சின்னக் கருப்பன்
முதலில் தமிழ்நாட்டில் ஓட்டு நிலவரம்
அதிமுக 8547014 ஓட்டுக்கள் பெற்று 29.77 சதவீதத்தை பெற்றிருக்கிறது
திமுக 7064393 ஓட்டுக்கள் பெற்று 24.60 சதவீதத்தை பெற்றிருக்கிறது
காங்கிரஸ் 4134255 ஓட்டுக்கள் பெற்று 14.40 சதவீதத்தை பெற்றிருக்கிறது
பாமக 1927367 ஓட்டுக்கள் பெற்று 6.71 சதவீதத்தை பெற்றிருக்கிறது
மதிமுக 1679870 ஓட்டுக்கள் பெற்று 5.85 சதவீதத்தை பெற்றிருக்கிறது
பாஜக 1455899 ஓட்டுக்கள் பெற்று 5.07 சதவீதத்தை பெற்றிருக்கிறது
ஜனதாதளம் யு (திருமாவளவன்- கிருஷ்ணசாமி கூட்டணி) 884293 ஓட்டுக்கள் பெற்று 3.08 சதவீதத்தை பெற்றிருக்கிறது
சிபிஐ 852981 ஓட்டுக்கள் பெற்று 2.97 சதவீதத்தை பெற்றிருக்கிறது
சிபிஎம் 824524 ஓட்டுக்கள் பெற்று 2.87 சதவீதத்தை பெற்றிருக்கிறது
பகுஜன் சமாஜ் கட்சி 167619 ஓட்டுக்கள் பெற்று 0.58 சதவீதத்தை பெற்றிருக்கிறது
ஜனதா கட்சி (சுப்பிரமணியசாமி) 149646 ஓட்டுக்கள் பெற்று 0.52 சதவீதத்தை பெற்றிருக்கிறது
மேற்குறிப்பிட்டவற்றில் திமுக, காங்கிரஸ் பாமக மதிமுக சிபிஐ சிபிஎம் கூட்டணியின் மொத்த எண்ணிக்கை 16483390 வாக்குக்களைப் பெற்று 57.40 சதவீத வாக்குக்களை பெற்று அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றது.
அதிமுக, பாஜக கூட்டணி 10002913 வாக்குக்களைப் பெற்று 34.84 சதவீத வாக்குக்களையே பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
தேர்தல் முடிவுகள் காரணமாக ஜெயலலிதா அரசியல் எதிரிகள் மீதுள்ள வழக்குக்களையும் தொழிலாளர் விவசாயிகள் வெள்ளைக்காலர் உழைப்பாளர்கள் மீதிருந்த சுமைகளை சற்றே இறக்கி வைத்திருக்கிறார்.
இனி வரும் தேர்தல்கள் எப்படி இருக்கும் ? கூட்டணிகள் எப்படி இருக்கும். கருணாநிதி ஜெயலலிதா இருவருமே சற்று விவரமானவர்கள்தாம். ஆகவே கருணாநிதி இப்போது இருக்கும் கூட்டணியை தக்கவைத்துக்கொள்ள முயல்வார். ஜெயலலிதா , திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வலை வீசுவார். உடன் பிறவா சகோதரி காட்சிகள் அரங்கேறலாம்.
வெறுமே வழக்கம்போல பாமக மதிமுக கட்சிகளை மட்டும் ஜெயலலிதா தன் கூட்டணிக்கு இழுத்து வந்தால் கூட, அவர்களது எண்ணிக்கை 47 சதவீதத்தையும் திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் சிபிஐ காங்கிரஸ் அனைத்தும் சேர்ந்து 44 சதவீத வாக்குக்களையே அதற்குத் தரும்.
**
தமிழகத்தில் அடுத்து என்ன நடப்பது தமிழகத்து மக்களுக்கு நல்லது ?
பாஜக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியே மாநிலத் தேர்தலில் நிற்க வேண்டும். பாஜக சுமார் 7 சதவீதத்தையும் காங்கிரஸ் சுமார் 10 சதவீதத்தையும் தனித்தனியே நின்றால் பெற இயலும் என்பது என் கணிப்பு. கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநில முழுவதிலும் 7 சதவீதத்துக்கு மேல் ஆதரவு இருக்கும் என்பதும் என் கணிப்பு. இந்த எண்ணிக்கைகள் இறுதி முடிவை மாற்றிவிடப்போவதில்லை. சொல்லப்போனால் தமிழகம் முழுக்க காங்கிரசும் பாஜகவும் பெறும் எம் எல் ஏக்கள் பூஜ்யமாகக் கூட இருக்கக்கூடும். கம்யூனிஸ்ட் கட்சிகள் நிச்சயம் குறைந்தது 10 எம் எல் ஏக்களைப் பெறுவார்கள். ஆனால் அவர்கள் நெடுங்கால நோக்கை கருத்தில் கொண்டு தனியே நிற்க வேண்டும்.
