பஹீமாஜஹான்
‘திண்ணைக் கவிதைகள்’ -டீன்கபூர்(இலங்கை)
2007 இல் கிழக்கில் வெளிவந்த தொகுதிகளில் ஒன்றான டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்” எதிர்பாராத வகையில் என்னை வந்தடைந்தது.
தொகுப்பில் பார்ப்பதற்கு முன்னரே சில கவிதைகளைத் திண்ணை இணையத்தளத்தில் பார்த்திருந்தேன்.இணையப் பக்கத்தில் பார்ப்பது போல வேகமாக வாசித்துக் கொண்டு போவதற்கும் இந்நூலை நிறுத்தி நிறுத்தி நிதானமாக வாசிப்பதற்கும் இடையே வித்தியாசத்தை உணர முடிகிறது.நிதானமாக வாசிக்கும் போது பல குழப்பங்கள் தெளிவின்மைகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.எனது வாசக மனதில் எழுந்த சில விடயங்களைக் கீழே தொகுத்திருக்கிறேன்.
‘எங்கே என் அம்புலி’ கவிதையின் முதல் பகுதி நன்றாக உள்ளது.எனினும்
‘இனியும் வனம் ஒன்றில் வகை செய்வோம்
ஒரு பெரு மரத்தில் தவழ்ந்து பூரிப்போம்
என் நாள் வரும்
உன் மூக்கை நுள்ள
கடலை அணி செய்ய’
என இறுதிப் பகுதியில் பயன்படுத்தியுள்ள சொற்கள் கவிதையின் போக்கைவிட்டு விலகியே நிற்கின்றன.
‘கூவிய சேவலின் சரிவர முடிவு’ கவிதையின் உள்ளடக்கத்தில் அனுபவ வீச்சைவிடவும் சோலைக்கிளியின் பிரதிபலிப்பு மேலோங்கியுள்ளதைக் காண முடிகிறது.நிச்சயமாக நல்ல படைப்புகள் நம்மைப் பாதிக்கவே செய்கின்றன.அத்தகைய பாதிப்புகள் எமது படைப்புகளில் அப்படியே பிரதிபலிப்பது அந்தப் படைப்பின் குறைபாட்டைச் சுட்டுவதாகக் கருதுகிறேன்.
‘கலர்ப் பாம்பு கரையொதுங்கி’ என்ற கவிதையின் தலைப்பு சங்கடத்தையே தந்தது.சம காலத்தில் கிழக்கில் கவிதையெழுதிக் கொண்டிருக்கும் பலரும் ‘பாம்பு’ என்பதைக் குறியீடாகவும் வெறும் சொல்லாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.பலரது கவிதைகளுக்குள்ளும் ஏன் இந்தப் ‘பாம்பு’ வருகிறது என்பது தெரியவில்லை.ஒருவரது பாதிப்பில் மற்றவர் என எழுதிக் கொண்டே போவது எப்போது முடிவுக்கு வரப்போகிறது?
இந்தக் கவிதையில்
‘சிவப்பாய் இன்னொன்று
கண்களை உருட்டும்
முடியைக் கோதும்
பிணம் இனித் தின்னேன் என உண்மையாக்கும்
உழைப்பாளியைத் தீண்டேன் என முழங்கும்’
என்ற வரிகளின் காட்சி அப்படியே கண்ணெதிரே வருகிறது.இதில் குறிப்பாகச் சொல்லும் அரசியல்வாதியைப் பற்றியும் அவர்சார்ந்த கட்சியின் செயற்பாடுகள் பற்றியும் விபரித்துள்ள விதம் நன்றாக உள்ளது.இந்தக் கவிதை இலங்கையைச் சார்ந்துள்ளவர்களுக்குத் தான் விளங்கப் போகிறது.இக்கவிதை சொல்லும் அரசியல் இலங்கைக்கு வெளியேயுள்ள வாசகரைப் பெரிதும் ஈர்க்கப் போவதில்லை.(இலங்கையரல்லாதவர்களே ‘திண்ணை’ இணையதளத்துக்கு அதிகம் வருகைதருகின்றனர்.)
‘நேசி மலரை மனசை’ கவிதை நிறைவு கூடி வராத கவிதையாகவே தென்படுகிறது.
‘மணம் பரப்பும் பாக்களாகவோ
மணம் நுகரும் மூக்களாகவோ”
(இங்கு மூக்கள் என்பது பூக்கள் என வந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்)
என்ற வரிகளிலுள்ள முரண்பாடு இந்தக் கவிதையை எந்தளவுக்குத் தூக்கி நிறுத்தியுள்ளது?;இந்தக் கவிதையின் இறுதிவரிகள் கூட உச்சத்தைத் தொடவில்லை என்றே நினைக்கிறேன்.
‘நேசி
மலரை
மனசை
நானும் நீயும்’
என முடிவடையும் போது இக்கவிதைக்குச் சிரமத்துடன் கண்டடையும் பொருளைக் கூடக் கைவிட்டுவிட நேர்கிறது.
‘உலகம் நசிந்து கவிதையில்’
‘மூட்டைப் பூச்சிகள் என்னிதயத்தைக் கடித்துத் தின்னுகிறது’
என்ற ஆரம்ப வரிகள் கவிதைத் தன்மையை இழந்து நிற்கின்றன.பன்மையில் தொடங்கி ஒருமையில் முற்றுப் பெறும் ஒரு வழுவுள்ள வசனமாக உள்ளது.
தற்காலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலரது கவிதைகளிலும் இந்தக் குறைபாட்டைக் காண முடிகிறது.
சிலரது கவிதையில் கவனயீனமாக இது நிகழும் அதே வேளை சிலர் தொடர்ந்தும் அப்படியே எழுதுகின்றனர்.கவிஞரின் பல கவிதைகளில் இந்த வழுவைக் காணலாம்;.இந் நிலை கவிதைக்குக் கம்பீரத்தையோ பாய்ச்சலையோ வழங்கிவிடவில்லை.மாறாக இந்நிலை கவி மொழியின் பின்னடைவாக உள்ளதென்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இதே கவிதையில்
‘எனது தூக்கம் மலையிலிருந்து
குதித்துச் செத்துக் கிடக்கிறது’
என்ற கவித்துவ வீச்சுடன் திகழும் அழகிய வரிகளைத் தொடர்ந்து
‘கனவுகளை பாம்புகள் தின்ன
சுவாசிக்கும் மனிதனாக மட்டும்
நான் இருக்கிறேன்’
……….
‘சுருண்டு படுத்து படமெடுக்கும்
பாம்பு மனசை எச்சிலாகத் துப்புங்கள்’
போன்ற வரிகளால் கவி மொழி வலுவற்றுப் போகிறது.இந்தப் பாம்புகளால் இந்தக் கவிதையின் வெற்றி நழுவிப்போயுள்ளதாக நினைக்கிறேன்.
‘ஒருத்தி’ இந்தத் தொகுப்பில் உள்ள நல்லதொரு காதல் கவிதை.கவிஞருக்கே தனித்துவமான நடையில் அனுபவ வீச்சுடன் இக்கவிதை எழுதப் பட்டுள்ளது.
‘சூரியனின் இளமை நரையாகி’ கவிதையில்
(1) ‘ஒரு கதிரின் பெறுமதியை
நான் காலை எழும்போது உணர்வேன்
ஒரு துப்பாக்கியின் சத்தமோ
ஒரு வாந்தியின் மொழியோ என்னை அடையாதவரை’
என்ற வரிகள் கவிதையின் உச்சமாகத் தெரிகிறது.இதன் பின்னர் வரும்
(2) ‘பெருவிரல் அடையாளத்தையாவது இட்டு
மேசைப்பேச்சுக்கு சூரியனை அழையுங்கள்
அவன் போடும் வெளிச்சத்துக்கு’
எனும் வரிகள் இக்கவிதைக்குச் சரியான நிறைவைக் கொடுத்துள்ளனவா? ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள (2) இல் உள்ள வரிகளை அடுத்து (1) இல் உள்ள வரிகள் அமைந்திருப்பின் நன்றாக வந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
‘கிணற்றுத் தும்பி படியிறங்கி’ ‘திண்ணை’யில் படித்த கவிதைகளில் என்னைக் கவர்ந்த கவிதை.யுத்தத்தால் நசுங்கிக் கிடக்கும் வாழ்வை மிக இயல்பான மொழியிலும் அர்த்தச் செறிவுடனும் இக் கவிதை சொல்லிச் செல்கிறது.
‘தேர்தலில் குதியாத வேட்பாளனாக’ கவிதை நிதானமாகப் படிக்கப் படிக்கக் குழப்பத்தையே தருகிறது.கவிஞர் இதை எழுதியிருக்கக் கூடிய தளத்தை என்னால் கண்டடைய முடியாமல் உள்ளது. இந் நிலை எனது வாசிப்பின் குறைபாடாகக் கூட இருக்கலாம்.
