சின்னக்கருப்பன்
வேலை காரணமாக திருச்சியிலிருந்து வெளியேறி, பல வருடங்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வசித்துவந்தேன். அது என் பார்வையை மாற்ற வெகுவாக உதவியது. அதுவரை திராவிட இயக்க ஆதரவாளனாகவும், பெரியார் விசிறியாகவும் இருந்த எனக்குள் ஒரு சில கேள்விகளை எழுப்பியது.
வாட்டாள் நாகராஜ் என்ற ஒரு கன்னட மொழி வெறியர் கர்னாடகாவில் இருக்கிறார். அவரை ஒரு பைசாவுக்கு கன்னடியர்கள் மதிப்பதில்லை. ஆனாலும், கன்னடர்கள் மொழிப்பற்றிலும், கன்னட மொழி வளர்ச்சிக்கும் ஏராளம் செலவிடுகிறார்கள். எல்லோரும் பல மொழிகளை – தமிழ் உட்பட – கற்று வைத்திருப்பதை பல தமிழர்கள்போலவே பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தினாலும் தமிழையோ அல்லது ஹிந்தியையோ கன்னட மொழியோடு இணைத்து கலப்பு மொழி உருவாக்குவதில்லை. (அது சரி தப்பு என்ற தீர்ப்பு இரண்டாம் பட்சம். இது வெறும் அவதானிப்பு மட்டுமே) அங்கு கன்னட மொழி கற்றுக்கொள்ளாமல் யாரும் எந்த பள்ளியிலும் படிக்கமுடியாது. ஆனால் என் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் கர்நாடக அரசாங்கத்தால் நடத்தப்படும் தமிழ்வழி பள்ளிக்கூடம் இருக்கிறது. அது வளமையாகவே காட்சிதருகிறது. நான் மெல்லத் தமிழினி சாகும் என்று கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆனால் நான் மற்ற மொழிகளுக்கு எதிரி அல்ல.
வாட்டாள் நாகராஜ் 1964ஆம் ஆண்டு முதற்கொண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறார். வாட்டாள் நாகராஜின் இன மொழி வெறி இன்று தமிழகத்தின் அரசாங்க கொள்கைகளாக இருக்கின்றன. அந்த கருத்தாக்கத்தை விரிவு படுத்தும் கட்டுரைகளும் நூல்களும் அரசாங்க செலவில் நூலகங்களில் அடுக்கப்படுகின்றன. வெளிப்படையாகவே பார்ப்பனர்கள் என்ற தமிழ் ஜாதியினருக்கு எதிரான சிந்தனையும் பேச்சுகளும், நூல்களும் வெளியிடப்படுகின்றன; ஊக்குவிக்கப்படுகின்றன. ஜாதி என்ற ஒரு சமூக அமைப்பு, பார்ப்பனர்களின் சதித்திட்டம் என்ற கருத்தாக்கம் இடதுசாரி முதற்கொண்டு எல்லாரோலும் பேசப்படுகிறது. அது தவறு என்பதும், உலகெங்கிலும் எல்லா சமூகங்களிலும் இது போன்றதொரு படிநிலை அமைப்பு உருவாகுகிறது என்ற அறிவியல் பூர்வமான சிந்தனைகள் வேண்டுமென்றே உதாசீனம் செய்யப்படுகின்றன. முஸ்லீம்கள் தலித்துகள் உட்பட எல்லோரும் படித்துக்கொண்டிருந்த காலம் மறக்கப்பட்டு, முன்பு பள்ளி ஆசிரியர்களாக இருந்த பார்ப்பனர்கள் மட்டுமே படித்தவர்கள் என்று வரும் வரைக்கும் கல்வியை அழித்துவிட்டு, மிஷனரி பள்ளிகள் மூலம் கல்வியை மீண்டும் கொண்டுவந்து கல்வியைக் கொடுத்ததே வெள்ளையர்கள்தான் என்னும் வரைக்கும் பெயர் பெற்று ஜாதிகளுக்கு இடையே தீராத பகைமையை தோற்றுவித்துவிட்டு சென்றிருக்கிறது காலனிய அரசாங்கம். (அதனை இந்தியாவில் மட்டும் செய்யவில்லை. அவர்கள் ஆட்சியிலிருந்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்) அந்த காலனிய அரசாங்கம் இன்றைய திராவிட இயக்கத்தால் அதன் நீதிக்கட்சி வரலாறு காரணமாக போற்றப்படுகிறது. தலித்துகள் என்ற தாழ்த்தப்பட்டவர்களை தமிழர்கள் என்று ஒப்புக்கொண்டாலும், அவர்களை தரம் தாழ்ந்த வகையில் நடத்துவது எவ்வாறு வெளிப்படையாகப் பேசப்படாமல் ஆனால் தொடர்ந்து செய்யப்படுகிறதோ அதுபோல, பார்ப்பனர்களை தமிழர் என்று ஒப்புக்கொள்ளாமல் அவர்களை பொதுவாழ்வில் தாழ்ந்த வகையில் வெளிப்படையாகப் பேசியே தொடர்ந்து செய்யப்படுகிறது. (பல பார்ப்பனர்களும் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று ஒப்புக்கொண்டுவிட்டது போல நடப்பது இன்னும் ஆச்சரியம்) தலித் என்று பொதுவில் திட்ட கூசும் ஒருவர் பொதுவில் மற்றொரு தமிழரை பார்ப்பனர் என்று திட்டுவதை நடைமுறையில் பார்க்கலாம். இது இன்று இணையத்திலும் விரிவடைந்திருக்கிறது. இந்துமதம் = பார்ப்பனியம் = சாதிமுறை = அசிங்கம் என்ற ஒரு சமன்பாடு இன்று அதிகாரப்பூர்வமான இடத்தில் உட்கார்ந்திருக்கிறது. திராவிட இயக்கத்தை தீவிரமாக எதிர்த்த அனைத்து இயக்கங்களும் இந்த சமன்பாட்டை இன்று அரவணைத்துக்கொண்டுள்ளன. இன்று புதிதாக தோன்றும் கட்சிகள் கூட இதே சமன்பாட்டை தொடர்ந்து எடுத்துச் செல்லும் கட்சிகளாகவே இருக்கின்றன. இப்படிப்பட்ட கருத்துருவாக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் ‘பார்ப்பனிய அடிவருடிகள் = தமிழின துரோகிகள் = தமிழின வெறுப்பாளர்கள் ‘ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். அன்று திராவிடக்கட்சிகளை தீவிரமாக எதிர்த்த இடதுசாரிகள், காங்கிரஸார் முதற்கொண்டு இன்றைய வைகோ, திருமாவளவன், கிருஷ்ணசாமி, ராமதாஸ் உட்பட அனைவரும் இந்த கருத்தாக்கங்களை ஏற்றுக்கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தலைப்பில் இருக்கும் மூன்று பேர்களும் தொடர்ந்து இப்படிப்பட்ட வெறுப்பு கருத்தாக்கத்தை எதிர்ப்பவர்களாக இருந்துவருகிறார்கள். அதே வேளையில் இவர்கள் மீது பார்ப்பனர், பார்ப்பனிய அடிவருடி போன்ற தாக்குதல்களும் குறைவில்லாமலேயே நடக்கின்றன. அப்படிப்பட்ட தாக்குதல்கள் வரும் என்று எதிர்பார்த்தே இவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார்கள்.
அலைகடலென திரண்டு நின்றிருந்த ஒரு வெறுப்பு அலைக்கு எதிராக கண்ணதாசனும் ஜெயகாந்தனும் தங்கள் கட்டுரைகளைப் பயன்படுத்தினார்கள். சோ தன் நகைச்சுவையை பயன்படுத்தினார். சோவின் பத்திரிக்கை அலுவலகம் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறது. ஜெயகாந்தனும் கண்ணதாசனும் சோவும் தங்களுக்கு திராவிட இயக்கத்தில் இருக்கும் மேல்மட்ட நபர்களுடன் இருந்த உறவினாலோ நட்பினாலோ அல்லது வெறும் மரியாதை காரணமாகவோ தப்பிப்பிழைத்திருக்கிறார்கள்.
சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் இல்லாத ஒரு தமிழ்நாட்டை தொடர்ந்து ஆண்டுகொண்டிருக்கும் வாட்டாள் நாகராஜ் எப்படிப்பட்ட ஒரு தமிழ்நாட்டை உருவாக்கி இருப்பார் என்பதை சற்றே சிந்தித்துப் பார்க்கலாம்.
இவர்களது எல்லா கருத்துக்களும் சமமான நோக்கு கொண்டவையா ? இல்லை. அப்படி இருந்திருக்கவும் முடியாது.
கார்ட்டூன்கள் என்பதும் நகைச்சுவை என்பதும் எப்போதும் மிகைப்படுத்தப்பட்டவையே. அவைகளில் மிகைப்படுத்தப்பட்ட உண்மைகளும், மறைக்கப்பட்ட உண்மைகளும் நிச்சயம் இருக்கும். ஆனால் அவை ஒரு பரந்த பார்வையில் சிறியதாக ஆகிவிடுகின்றன.
சோவின் பாணியைப் பார்க்கும் போது ஒன்று தெளிவாகும். அது தன்னை எப்போதும் திராவிடக் கட்சிகளின் பொது குணாம்சத்துக்கு எதிரானதாக நிறுத்துக்கொள்வது.
தன்னைத்தானே கிண்டலடித்துக்கொள்ள முடியாத ஒரு தீவிர மனப்பான்மையில் தான் சொல்லும் பொய்களை தானே உறுதியாக நம்பி தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நம்ப வைத்துக்கொண்டிருந்தது திராவிட இயக்கம். திராவிட இயக்கம் என்ற நீதிக்கட்சி என்ற வெள்ளைக்காரன் கைப்பாவை எந்த அளவுக்கு வெள்ளையருக்கு ஒவ்வொரு கொள்கையிலும் வால் பிடித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை வரலாறு சொல்லும். அது வெள்ளைக்காரர் வெளியேற்றத்துக்குப் பிறகு ஒரு நாசி மனப்பான்மையில் கற்பனையில் உருவாக்கப்பட்ட பொற்காலத்தை உருவாக்க விழைந்து, அதற்கு ஒரு எதிரி ஜாதியையும் உருவாக்கிக்கொண்டு அரசியலில் இறங்கியபோது அதனை எதிர்ப்பதற்கு ஆளில்லாமல் இருந்தது. எதிர்த்தவர்களோ, அரசியல் ரீதியாக காங்கிரஸில் இருந்த பெரிய பண்ணையார்கள். திராவிடக் கட்சியினரும் இதே போன்ற வர்க்க உணர்வு கொண்ட பெரும் பண்ணையார்களும், முதலாளிகளும், புதுப்பணக்காரர்களும். பெரியாரின் ஒரு அரை நூற்றாண்டு தொடர்ந்த பிரச்சாரம், பார்ப்பனர்களை வாயில் ரத்தம் ஒழுகும் தீமதி படைத்தவர்களாக உருவாக்கியிருந்தது. இது ஹிட்லரின் ஜெர்மானிய ஆரிய கற்பனைக்கும் , யூத எதிர்ப்புக்கும் நேரடிப்பொருத்தம் கொண்டது. ஆனால், இந்து மத விழுமியங்களும், காந்தியின் அஹிம்சையும் இந்த திராவிட இயக்கத்தினை கட்டிப்போட்டிருந்தது. இல்லையேல் வானளாவிய அதிகாரத்தின் கீழ் பார்ப்பன தமிழர்களுக்கு நடந்திருக்கக்கூடிய துயரங்கள் நிச்சயம் வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும்.
