டைரி

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

ஞாநி


iசென்னையில் அடிக்கடி புகைப்படக் கண்காட்சிகள் ஓவியக் கண்காட்சிகள் நடக்கின்றன. கலை நேர்த்தி, அழகு, தொழில் நுட்பப் புதுமைகள் என்ற அடிப்படையிலேயே இவை பெரும்பாலும் நடக்கின்றன.

ஆனால் கலை நேர்த்தியோ, தொழில் நுட்பச் சிறப்போ இல்லாவிட்டால் கூட செய்திப்படங்கள் பார்ப்பவர் மனதை பாதிக்கக்கூடிய வல்லமை உடையவை.

ஆயிரம் சொற்கள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பது இதழியலின் பால பாடங்களில் ஒன்று. அப்படிப் பல புகைப்படங்கள் உலக வரலாற்றில் மக்களின் மனசாட்சியை உலுக்கும் படங்களாக இருந்திருக்கின்றன.

அண்மையில் இராக் சிறையில் அமெரிக்க ராணுவத்தின் அட்டூழியங்கள் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கின. எத்தனை வரிகள் எழுதியிருந்தாலும் எழுப்ப முடியாத உணர்வை புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் எழுப்பின. அந்தப் பதிவுகள் பெரும்பாலும் கொடுமைகளில் ஈடுபட்டவர்களாலேயே வக்கிர உணர்வுடன் செய்யப்பட்டவை என்றபோதும், அவையே அவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டன.

இராக் சிறைக் கொடுமைகளின் முழுக் காட்சிகளும் இன்னமும் வெளிவரவில்லை. அமெரிக்க அரசின் கெடுபிடிகள் ஒரு புறம். மறு புறம் எந்த அளவுக்கு கொடூரமான படங்களை இதழில் வெளியிடுவது என்பது பற்றி பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் இருக்கக்கூடிய தயக்கங்கள் இவையே காரணம். புதிய கலாசாரம் செப்டம்பர் 2004 இதழ், இதுவரை நம் காணாத பல கொடூரங்களை வெளியிட்டிருக்கிறது. விவரமான கட்டுரையும் சிறப்பானது. அவற்றைக் காணும் எவர் மனமும் பதைக்கும். அல் கொய்தா போன்ற எதிர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் பணியின் தலைமை தளபதியாக இருப்பது ஜார்ஜ் புஷ்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ப்ரெஸ்ஸன் போல உலகப்புகழ் பெற்ற இன்னொரு புகைப்படக்காரர் எடி ஆடம்ஸ் அண்மையில் 71ம் வயதில் இறந்தார். அவர் 1-2-1968ல் வியட் நாம் சைகோன் நகரத் தெருவில் எடுத்த படம் வியட் காங் போராளி ஒருவரை ராணுவ அதிகாரி லோன் சுட்டுக் கொல்லும் காட்சி. லோனின் நெருக்கமான சகாவின் குடும்பத்தை கொன்றதற்காக அந்தப் போராளியை லோன் அப்போது கொன்றதாக பின்னர் ஆடம்சுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆடம்சின் அனுதாபம் லோன் பக்கம்தான். லோன் செய்தது எனக்கு ஏற்புடையது அல்ல என்றாலும் அப்போது நடந்தது ஒரு யுத்தம் என்பது ஆடம்சின் கருத்து. ஆனால் அந்தப் படம் வியட்நாம் போர் பற்றிய அமெரிக்கப் பிரசாரத்துக்கு எதிராக செயல்பட்ட பல படங்களில் முக்கியமான ஒன்று.

இவ்வளவு அற்புதமான புகைப்படக் கலையை நம் குழந்தைகளுக்கு பிளஸ் டூவில் ஒரு பாடமாகக் கற்றுத்தர தமிழ் நாட்டில் ஒரே ஒரு பள்ளிதான் இருக்கிறது. அது சென்னை சூளை மேட்டில் இருக்கும் மாநகராட்சிப் பள்ளி.

என் மகனை அங்கு சேர்த்துப் படிக்கச் செய்தோம். மாநகராட்சிப் பள்ளிகளுக்கே உரிய நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கும் அதில், ஆசிரியரின் அர்ப்பணிப்பினால் ஒவ்வோராண்டும் ஏராளமான மாணவர்கள் தொழில் முறை புகைப்படக்காரராகும் தேர்ச்சியைப் பெற்று வருகிறார்கள். பலர் அடுத்த கட்டமாக அடையாறு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள்.

புகைப்படம் கழுவ ரசாயனங்கள் வாங்கவும், மாணவர்களுக்கு கற்பிக்க இப்போதுள்ள ஒற்ரை காமிரா தவிர இன்னும் இரண்டு காமிராக்கள் வாங்கவும் பணமில்லாமல் அந்தப் பள்ளி கஷ்டப்படுகிறது. தேவைப்படுவதெல்லாம் சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே. வசதி உள்ள வாசகர்கள் தங்கள் பழைய காமராவை அளிக்கலாம். புதிய காமரா வாங்கியும் தரலாம்.

இளமைாயில் வறுமை கொடியது தனி நபர்களுக்கு மட்டுமல்ல. இது போன்ற கல்வி நிலையங்களுக்கும்தான்.