;நெருப்பினில் வடித்து’ கவிதையில்
‘இடிந்த கட்டிடங்களுக்குள்
மூச்சற்று நகருகின்ற
உணர்வுகள் என் சேவலாய்த் தலை உசுப்பின
மெல்லிய தென்றலுக்கு
ஒரு காற்றாடியை விட்டு மகிழ
ஒரு குழந்தைக்காக நிலவு குளித்துச் சென்றது’
என்ற வரிகளில் வரும் ‘சேவலாய்த் தலை உசுப்பின’ ‘நிலவு குளித்துச் சென்றது’ போன்ற சொற் பிரயோகங்களின் பொருளைத் தேடும் போது அலைக்கழிப்பே நிகழ்கிறது.
இவற்றின் பின்னர் வரும்
‘நெருப்புக்குள் உலகைத் தேடி
ஆயிரம் ஆயிரம்
புறாக்களை பறக்கவிட்ட கரங்கள்
இரத்தத்தைத் துடைத்து நகை புரிகின்றன.’
என்ற வரிகள் மனதுக்கு நிறைவைத் தருகின்றன. இக் கவிதையின் ஏனைய பகுதிகளை எந்த அளவுக்குக் கவனமெடுத்துப் படித்த பொழுதும் தெளிவின்மையே மிகைத்துள்ளது.
‘கனவின் துண்டு’ கவிதையில்
‘நரகத்து மொழியின் விபரீதம்
இன்னமும் செவிகளை நசுக்கின’
என்ற வரிகளின் மூலம் தன்னைப் பாதித்த சொற்களை நினைவு கூறுகிறார் என நினைக்கிறேன்.
‘நெஞ்சுக்குள் உடைந்த
மலை முகட்டின் பாறை
வேர் விட்ட நிலையிலே’
என்பதனூடாக மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஒன்றின் சிதைவையும் அது தந்து கொண்டிருக்கும் துயரையும் சொல்கிறாரா? அல்லது மீளவும் உருவாகும் நம்பிக்கையைச் சொல்கிறாரா?
‘குளிர்ச்சியின் காதல்’ என்னையொத்த சாதாரண வாசகருக்கு விளங்காத கவிதைகளுள் ஒன்று.
‘அசைத்துப் பார்த்தேன்
கயிற்றால் கட்டிய காற்று’
என்ற ஆரம்ப வரிகள் நன்றாக உள்ளன.
‘உறுமிப் பார்த்தேன்
சுடரால் பிணைத்த சூரியன்’
‘உறுமிப் பார்ப்பதற்கும்’ ; சுடரால் பிணைத்த சூரியனுக்கும் என்ன தொடர்பு?
‘காக்கை ஒரு மிரடு குடித்தது’ இங்கு ‘மிரடு’ என்பது ‘கரக்கடை’ ‘மதுரமுனை’ போல திரிபடைந்து வழக்கில் உள்ள ஒரு சொல் எனக் கருதுகிறேன்;.(அவ்வாறே ‘கனவின்துண்டு’ கவிதையில் ‘அண்ணார்ந்து’ என்ற சொல்லும் என நினைக்கிறேன்.) ஆனால் கவிஞர் ‘எனது பின் வரிகள்’இலும் ‘மிரடுமிரடாய் நீர்பருகிய காலங்கள்’ எனப் பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
இத்தகைய சொற்பிரயோகங்களைக் கிழக்கைச் சேர்ந்தவர்கள் வாசித்துச் செல்வதற்கும் கிழக்கைச் சாராதவர்கள் வாசிப்பதற்கும் இடையே முரண்பாடுள்ளது.இவற்றைக் கிழக்கைச் சார்ந்தவர்கள் இயல்பானதாகக் கருதலாம்.ஆனால் கிழக்குக்கு வெளியே அவ்வாரல்ல.இத்தகைய சொற்கள் உறுத்தலைக் கொடுபப்வை.மதிப்பீடுகளின் தரத்தைத் தீர்மானிப்பவை.இலக்கியம் என்பது குறுகிய பிரதேசத்துக்கு மாத்திரம் எல்லைப்படுத்தப் பட்டதல்ல.இலங்கை வாசகரைக் குறைவாகக் கொண்ட ‘திண்ணை’ போன்ற இணையத் தளங்களில் இத்தகைய கவிதைகள் இடம் பெறும் போது வாசகரின் ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகலாம்.
