தமிழிலிருந்து தமிழாக்கம்: நூற்கடல் தி.வே.கோபாலையர் தமிழாக்கிய பெரியவாச்சான் பிள்ளையுரை

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

தேவமைந்தன்


அவர், தன்னை ‘அடியார்க்கு அடியவன் தி.வே. கோபாலையன்’ என்றுதான் சொல்லிக் கொள்வார்; எழுதுவார். சங்க இலக்கியப் பாடல்கள், பெருங்காப்பிய சிறுகாப்பியங்களின் பாடல்கள் முதற்கொண்டு தமிழிலக்கியப்பாடல்களும் தொல்காப்பியம் நன்னூல் முதற்கொண்டு இலக்கண விளக்கம் வரை இலக்கண நூற்பாக்களும் அவற்றின் உரைகளும் ஆழ்வார்கள் நாயன்மார் பாசுரங்களும் நாலாயிரமும் அவருக்கு அத்துப்படி. ‘நாலாயிரம்’ என்பது பற்றி, “கூடுதல் 3776 என்னினும் நிறை எண் ஒன்றனால் பெயரிடப்படும் முறையை உட்கொண்டு இவை பொதுவாக நாலாயிரம் எனப்பட்டன” என்று எழுதுவார். அரவிந்தாசிரமத்தில் அன்னை, அன்பர்களுக்குக் காட்சி கொடுக்கும் மாடியுள்ள கட்டடம் இருக்கும் தெருவழியாக பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனத்துக்குப் போய்வரும் பொழுது வழியில் அவரைச் சந்திப்பேன். பொதுவாக பிரெஞ்சு இந்திய ஆராய்ச்சி நிறுவனத்திலோ, வழியிலோ சந்தித்துப் பேசியே பழக்கம். சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், பிரெஞ்சிந்திய ஆய்வு நிறுவனத்தில் அவருடன் ‘கரிச்சான் குஞ்சு’ என்ற புனைபெயர் கொண்ட நாராயணசாமி ஐயா அவர்களும் இருந்தார். இலக்கியம் குறித்தோ இலக்கணம் குறித்தோ, குறிப்பாக உரைகளைக்குறித்தோ மூளையில் காத்திருக்கும் ஐயம் ஒவ்வொன்றையும் அவரைச் சந்திக்கும்பொழுது பேசித் தீர்த்துக் கொள்வேன். புத்தகம் எதையும் பார்வையிடாமல் ‘மடைதிறந்து பாயும் வெள்ள’மென வீழும் சொற்கள் கோபாலையருக்கே உரியவை.

அப்படிப்பட்டவர் படைப்புகள் குறித்து பிரெஞ்சிந்திய ஆய்வு நிறுவன நூலகத்தின் ‘நூல்தேடு கணினி’யில் தேடிக்கொண்டிருந்தபொழுது, இந்தத் தமிழாக்கம் கிடைத்தது.

இத்தமிழாக்கத்தின் மூலம் ஆகிய பெரியவாச்சான் பிள்ளையுரை:

திருமங்கை மன்னன் அருளிய ஆறு பிரபந்தங்களுக்கும் பெரியவாச்சான் பிள்ளையின் உரைதான் உள்ளது. பெரிய திருமொழிக்கு அவர் வகுத்துள்ள உரை சுருக்கமாகவே அமைந்துள்ளது. பாசுரங்களுக்கு அவசியமான பொருள்களை மட்டுமே விளக்குகிறது. அதே சமயம் எங்கெங்கு பாசுரம் நன்கு விளக்கப்பெற்றே ஆக வேண்டுமோ அங்கங்கு நின்று நிதானித்து விளக்கமாகவே சொல்லிச் செல்லுகிறது. குறிப்பாக இத்தகைய உரை உத்தியை, பெரிய திருமொழியின் மூன்றாம் பத்தின் ஆறாம் ஏழாம் திருமொழிகளின் தொடக்கவுரையிலும் முதற்பாசுரங்களின் உரை முதலியவற்றிலும் அவதானிக்கலாம்.

திருமொழிகள் ஒன்றினுக்கும் அடுத்ததற்கும் தொடர்புறுத்தும் முறையை, பெரியவாச்சான் பிள்ளையுரை, மிகவும் அகத்தியமான இடங்களில் மட்டுமே கடைப்பிடிக்கிறது. மக்கள் தம் பேச்சில் பயன்படுத்தும் உவமைகளும் இராமாயண மாபாரத மேற்கோள்களும் பகவத் கீதை விஷ்ணு புராணச் சேதிகளும் வேண்டுமான இடங்களில் தாராளமாக எடுத்தாளப் பெற்றுள்ளன. ஒவ்வோர் இடத்தில் அந்த மேற்கோள்களும் இவ்வுரையில் விரிவான விளக்கம் பெறுகின்றன. தன் காலத்திய சேய்ஞலூரின் பேச்சுவழக்கு நடையிலேயே பெரும்பாலும் தான் வகுத்த உரையையும் நடைப்படுத்தியுள்ளார் பெரியவாச்சான் பிள்ளை.