நான் யூத எதிர்ப்பையும் பார்ப்பன எதிர்ப்பையும் ஒப்பிடும்போது அதீதமாக சிலருக்குப் படலாம். இது சிந்தித்து எழுதிய வரிகள்தாம். யூத எதிர்ப்பு போன்றே, தெளிவாக பார்ப்பன எதிர்ப்பும் மனிதர்களைக் குறிவைத்தது. யூதர்கள் அரசியல் வாழ்க்கையிலிருந்து விரட்டப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பித்த நாசி இயக்கம் போன்றே, திமுகவிலும் சரி திகவிலும் சரி எந்த பிறப்பால் பார்ப்பனரும் ஏற்றுக்கொள்ளப்பட்டதேயில்லை. திக அமைப்பின் சட்ட திட்டங்களிலேயே பிறப்பால் பிராம்மணர் உறுப்பினர் ஆக இயலாது என்று இருப்பதாக அறிகிறேன். திமுகவின் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் ஒருமுறை கூட ஒரு பார்ப்பனருக்கு எம்.எல்.ஏ தொகுதி போட்டியிட வழங்கப்பட்டதேயில்லை. திமுக தலைவரின் நண்பர்களான சாவிக்கோ அல்லது சின்னக்குத்தூசிக்கோ ஒரு நட்பு நிமித்தமாகக் கூட, தோற்றுப்போகக்கூடிய ஒரு எம் எல் ஏ தொகுதி கூட வழங்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட இன வெறுப்பு அரசியல் செய்யும் திராவிட இயக்கத்தை வகுப்பு வாதக்கட்சி என்று அறிவுஜீவிகள் அழைப்பதில்லை. இன்று அறிவு ஜீவிகள் வகுப்புவாதக்கட்சி என்று அழைக்கும் பாஜகவில் எத்தனையோ முஸ்லீம்களுக்கும் கிரிஸ்துவர்களும் எம்பி எம்எல்ஏ தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் வெற்றி பெற்று அரசில் பங்கெடுத்திருக்கிறார்கள். பாஜக கூறுவது கலாச்சார தேசியம். அதில் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஒப்புக்கொள்ள விஷயங்கள் இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கம் கூறுவது வெறும் இன வெறுப்பு. ஜாதி
வெறுப்பு. தலித் கட்சி என்று அடையாளப்படுத்தப்பட்டு எழுதப்படும் பகுஜன் சமாஜ் கட்சியில் கூட எல்லா ஜாதியினரும் எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். இன்று ராம் விலாஸ் பாஸ்வான் என்ற தலித் கட்சித்தலைவரின் கட்சியில் ஏராளமான மற்ற ஜாதியினர் எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். திமுக போலவும் திக போலவும் இப்படிப்பட்ட தீவிர ஜாதிவெறுப்பு/இனவெறுப்பு அரசியல் செய்யும் கட்சிகள் இந்தியாவிலேயே இல்லை.
தேவைப்படும்போது புரட்சி நடிகர் என்று போற்றுவது, எதிர்க்க ஆரம்பித்தவுடன் மலையாளி இன அடையாளத்தை கையில் எடுத்துக்கொண்டு தூற்றுவது என்பதும் இதே நசிவு மனநிலையிலிருந்து பிறந்ததே. எம்.ஜி.ஆர் ஹண்டேவுக்கு எம் எல் ஏ பதவி கொடுத்தபோது திமுகவும், திகவும் தீவிரமாக எம்.ஜி.ஆரை எதிர்த்தன. காரணம் ஹண்டே ஒரு பார்ப்பனர் என்பதே. அதனாலும் இன்ன பிற ‘பிறழ்வு ‘களாலும் எம்.ஜி.ஆரின் அதிமுகவை ‘திராவிட இயக்க ‘ கட்சியாக, ‘திராவிட இயக்க அறிவுஜீவிகள் ‘ கருதுவது இல்லை.
