ஜெயகாந்தனும் பெரியாரும்

This entry is part [part not set] of 6 in the series 20000417_Issue

மஞ்சுளா நவநீதன்


‘அவருக்கும் (நாராயண குருவிற்கு) சமஸ்கிருதமும் தமிழும் தெரியும். இது முக்கியமானது. இவை இரண்டும் தெரிந்ததால்தான் இந்திய ஞானமரபை அறியவும் விமரிசிக்கவும் முடியும். சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களுக்கு மறுக்கப் பட்ட அனைத்தையும் வென்றெடுக்கும்படி அவர் சொன்னார். ஓர் எல்லை வரை அங்கு அதை செய்தும் காட்டினார்கள். இங்கே ஈ.வெ.ரா படிக்காதே அறிந்து கொள்ளாதே என்றார். பழிப்பு காட்டினாலே போதும் என்றார். நம்முடைய ஜனங்களுக்கு இது எளிதாக இருந்தது. உடனே பின்பற்றி விட்டார்கள். நாராயண குருவின் இயக்கம் ஒரு அறிவியக்கம். அதில் எத்தனை சிந்தனையாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள்.. இங்கே பொருட்படுத்தத் தக்க. ஒரு அறிஞன் ஈ வெ ராவின் கீழே உண்டா ? ஒரு நல்ல எழுத்தாளனோ கவிஞனோ உண்டா ? உள்ளவர்கள் நாலாம் தர பேச்சாளர்கள், ஐந்தாம் தர அரசியல் வாதிகள். ‘

–ஜெய காந்தனின் பேட்டியிலிருந்து.

கடந்த மூன்று வாரங்களாக வெளிவந்த ஜெயகாந்தனின் பேட்டி மிக முக்கியமான ஒன்று. கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதி வரும் ஜெயகாந்தனின் எழுத்து, கலை இலக்கியம் அரசியல் எல்லாத் துறைகளிலும் செறிவான பார்வைகளை முன்வைத்து விவாதத்துக்கு ஆளாகி வந்திருப்பவர். முதன் முதலில் தமிழகத்தின் அறிவுலக வாழ்க்கையைத் தீர விசாரிக்கிற ஒரு நாவலாக ‘பாரிஸ்க்குப் போ ‘வைத் தந்தவர் அவர். சினிமா உலகின் உள்ளேயிருந்தே அதனைக் கண்டு எழுதியவர். அதன் வெளியுலக அவலங்களை, மக்களை அது ஊடுருவி அவர்கள் சுயத்தை இழக்கச் செய்வது பற்றிய ஆழ்ந்த கவலையும், அக்கறையும் கொண்டு ‘சினிமாவுக்குப் போன சித்தாளு ‘ படைத்தவர். அவருடைய மூர்க்கமும் அகங்காரமும் கூட அவருடைய நேர்மையின் மீதும், அறிவாற்றலின் மீதும் இருந்த அளப்பரிய நம்பிக்கையின் விளைவு தான் என்று சொல்ல வேண்டும். எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டவர்கள் சீரிழந்த சினிமாத் துறையில் தஞ்சம் அடைந்த போது, சீரிய சினிமாவைத் தமிழிலும் படைக்க முடியும் என்று எடுத்துக் காட்டியவர். அவருடைய ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ‘, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ‘, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ‘, நாவல்களும் பல சிறுகதைகளும் தமிழுக்குப் பெருமை சேர்க்கிற படைப்புகள்.

எல்லாப் பேட்டிக:ளுமே, பேட்டி காணப் படுபவரைப் பற்றி மட்டுமல்லாமல், பேட்டி காண்பவர்களைப் பற்றியும் நிறையச் சொல்லக் கூடும் என்பதற்கு உதாரணமாய் விளங்குகிறது இந்தப் பேட்டி. பல விஷயங்களில் ஜெயகாந்தனின் கருத்துடன் ஒத்துப் போகிறவர்களாக ஜெய மோகனும், செந்தூரம் ஜெகதீஷ்-ம் இருப்பதாய்த் தோன்றுகிறது.