‘மூடுபனிக்குள் நான் அலற’ வாசகன் மீது அதிக பளுவைச் சுமத்தாத கவிதை. ‘மரங்கொத்தி வரலாம் இனி’ , ‘தென்னையின வடிவு’ , ‘நெருப்பு நெருப்பு’, ‘கறிவேம்பின் நிலவு’ ஆகியன கவித்துவ வீச்சுடன் திகழும் கவிதைகள்.
‘சமாதானக் குழம்பு’ , ‘விருந்தோம்பியின் பாடல்’ ஆகிய கவிதைகளின் மொழி என்னைக் கவரவில்லை.பெரும்பாலும் கிழக்கைச் சேர்ந்தோரது கவிதைகளிலே இத்தகைய போக்கைக் காண முடிகிறது.கிழக்கில் இத்தகைய கவிதைகள் பெரிதும் வரவேற்கப் படலாம்.கிழக்குக்கு வெளியே இவ்வாறான கவிதைகளைப் படிக்கும் வாசகனிடம் அதிருப்தியே மேலோங்கும். இந்தப் போக்கானது இக்காலச் சிறந்த கவிதைகளின் செல் நெறியிலிருந்து விலகியதொன்றாகும்.(ஓரு வேளை 80 களில் 90களில் இத்தகைய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கலாம்.)
‘சோதனைச் சாவடி சோம்பலாய்க் கிடந்தன’
‘மணம் புதையுண்டு போயின’
‘பசுவின் வாலைப் பிடித்து ஓடியது நண்டு’
‘வடை ஒன்று வாய்க்குள் உருண்டது
நிலமாக அதிர்ந்தது’
போன்ற வசனங்களைப் படிக்கும் எந்தவொரு தேர்ந்த வாசகனும் திருப்தியடையப் போவதில்லை:இத்தகைய கவி மொழியைப் புறக்கணித்துச் செல்லக் கூடும். இத்தகைய வரிகள் மூலம் கவிஞரால் உச்சத்துக்குப்; போகமுடியாமலுள்ளது.
‘உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு’ புகை பிடித்தலின் விளைவுகளைச் சொல்லும் நல்லதொரு கவிதை.
‘நிலப்பந்துக்குள்’ கவிதையின் இயல்பான போக்கிலிருந்து
‘சவர்க்கார நுரையினுள்
மனத்தைத் தொலைத்துத் தேடிய
வறுமை இன்னும் கசக்குவது
பேனாவைக் குத்தினேன்
குரள்வளை சென்றது
திரும்பிக் கத்தியது’
என்ற பத்தி உறுத்தலைக் கொடுத்தவண்ணம் உள்ளது.கவிஞர் என்ன சொல்கிறார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. (எல்லோருக்கும் எல்லாம் விளங்க வேண்டும் என்ற நியதி இல்லை தான்)இந்தப் பத்தியை இக்கவிதையிலிருந்து நீக்கிவிட்டுப் படிக்கும் போது மிக நல்லதொரு கவிதையாக இது திகழ்கிறது.
‘ஒரு பிடி உயிர்’ கவிதையிலும்
‘பாறையாய்ப் போன கட்டிட இடிபாடுகளுக்குள்
ஒரு பிடி உயிருடன் வாழ்கிறேன்
ஒரு சிட்டுக் குருவியாய் என்னைவிட்டும்
உயரப் பறந்திட இந்த மூச்சு காத்துக் கிடக்கிறது’
என்ற அழகான வரிகளையடுத்து
‘தாமரையாய் என்னிதயக் குளம்
கடல் நீரால் கருகி
தெளிந்து சிறு அலை
என்னுள் எழுந்து மடிகின்றன’
என்று வேண்டுமென்றே திணிக்கப்பட்ட வரிகளால் கவிதையின் கட்டுமானம் குழைகிறது என நினைக்கிறேன்.பெரும்பாலான கவிதைகளில் இத்தகைய ஒரு பத்திதான் அந்தக் கவிதையுடன் இயல்பான நெருக்கத்தைக் கொள்ளவிடாமற் செய்வதாயுள்ளது.
‘வெங்காய மூட்டையில் கிளறிய மூளை’ என்ற கவிதையின் ஆரம்ப வரிகளை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
‘தூய்மை படிந்து உதறி’ தலைப்பு மயக்கம் தருவதாக இருப்பினும்
‘ஒருவனும் சிரிப்பதாகத் தெரியவில்லை
ஒருவனும் அழுவதாகவும் தெரியவில்லை
மனசுக்குள் மாபெரிய மலைகள்
புகைகின்றன’
என்ற வரிகள் நிறைவுடன் மனதைத் தொடுகின்றன. ஆமாம் மலைகள் புகைகின்றன தான்.
