தமிழக அரசியலில் உள்ள வேண்டாத போக்குகள்

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

வே. மீனாட்சிசுந்தரம்



தமிழக அரசியல் கட்சிகளின் தோற்றங்கள்

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளை இரண்டு ரகமாக பிரிக்கலாம். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்று ஒரு தலைவரை மையமாக வைத்து இயங்கும் அரசியல் கட்சிகள். மற்றொன்று மார்க்சி°ட் கட்சி போன்று ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள். ஒரு கட்சி – ஒரு தலைவர் (ஒரு உரையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்ற கோட்பாடு) என்ற அரசியல் அமைப்பிற்கு அடிப்படை “ஆற்றல்மிகு தலைவர்” என்று நம்பப்படுபவரை சுற்றி உருவாக்கப்படும் பக்திதான். இதனை தனிநபர் துதி மூலம் உருவாக்கப் படும் அரசியல் அமைப்பு எனலாம். இது மேற்கத்திய ஹைடெக் விளம்பர யுக்திகளைக் கொண்டு மிகப் பழமையான சங்ககால வாழ்வு முறையில் இருந்த ஆதிவாசி பண்பாட்டை உயிர்ப்பிக்கும் வழிமுறை அல்லது பண்பாட்டு கலவை எனலாம். சங்க காலத்தில் உடல் வலிமை, போர் ஆற்றல் வள்ளல் தன்மை இம்மூன்றும் கொண்ட வீரனை பாணர்கள், விரலியர்கள் ஏற்றியும் போற்றியும் ஆற்றலை மிகைப்படுத்தியும் பாடி மக்கள் மனதிலே பக்தியை விதைத்து தலைவனாக ஏற்க வைப்பர். 20 ஆம் நூற்றாண்டில் புகைப்படக்கலை (ஆக்ஷன் °டில் போட்டோ) சினிமா, மூலம் விளம்பர யுக்திகளை கையாண்டு முசோலினி, ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் மக்கள் வணங்கும் தலைவர்களாக ஆக்கப்பட்டனர். மறைந்த தலைவரின் ஆற்றலை இது போல் பெரிது படுத்தி அவருடைய உண்மையான வாரிசு என்று விளம்பர யுக்திகள் மூலம் காண்பித்து துதி அரசியலை உருவாக்கும் முறைகளும் எல்லா நாடுகளிலும் காணலாம். 19ஆம் நூற்றாண்டிலேயே ‘தனிநபர் துதி’ என்பது அக்கறையுள்ள அரசியலுக்கு கேடு விளைவிக்கும் என்று கருதி போராடத் துவங்கிய கம்யூனி°ட் இயக்கத்திலும் இந்த 20ஆம் நூற்றாண்டு தனிநபர் துதி இயல்பு புகுந்து கம்யூனி°ட் இயக்கத்தையே கரைபடுத்தி விட்டது. இந்த இயல்பு தலை தூக்கா வண்ணம் கட்சி விதிகளும், நடைமுறைகளும் உருவாக்கி சித்தாந்த போராட்டமும் நடத்துகிற முறைக்கு கம்யூனி°ட் இயக்கங்கள் இன்று வந்து விட்டன.
ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் இதனை தங்கள் அரசியலை கொண்டு செல்லும் கருவியாக தலைவர் துதி அடிப்படையில் உருவகும் கட்சிகளை கருதுவதால், இக்கட்சிகளுக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். தனிநபர் துதியை பாதுகாக்கும் மரபை பேணி காக்கின்றனர். சித்தாந் ரீதியாக ஆன்மீக கருத்துக்களை பரப்புவதின் மூலம் காக்கின்றனர். “தெய்வம் வேண்டும், குரு வேண்டும், தலைவன் வேண்டும்” என்ற ஆன்மீக போதனைகள் தனிநபர் துதி அரசியலை காக்கும் கண்ணோட் டத்தை உருவாக்குகிறது. அனுபவங்கள் கூறுவதென்ன!
இதனை ஒரு வர்க்கத்தின் அரசியல் இயல்பாக பார்க்க வேண்டும். மக்களை தொத்தியிருக்கும் வியாதியாக பார்க்கக் கூடாது. அந்த கட்சியின் மக்கள் விரோத அரசியல் அம்பலப்படும் பொழுது இந்த பக்தி இருந்த இடம் காணாமல் போய் விடும். எனவே அரசியலில் சரியான நிலைபாடுகளே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை கவணிக்க வேண்டும். இருந்தாலும், தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் இத்தகைய அடிப்படைகளை கொண்டு தோன்றுவதால் அரசியலில் ஆரோக்கியமற்ற போக்குகள் தலை விரித்து ஆடுகிறது.