உதாரணத்துக்கு கேரளாவுக்குச் செல்வோம்.
பாரதிய ஜனதா கட்சியுடன் யாருமே கூட்டுச் சேர முடியாத சூழ்நிலையை கேரளாவில் பார்க்கிறோம். ஒரு பக்கம் காங்கிரஸ் மறு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சி. அதைவிட முக்கியம் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசும் கம்யூனிஸ்டும் கேரள ஆட்சிப்பீடத்தில் மாறி மாறி அமர்ந்து வருகிறார்கள். இதனால், கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுக்கும் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவோடு கூட்டு வைக்க எந்த விதமான ஆர்வமும் இல்லை.
பாஜக தனித்துவிடப்பட்ட அனாதை போல கேரளாவில் இருந்தது. அதனாலாயே ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.
1982ஆம் வருட மாநிலத் தேர்தலில் பாஜக 2.27 சதவீத ஓட்டுக்களையே பெற்றது.
1987ஆம் வருட மாநிலத் தேர்தலில் பாஜக 5.56 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது
1991 ஆம் வருட மாநிலத் தேர்தலில் பாஜக 4.76 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது
1996ஆம் வருட மாநிலத் தேர்தலில் பாஜக 5.48 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது
2001 ஆம் வருட மாநிலத் தேர்தலில் பாஜக 5.02 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது
2004ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 12 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறது
இதற்கு இருபது வருடங்கள் பிடித்திருக்கிறது. இருப்பினும் கேரளாவில் காலூன்ற முடியாமல் இருக்கிறது. ஆனால் இதே பிரயாணத்தில் அது ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் சிறிதளவு கம்யூனிஸ்ட் கட்சி ஓட்டுக்களையும் பெருமளவு காங்கிரஸ் ஓட்டுக்களையும் பெற்றிருப்பதாக கடந்த தேர்தல் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
**
இதைவிட நல்ல உதாரணமாக கர்னாடகாவில் பாஜகவின் வளர்ச்சியைப் பார்க்கலாம்.
1983ஆம் வருட மாநிலத்தேர்தலில் பாஜக 8 சதவீத ஓட்டுக்களைப் பெற்று 18 இடங்களை வென்றது.
1985இல் பாஜக 3 சதவீதத்தைப் பெற்று 2 இடங்களை வென்றது.
1989இல் பாஜக 4 சதவீதத்தைப் பெற்று 4 இடங்களை வென்றது.
1994இல் பாஜக 17 சதவீதம் பெற்று 40 இடங்களை வென்றது.
1999இல் பாஜக 20 சதவீத வாக்குக்களைப் பெற்று 44 இடங்களை வென்றது.
2004இல் பாஜக 30 சதவீத வாக்குக்களைப் பெற்று 79 இடங்களை வென்றிருக்கிறது.
***
தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் முனைகளில் இருப்பதும், திமுகவில் இடம் இல்லாதவர்களுக்கு அதிமுகவில் இடம் அளிப்பதும், அதிமுகவில் இடம் கிடைக்காதவர்களுக்கு திமுக இடம் அளிப்பதும் மூன்றாவது அல்லது நான்காவது சக்தி வளர்வதற்கான வாய்ப்பை மறுத்தே வந்திருக்கின்றன.
ஆனால், வெறுமே எம் எல் ஏ என்ற இடத்தையும் மந்திரி பதவி என்ற அந்தஸ்தையும் தாண்டி முதலமைச்சர் என்பது வலுவான ஆதர்சமாக பலருக்கு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.
என்னதான் ஜாதிகள் இல்லையடி பாப்பா என முழங்கினாலும் இன்று தமிழ்நாட்டில் நடப்பது ஜாதி அரசியல்தான் என்பதை மறுக்கவும் இயலாது. என் ஜாதிக்காரன் எப்போது முதலமைச்சர் ஆவது என்ற எண்ணம் கிஞ்சித்தும் வராத நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் தமிழ்நாட்டில் இல்லை. முதலமைச்சர் என்ற பதவி ஒரு பெரிய empowerment என்பதை மறுத்து ஜாதிகள் இல்லை. தலைவர் எல்லா ஜாதியினரையும் ஒன்றாகவே நடத்துகிறார் என்று மனசாட்சி உறுத்தாமல் சொல்லக்கூடிய ஒரு கட்சித்தொண்டர் கூட எந்தக் கட்சியிலும் இல்லை.
ஜாதி என்பது நிதர்சனமான இந்த வேளையில் எல்லா ஜாதிகளுக்கும் முதலமைச்சர் பதவி வாய்ப்பு இருக்க வேண்டும் என்று கருதுவது ஜனநாயகமானதுதான் என்றே நான் கருதுகிறேன்.
ஆனால் முதல்வர் பதவி அனைவருக்குமான ஒன்றாக இல்லாமல் ஒரு குடும்பம் அல்லது ஒரே ஒரு ஆள் என்ற அணுகுமுறையில் கடந்த 40 வருடங்களாகச் செயல்பட்டு வரும் தமிழக அரசியல் பல முதன் மந்திரிப் பதவி விரும்பிகளை தங்கள் ஜாதி என்னும் ஆயுதம் கொண்டு அதனை அடையத் துடிக்க வைத்திருக்கிறது. தான் என்னதான் மிகச்சிறந்த பேச்சாளராகவும், அமைப்பை வளர்ப்பவராகவும் இருந்தாலும், ஸ்டாலினைத் தாண்டிக்கொண்டு முதலமைச்சர் பதவி பெற இயலாது என்பது வைகோவுக்கு நன்றாகத் தெரியும். இந்த இயலாமையே, பாமகவின் ராமதாஸாகவும், மதிமுகவின் வைகோவாகவும், திருமாவளவன் கிருஷ்ணசாமி ஆகியோரையும் உருவாக்கி இருக்கிறது.
குடும்ப அரசியலும் காரிஸ்மா அரசியலும் மிக மோசமான அதிகாரக் குவிப்பையும் காரிஸ்மாவை முன்னால் நிறுத்தி பின்னால் ஊழல் செய்யும் உபாயமாகவும் இருக்கின்றன. இதனையே ஜெயலலிதாவுக்கு தெண்டனிட தயாராக இருக்கும் அமைச்சர்கள் குறிக்கிறார்கள்.
ஓரளவுக்கு அதிகாரப்பரவலை நோக்கி செல்பவை ஜாதிக்கட்சிகள். இவை பரவாயில்லை. ஆனால் கூடவே ஜாதிவெறியையும் மற்ற ஜாதிகள் மீதான வெறுப்பையும் கூடவே கொண்டுவருகிறார்கள் இவர்கள் என்பதாலேயே இந்தக் கட்சிகளை பலரும் தவறான வளர்ச்சி என்று கருதுகிறார்கள்.
அதை விட முக்கியம் இந்த ஜாதிக்கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்குள் குடும்ப அரசியலையே வளர்த்து வருகின்றன. திமுகவில் கட்சிக்கு துரும்பு எடுத்துப் போடாத தயாநிதி மாறன் காபினட் மந்திரியாக, தெருத்தெருவாய் சென்று ஒவ்வொரு கல்யாணம் எழவிலும் பங்குபெற்று திமுகவில் உழைத்த பழனி மாணிக்கம் போன்றவர்களால் அதிக பட்சம் ஆக முடிவதே ஒரு ஸ்டேட் மந்திரிதான். பாமகவில் ஊர் ஊராகச் சென்று கட்சி வளர்த்த இளங்கோவன் போன்றோர் கட்சியிலிருந்து நீக்கப்பட தேர்தலிலேயே நின்றிராத அன்புமணி காபினட் அமைச்சர். ஆக ஜாதிகட்சிகளால் ஓரளவுக்கு அதிகாரப்பரவல் இருந்தாலும் அவையும் குட்டையில் ஊறிய மட்டைகளாகவே அதே ஜாதிவெறி அரசியல், குடும்ப அரசியல் ஆகியவற்றை விட்டுவிட முடியாதவையாக இருக்கின்றன.