இன்று பலராலும் போற்றப்படும் அண்ணா, அன்று ‘தனக்கென ஒரு நாடில்லாத இனம் யூத இனமும் பார்ப்பன இனமுமே ‘ என்று எழுதினார். பார்ப்பனத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கி துரத்திவிடவே (அல்லது வேறெதும் செய்துவிடவே) திமுகவும் திகவும் பெரியாரும் தனி நாடு கேட்டார்கள் என்று நிச்சயமாகக் கருதலாம். இது அதீதமான வார்த்தை அல்ல. நான் எந்த மனிதர்களையும் தனி குணம் கொண்டவர்களாக கருதவில்லை. ஆரிய பெருமை என்று பேசிய நாசிகளாக இருக்கட்டும் சுயமரியாதை என்று பேசிய திராவிட இயக்கமாக இருக்கட்டும், தன் இனப் பெருமை மீது கட்டமைக்கப்பட்ட ‘மற்றவர்கள் ‘ மீதான வெறுப்பு, தீவிர அழிவுக்கே இட்டுச் சென்றிருக்கிறது. எல்லா மனிதர்களும் ஒன்றுதான். அன்று நாசிகளின் கீழ் இருந்த யூதர்கள் இன்று நாசிகளுக்கு இணையாக பாலஸ்தீனர்கள் மீது அடக்குமுறை செய்யவில்லையா ? காந்திய, இந்துமத விழுமியங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும், ஐந்துவருடத்துக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல்களும், அந்த தேர்தல்களில் ஜெயிப்பதற்கு நடக்கும் தகிடுதித்தங்களும், இடையே அரசியல்வாதிகள் கையில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்களுமே இந்த திராவிட இயக்கத்தை மட்டுப்படுத்தியிருக்கிறது. ஆயினும் இதன் தத்துவ உள்ளடக்கம் வலிமையுடனேயே இருக்கிறது.
தனி மனிதர்களாக திராவிட இயக்கதின் நசிவுப்பாதையை நிறுத்தியதில் பல தனி மனிதர்களுக்கு பங்கிருக்கிறது. காமராஜர், எம்.ஜி.ஆர், எம்.கல்யாண சுந்தரம், ஜீவா, ஜெயகாந்தன், கண்ணதாசன், சோ, கிருபானந்த வாரியார் என்று ஒரு நீண்ட வரிசையில் பல்வேறு மனிதர்கள் பல்வேறு முறைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
இந்த திராவிட இயக்கம் இத்தகைய தீவிரத்துடன் வந்தபோதும் சரி, இன்றும் சரி, ஒரு சுய எள்ளலுக்கு வாய்ப்பே இல்லாத ஒரு தீவிரத்தனத்துடனேயே இருக்கிறது. இந்த குணம் ஒரு நாசி குணத்தையே குறிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தீவிர மனநிலையை சமன் செய்ய வேண்டுமெனில் தீவிரமான ( மிகைப்படுத்தப்பட்டாலும் கூட) நகைச்சுவையை உள்ளே கொண்டுவந்தே ஆக வேண்டும். சோவின் துக்ளக் கார்ட்டூன்கள் மிகச்சிறந்த கார்ட்டூன்கள் அல்ல. மிகவும் கவனமாக ஒரு வக்கீலால் யோசிக்கப்பட்டு உருவான கார்ட்டூன்கள். தமிழகம் இருந்த/ இருக்கும் நிலையை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட நகைச்சுவை அவரது. கவனமாக யாரையும் பெயர் சொல்லித் தாக்காமல் உருவான நகைச்சுவை அது.
காமராஜரின் சீடராக இன்னும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் சோவின் நகைச்சுவை காமராஜரை விமர்சித்ததே இல்லை. காமராஜரை விமர்சிக்க ஏராளமான காரணங்கள் நிச்சயம் இருக்கும்தான். ஆனால் அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட குறிக்கோள் காமராஜரோ அல்லது எல்லா அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்வதோ அல்ல. அது திராவிட இயக்கக் கருத்தாங்களை எதிர்ப்பது மட்டுமே.
அதே போலவே, ஜெயகாந்தனின் கட்டுரைகளும் விமர்சனங்களும் பேச்சுக்களும் திராவிட இயக்க வெறுப்பு அலைக்கு எதிரானவையாகவே முழுமுதலாக உருவாயின. அவற்றில் நடுநிலை என்பது தேவையற்ற ஒன்று. இத்தனைக்கும் அவரும் சோவும் கண்ணதாசனும் தாங்கள் சார்ந்திருந்த நிலைப்பாடுகளையும்கூட விமர்சிக்கும் பொது குணத்தை கொண்டிருந்தார்கள். இது தன்னை என்றுமே விமர்சித்துக்கொள்ளாததாகவும், தன்னை விமர்சிப்பவர்களையும் தீவிரமாக வன்முறை கொண்டு எதிர்க்கும் திராவிட இயக்கத்துடன் ஒப்பிடக்கூட முடியாதது.