தலைவர் மீது பக்தி அடிப்படையில் இருக்கும் ஒரு கட்சி அரசியல் களத்திலே நிற்க வேண்டுமானால் கட்சியின் தலைவர், இதர கட்சிகளின் தலைவர்களை விட கவர்ச்சியாக தோற்றமளிக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களைவிட சாதூர்யமிக்கவர், ஆற்றல் மிக்கவர் உயர்ந்தவர் என்ற கவர்ச்சி தோற்றம் தேவைப்படுகிறது. கலைஞர், அம்மா, தளபதி, வைகோ, காப்டன், ஐயா என்று அடையாளப் பெயர்களை கொண்டு தனிப் பிறவி அவதார புருஷர் என்று காட்ட வேண்டியிருக்கிறது. இதற்காக நடைபெறும் போட்டிகளில் விழாக்கள், கட் அவுட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்காகும் பணச் செலவை பார்த்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. இப்பணத்தைக் கொண்டு, அநாதை இல்லங்களும், வயோதிக பராமரிப்பு இல்லங்களும் உருவாக்கினால் கந்தல் பொறுக்கும் குழந்தைகளும் பிச்சைக்காரர்களும் இல்லாத தமிழகமாக இருக்கும் என்று உறுதியாக கூறலாம்.
இந்தப் போட்டியில் பலியாவது, எதார்த்தமான அரசியல் அணுகுமுறை, தலைவர்களின் கருத்து அரசியல் நிலைபாடு இவைகளில் தெளிவின்மை ஏற்படுகிறது. சான்றாக ஒன்றைப் பார்ப்போம். இன்று விலைவாசி உயர்வு நாடு தழுவிய பிரச்சனை இதற்கு பொறுப்பு மத்திய அரசுதான். பொருளாதார நிபுனர்கள் மட்டுமல்ல; பொது அறிவு படைத்தவர்களும், விலைவாசியை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கிறது என்பதை ஏற்பர். ஆனால், தமிழ் நாட்டில் இப்பிரச்சனை எவ்வாறு விவாதிக்கப்படுகிறது?
விலைவாசி உயர்வு யார் காலத்தில் அதிமுக ஆட்சி காலத்திலா? தி.மு.க. ஆட்சிக் காலத்திலா என்று பட்டிமன்ற சர்ச்சைகள் போடுகிற சப்தத்தில் விலைவாசியை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது அடிப்பட்டு விடுகிறது. இதுபற்றி அரசியல் தலைவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் மக்களால் கண்டு கொள்ள முடியவில்லை. அதைவிட கொடுமை விலைவாசியை கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் முதலமைச்சருக்கோ மாநில அரசிற்கோ இல்லை என்ற உண்மையும் மக்களுக்கு தெரியாமல் போகிறது.
எந்தப் பிரச்சினையானாலும், அதனுடைய தன்மைகளை புரிய இயலாமல், தலைவர்களுக்கிடையே மோதலாக தடுமாறி விடுகிறது. இந்த மோதல் பத்திரிகைகள், ஊடகங்கள் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கிறது. சமீபத்தில் குமுதம் பத்திரிகையில் வெற்றி கொண்டான் பேட்டி வந்தது. அதனையொட்டி குமுதம் நிருபர் மிரட்டப்பட்டு இருக்கிறார். தயாரிக்கப்பட்ட பேட்டி என்றால் தயாரித்தவரை விட்டு விட்டு நிருபரை மிரட்டுவதேன் என்று ‘அரசு’ பதிலில் குமுதம் கேட்டிருக்கிறது.
இந்த வியாதி பா.ம.க.வுக்கு மட்டும் உண்டு என்று சொல்ல முடியாது பல ஆண்டுகளுக்கு முன் துக்ளக் சினிமாவை திரையிட்ட பிறகு, தியேட்டர்கள் பட்ட பாட்டை நாம் மறந்து விட முடியாது. தி.மு.க. தொண்டர்களின் கை வரிசையாக அது இருந்தது. அதிமுக தொண்டர்கள் ப°களை கொளுத்தி மாணவிகளை கொன்றதை நாடு மறந்து விடாது. இதை எழுதுகிற பொழுதுதான் கவர்ச்சி மிக்க தலைவர் யார் என்ற கருத்து கணிப்பு வெளியிட்ட தினகரன் பத்திரிகை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று ஊழியர்களின் மரணச் செய்தி வந்தது. தலைவர்களின் கவர்ச்சி தோற்றத்திற்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாப்பதே முக்கியமாகி விட்டதால் அரசியல் பிரச்சினைகளை விவாதிக்கும் ஆரோக்கியமான சூழல் கெட்டு நிற்கிறது.