சில இடங்களில் விளக்கம் அழுத்தமாக விளக்கப்பெறல் வேண்டும் என்றால், ஒரே இடத்திலேயே ஒரு செய்தி இரண்டு மூன்று முறை வேறுபட்ட விளக்கங்கள் பெறுவதை இவ்வுரையில் காணலாம். பகவத் கீதைக்குத் தான் இயற்றிய ‘பாவார்த்த தீபிகா என்னும் ஞானேஸ்வரீ” என்ற மிகவரிய உரையில், மராட்டிய இளம் முனிவர் ஞானதேவர்(Sri Jnanadev 1275-1296) இவ்வாறே, ஆனால், ஒன்றினுக்கு மேற்பட்ட எளிய உவமைகளால் ஒரே செய்தியை விளக்கிச் செல்வதைக் காண முடியும். ஒரு சில இடங்களில் பாடவேறுபாடுகள்(‘பாடபேதம்’ என்பதையும் நல்ல தமிழில் இவ்வாறு கூறினார் தி.வே.கோ.) குறிக்கப்பெறுவதுடன், அந்தப் பாட வேறுபாடுகளுக்கும் ஏற்ற உரைகள் வகுக்கப்பெற்றுள்ளன. கொஞ்சம் வலிந்துதான் பொருள் கொள்ள வேண்டும் என்று வருமிடங்களில், சொற்களின் நேரான பொருளுடன் ‘போந்த பொருளும்’ ஒருசேர விளக்கம் பெறுகின்றன. ஒரு தொடருக்கே பலவகையாகப் பொருள் செய்யப்படும் உத்தி, பெரியவாச்சான் பிள்ளையுரையில் அருகியே காணப்படுகிறது. உலக வழக்குச் சொற்களையும் தொடர்களையும் பெரியவாச்சான் பிள்ளை பயன்படுத்தி உரை கூறும் இடங்களில், பொருள் எளிதில் புலப்படுவதாக இல்லை. காரணம், அவை அவர் காலத்தைச் சார்ந்தவை. இவ்வுரைக்கு அமைந்துள்ள அப்பு அரும்பதவுரை ஒவ்வொரு பாடலுக்கும் அதன் முந்திய பாடலுடன் இயைபினை விளக்கி உரையின் சிறப்பினை நாம் உணர்ந்துகொள்ள மிகவும் துணைநிற்கிறது. ‘அப்பு அரும்பதவுரை’யாகிய தமிழாக்கவுரையே தன் தமிழாக்கத்துக்கு முன்னோடி என்பதைத் தி.வே.கோ. நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.(ப.36) ஆனால் என்ன ஒரு வியப்பு? இத்தகைய அறிவாற்றல் கொண்டிருந்த அப்பு என்பவர், தன்னைக் குறித்த செய்தி ஒன்றையும் இவ்வுலகுக்கு விட்டுச் செல்லவில்லை. தன்னைப் பற்றிய செய்தியைவிடவும் தான் எடுத்துக் கொண்ட பொருளையே பெரிதும் கருதி உலகுக்கு வெளிப்படுத்திய உத்தமர் அவர். அதனால்தானே காலம் கடந்தும் அவர் நினைக்கப் பெறுகிறார்?

மிகவும் அரிதான செய்திகளை உணர்த்துவதாக இருந்தாலும், “இடையிடையே கலக்கப்படும் வடமொழிச் சொற்களாலும் சொற்றொடர்களாலும் வடநூல் மேற்கோள்களாலும் தமிழ் ஒன்றையே வல்லவர் பட்டாங்கு உணர்ந்து சுவைத்துப் பயன் கோடற்கு எளிதில் அமையாததாய் உள்ளமையால் இவ்வுரையைப் பெரும்பாலும் அதன் நடையையே ஒட்டி வடமொழிச் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் தமிழாக்கம் வரைந்து மயக்கம் தருமிடங்களைத் தெளிவாக விளக்கித் தேவைப்பட்ட இடங்களில் அப்பு அரும்பத உரையின் நயமான செய்திகளை அடைப்புக்குறிக்குள் அமைத்துத் தமிழ் மட்டும் வல்லாரும் சுவைத்துப் பயன்கொள்ளும் வகையில் தமிழாக்கம் செய்துள்ளோம்” என்று தி.வே.கோ. மொழிந்திருக்கிறார். உரைகளுக்கு மட்டுமல்லாமல், பிறமொழிகளிலிருந்து செய்யப்படும் எல்லாத் தமிழாக்கங்களுக்கும் இந்த இலக்கணங்கள் பொருந்தும்.

இதற்குமுன் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படவில்லையா? தஞ்சைப் பல்கலைக் கழகம் மேற்கொண்டது. பெரிய திருமொழியின் இரண்டு பத்துகளின் தமிழாக்கத்தை விரிவான நூலாகவே அது வெளியிட்டது. சரி. அது அவ்வாறிருக்க, நாம் மூன்றாம் பத்து முதலானவற்றுக்குத் தமிழாக்கம் வரைவோம் என்று நூற்கடல் தி.வே.கோ. எண்ணவில்லை. முழுமைக்கும் வரைந்தார். ஏன்?

