தேவமைந்தன்
இன்று தமிழ்க்கல்வியியல் பணியில் உற்சாகமாக ஈடுபட்டுவரும் இளைஞருள் மு.இளங்கோவன் குறிப்பிடத்தக்க ஒருவர். 2003, திசம்பர் முதல் நம் திண்ணை குழாமுடன் எதிர்வினைகளும் கருத்தாடல்களும் புரிந்து வருபவர். அவர் தன் ‘நாட்டுப்புறவியல்’ என்னும் புதிய நூலில், தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் எவ்வாறு தமிழ் நாட்டாரின் வாழ்வியலையும் நாநவில் படைப்பாக்கங்களையும் அயல்மொழிகளில் உள்ளவைபோல உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.
“இணையம் வழியாக இன்று உலக அறிஞர்களின் அறிவுத்தொகுப்புகளை உற்று நோக்கிக் கற்கும்பொழுது மேல்நாட்டினரின் வளர்ந்த நிலையும் நாம் இன்னும் வளர்ச்சி நோக்கி நெடுந்தூரம் செல்ல வேண்டி உள்ளதும் புலப்படுகிறது. நாட்டுப்புறவியல் என்று சொல்லப்படும் ‘FOLKLORE’ எனும் துறை சார்ந்த படிப்பின் தேவை இந்திய அளவில் இன்னும் முழுமையாக உணரப்பட்டதாகத் தெரியவில்லை. ‘FRRC,’ ‘IFSC,’ ‘FOSSILS’ போன்று அங்கொன்றும், இங்கொன்றும் ஆய்வு நிறுவனங்கள் உள்ளனவே தவிர மேல்நாட்டை நோக்க, செய்யத்தகுந்த ஆய்வுக்களங்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இத்துறை மிகுந்த வளர்ச்சி பெற வேண்டி உள்ளது. பழுத்த தாள்களில் அச்சடித்து அகம் மகிழும் நம் மனப்போக்கினை மாற்றிக் கொண்டு இணையம் வழியாகச் செய்திகளை வெளி உலகிற்கு மின்மொழிகளில் தெரிவிக்க வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம். அதுபோல் தொன்மரபு பின்பற்றும் மக்கள் வாழும் காலத்திலேயே நம் பழைய அடையாளங்களைத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.
தமிழில் உள்ள இணையப் பக்கங்களை நோக்கும் பொழுது உள்ளூர்ச் செய்திகளின் தரத்தில் நம் இணையப் பக்கங்கள் உள்ளனவே தவிர, உலகத் தரத்தில் நம் பக்கங்களை வடிவமைக்க வேண்டி உள்ளது. உலகின் எந்த முனையில் உள்ளவரும் நம் பழமரபுச் செல்வங்கள் பற்றிய விரிவான பரந்த செய்திகளை அறியும் வண்ணம் நம் நாடு முழுவதும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நம் நாட்டின் செய்தியைச் சொல்லும் எந்த இணையப் பக்க முகப்பிலும் பழமரபுச் செல்வங்கள் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் தொடர்புகள் (Links) இணைக்கப்பட வேண்டும். அரசு இணையப் பக்கங்களில் சுற்றுலா, கோயில், பார்க்கும் இடங்கள், மருத்துவம், திரைச்செய்தி, தங்கும் இடம் பற்றிய குறிப்புகள் இருப்பது போலவே மரபுச் செல்வங்கள் (Heritage) அல்லது ‘Folklore’ என்னும் செய்திப் பகுதி இணைக்கப் பெறல் வேண்டும். அமெரிக்க நாட்டுப்புறவியல் கழக இணையப் பக்கத்திற்குச் சென்றால் அமெரிக்காவில் உள்ள நாட்டுப்புறவியல் கல்விக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், படிப்பு முறைகள், படிக்கும் நேரம், கட்டணம், ஆசிரியர்கள், கட்டட அமைப்பு, முன்னோடி ஆய்வுகள், நூலகம் பற்றிய குறிப்புகள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. அதுபோல் நம் இணைய அமைப்புகள் அனைத்திலும் அறியத்தகுந்த இணையத் தொகுப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்களை அடையாளப் படுத்தும் கட்டுரைகள், படங்கள், மின்முகவரிகள், தொலைபேசி எண்கள், இணைய முகவரிகள் யாவும் நம் ஆய்வு முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்” என்று தன் நாட்டத்தை வெளிப்படுத்தும் இளங்கோவன், நாட்டுப்புறவியல் துறையில் அரும்பாடுபட்டு உழைத்து மிகச் சிறந்த முடிபுகளைத் தம் ஆய்விதழான ‘ஆராய்ச்சி”யில் கொண்டுவந்த அறிஞர் நா. வானமாமலை முதலான அறிஞர் பெருமக்களையும் அவர்களின் அறிவுப் புலத்தையும் உலகளாவிய நிலையில் அறியச் செய்வது நம் கடமை என்று உணர்த்துகிறார். அதே சமயம், “அதற்குரிய ஆக்கப் பணிகளில் வாய்ப்பு அமையப்பெறின் ஈடுபட்டு உழைப்போம்….” என்று எழுதுவதுதான் மனத்தை உறுத்துகிறது. வாய்ப்பு அமையப்பெறின் எவரும் எதையும் செய்யலாம். வாய்ப்பை உருவாக்கி அமைத்துக் கொண்டு அத்துறையில் ஈடுபட்டு உழைப்பதுதான் உண்மையான பணி. பின்னடைவுகளே வலிமைமிக்க முன்னெடுப்புகளுக்கு வழிவகுப்பன என்று ‘போரின் கலை'(The Art Of War) என்னும் சீனப் பழம்நூல் சொல்லுகிறது.
