ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

ரஸஞானி


தமிழ் இலக்கியச்சூழலில் மிகுந்த கவனத்தைப்பெற்றுவருபவர் ஜெயமோகன். 1980 இற்குப்பின்பே தமிழில் படைப்புகளைத்தரத்தொடங்கியவர். சுமார் 29 ஆண்டுகளுக்குள் தமிழகத்திலும் இலங்கையிலும் இவரது கருத்துக்கள் தொடர்பாக சாதக- பாதக விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
சிறுகதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்துக்கள், திரைக்கதை வசனம்…என தனது தளத்தை விரிவாக்கி எழுதிக்கொண்டிருப்பவர்.
ஏற்கனவே இவரது இலக்கிய விமர்சனக்கருத்துக்களினால் பரபரப்படைந்திருக்கும் ஈழத்து இலக்கியவாதிகளின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக புதிய நூலொன்றை எழுதியிருக்கிறார்.
தேசியஇலக்கியம், மண்வாசனை பிரதேச மொழிவழக்கு இலக்கியம், போர்க்கால இலக்கியம், ஈழத்தவரின் புலம்பெயர் இலக்கியம் என பரிமாணங்களைப்பெற்று நகர்ந்துகொண்டிருக்கும் ஈழ இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்புச்செய்த பலர் இருந்தபோதிலும், ஜெயமோகன் தனது விமர்சன ஆய்வுக்காக அறுவரையே தெரிவுசெய்திருக்கிறார். இந்தத்தெரிவும்கூட அவருக்கு எதிர்வினை விமர்சனங்களைத்தான் அள்ளி வீசும் என்பதைத்தெரிந்துகொண்டே ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.
மிரளவைக்கும் வார்த்தைகளினால் வாசகர்களை பயமுறுத்துபவர் என்றும் ஜெயமோகன் குறித்து கருத்துக்கள் பரவியிருக்கிறது.
எதனையும் மேம்போக்காகச்சொல்லி நுனிப்புல் மேயாமல் அடி ஆழத்துக்கே சென்று, கருத்துக்களை அகழ்ந்தெடுத்து அடுக்குகிறார். இந்தப்பாணியினால்தான் அவர் ஏனைய விமர்சகர்களிடமிருந்து வேறுபடுகிறார்.
தமிழகத்தின் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை நூலில் விமர்சன ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருப்பவர்கள்:-
மு.தளையசிங்கம், பேராசிரியர். கா. சிவத்தம்பி, எஸ்.பொன்னுத்துரை, அ.முத்துலிங்கம், வில்வரத்தினம், சேரன் ஆகியோர்.
இக்கட்டுரைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள யாழ்.நிலத்துப்பாணன்-எஸ்.பொன்னுத்துரை என்னும் கட்டுரையில் சில பகுதிகள் ஏற்கனவே அவுஸ்திரேலியா உதயம் இதழில் பிரசுரமாகயிருக்கிறது.
ஜெயமோகனின் கருத்துக்களுக்கு பதில் சொல்வதற்கு இன்று உயிரோடு இல்லாதவர்கள் மு. தளையசிங்கமும் வில்வரத்தினமும் மாத்திரம்தான். சிவத்தம்பி இலங்கையில்.; சேரனும் முத்துலிங்கமும் கனடாவில். எஸ்.பொன்னுத்துரை சென்னை – சிட்னி என்று பறந்துகொண்டிருப்பவர்.
ஈழத்து இலக்கியம் குறித்து விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு இந்த ஆறு ஈழத்தவர்கள் மாத்திரம்தானா கண்ணில் தென்பட்டார்கள் என்ற மேம்போக்கான விமர்சனங்களும் எழக்கூடும்.
பட்டியல் போடுபவர்களுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்திருக்கிறது.
ஜெயமோகனின் தேர்வுகள் பெரும் விவாதத்துக்கு அடிகோலுகின்றன. என்று பதிவுசெய்யும் எனி இந்தியன் பதிப்பகம் மேலும் சொல்கிறது:-
மார்க்சியர் ஒருவர். மார்க்சியர்களால் தூற்றப்பட்ட இன்னொருவர். கவிதைகளின் நவீனத்துக்கு வெளியே நிற்கும் ஒருவர். தத்துவத்தின் அடிப்படைகளைப் பழைய புத்தகங்களிலிருந்து தொகுக்காமல் தன் சுயசிந்தனையை அடிப்படையாகக்கொண்டு தத்துவத்தைக்கட்டமைக்க முயன்ற ஒருவர். உலக இலக்கியத்தின் சாயலில் தன்னை வலுவாக இருத்திக்கொண்ட ஒருவர். போராட்டங்களின் தழும்பேறிய அனுபவங்களிலிருந்து தன் கவிதை உணர்வைப் பெற்ற ஒருவர்.
