத்தில் எதிர்கோஷ்டி டில்லிக்குப் பறக்கும். இரண்டு மாதத்துக்குப் பின்னர் இன்னொரு முதலமைச்சர். இதில் என்ன லாபம் ? இருக்கிறது. எல்லா ஜாதியினரும் ஒரு வருடமாகவாவது முதலமைச்சர் ஆகிவிடலாம் பாருங்கள்!
இன்றைக்கு திமுக விட்டால் அதிமுக என்று இருக்கும் நிலையில் கருணாநிதி ( அல்லது அவரது குடும்பம்) இல்லையென்றால், ஜெயலலிதா அல்லது தேவர் ஜாதியிலிருந்து இன்னொருவர் என்றுதான் இருக்கும். வேறு எந்த ஜாதியினரும் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை. என்னதான் அமைச்சராக இருந்தாலும், முதலமைச்சராக இருப்பது என்பது வேறு. அந்த பதவி இருந்தால் பல நன்மைகள் அந்த ஜாதிக்குக் கிடைக்க வழி உண்டு என்பது நாம் பார்க்கும், பேசும் உண்மை.
இன்று இருக்கும் சூழ்நிலையில் ஒரு ராமதாசோ, திருமாவளவனோ, கிருஷ்ணசாமியோ முதலமைச்சராவது என்பது நடக்கக்கூடிய காரியமா ? நிச்சயம் இல்லை. வன்னிய மாநிலம் பிரித்து எடுத்தாலும் கூட நடக்காத காரியம் அது. இன்னும் இருக்கும் ஜாதிகட்சிகளில் இருக்கும் தலைவர்கள் முதலமைச்சராக ஆசைப்படுவது என்பதெல்லாம், எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடுவது போன்றது. விஷயம் மிகவும் எளிமையானது. வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்றால், அன்னியர் ஓட்டு வன்னியருக்கு எதற்கு என்று பதில் கேட்டால், பத்து சீட்டில் கூட வன்னிய கட்சி ஜெயிக்க முடியாது. பெரும்பான்மை என்று சொல்லும் வன்னியருக்கே இந்த கதி என்றால், மற்ற தலித் கட்சியினர், முதலியார் கட்சியினர், கோனார் கட்சியினருக்கெல்லாம் என்ன கதி ?
இப்படிப் பட்ட கட்சிகள் உதிரி உதிரியாக இருப்பது ,அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நல்லது. அதாவது கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமே நல்லது. இந்த கட்சிகளின் பின்னால் விசுவாசமான தொண்டர்களும் ஆதரவாளர்களும் இருப்பதனால், கூட்டணி போட லகுவானது. ஆனால் என்ன பிரயோசனம் ? அமைச்சர் பதவி கூட இல்லாமல் ராமதாஸை விரட்டி விட்டது இவர்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். இதற்கும், அவர்கள் திமுக அதிமுகவில் இருந்து கொண்டே அமைச்சராக ஆவதற்கும் என்ன வித்தியாசம் ?
திமுக அதிமுக இரண்டிலுமே எல்லா ஜாதியினரும் இருக்கிறார்கள். அமைச்சரவைக்குள் வழக்கம்போல எல்லா ஜாதியினரும் வெறும் அமைச்சராகவே தொடரலாம். இதற்கும், நேரடியாக அதிமுக, திமுகவுக்கு ஓட்டுப்போடுவதற்கும் என்ன வித்தியாசம் ? ஜாதிக் கட்சி தொண்டர்களின் உழைப்புத்தான் வீண். ஏதோ, கூட்டணி ஆட்சிக்கு வரும், அப்போது நாம் முதல்வராகி விடலாம் என்று மனப்பால் குடிப்பதெல்லாவற்றையும் ஒரே கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கொடுத்து தமிழ்நாட்டு மக்கள் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே கதிதான் நடக்கும். இவர்கள் ஆயிரம் கணக்கு போட்டு கூட்டு, அவியல் போடுவதை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு, கடைசியில் ஒரே கட்சிக்குத்தான் தமிழ்நாட்டைத் தாரை வார்ப்பார்கள் தமிழர்கள்.
இது உடைபட வேண்டுமெனில், இவர்கள் தங்கள் தங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசில் சேரவேண்டும். அதிலும் கோஷ்டி வைத்துக்கொள்ள வேண்டும். தகுந்த நேரத்தில் மேலிடத்தைக் காக்காப் பிடித்து முதலமைச்சாராக வேண்டும். வேறு வழி இல்லை.
வன்னியர் முதல்வராவது மட்டுமல்ல, தலித்தும் கூட முதல்வராகலாம். மற்ற மானிலங்களிலும் கூட தலித்தையும், முஸ்லீமையும், பிற்படுத்தப் பட்டோரையும் முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சி தான். ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி தத்தம் கட்சிகளை காங்கிரசுடன் இணைத்து விட்டால், வன்னியர் தமிழ் நாட்டைப் பிரிப்பது போலில்லாமலேயே, முழு தமிழ் நாட்டிற்கும் முதலமைச்சராக நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. தலித்தும், முஸ்லீமும் கிரிஸ்தவரும் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தொலைநோக்கு நன்மையைக் கருதாமல், மீண்டும் கருணாநிதி, ஜெயலலிதா என்று மாறிமாறி காலில் விழுவதில் அர்த்தமில்லை. இதிலும் இன்னொரு விஷயத்தையும் நான் சொல்ல வேண்டும். ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் ஒரு தனி கட்சியை கட்டி ஒரு பெரும் தொண்டர்படையை கட்டியிருப்பது ஒரு உறுதியான கோஷ்டியை அவர்களுக்கு காங்கிரஸில் தரும். இதுவரை செய்தது வீணில்லை. அது பெரும் பலம். அந்தப்பலம் தொடர்வதற்கு, காங்கிரஸின் நேம் பிராண்டும், கூட்டமைப்பும் உதவும். இவ்வாறு தனிகட்சி நடத்தி சேர்த்த தொண்டர்படை, கோஷ்டியாக காங்கிரஸில் பெரும் பலத்தைத் தரும். இவர்கள் மூவரும் காங்கிரஸில் சேர்வார்களா, ஆகாத காரியம், வீண் பேச்சு என்பதெல்லாம் இப்போது பார்க்கும்போது உண்மையாகத்தான் தோன்றும். politics is the art of the possible. என்று சொல்வார்கள். இவர்கள் ஈகோ காரணமாகப் போகாமல் இருந்தால் இவர்களுக்குத்தான் நஷ்டம். இவர்கள் பின்னாலிருக்கும் ஜாதித்தொண்டர்களுக்குத்தான் வீண் வேலை. உழைத்த உழைப்பு, விழலுக்கு இறைத்த நீரானது சென்ற தேர்தலில் பார்த்ததுதானே ? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதுதான் தமிழ்ப் பழமொழி. கர்னாடகா காங்கிரஸ்கூட இப்படிப்பட்ட கூட்டமைப்புதான். அதிலும் ஆயிரம் கோஷ்டிகள். அப்படிப்பட்ட ஒரு ஜனநாயக கூட்டமைப்பு முறையில்தான் தனக்கும் நல்லது செய்து கொள்ளவேண்டும், தமிழ்நாட்டுக்கும் நல்லது செய்ய முடியும். தனி ஆவர்த்தனம் வாசிப்பதில் பிரயோசனமில்லை என்று தெரிந்தவுடன் அடுத்த காட்சிக்குத் தாவுவதுதான் நல்ல தலைமை. ஒரு பிரயோசனமும் இல்லாமல், வெகுகாலம் தொண்டர்களுக்கு வெறும் பேச்சு மட்டும் போட்டு வேலை வாங்க முடியாது.
இந்த பிரச்னைகளைப் பற்றி நன்றாக ஆபிரகாம் செலின் அவர்கள் மருதம் இதழில் எழுதியிருக்கிறார். ஆனால், சந்தர்ப்பவாத அரசியல் பண்ணவேண்டும் என்று சொல்லிவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேரச்சொன்னால் எப்படி ? கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ்நாட்டில் இருக்கும் சூழலில், இந்த தலித் கட்சிகள் செய்யும் வேலையைத் தானே செய்கிறது ? திமுக, இல்லையேல் அதிமுக என்று கம்யூனிஸ்ட் கட்சிகளே இருக்கும்போது, அதில் இணைந்து இதே வேலையைச் செய்வதற்கு, தனியாக இருந்தாலாவது ஒரு பிரயோசனம் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி நல்ல கட்சியாக, உழைப்பவர்களுக்குப் போராடும் கட்சியாகவே இருக்கலாம். போராடி பலர் குண்டடி பட்டு இறந்து கிடைக்கும் சந்தோஷம், முதலமைச்சராக இருப்பதன் மூலம் வலிமையுடன் அதனை சாதித்துக்கொள்ள முடியுமெனில், எதற்கு வீண் இறப்பு ? ஏன், இன்று மாயாவதி பாரதிய ஜனதாவுடன் கூட்டு வைத்து ஆட்சியில் உட்காரமுடியுமெனில், ஏன் தலித் கட்சிகளும், வன்னியக் கட்சிகளும், கோனார், முதலியார் கட்சிகளும் பழைய எதிரியான காங்கிரஸில் ஐக்கியமாகக் கூடாது ? என்னைக்கேட்டால், கம்யூனிஸ்ட் கட்சியினரும் காங்கிரசுடன் இணைப்பு அல்லது கூட்டு வைப்பதுதான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரியானது.