சமூக நிலைபற்றிய அக்கறையை எழுத்திலும் பேச்சிலும் எப்போதுமே வெளியிட்டு வந்திருக்கிறவர் ஜெய காந்தன். அவர் சார்ந்திந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவைச் சந்தர்ப்பவசத்தால் கட்டித் தழுவிக் கொண்ட போதும் அந்த அரவணப்பின் மீது அருவருப்பை உமிழ்ந்தவர் அவர். திமுகவின் அரசியல், கலை, இலக்கிய நிலைபாடுகள் பற்றிப் பல போது மிகச் சரியாகவே எதிர் நிலையை மேற்கொண்டவர். பெரியாரின் இயக்கத்தை பல வேறு காரணங்களால் சமூக அரசியல் சக்திகள் தழுவிக் கொண்ட போதும், நிலைபாடு மாறாமல் எதிர் நிலையிலேயே இருப்பவர் அவர். அவர் பெரியார் பற்றித் தெரிவித்த கருத்து புதிதென்றோ, மற்ற ‘ஆன்மீக ‘ அறிவு ஜீவிகள் வெளியிடாதது என்றோ சொல்ல முடியாது. ஆனால் ஜெயகாந்தனின் தீர்க்கமான பார்வையில், அறிவார்ந்த காரணங்கள் மட்டுமே சார்ந்த, சுயநலமற்ற கருத்து என்பதால் விசாரிக்கப் பட வேண்டிய ஒன்று. விவாதிக்கப் பட வேண்டிய ஒன்று.

முதலாவது: பெரியாரையும், பெரியாரின் சீடர்களாய்த் தோன்றுகிற இன்றைய திமுக-அதிமுக ஆட்களின் செயல்பாடுகளையும் பிரித்துப் பார்க்க முடியுமா ? முடியும் என்று தோன்றுகிறது. எப்படி காந்தியையும், இன்றைய காங்கிரஸையும் பிரித்துத்தான் பார்க்க வேண்டுமோ அது போல.. அப்படிப் பிரித்துப் பார்த்தால், இன்றைய கோணல்களுக்கு பெரியாரை முழுக்க முழுக்கக் குற்றம் சாற்ற முடியாது. பழைய பெரியாரின் இயக்கத்தில், கலாசாரப் பகுதிகள் கவனம் செலுத்தப் படாததன் இன்றைய விளைவு இது என்று வேண்டுமானால் ஒரு பகுதி சொல்லலாம். பெரியார் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமில்லாதவர் என்பதும், பதவி அரசியலில் ஈடுபடுகிற சந்தர்ப்பங்கள் வந்த போதும் அதனை ஒதுக்கித் தள்ளியவர் என்பதும், திமுக , திக விலிருந்து பிரிந்தவுடன், வெகுகாலமும், அவர்களைக் கண்ணீர்த் துளிகள் என்று அவர் பெரிதும், ஒதுக்கியும் விமர்சித்தும் வந்திருக்கிறார் என்பதும் ஜெயகாந்தன் அறியாததல்ல.

பெரியார். ‘ஆன்மிக ‘ வாதி அல்ல. அப்படி ஆக வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு இல்லை. பெரியார் அடிப்படையில் ஒரு கலகக்காரர் தான். அவருடைய தளம் சமூக விழிப்புணர்ச்சியே தவிர, தத்துவ விசாரம் அல்ல. அதுவும் இந்தியப் பின்னணியில் சாதீயத்தையும், அநீதியையும் பெரிதும் நிலைநிறுத்தவும், நியாயப்படுத்தவும் தான் தத்துவ விசாரங்கள் பயன் பட்டு வந்துள்ளன என்பதைப் பார்க்கும் போது, இது பெரிய குற்றமில்லை. சாராம்சத்தில் இந்த தெரிந்தே இந்த ஒருதலைப் பட்சமான தத்துவத்திலிருந்து விலகிச் செல்கிற , அதை மறுதலிக்கிற ஒரு இயக்கமாகவே அவர் இயங்கியிருக்கிறார்.

பெரியாரின் வழி எளிதான வழி என்றும் நான் நினைக்கவில்லை. மக்களுக்கு இருந்த மிக முக்கியமான ஆறுதலான ‘கடவுள் நம்பிக்கை ‘யைப் பிடுங்கிக் கொண்டு விட்டதன் மூலம் அவர்களை அனாதரவான நிலையில் நிறுத்துகிறோம் என்று அவருக்கும் தெரிந்து தான் இருந்தது. ஆனால் அதைப் பூசி மெழுக அவர் தாயாரில்லை. ஆனால், கிட்டத்தட்ட எல்லா மேடைகளிலும் அவர் பேசியிருக்கிறார். குன்றக்குடி அடிகளார் போன்றவர்களுக்கும் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஜெயகாந்தனையும் அழைத்துப் பேசச் சொல்லியிருக்கிறார். முதன் முதலாக சரியான ஜனநாயக வாதியாக செயல் பட்டிருக்கிறார்.

சமஸ்கிருதத்தை மூர்க்கமாய் நிராகரித்தது நிச்சயம் ஒரு சிறப்பான செயல் அல்ல தான். ஆனால் பின்னோக்கில் வேறு வழி ஏதும் இருக்கக்கூடும் என்றும் தோன்றவில்லை. சமஸ்கிருதம் துரதிர்ஷ்டவசமாக பல வேண்டாத சுமைகளுடன் பேணப்பட்டதும், கற்பிக்கப் பட்டதும் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணமாகலாம். ‘தேவ பாஷை ‘ ‘நீச பாஷை ‘ என்று தமிழ் அன்பர்களுக்கு எரிச்சல் ஊட்டிய செயல் ஒரு புறமும், தமிழில் பாட்டுப் பாடக் கூட இயக்கம் நடத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ள ஒரு சூழ்நிலையில், வேற்று மொழிகளின் மீது எப்படி அன்பை வளர்க்க முடியும் ?