இன்று மத்திய அரசின் பொருளாதார கொள்கை மீது ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தும் நிலையில் தமிழகமில்லை; இந்நிலையில் மாநில அரசியல் பிரச்சினைகளை விவதிக்கும் நிலை எப்படி வரும்? தனியார்மயக் கொள்கை, கல்வி, சுகாதார சேவைகளில் அரசு முதலீடு குறைந்து வியாபாரமாக்கப்படுவதால் ஏற்படுகிற நெருக்கடி இவைகள் பற்றி விவாதிக்கிற நிலையில் ஊடகங்களே இல்லை, வம்பளப்புகளும், அரசியல் கிசு, கிசுக்களும் வதந்திகளும் மக்களை திணறடிக்கிறதே தவிர தலைவர்களின் தெளிவான கருத்துக்களோ, பிரச்சினையின் தன்மைகளோ விவாதப் பொருளாவதில்லை. நாட்டுப் பாதுகாப்பை, சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படும் பொழுது குத்தகை விவசாயி, விவசாயத் தொழிலாளர் கதி என்ன என்பதை பற்றிய விவாதமே இல்லை. சிக்கலான நதிநீர் தாவா மேலும் சிக்கலாகிறது. தமிழக அரசியல் கட்சிகளில் பல நதிநீர் தாவாவை தீர்க்கும் நோக்கில் சில விவாதிப்பதே இல்லை. அப்படி கருத்துக் கூறினால், இனத்துரோகி என்று முத்திரை குத்தி குழப்பி விடுவர்.
இந்த தனிநபர் துதி அடிப்படையில் கட்சிகள் இருப்பதால் சட்டமன்றமே ஆரோக்கியமற்றதாக உள்ளது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் விபரம் தெரிந்தவர்கள், பிரச்சினைகளை அலசும் ஆற்றல் உள்ளவர்கள், ஆனால் சட்டமன்றத்தில் அவர்கள் வேலை என்ன? பலகையை கைகளால் தட்டி ஒலி எழுப்புவதே இத்தகைய கட்சிகளில் பெரிய நட்டம் எதுவென்றால் தகுதியானவர் அமைச்சரவையில் இடம் பெற முடியாது. எனவே திறமையிருந்தாலும் அடக்கி வாசிக்க வேண்டும். வெளியே காட்டக் கூடாது என்ற சூழலால் பல திறமைகள் வீணாகின்றன.
சட்டசபையில் ஒரு உறுப்பினர் செருப்பை காட்டுகிறார். தி.மு.க. உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும், பிரச்சினை களை முன்வைத்து விவாதிக்காமல், கருத்துக்களை முன்வைக்காமல், தலைவரை புகழ்வது, மாற்றுக் கட்சி தலைவர்களை இகழ்வது மோதுவது இப்படியாக சட்டமன்றத்தின் நடைமுறைகள் சீரழிக்கப்படுகின்றன.
சபாநாயகரே பல நேரங்களில் ஆளும் கட்சி நபராக வாதிடுகிறார். அவைக் குறிப்பு நீக்கம் என்பதை சட்ட நிபுனர்களின் ஆய்விற்கு உட்படுத்தினால் நடுநிலை தவறும் போக்கை காண முடியும்.
எதிர் கட்சிகளின் கேள்விகளுக்கு பொறுப்பான பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நிலை இன்று இருக்கிறது. வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு இல்லையே என்று ஒரு உறுப்பினர் கேட்டபொழுது அவர்கள் கண்ணீர்தான் கடல் நீரை உப்பாக்கியது என்று பதில் கூறி பிரச்சினைக்கு பதிலில்லாமல் மறைக்கப்படுகிறது. ஆக நமது சட்டமன்றம் நல்ல இலக்கிய மன்றமாக இருக்கிறதே தவிர, அக்கரையோடு பிரச்சினைகளை பேசுகிற இடமாக இல்லை. தேர்தலில் தில்லு முல்லுகள், அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமற்ற சச்சரவுகள் விவாதிக்கப்படாமல் தலைவர்களை இழிவுபடுத்தும் பிரச்சாரம் மலிந்து கிடக்கிறது.
இந்த இரண்டு போக்குகளையும் களைகிற ஆற்றல் ஊடகங்களுக்கு உண்டு. பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி மட்டுமல்ல, வளர்ச்சியின் மூச்சாகும்.


Emil: Vms75@hotmail.com

Series Navigation

வே. மீனாட்சிசுந்தரம்

வே. மீனாட்சிசுந்தரம்