திராவிட இயக்கத்தினர் யாரும் சுயவரலாறு எழுதியதில்லை. அப்படி எழுதப்பட்டவையும் நேர்மையானவை அல்ல. நெஞ்சுக்கு நீதி புத்தகம் கலைஞரின் எந்த கடந்த காலத் தவறுகளும் பேசப்படாத ஒரு சுயதம்பட்டம். இவற்றுக்கு மாறாக ஜெயகாந்தனும் கண்ணதாசனும் தங்களது வாழ்க்கையை உண்மையுடனும் நேர்மையுடனும் முன் வைத்தார்கள்.
உருவாகி வந்த நாசி சிந்தனையை எதிர்த்து அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்போடு தனது சினிமா பிரபல்யத்தையும் சேர்த்துக்கொண்டு சோ தனது பத்திரிக்கையை நடத்தி வந்திருக்கிறார். அப்படிப்பட்ட கவனமும், ‘நாகரிகமான எழுத்தும் ‘ இல்லாமல் இருந்திருந்தால், எப்போதோ ஏதோ ஒரு அராஜகத்தில் காணாமல் போயிருப்பார். உதயகுமாரன் கொலையிலிருந்து, பஸ் எரிப்பு, எதிரிகளை கஞ்சா கேஸில் உள்ளே போடுதல் என்று நீளும் அராஜகங்களில் ஒரு அராஜகமாக மறக்கப்பட்டு போயிருப்பார்.
திராவிட இயக்கத்தினர், தமிழ் தமிழ் என்று கோஷம் எழுப்பியபோது அதனை கிண்டல் செய்திருக்கிறார். ஆனாலும் அவர் தொடர்ந்து தமிழ்ப்பத்திரிக்கைதான் நடத்திவந்திருக்கிறார். அவர் தமிழின விரோதி என்று பல அறிவு ஜீவிகளாலும் விமர்சிக்கப்பட்டே வந்திருக்கிறார். அதைப்பற்றி அவர் கவலைப்படவும் இல்லை. தமிழுக்கு புத்துயிர் ஊட்டிய கண்ணதாசனும் ஜெயகாந்தனும் தமிழ் விரோதிகள் என்று அழைக்கப்பட்ட ஒரு அவலமான நிலையில் சோவின் மீது நடக்கும் தமிழின விரோதி பிரச்சாரத்தில் என்ன ஆச்சரியம் ?
தொடர்ந்து தன் பணியை இன்றும் செய்துகொண்டு வருபவர் என்பதால் சோ இன்னும் முக்கியத்துவம் பெறுகிறார்.
சோ நடுநிலையானவரா என்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனெனில் அவர் தன்னை நடுநிலையானவர் என்று காட்டிக்கொண்டாலும் அது உண்மை அல்ல என்று அவருக்கே தெரியும் என்றே நான் நினைக்கிறேன்.
நடுநிலையானவராக தன்னைக் காட்டிக்கொள்வது அவரது அரசியலுக்கு உகந்தது. அந்த அரசியல் திராவிட இயக்கங்களையும் அவற்றின் கருத்துருவாக்கங்களையும் தொடர்ந்து எதிர்ப்பதற்கு இந்த வேஷம் வசதி என்பதாலேயே அவர் தொடர்ந்து தன்னை நடுநிலையாளராக காட்டிக்கொள்கிறார்.
திராவிட இயக்கத்தினர் நடத்திய கூட்டங்களில் நடப்பவைதான் கூட்டம் நடத்தும் ஒரே வழி என்பது போன்ற உணர்வு வரும்போது அவற்றை கிண்டல் செய்வதை தனது வருடாந்தர கூட்டங்களில் செய்தார்.
இத்தனைக்கும் துக்ளக் பத்திரிக்கை எந்த ஒரு அரசியல் கட்சி பத்திரிக்கை போல, கட்டாய சந்தா வசூலிக்கப்பட்டு விற்கப்பட்டதல்ல. வாங்குபவர் வாங்கினார்கள்.
