மஞ்சுளா நவநீதன்
இப்படியாகத் தானே தமிழ்நாட்டின் சரித்திரம் சத்தியமங்கலம் தாளவாடி காடுகளில் , ஒரு நமக்கே சொந்தமான ‘சே குவேரா ‘விடம் திரண்டு உருண்டு கனிந்து நிற்கிறது. தென்னாட்டு காந்தி, இன்னாட்டு இங்கர்ஸால், தமிழ்நாட்டு லெனின் , என்றெல்லாம் சொல்லிக் குதூகலம் பெறுவது போல், இந்நாட்டு ‘சே குவேரா ‘ என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான். எவரையெல்லாமோ அவமானப் படுத்தி விட்டோம் ஏன் சே குவேராவையும் விட்டு வைக்கவேண்டும் ?
பழ நெடுமாறனின் கட்சி வீரப்பனாரின் மனைவியாருக்குப் பொருளுதவி செய்கிறது. அந்தக் கட்சிக்கு மிகப் பொருத்தமானது தான் இது. தமிழர்களின் அன்றாடப் பிரசினைகள் இதனால் தீர்ந்து போகும் என்கிற தீர்க்க தரிசனத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். தமிழ் தேசீயம் பேசுகிற கட்சிகளின் உண்மை சொரூபம் இன்னமும் யாருக்கும் தெரியவில்லையென்றால் அவர்கள் குருடர்களாய்த் தானிருக்க வேண்டும்.
இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் (வன்னியர் கட்சி யென்று அதைச் சொன்னால் அவருக்குக் கோபம் வருகிறதாம்) தலைவர் ராம்தாஸ் வீரப்பனின் கோரிக்கைகள் நியாயமானது தான் என்கிறார். அர்த்தம் : நியாயமான கோரிக்கையாய்த் தமிழர் நலன் கருதி வீரப்பனார் விடுத்த கோரிக்கையினால் அவரும் நியாயமானவரே. ஏதோ ஒரு கிழவர் சொல்லிவிட்டுப் போன வாசகம் : நோக்கங்கள் மட்டும் நேர்மையாய் இருந்து பயனில்லை. அதை அடையச் செய்யும் வழிகளும் நேர்மையாய் இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய செம்மல்களுக்கும், தானைத் தலைவர்களுக்கும், கொள்ளையர்கள் பெயர்கள் ஞாபகம் இருக்கிற அளவு காந்தியின் பெயரெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.
ராஜ் குமார் கன்னடப் படவுலகில் மட்டுமல்ல, படவுலகத்திற்கு வெளியேயும் கண்ணியத்துடன் நடந்து கொண்டவர். கோகக் அறிக்கைக்காகப் போராட்டம் நடந்த போது சில வன்முறைகள் நடந்ததெனினும், ராஜ்குமார் அதனை மன்னிப்பவரோ சந்தர்ப்ப வாதத்தில் நுழைபவரோ அல்ல. அவர் மூலமாகக் கன்னடத்தில் வியாபாரப் படங்கள் மட்டுமல்ல , நல்ல படங்களும் வெளிவந்துள்ளன. போலி பக்தரும் அல்ல. ராஜ் குமாரைக் கடத்தி வந்ததன் மூலம் தமிழர்-கன்னடர் பிளவை உருவாக்கிக் குளிர் காயலாம் என்ற வக்கிர புத்தியுடைய இயக்கங்கள், தமிழ் என்ற பெயரையும் , விடுதலை என்ற பெயரையும் தம் குழுவின் பெயரில் சூட்டிக் கொண்டிருப்பது தமிழுக்கும் அவமானம், விடுதலை என்ற கருத்தாக்கத்துக்கும் அவமானம். திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் வைப்பதற்கு வீரப்பன் காரணகர்த்தா ஆவதைப் போன்ற ஒரு அவமானம் திருவள்ளுவருக்கு இருக்கமுடியாது. இப்படிப்பட்ட கோரிக்கையை வீரப்பனுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்ற (இவனது கோரிக்கைகளின் மூலம் விடுதலை பெறும்) தமிழ் விடுதலைப்போராளிகள் என்று சொல்லிக்கொள்கிற நபர்கள் எந்த தமிழ்மானத்தை காப்பாற்றப் போகின்றார்கள் ? ‘மயிர் நீப்பின் வாழாக்கவரிமான் ‘ ஞாபகம் வருகிறது.