இந்திய ஞான மரபையும் அறிவு மரபையும் பேணி வளர்த்த ஆசாரியர்களும், அறிவார்ந்த பெரியவர்களும் சாதீயத்தை ஒரு புறம் பேணிப் பாதுகாத்துக் கொண்டே இன்னொரு புறம் அத்வைதம் , ஜீவாத்மா-பரமாத்மா என்று சமூகப் பார்வையற்ற விதமாய் வளர்ந்தது தான் பெரியார் போன்றோரின் இயக்கத்துக்குக் காரணம். தன் முன் நின்ற சண்டாளனை ஒதுங்கிச் செல்லுமாறு பணித்த அத்வைதி சங்கரர் சண்டாளனை தெய்வமாக ஆக்கித் தான் அவனுடைய அறிவை ஏற்றுக்கொண்டார்.

பாரதியார் மனைவியை மொட்டையடித்தவர்கள் நாம். கல்வியைப் பெண்களுக்கும் , கீழ் சாதியினருக்கும் கொண்டு சென்ற ‘குற்றத்திற்காக ‘ ஜோதிபா புலே போன்றவர்களை சமூகப் பிரஷ்டம் செய்தவர்கள் நாம். நம்முடைய நளினமான அறிவியக்கங்களும், ஞானவான்களும் இந்திய சமூகத்தின் அடிப்படையான அநீதிகளைக் குறித்து எந்தச் செயல்களும் புரிந்தவர்கள் இல்லை என்கிற புரிதல் ஏற்படும் போது தான் இந்தப் பொக்கை அறிவுப் பாரம்பரியத்திற்கு எந்த மரியாதையையும் பெரியார் ஏன் தர வில்லை என்பது விளங்கும்.

பார்ப்பன எதிர்ப்பு இன்னொரு உறுத்தலாய் பெரியார் இயக்கத்தில் தோன்றலாம். ஆனால் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பால் பயன் பெற்றவர்கள் பெரிதும் பார்ப்பனர்களே. தம்மை நேரிடையாய், விமர்சனம் செய்துகொண்டு தம் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்ய அவர்களுக்குக் கிடைத்த ஒரு கண்ணாடி பெரியார். இது பற்றி சந்தேகம் இருப்பவர்கள், ஐம்பது ஆண்டுகள் முன்பிருந்த பிராமண சமூகத்தையும், இன்றைய பிராமண சமூகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பார்ப்பன எதிர்ப்பு, மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களையும், தாழ்த்தப் பட்ட மக்களையும் சுயமதிப்புப் பெற வைக்க பெரியார் பயன் படுத்திய தந்திரோபாயம் என்று சொல்ல வேண்டும். பெரியாரின் இயக்கத்தினால், பார்ப்பனர் மீது வன்முறையோ வேறேதுமோ வீசப் பட்டதில்லை. ஒரு விவாத அரங்காகவே அவரின் இயக்கம் செயல் பட்டு வந்திருக்கிறது என்பதையும் கருத வேண்டும்.

பெரியாரின் குணாதிசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும். அவருக்குத் திருமணமான புதிது. கோவில் போகப் பிரியப்படாதவர் அவர். ஆனால் மனைவியோ பக்தை. நாகம்மையும் கோவில் செல்லவிடாமல் பண்ணவேண்டும் என்கிற ஆசையில், பெரியார் தன் நண்பர்களை ஏவி, ‘யாரோ புதிய தாசி வந்திருக்கிறாள் ‘ என்று நாகம்மையாரைக்கிண்டல் செய்யச் சொன்னார். அதை நம்பி நண்பர்கள் நாகம்மையாரைக் கிண்டல் பண்ணச் செல்ல, பயந்து நடுங்கிய நாகம்மை அதன் பின் கோவில் செல்லவில்லை.

இந்த நிகழ்ச்சி சற்று ரசக்குறைவானது என்று கூடத் தோன்றலாம். யாராவது தன் மனைவியைக் கிண்டல் பண்ண தன் நண்பர்களை ஏவக்கூடுமோ என்று தோன்றலாம். இது தான் பெரியார். மனம் புண்படும் என்கிற காரணம் காட்டி தான் சரியென்று நம்புவதை வலியுறுத்தாமல் விட மாட்டாதவர் அவர். அந்தத் தொடர்ந்த செயல் பாடு நிச்சயம் தமிழ் நாட்டில் பலனளித்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்