‘நாட்டுப்புறவியல்’ என்ற இந்த நூல், அடிப்படைக(basics)ளிருந்து தொடங்குகிறது.
நாட்டுப்புறவியலை ‘Folklore’ என்ற சொல்லால் வில்லியம் ஜான் தாமஸ் 1846ஆம் ஆண்டில் குறிப்பிட்ட பின்பே இத்துறை தனியாக வளரலாயிற்று என்ற செய்தி முதல் இயலில் இடம்பெற்றுள்ளது. உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் நாட்டுப்புறவியல் தொடர்பாக ஆய்விலும் தொகுப்பிலும் மேற்கொள்ளப்பெற்ற முயற்சிகளும் பணிகளும் விரிவாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
பின்னர் சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய திரைப்படப் பாவலர் பாடல்கள் வரைக்கும் கொண்டுள்ள நாநவில் இலக்கியத்தின் தாக்கத்தை அலசுகிறது.
நாட்டுப்புறப் பாடலுக்குரிய தனித்தன்மைகளுள் ஒன்று சொல்லோ தொடரோ திரும்ப வருதல்; அந்தத் தனித்தன்மையுடன், சமூக மாற்றத்துக்கான கருத்து வீச்சுகளும் – மொழி அடிப்படையில் வழக்குச் சொற்களும் பழமொழிகளும் சித்தர் பாடல்களில் அமைந்துள்ளமையால் சித்தர் இலக்கியத்தை மக்கள் இலக்கியம் என்று அறிஞர்கள் உரைப்பது பொருத்தமே என்று குறிப்பிடுகிறார் இளங்கோவன்.(பக். 40-42)
நாட்டுப்புறவியல் கோட்பாடுகளின் விளக்கம் விரிவாக மூன்றாம் இயலில் சொல்லப்படுகிறது. அத்துறையின் முன்னோடி ஆய்வறிஞர் சி.எம். பெளராவின் அறுவகைப்பாட்டையும் மரியாலீச்சின் ஐவகைப்பாட்டையும் தவறாமல் குறிப்பிடுகிறார். தாலாட்டுப் பாடல்கள் தொடங்கி ஒப்பாரிப் பாடல்கள் வரையிலான நாநவில் இலக்கிய வடிவங்களை விளக்கி உரிய சான்றுகளையும் வயணமாகத் தந்துள்ளார்.
அடுத்த நான்காம் இயலான ‘கதைப்பாடல்கள், ‘நாட்டுப்புறவியல்’ என்னும் இந்நூலின் அச்சாகத்(axle) தெரிகிறது. பண்பாடு வளர்ந்துள்ள நிலப்பகுதிகளைவிட வறண்ட பகுதிகளிலும் பின் தங்கிய பகுதிகளிலும் மட்டுமே கதைப்பாடல்களின்(Ballads) பெருக்கம் சாத்தியம் என்ற உலகநூல் கலைக் களஞ்சியத்தின்(The World Book Encyclopaedia) கருத்து உரியவாறு பயன்படுத்தப் பட்டுள்ளது(ப.98). வாய்மொழியாகப் பரவுவதே கதைப்பாடல்களின் முதன்மையான செயல்பாடு என்ற டேவிட் புக்கான் கருத்தும் இவ்வாறே.
தமிழ் – தமிழர் பண்பாடு தொடர்பான ஆய்வுகளில் ஏன் ஆங்கிலக் கலைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? அப்படிப் பயன்படுத்தினால் அந்தக் கலைச் சொல்லின் வழி குறித்து, மேற்கோளை மட்டுமே நம்பாமல், சொல்லாய்வுக்குச் சென்று அறிய வேண்டும். இலத்தீன் சொல்லிலிருந்து ‘ballad’ தோன்றியதாக(ப.97) இளங்கோவன் கூறுகிறார். “A narrative poem or song of popular origin in short stanzas, often with a refrain; originally handed down orally, often with changes and additions[