இந்த நூல் வெறுமே ஈழத்தின் எழுத்தாளர்களைப்பற்றியது மட்டுமல்ல. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் உண்மையான இலக்கியவாதிகள் எதிர்கொண்ட பிரச்சினையும் அதைக்கடந்து செல்ல அவர்கள் மேற்கொண்ட போராட்டமும் இதில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இந்தப்போராட்டம் இன்றும் தொடரும் போராட்டம்.
பதிப்பகத்தாரின் இந்தக்குறிப்புகள் இந்த நூலின் உள்ளடக்கத்தை நுண்மையாக இனங்காட்டுகின்றன.
புறவயமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மட்டுமே நம்பி இலக்கியம் படைக்கும் போக்கு ஈழத்தில் வலுவாக இருந்ததாக ஜெயமோகன் கருதுகிறார். இக்கருத்தை விவாதித்துக்கொண்டே அவரது பார்வையை நோக்கி நாம் நகரவேண்டியிருக்கிறது.
அவருக்கு படைப்பு சார்ந்த உளத்தூண்டுதல்களை அளித்த பெரும்படைப்பாளிகளாகவும் ஈழத்தில் சிலர் இருந்ததையும் இருப்பதையும் அவர் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்.
மு.தளையசிங்கத்தை புரிந்துகொள்வது கடினம் என்று காரணம்சொல்லி அவரை புறக்கணித்தவர்கள்- மறந்தவர்கள் பலர்.
அவரைப்புரிந்துகொள்வதற்கு படைப்புச்சிந்தனையும் தெளிவும் இருக்கவேண்டும் என்று ஜெயமோகன் வலியுறுத்துகிறார்.
சித்தர் பாடல்கலை சில விமர்சகர்கள் போலி இலக்கியம் என விமர்சித்துக்கொண்டிருந்தபோது மார்க்சீய விமர்சகரான கா.சிவத்தம்பி சித்தர்கள் குறித்தும் கருத்துச்சொல்லியிருப்பதை ஜெயமோகன் சுட்டிக்காட்டுகிறார்.
நவீன தமிழ் இலக்கியத்தில் கலகக்காரன் எனப்பெயரெடுத்த எஸ்.பொன்னுத்துரை, தனிமனித வாதத்தைத் தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக்கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலைநிறுத்த முயன்ற படைப்பாளி என்கிறார் ஜெயமோகன்.
அற்பாயுளில் மறைந்த கவிஞர் வில்வரத்தினத்தின் கவிதைகளின் சிறப்புக்கூறுகளில் ஒன்று அவரது சிறந்த வரிகளில் மரபின் செழுமையான வரிகளின் ஒளியைக்காண்கிறோம் என்பதுதான் என்கிறார்.
புரட்சிக்காரனிடம் காதல் உணர்வு அதிகமாகவே தென்படும் என்று கவிஞர் சேரனைப்பற்றிய பதிவில் பல வரலாற்று ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.
எழுத்திலே புன்னகையை தவழவிட்டவாறே வாசகர்களை தனது எழுத்தூழியத்தை தொடர்பவர் என்று அ. முத்துலிங்கம் பற்றிச் சொல்கிறார். அவர் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், கி. ராஜநாராயணன் ஆகியோரிடமிருந்து எவ்வாறு ஒரு கதைசொல்லி என்ற முறையில் வேறுபடுகிறார் என்பதையும் விளக்கிச்செல்கிறார் ஜெயமோகன்.
பொதுவாக வாசகர்களும் எழுத்தாளர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல் ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்பார்வை இது வாசிப்பு அனுபவத்தில் ஈடுபடுபவர்களுக்கு புதிய சில தரிசனங்களையும் தரலாம். எதனையும் மேம்போக்காக பார்க்காமல் விமர்சனக்கண்கொண்டு பார்க்க முனையும்பொழுது வாசகனும் படைப்பாளியும் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் இந்த நூல் தூண்டுகிறது.
ஈழத்து இலக்கிய உலகத்திற்கும் புலம்பெயர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பவர்களிடமும் இந்நூல் சென்றடையவேண்டும்.

—-0—

Series Navigation

ரஸஞானி

ரஸஞானி