சோகம் இதுவல்ல. இது இந்த ஓரம் கட்டப்பட்டவர்களுக்கு கிடைக்கும் விளம்பரமாகி விடுகிறது. தொடர்ந்து இதுபோல நடக்கக்கூடிய அடாவடித்தனங்கள் ஒரு ‘இயக்கத்தை ‘ உருவாக்கிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. (வி.பி.சிங் காலத்தில் முஃப்டி முகமது சையதின் மகளை காஷ்மீர தீவிரவாதிகள் கடத்திச் சென்றதன் மூலம் ஆரம்பித்த காஷ்மீர தீவிரவாதம் இன்றும் தொடர்ந்து வலுப்பெற்று வருவது நினைவில் கொள்ளவேண்டிய விஷயம்).
இது முளையிலேயே கிள்ளப்பட வேண்டிய விஷம். ஆனால் இப்போதைய முக்கியமான பிரச்னை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ராஜ்குமாரை விடுவித்து வீரப்பனை ஜெயிலில் போடவேண்டும். ஆனால் வீரப்பன் அரசியல் பின்னணியோ அல்லது போலீஸ் ஆதரவோ இல்லாமல் இவ்வளவு காலம் நீடித்திருக்க முடியாது. இவனுடன் சம்பந்தப்பட்ட எந்த ஆளாக இருந்தாலும் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் அவர்கள் உடனே தண்டிக்கப்படவேண்டும்.
ஜெயலலிதா 500 கோடி ஊழல் செய்தால் என்ன தப்பு ? என்று கேட்கும் சாதாரணர்களும் அதி புத்திசாலிகளும் இருக்கிறார்கள். இந்த வீரப்பன் விவகாரம் வளர்ந்து இன்று கேவலமான பிரம்மாண்டமாக நிற்பதற்கு ஊழல் தான் காரணம் என்று அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அரசாங்கம் இந்தியாவில் இருப்பதன் முக்கிய நோக்கம் சட்டம் ஒழுங்குக்குத்தான். அது ஊழலின் மூலம் சிதைந்தால் குற்றங்களும் அதோடு சேர்ந்து வளரத்தான் செய்யும். சட்டம் ஒழுங்கு சிதைவது என்பது ஊழல் செய்பவர்களின் நோக்கம் இல்லை என்றாலும் கூட அதன் விளைவு இப்படித்தான் இருக்கும்.
இந்திய சமூகங்களுக்கிடையிலும், மாநிலங்களுக்கு இடையிலும் சண்டை மூட்டி விடும் விதமாக பாகிஸ்தான் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதற்கு சர்ச்சுகளில் வெடித்த குண்டுகளும், ரயில் பெட்டிகளில் வெடிக்கும் குண்டுகளும் ஆதாரமாக இருக்கின்றன. கோவை குண்டு வெடிப்பில், கேரளத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது தமிழர்களுக்குத் தெரியும். இதுவும்கூட பாகிஸ்தானின் ஆதரவோடு நடந்திருக்கும் என்று நம்ப ஏராளமாக இடம் இருக்கிறது. ஆனால், இப்படியெல்லாம் காரணங்கள் இல்லாமலே தமிழர்களிடையில் சில இயக்கங்கள் மார்வாரியை எதிர்க்கிறோம், தெலுங்கரை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். மார்க்ஸையும் கூடத் துணைக்கழைப்பது உண்டு இவர்கள். பாவம் மார்க்ஸ்.
ராஜ்குமாரைக் கடத்தியதென்பது மிக மிக அருவருப்பான அபாயகரமான செயல். இது இத்தோடு நிற்காது, நிற்கக் கூடாது என்பது தான் இந்த இழிசெயல் புரிந்தவர்களின் நோக்கம்.
ஆனால் சாதாரணத் தமிழர்களுக்கு இப்படிப் பட்ட செய்கைகளில் எந்த அனுதாபமும் இல்லை என்பது தான் ஆறுதல் அளிக்கும் விஷயம். ஆனால் கிருஷ்ணசாமி ராமதாஸ் போன்ற அறிக்கைத் தலைவர்கள் இந்த செயல் மூலமாக தம் பெயர் பத்திரிக்கையில் வருகிறமாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான செயல். இதன் மூலம் இவர்களை பின்பற்றும் அப்பாவித் தொண்டர்கள் சட்டமீறல் சரியான செயல்தான் போலிருக்கிறது என்று புரிந்து கொள்வது நேரலாம். அது இதைவிடப் பெரிய ஆபத்து.
திண்ணை
|