தப்பிய கவனம்

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

மு. ரெங்கம்மாள்


சிறிது விலகின தாவணியில்
குத்திட்டு நின்றன உன் இரு கண்கள்.
‘வரட்டுமா ? ‘ எனக் கேட்டு
செருப்புக்குள் கால் நுழைக்க
உயர்த்திய பாவாடைக்குள்
குதிகாலுக்கு மேலே
துழாவும் உன் கவனம்.

நீட்டிய கையில் புத்தகத்தோடு சேர்ந்து
உராய்ந்து மீளும் உன் விரல்கள்.
உன் கன்னத்தில் ஏதோ என்று
இல்லாத கறையை மெல்லிதாய்த்
துடைக்கும் உன் உள்ளங்கை.

பறக்கும் தாவணியின் முந்தானை
எனக்கு மீட்டுத் தரவென்று சொல்லிப்
பற்றித் துழாவும் உன் முழங்கை
இடுப்பின் வெற்றிடத்தை முத்தமிட்டுச் சிலிர்க்கும்
சிலிர்க்க வைக்கும்.

இன்று
ஆடை நீக்கி அனைத்தும் களைந்து
உனக்காக
உன் கவனக் குவிப்பிற்காக,
அருகில்
முயங்கிக் கால் பிணைத்து,
அணைத்துக் கிடக்க —
உன் பார்வை என் மீது
படரும் வெற்றுடல் என்மீது
வெளியே தெறிக்கும் பெண் சிரிப்பொலிக்காக
ஜன்னலைக் கடந்து நழுவும் உன் காதல்.

Series Navigation

மு. ரெங்கம்மாள்

மு. ரெங்கம்மாள்