இதை எழுத முன்னர் என்னுள் சில கேள்விகள் எழுந்தன.மேற்கு உருவாக்கியதும் அங்கு தோல்வியைத் தழுவியதுமான ‘இஸம்’களைக் கொண்டு எமது கவிதைகளை அளக்கும் போக்கால் எமது படைப்புகளுக்கான வெளியைக் கண்டடைய முடியுமா? இணையத்தில் குவிந்து கிடக்கும் ஆங்கிலக் கட்டுரைகளைப் படித்துவிட்டு , அதிலிருந்து அடுத்தவரைப் பயமுறுத்தக் கூடிய கடினமான சொற்களைக் கையாண்டு எமது மண்ணின் படைப்பை விமர்சிப்பது படைப்பாளியைச் சரியாக அளவீடு செய்வதாகக் கொள்ள முடியுமா? இத்தகைய பண்டிதத் தன்மைகளால் விமர்சகன் படைப்பாளியை மிகச் சரியாக மதிப்பீடு செய்கிறானா? அல்லது படைப்பாளியைக் குழப்பி தனது மேதாவிலாசத்தை நிலைநிறுத்துகிறானா?
மிக அண்மையில் (2007.12.16) வார்ப்பு இணையத் தளத்தில் ‘எனது பாத்திரம் இதுவாகி’ என்ற தலைப்பில் கவிஞரது நல்ல கவிதையொன்றைப் படிக்க முடிந்தது.கிழக்குக் கவிதைகளின் சாயலுடன் எழுதப்பட்ட கவிதையாக அது இருந்த பொழுதும் வாசகரைக் கவரக் கூடிய கவிதை . இனி வரும் கவிதைகளும் இந்தக் கவிதையின் போக்கில் எழுதப் படுமானால் ‘திண்ணைக் கவிதைகள்’ தொகுதியை விடவும் சிறப்பான தொகுதியொன்றை வெளிக் கொண்டுவர இயலுமாகும் என நம்புகிறேன்.
இறுதியாக ‘வேதனை என்பது..’எனும் தலைப்பில் எழுதப் பட்ட தேவதேவனின் கவிதையொன்று (எனக்கும் உங்களுக்குமாக ….)
‘சொன்னதைச் செவிமடுக்கத் தவறியவன்
சொன்னவன் முகத்தை உற்றுப் பார்ப்பது போல்
அவன் பார்த்தான் அந்த முருங்கை மரத்தை.
சொன்னது கேளாத செவிடனைத்
திரும்பவும் பார்ப்பது போல் அவனைப் பார்த்தது அது.
பூவிலிருந்து பிறந்த பிஞ்சு வளர்ந்து வளர்ந்து இவ்வேளை
பக்குவமான காயாகி இருந்தது-ஒன்றே ஒன்றுதான்.
முதிர்ந்து முதிர்ந்து அந்த ராஜ்யத்தித்திற்குத்
தகுதியற்ற குடிமக்களாய் ஆனதுNவு பிறிதனைத்தும்.
வேதனை என்பது ஒன்றே ஒன்றின் விழிகளில் எரிவது.’
2007.12.29
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்
- குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி
- மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!
- நிராகரிப்பை போர்த்திக் கொண்டவனின் மரணம்
- தாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் !
- அக்கினிப் பூக்கள் – 10
- வாசனை
- வெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…
- டா(Da) — திரைப்பட விமர்சனம்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்
- பேராசிரியர் சே ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடல்
- ஹென்டர்ஸன் பட்டிமன்றம் – 6 ஜனவரி 2008
- முரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு
- ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி
- உன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1
- 27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்
- பனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு!!!
- அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி
- கனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..
- கீழ்க்கட்டளை தனலஷ்மி!
- எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை
- உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்
- அரிமா விருதுகள் 2006
- அசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது
- டீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”
- அநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை
- எழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்
- லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! நியூட்ரான் விண்மீன் ! துடிப்பு விண்மீன் ! (கட்டுரை: 10)
- தவளை ஆண்டு 2008
- கவிதைகள்
- என் தடத்தில்…
- Last Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்
- ராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14
- முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்
- ‘இயல்’ விருதின் மரணம்
- தரிசு நிலத்தில் பட்டாம்பூச்சி
- தைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை
- மாத்தா ஹரி – அத்தியாயம் -43