இந்து மதம் என்பதைப் பற்றியும் பிராம்மணியம் என்பதைப் பற்றியும் சோ எத்தனை சால்ஜாப்பு எழுதினாலும் அது தமிழகத்தில் ஒரு சில பார்ப்பனர்களைத் தவிர வெளியே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. துக்ளக் படிப்பவர்கள்கூட அவரது இந்துமத வியாக்கியானங்கள் பக்கங்களை படிக்காமல் தள்ளிவிட்டுவிட்டே போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். அந்த வகையில் அது அவரின் தோல்வி என்றே கருதுகிறேன். ஆனால், கண்ணதாசன் எழுதிய எளிய ‘அர்த்தமுள்ள இந்துமதம் ‘ கட்டுரைகள் ஏறத்தாழ பெரியாரிசத்தை தமிழகத்தின் நடைமுறை வாழ்விலிருந்து அப்புறப்படுத்திவிட்டன. தமிழகத்தின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளின் தன்னலமற்ற உழைப்பால், அரசியலிலும் அறிவுஜீவி விவாதங்களிலும் இன்னும் திராவிட இயக்கக் கருத்தாக்கங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், கலைஞர் கருணாநிதி அவர்களின் மகன் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் பின்னால், அனைத்து தெய்வப் படங்களுடன் புகைப்படம் எடுத்து குமுதம் பத்திரிக்கை அட்டைப்படத்தில் வருவதை கண்ணதாசனே உறுதி செய்தார்.
சோ துக்ளக் பத்திரிக்கையை தன் சொந்த கருத்துக்களை எழுதும், திராவிட இயக்கத்தின் கருத்துக்களை விமர்சிக்கும் பத்திரிக்கையாக மட்டுமே நடத்தியதால், அதில் ஒரு பரந்த விவாதம் நடக்க வாய்ப்பின்றி போனது. ஆனால், அதுவும் கூட, தவறானது என்றோ அல்லது சோ ஜனநாயக குணம் கொண்டவரல்ல என்றோ ஆகாது. மற்ற இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிப் பத்திரிக்கைகள் இந்த பார்ப்பன எதிர்ப்பு மந்திரத்துக்குள் அடங்கிப் போய்விட்ட ஒரு சூழ்நிலையில், திராவிடக் கருத்துக்களை பேச ஒரு ஆயிரம் பத்திரிக்கைகளும் நூறாயிரம் புத்தகங்களும், குட்டி குட்டியாய் ஏராளமான தேவநேயப்பாவாணர்களும் இருந்தபோதும் இருக்கும்போதும் துக்ளக் மட்டுமே அவற்றை விமர்சித்து வந்தது.
இதனையே பலவிதங்களில் ஜெயகாந்தனும் கண்ணதாசனும் செய்தனர். ஆயினும், ஜெயகாந்தனும் சோவும் கண்ணதாசனும் ஒரே ஆட்கள் அல்லர். ஜெயகாந்தன் எமர்ஜென்ஸியை ஆதரித்தார். அதற்கு அவர் இந்திரா காந்தி மீது வைத்திருந்த நம்பிக்கை காரணம். அவர் எதிர்பார்த்தது போல எமர்ஜன்ஸி இல்லை என்பதை உணர்ந்ததும் அவர் அதனை எதிர்த்தார். சோ எமர்ஜென்ஸியை எதிர்த்தார். அதற்கு அவரது உள்ளார்ந்த ஜனநாயக உணர்வு காரணமாக இருந்திருக்கலாம். அல்லது அவர் காமராஜர் மீது வைத்திருந்த பக்தி காரணமாக இருந்திருக்கலாம். (எமர்ஜென்ஸியை காமராஜர் கொண்டுவந்திருந்தால், காமராஜின் அப்பழுக்கற்ற குணம் மற்றும் நேர்மையின் மீதான நம்பிக்கை காரணமாக சோ ஒருவேளை அதனை ஆதரித்திருப்பார் என்றே கருதுகிறேன்)
***
இந்த மூவரும் மூன்று வெவ்வேறு கருத்தாக்கங்களிலிருந்து திராவிட இயக்க எதிர்ப்பில் ஈடுபடுவது நோக்கத்தக்கது. இடதுசாரியாக ஜெயகாந்தனும், வலதுசாரியாக சோவும், திராவிட இயக்கத்தின் உள்ளிருந்து வெளிப்பட்டு , திராவிட இயக்கங்களின் உண்மை சொரூபத்தை முன்வைத்த கண்ணதாசனும்.