ஈட்டின் தமிழாக்கம் போன்று, பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் உரையினை விடுத்து அதன் தமிழாக்கம் மாத்திரமே முழுமையாக வெளிப்படவும்; பெரிய திருமொழி ‘இயலிசைப் பாடல்களின் தொகுப்பு’ என்பதால் பதிகங்களின் பண்களும் தாளங்களும் செய்யுள் யாப்பமைதியும் குறிக்கப்பெறவும் இத்தமிழாக்கம் முயன்றது. பாடல்களுக்குப் பாயிரம், பதவுரை, பெரியவாச்சான் பிள்ளை உரையின் தமிழாக்கம் ஆகியவை தவிர விரிவான விளக்கங்களைத் தாமும் எழுத விரும்பவில்லை தி.வே. கோபாலையர். ஆகவும் தேவையான விளக்கங்களை விடாமல் உட்கொண்டு இத்தமிழாக்கநூல் சுருக்கமாக அமையவேண்டும் என்றே அவர் விழைந்தார்.

தமிழாக்கத்தின் இறுதியில் எடுத்துக்காட்டு அருளிச் செயல்பாடல்கள், வடமொழி மேற்கோள்கள் ஆகியவை அகரவரிசையில் அமைக்கப்பெற்றுள்ளன. பெரிய திருமொழியின் பாடல்கள் தனித்துத் தொடர் எண்கள் குறிக்கப்பெற்றுள்ளன.

இத்தமிழாக்கம் வெளிவர நிறுவன அடிப்படையில் காரணமானவர்கள் பேராசிரியர் ஈவா அவர்களும் பிரெஞ்சிந்திய ஆய்வகக் கீழ்த்திசை மொழித்துறைகளின் தலைவர் குதால் அவர்களுமாவர்.

இதனைப் பதிப்பித்தவர் தஞ்சாவூர், சேக்கிழார் அடிப்பொடி, முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் ஆவார். வைணவம்சார் நூலைச் சைவம் சார்ந்தவர் சிறப்பாகப் பதிப்பித்தமை இத் தமிழாக்கத்திற்கு மேலுமொரு மதிப்பு. தான் சேக்கிழார் அடிப்பொடியாக உருவாதற்குக் காரணமாக இருந்தவர்கள் இருபெரு வைணவப் பெரியார்களான அமரர் எம்பார் சுவாமிகளும் கடலூர் தே.ஆ.சீனிவாசாச்சாரியரும் என்பதைப் பதிப்புரையில் மொழிந்தவர், தி.வே.கோ. அவர்களின் சொற்பொழிவின்வழியாகத் திருமங்கை மன்னனின் மாண்பை அறிந்து கொள்ளக் காரணமாய் விளங்கிய நிகழ்ச்சியையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அச்சில் இத்தமிழாக்கம் செம்மையாக வருவதற்கான செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டவரோ அன்னாரின் முதல் மகனார் மனநல மருத்துவர் தி.இரா. சுரேஷ் அவர்கள்.

நன்றி கூறும்பொழுது, ‘மனம்-மொழி-மெய்’ என்பதையும்கூட “உள்ளம்-உரை-செயல்” என்னும் நற்றமிழாக்கிய நூற்கடல் தி.வே.கோபாலையரின் திண்மையை எவ்வாறு போற்றுவது!

நூல்:

திருமங்கையாழ்வார் அருளிய பனுவல் ஆறனுள் பெரிய திருமொழி
பெரியவாச்சான்பிள்ளை உரையின் தமிழாக்கம்.
தமிழாக்கம் செய்தவர்: தி.வே.கோபாலையர், ஆய்வர், பிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளி, புதுவை.(Ecole Francaise d’ Extreme – orient.)
புதுவை, தொலைக்கீழை பிரஞ்சு ஆராய்ச்சிப்பள்ளியில் உருவாக்கப்பட்டது.
பதிப்பு ஆண்டு: முதற் பதிப்பு ஏப்பிரல் 2006
பக்கம்: 1576(டபுள் கிரவுன்) முதல் தொகுதி – 820 பக்கங்கள்
இரண்டாம் தொகுதி – 756 பக்கங்கள்
விலை: ரூ.1000/- (இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து)
விற்பனை உரிமை: அகரம், மனை எண்:1, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007.

வாசிப்பு உதவி: புதுச்சேரி பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவன நூலகம்(Institut Français De Pondichéry Bibliothèque). ‘மதர் சமாதி’ என்று சொல்லப்படும் அன்னை சமாதி உள்ள மரீன் வீதியும் சேன் லூயி வீதியும் சந்திக்குமிடத்தின் வடகிழக்கில், மேற்குப் பார்த்ததாக இது அமைந்துள்ளது. பணி நேரம்: முற்பகல் 08:30 முதல் 12:30 மணி வரை. பிற்பகல் 01:30 முதல் 05:30 மணி வரை. விடுமுறை நாட்கள்: சனி, ஞாயிறு.

*****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்