ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

ஜடாயு



சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின் கட்டுரை வடிவம் இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

நவீனத்துவம் என்னும் இலக்கிய வடிவத்தின் கூறுகளை எளிமையாக எடுத்துச்சொல்லி, இவ்வகையான இந்திய இலக்கியம் எப்படி மேற்குலக நவீனத்துவ இலக்கியம் போன்று இல்லாமல் “உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் காணும்” போக்கை அடைந்தது என்று தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார்.

..ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை. ஏன் மனம் ஆனந்தத்தை நாடுகிறது? ஏனெனில் மனித மனம் ஆனந்தத்தால் ஆனது. ஆனந்தமே அதன் சகஜ நிலை. எதனாலும் தீண்டபப்டாதபோது அது ஆனந்தமாகவே இருக்கிறது . தன் இயல்புநிலைக்குச் செல்ல அது எப்போதும் ஏங்கியபடியே உள்ளது

ஆனந்தம் ப்ரஹ்மேதி வ்யஜானாத்.. “ஆனந்தமே பிரம்மத்தின் இயல்பு நிலை என்று அறிவாய். ஆனந்தத்திலிருந்து தான் இந்த உயிர்கள் எல்லாம் உண்டாகின்றன. ஆனந்தத்தில் தான் உண்டாகிய உயிர்கள் வாழ்கின்றன. ஆனந்தத்திலேயே அவை சென்று ஒடுங்குகின்றன” (தைத்திரிய உபநிஷத், யஜுர்வேதம்) என்னும் உபநிஷதக் கவிதையின் எதிரொலியாக உள்ளது மேற்சொன்ன ஜெயமோகன் கருத்து. இந்த இந்திய சிந்தனை இழை தான் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது!

ஆம் மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை ‘காமகுரோதமோகம்’ என்றது. திரைவிலக்கி அதை காட்டுவதுடன் திருப்தியடைகிறது ·ப்ராய்டியம். ஆனால் அதுவும் ஒரு திரை. அதையும் நாம் விலக்க முடியும். அதர்கும் அப்பால் தெரிவது என்ன?

அருமையான ஒப்பீடு. “மனிதன் ஏன் அனிச்சையாகவே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான்?” என்று அர்ஜுனன் கேட்கிறான். “காமம் தான், குரோதம் தான், ரஜோகுணத்தில் உண்டான இவைகள் தான் காரணம். நெருப்பை புகை போலும், கண்ணாடியை அழுக்கு போலும் மறைத்திருப்பவை இவை தான்” என்று கண்ணன் கூறி, இவற்றை அறுத்தெறிய வேண்டும் என்று சொல்கிறான். இந்திய ஆன்மிக தத்துவமும், இந்திய இலக்கியமும் ஒன்றுபடும் புள்ளி இது.

இந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடும் பிரேம்சந்தின் ‘லட்டு’ என்ற கதையை ஹிந்தியிலேயே படித்திருக்கிறேன். மனித மனத்தின் பாசாங்குகளுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளே பொதிந்திருக்கும் அன்பைக் கூறும் இந்தக் கதையை, மனித மனதின் அடித்தளத்தில் தேங்கி நிற்கும் கயமையைக் காட்டும் அவரது கஃபன் (சவசல்லா என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது) என்ற கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். அருமையான கதைகள் இரண்டும்.

. அந்த ஆனந்தமே இலக்கியத்தின் மையம்.
பல்லாயிரமாண்டுகளுக்கு முன் நம் பேரிலக்கியங்கள் அந்த சாரத்தைக் கண்டுகொண்டன. மீண்டும் மீண்டும் நம் இலக்கியங்கள் அந்த சன்னிதிமுன்னர் சென்று தலைவணங்கி நிற்கின்றன. லட்சியவாதமோ நவீனத்துவமோ பின் நவீனத்துவமோ எதுவானாலும்.

“எத்தனையோ மாற்றங்களுக்கு நடுவிலும் இலக்கியம் படைக்கும் இந்திய மனதில் ஒரு மாறாத்தன்மையும், தொடர்ச்சியும் உள்ளது, இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் உள்ளது போன்றே” என்று ஸ்ரீஅரவிந்தர் கூறுவார். (.. “There is a persistence, a continuity of the Indian mind in its literary creation in spite of great changes as consistent as that which we find in painting and sculpture.” – Foundations of Indian culture).

பல்வேறு மொழிகள், பிரதேசங்கள், மக்கள் மற்றும் இலக்கியப் போக்குகளின் ஊடாக வாழும் “இந்திய இலக்கியம்” என்பதற்கு ஒரு மையம், சாரம் உள்ளது. அதை மிக அழகாக உணர்த்தியது இந்தக் கட்டுரை.


http://jataayu.blogspot.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு