தமிழவன் கவிதைகள்-ஏழு

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

தமிழவன்


உங்களுக்கும் இப்போது இல்லாத
ஓர் வீடு இருந்திருக்கும்.

பிறந்திருப்பீர்கள் அதில்,
அதன் காலம் கடந்த மெளனத்திலும்.

இப்போதில்லா அதன் வாசலில்
நீங்கள் மறந்து வைத்துவிட்டுப் போன
ஒருமலர் எனக்குக் காத்திருக்கும்.

எரிந்த அடுப்புக்குள் இன்றும் அணையாத
தீக்கங்கு காலத்தை மட்டும் எரிக்காது.

இருண்ட வடக்கு மூலையில்
தொங்கும் சிலந்தி வலையில் முதல் ஒளி.

சிறு செடியுடன் தங்கி விட்டது
முதல் பூத்தல்.

உங்கள் ஜனன முதல் அழுகுரலைக்
கேட்டவர் நிழலில் படமாகி
இல்லாத வீட்டின் மறைவில்
தலைமட்டும் தெரிய எட்டிப் பார்க்கிறார்.
—-
carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்