இதே தான் திருமாவளவன் கட்சிக்கும் கிருஷ்ணசாமிக் கட்சிக்கும் நடக்கும். தமிழ்நாட்டில் எந்த ஒரு ஜாதியும் தன்னளவில் அறுதிப்பெரும்பான்மை பெற இயலாது என்பது நிதர்சணமாக இருப்பதால், வன்னிய மாநிலம் கேட்கும் நாடகங்களும் அரங்கேறலாம். வன்னிய மாநிலத்தில் மற்ற சாதிக்காரர்கள் என்ன செய்வார்கள் ? தமிழ்நாடுப் பிரிவினையா ? ஏற்கெனவே தமிழ்நாட்டில் பாமக கட்சியினர் வன்னிய சமூகத்துக்குக் கெட்ட பெயரை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தினமலருக்கு தீவைப்பது, ரஜினி தொண்டர்களை அடிப்பது போன்ற அராஜக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வன்னியமாநிலமும் பெற்று விட்டால் என்ன நடக்கும் ?
இவற்றுக்கு ஒரே மாற்று தேசியக்கட்சிகளை தமிழர்கள் ஊக்குவிப்பது.
காங்கிரஸ் மற்றும் பாஜக அனைத்து இந்தியக் கட்சிகளாக இருப்பதால், ஒரு குடும்ப ஆட்சி என்பதை அனுமதிப்பதில்லை. டில்லிக்குக் காவடி எடுக்கும் பலரும் மாநிலத்தில் முதல்வர் பதவி மாறுவதை உறுதி செய்வார்கள். அந்த பரவலில் பலரும் இந்த முதலமைச்சர் கனவை நிறைவேற்றும் நாள் வரும். அதே நேரத்தில் ஜாதி அரசியலின் தீய விளைவுகளும் இராது.
ஆகவே காங்கிரசும் பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்தனியே நிற்க வேண்டும். இரண்டு மூன்று தேர்தல்கள் வரை பல்லைக் கடித்துக்கொண்டு எந்த மாநிலக் கட்சியுடனும் கூட்டின்றி நிற்க வேண்டும். காலப் போக்கில் ஏதேனும் ஒரு தேசியக் கட்சி தலைமைப்பதவியை தொடும்.
ஆனால் இன்று பாஜக அதிமுக இல்லையேல் திமுக என்ற காங்கிரஸ் பழைய சவாரியை மேற்கொண்டிருக்கிறது. இது பாஜகவின் ஓட்டு எண்ணிக்கையை இதே நிலையிலேயே நிறுத்திவிடும். அது எந்தக் காலத்திலும் ஐந்து சதவீத ஓட்டை தாண்டாது. இதுதான் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடந்தது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருநாள் தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக ஆகவேண்டும் என விரும்பினால், தனியே நிற்க வேண்டும். எல்லா ஜாதியினரிடமும் அதிகாரப்பரவல் நடக்க வேண்டும் என தமிழர்கள் விரும்பினால் அவர்கள் காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். ஜாதிகட்சிகள் கூட்டணிக்குள் செல்ல வேண்டியது அவர்களது தேவை. ஏனெனில் எல்லா இடங்களிலும் ஒரு ஜாதியினர் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால் நாடு தழுவிய கட்சிகளுக்கு அந்த கட்டாயம் இல்லை. அவைகள் தமிழக மக்கள் முழுவதிலும் ஆதரவு கோரி நிற்கின்றன.
மத்தியத் தேர்தலுக்கு கூட்டணி வைப்பது நாடு தழுவியக் கட்சிகளுக்கு ஒரு தேவை என்பதை இன்றைய அரசியல் சூழ்நிலையில் மறுக்கவியலாது. ஆனால் மாநிலத்திலும் அதே கூட்டணியை நீடிப்பது நாடு தழுவியக் கட்சிகளை வளரவிடாமலேயே இதுவரை அடித்திருக்கிறது. மாநிலக் கட்சிகள் தேசியக் கூட்டணி போடுவதற்கு மாநிலத்தில் தேசிய கட்சி வளர்ச்சியை அடகுவை என்பதையே ஒப்பந்தமாக இதுவரை தேசியக் கட்சிகள் தலை மேல் கட்டி வந்திருக்கின்றன. மாநில சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதன் மூலம் தேசியக்கட்சிகளை சவலைப்பிள்ளை ஆக்குவதே நடந்து வந்திருக்கிறது. இதனால், தேசியக் கட்சிகளுக்கு உண்மையிலேயே எந்த அளவு மாநிலத்தில் ஆதரவு இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஆகியிருக்கிறது.