இளமையில் வறுமையை மீறி படித்து வாழ்க்கையில் உயர முற்படும் இளம் உயிரை மரணம் பறிப்பது அதிலும் பெரும் கொடுமை. திரைப்படக் கல்லூரியில் என் மகனின் வகுப்புத்தோழனாக இருந்த நரசிம்மன் என்ற மாணவர் ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார். ராஜபாளையத்தில் ஏழைக் கூலித்தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த நரசிம்மன் விடுமமுறை நாட்களில் ஊரில் டிராக்டர் ஓட்டி, வேறு வேலைகள் செய்து வீட்டுக்கும் உதவி தன் கல்விச் செலவையும் சமாளிக்க பாடுபட்டு வந்தவர். மரணச் செய்தியை அவர் தாயாருக்குத் தெரிவித்தபோது, உடலைக் காண்பதற்கு சென்னை வர பஸ் கட்டணத்துக்கு கூட காசில்லாத நிலை. “ அங்கயே புதைச்சிட்டு புதைச்ச மண்ணையாச்சும் எனக்குக் காட்டுங்க ‘ என்று அழுதார். மாணவர்களும் ஆசிரியர்களும் நிதி திரட்டி உடலை பத்தாயிரம் ரூபாய் செலவில் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். நரசிம்மன் ஆளாகி குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்று எதிர்பார்த்திருந்த குடும்பம் தொடர்ந்து சிகலில் இருக்கிறது. தங்கை ஒருத்தி பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடுகிறார். ஒருத்தி தீப்பெட்டி தொழிற்சாலையில்.

நரசிம்மனைக் கொன்ற சாலை விபத்து பற்றி வெகுஜன இதழ்களில் பெரிதாக செய்தி வரவில்லை. ஸ்டாபேன் என்ற பெண் காரில் மோதிக் கொல்லப்பட்டது ஓரளவு கவன்ம் பெற்றது. நரசிம்மன் ஒரு இரவு நேரம் கல்லூரி விடுதிக்கருகில் இருந்த ஒரு டாக்கடையில் நண்பர்களுடன் டா குடித்து விட்டு ( பல ஏழை விடுதி மாணவர்களுக்கு டாதான் உணவு) திரும்புகையில் ஆளோ, வாகனமோ எதுவும் இல்லாத ஒதுக்குப் புற சாலையில் பின்னாலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதித்தள்ளி மண்டையை உடைத்தது.

ஸ்டாபேன் விபத்து போலவே இதிலும் வண்டி ஓட்டியின் குடி போதைதான் விபத்துக்குக் காரணம்.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது சென்னையில் சகஜம். ஆனால் அதன் விளைவுகள் இப்படிப்பட்டவை.

அமெரிக்காவில் ஆண்டு தோறும் 15 ஆயிரம் பேர் குடித்துவிட்டு வண்டி ஓட்டிய விபத்துகளில் சாகிறார்கள். வியட் நாம் யுத்தத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட அதிகமான பேர் அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்க சாலைகளில் குடி விபத்துகளில் செத்தார்கள்.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதன் கோர விளைவுகளை கீழேயுள்ள படங்கள் விளக்கும். ஜாக்குலின் என்ற இந்த இளம் பெண் 19-9-1999 அன்று காரில் பயணம் செய்தபோது எதிரே ஒரு 17 வயது இளைஞன் குடித்துவிட்டு ஓட்டி வந்த கார் மோதியது. ஜாக்குலின் இருந்த கார் தீப்பிடித்தது. ஜாக்குலின் கருகினார். 65 சத தீக்காயங்கள். 45 முறை அறுவை சிகிச்சை. இன்று ஜாக்குலினுக்கு தலையில் துளி முடி கிடையாது. ஒரு கண்ணுக்கு இமையே கிடையாது. ஒவ்வொரு குடிகார ஓட்டுநரின் ஸ்டியரிங் வீலிலும் ஹேண்டில் பாரிலும் ஜாக்குலினின் இரண்டு புகைப்படங்களையும் பொறிக்க வேண்டும்.

பரிந்துரை:

சாவர்க்கரின் அந்தமான் சிறை வாசம் பற்றி சங்கப்பரிவாரங்கள் ஓவென்று கதறி அழும் காலம் இது. 1907ல் மனிக்தலா சதி வழக்கில் கைதாகி 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வங்காளத் தீவிரவாதி உபேந்திரநாத் பந்த்யோபாத்யாய் எழுதிய ‘நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு ‘ நூலை சு.கிருஷ்ணமூர்த்தியின் அருமையான மொழிபெயர்ப்பில் பல்கலைப் பதிப்பகம் (25 தெற்குச் சிவன் கோவில் தெரு சென்னை 24 ) வெளியிட்டிருக்கிறது. பின்னால் பத்திரிகையாளராக வாழ்க்கையைக் கழித்த உபேந்திரநாத் அருமையான நகைச்சுவை உணர்வுடன் புரட்சி- சிறை அனுபவங்களை எழுதியிருக்கிறார். இதை எனக்குப் படிக்கக் கொடுத்த வாசுகி-விசுவுக்கு நன்றி. நீங்களும் படித்தால் எனக்கு நன்றி சொல்வீர்கள். உபேந்திர நாத்தின் அரசியலிலும் இந்துத்துவா தெரிகிறது. ஆனால் அவரே தன் நூலில் அதையும் கிண்டலடிக்கிறார்.

தீம்தரிகிட அக்டோபர் 1-15 2004

dheemtharikida@hotmail.comi

Series Navigation

ஞாநி

ஞாநி