இன்று த.ம.கா காங்கிரசுடன் இணைந்திருக்கிறது. இது போல, பாட்டாளி மக்கள் கட்சியும், புதிய தமிழகமும், விடுதலை சிறுத்தைகளும், இன்னும் புதிய நீதிக்கட்சி ஆகியவையும் காங்கிரசுடன் இணைந்து, முஸ்லீம் லீக் கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து ஒரு பெரும் கூட்டமைப்பாக காங்கிரசை உருவாக்க வேண்டும். அது நிச்சயம் அடுத்த தேர்தலில் வெற்றி வாகை சூடும்.. தனித்தனி ஜாதிகட்சியாக இருந்தால், அந்த ஜாதியினர் கூட மதிப்பதில்லை என்பதை சென்ற தேர்தலில் பார்த்தாய் விட்டது. ஜாதிக்கட்சி நடத்தியது தவறு என்று பகிரங்கமாகச் சொல்லி, காங்கிரஸ் தலைமையின் கீழ் ஜனநாயகக் கூட்டமைப்பாக இணைந்து உழைப்பதுதான் சிறந்தது.
எனக்கு காங்கிரஸ் கட்சி பிடிக்காதுதான். இந்தியாவைப் பொறுத்த மட்டில் பல பிரச்னைகளுக்கு அது ஊற்றுக்கண். ஆனால் இன்று வேறு வழி இல்லை. சோனியாவைத் தற்காலிகமாக மறந்துவிடுங்கள். இன்றைக்குத் தேவை, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி. அது பல பிரச்னைகளுக்குத் தீர்வு. ஒரு குறிப்பான பொருளாதாரக் கொள்கை, பா ஜ க வை அகில இந்திய அளவில் எதிர்த்து நிற்கும் ஆற்றல், பரந்த நோக்கமுள்ள, குறுகிய நோக்கமில்லாத கூட்டுத்தலைமை, அனைத்து சாதியினரையும், மதத்தினரையும் அனுசரித்துச் செல்லும் பாங்கு இவையெல்லாம் காங்கிரசின் கலாச்சாரம். எதிர்மறையாய் இருக்கும் விஷயங்கள் பல உண்டு. அந்த விஷயங்களை உள்ளிருந்தே எதிர்க்கலாம். ஆட்சியில் இருக்கும் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ராமதாசும் வெளியே இருக்கும் திருமாவளவன் கிருஷ்ணசாமி ராமதாஸை விட நிறைய தம் குழுவினருக்குச் சாதித்துக்கொடுக்க முடியும். அது காங்கிரஸ் பெயரால் மட்டுமே முடியும்.
ஆக, இன்று தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும் பல பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தான் மருந்து.
***
karuppanchinna@yahoo.com
- கண்ணிலென்ன கார்காலம் ?
- அறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)
- விண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)
- விடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஊடறு – ஓர் பார்வை
- பித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)
- கட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்
- ஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002
- நாற்காலி
- அனகொண்டா
- மீண்டு(ம்) வருவேன்…
- தேடல்…
- எல்லாம் உன் பார்வை
- சுமைகளும் சுகங்கள் ஆகும்
- ஓ-ஹிப்
- உறைந்த இரத்தங்கள்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)
- இரண்டு கவிதைகள்
- பின்னல் பையன்:இரண்டாம் பாகம்
- டெபோனேரும் ப்ளேபாயும்
- மொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்
- ஜின்னாவும் இஸ்லாமும்
- வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1
- தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!
- மலேசியாவின் இனப் பிரசினை
- Europe Movies Festival
- வினை
- கொடியது வறுமை..
- Lord Siva
- கட்டிய நெறி
- நினைத்துப் பார்க்கிறேன்
- அனைத்தும் ஒன்றே !
- அவிரோதம்
- இரண்டு ஹைக்கூக்கள்