ஆகவே கூட்டணி எல்லாம் மத்திய பாராளுமன்றத் தேர்தலுக்குத்தான் என்றும்,
மாநில சட்டமன்றத்துக்கு கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டை தேசியக் கட்சிகள் எடுக்க வேண்டும்.
அத்தோடு இன்னொன்று. எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். சட்டமன்றத்துக்கு கூட்டணி இல்லாமல் வெறுமே 10 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதில் என்ன பயன் ? வாக்காளர்களின் பார்வையில் இது வினோதமானது. ஏன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு வாக்காளர் ஓட்டுப்போடவேண்டும். ( ‘அந்த தொகுதிக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதியாக இருக்க ‘ என்பது உண்மையென்றாலும், அந்த வாக்கு பல வேளைகளில் நேரடியாக யார் முதல்வர் என்பதையும் தீர்மானிக்கிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்) ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி 235 தொகுதிகளிலும் வாக்காளர்களை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களை நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்தக் கட்சிகளுக்கு உண்மையிலேயே தொகுதி வாரியாக என்ன ஆதரவு இருக்கிறது என்பது தெரியும்.
உதாரணமாக காங்கிரஸ் கட்சி ஆதரவை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் தனியாக சட்டமன்றத்தேர்தலை சந்தித்து மாமாங்கம் ஆகிறது. அதற்கு உண்மையிலேயே என்ன ஆதரவு இருக்கிறது என்பது இன்று குத்துமதிப்பாக போடப்படும் கணக்கே தவிர, உண்மையில் அதன் ஆதரவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. சட்டமன்றத் தேர்தல்களில் தனியாக நின்றால்தானே அதன் ஓட்டு எண்ணிக்கையைக் கொண்டு பாராளுமன்றத்துக்கான கூட்டணி பேரத்தைச் செய்யமுடியும் ?
மாநிலச் சட்டமன்றத்தில் அனைத்து தேசியக் கட்சிகளும் தயவுசெய்து தனித்தனியே நில்லுங்கள்., எல்லா தமிழகத்
அத்தோடு கூடவே இன்னொரு கொசுறு அறிவுரை:
தயவு செய்து ‘லால் சலாம் ‘, ‘சோனியா காந்திகி ஜே ‘, ‘பாரத் மாதாகீ ஜே ‘, ‘அத்வானிஜி ‘, ‘எல்கணேசன்ஜி ‘, ‘இன்குலாப் ஜிந்தாபாத் ‘ மசாலாதோசை பஹாலாபாத் ‘ போன்ற தமிழ்நாட்டில் தேவையில்லாத இந்திக்கோஷங்களை விட்டுவிட்டு அரசியல் பண்ணப் பாருங்கள். இந்தியாவில் பிரதம மந்திரி ஆவதற்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் காலாவதி ஆகிவிட்டது என்பது இன்னேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். இத்தனைக்கும் உங்களுக்கே இந்தி தெரியாது. இருப்பினும் எதற்காக தேவையில்லாமல் இந்த இந்திக் கோஷங்கள் ? முதலில் தமிழ்நாட்டுக் கட்சி போல நடந்துகொள்ளுங்கள்.
உலகளாவிய சிந்தனை கொள்ளுங்கள். தொகுதி அளவில் (புரியும் படி) வேலை செய்யுங்கள்.
***
புள்ளிவிவரங்களுக்கு நன்றி: http://www.eci.gov.in
***
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- பலியர்களுடன் உரையாடல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- பூமித்தின்னிகள்
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- மந்திர உலகின் தந்திரங்கள்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- மெய்மையின் மயக்கம் – 1
- தண்டவாளங்கள்
- இருதுளி கண்ணீர்
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- ஆயுத எழுத்து பற்றி
- Dahi pasanday
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- கவிதைகள்
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தீவு
- பூமகன்
- கவிதைகள்
- அறை
- இல்லம்…
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- நாய்கள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- கவிதைகள்
- உள் நோக்கு
- தாய் மனம்
- வதை
- … உலக போலீஸ் …
- ரேடியோவின் கதை
- தேனீ – மொழியும் பணியும்
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- சீதைகளைக் காதலியுங்கள் !
- பிறந்த மண்ணுக்கு – 3
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- இலவசம்
- வலை
- காத்திருப்பு
- வள்ளி வோட்டு போட போறா!
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்