இன்று இடதுசாரி அரசியலில் ஜெயகாந்தன் நேரடியாய் ஈடுபடாததும் ஒரு வகையில் பொருத்தமே. பா ஜ க எதிர்ப்பு என்ற விலங்கிட்டுக் கொண்ட இடதுசாரி இயக்கங்கள் திராவிட இயக்கங்களின் மீதான காத்திரமான விமர்சனத்தை வைக்கத் திராணியற்று நிற்கின்றன. திராவிட இயக்கங்களின் கோட்பாடு மற்றும் இலக்கியம் பற்றி இதுவரையில்வெளிவந்த மிகச் சிறப்பான விமர்சனங்கள் ‘தாமரையில் ‘ வெளிவந்தவையே. இன்றைய சூழ்நிலையில் இப்படிப்பட்ட விமர்சனங்கள் தாமரை, செம்மலரில் வெளியாகும் சாத்தியமே இல்லை.
திராவிட இயக்கங்களின் கலாசாரக் கூறுகளைத் தாங்கிய நாடகம், சினிமா என்ற ஊடகங்களிலிருந்தே சோ உருவாகி வளர்ந்து , திராவிட இயக்கங்களின் எதிர்முனையில் நிற்பது கருதத்தக்கது. சோ மாதிரி இன்னொருவர் இந்த ஊடகங்களிலிருந்து வெளிவராத சூழல் , எவ்வளவு இறுக்கமாக திராவிட இயக்கங்களின் பிடியில் இவை உள்ளன என்பதன் உதாரணம்.
***
ஜெயகாந்தனின் திண்ணை பேட்டியில் திராவிட இயக்கத்தை ஒரு இயக்கமென்றே தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். ‘it is a menace. அதற்கு இரையாகக் கூடாது. அது ஒரு நோய். சமூக நோய். அதிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதை என்னுடைய அரசியல், சமூக இலக்கிய தர்மமாக நான் மேற்கொண்டேன் ‘ என்று தெளிவாகக் ஜெயகாந்தன் கூறுகிறார்.
ஒரு முறை சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையேயான வித்தியாசம் என்ன என்று கேட்டபோது சர்ச்சில் அதற்கு ‘கார்ட்டூன் ‘ என்று பதில் சொன்னார். அது சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ‘அரசியல்வாதிகளைக் கேலி செய்யும் கார்ட்டூன் ‘ என்று தெளிவாகச் சொல்லவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு ஜனநாயகச் சூழ்நிலையை உறுதி செய்து தமிழ்நாட்டுக்குத் தந்ததற்காகவும், தங்களது திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்துக்கள் மூலம் எத்தனையோ தமிழர்களை இந்த நசிவிலிருந்து காப்பாற்றித் தந்ததற்காகவும், தந்து கொண்டிருப்பதற்காகவும் இந்த மூவருக்கும் என் நன்றிகள்.
***
karuppanchinna@yahoo.com
***
- நேர்காணல் : வசந்த்
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3]
- இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்
- மூன்றாம் பக்கம் ( 3)
- நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-1
- பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்
- ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை
- ஹிப்பாங்… ஜிப்பாங்
- பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்
- ‘சே ‘
- உலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்
- உலகத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்
- ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்
- அருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்
- வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்
- ஸ்த்ரீ கானம்
- குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?
- தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
- ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
- கண்ணாடிக் கண்கள்
- சிறகுகள் முளைத்து..
- து ணை – குறுநாவல் -பகுதி 5
- விலங்கு நடத்தைகள்..
- சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]
- சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…
- அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)
- ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்
- கடலை வசக்குதல்
- சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்
- பருந்துகள்
- வாய்திறந்தான்
- ஒரு மரத்தின் இறப்பு!
- வன்முறை