தமிழர் தொட்டால் சிணுங்கிகளா ?

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

கரு.திருவரசு


தொட்டால் சிணுங்குமொரு செடிதான் – செடியின்
தோற்றம் அமைப்புமுறை அதுதான்!
பட்டால் சுருங்குமது மெதுவாய் – எழுந்து
பழைய நிலைக்குவரும் அதுவாய்!

மெல்லிய பூக்கள்தாம் பெண்கள் – அந்த
மென்மையில் நல்லுறுதி வேண்டும்!
புல்லென நசுங்கியது போதும் – துணிந்து
புதுமைகள் மேல்நடக்க வேண்டும்!

திருமணம் வாழ்வியல்கள் எங்கும் – தோன்றும்
சிறுசிறு நெருடல்கள் இயற்கை!
மறுமணம் என்பதெல்லாம் இயல்பே – தமிழர்
மட்டுமே சிணுங்குதல்தான் செயற்கை!

தொட்டால் சிணுங்குகிற குணத்தை – இன்று
துடைத்தே ஒழித்துவிட வேண்டும்!
தொட்டில் பழக்கமான சிணுங்கல் – தாக்கும்
சோர்விலும் எழுந்துவர வேண்டும்!

தனிமையில் தமிழர்கள் என்றும் – கொஞ்சம்
தட்டினால் சிணுங்குகிறார்! ஆனால்
இனமென வரும்போது மட்டும் – அவர்கள்
எருமைபோல் அசைகின்றார், ஏனோ!…

***
thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு