ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

சித்ரா சிவகுமார்


12. மோஷி மோஷி

ஜப்பானியர்கள் தொலைபேசியை எடுத்ததுமே முதன் முதலில் கூறும் கூற்று இது. ஆங்கிலேயர்களின் ஹாலோவை பல நாட்டினர் பயன் படுத்தினாலும் ஜப்பானியர்கள் மட்டும் மோஷி மோஷி என்று சொல்லியே பேச்சைத் துவக்குவார்கள்.

ஜப்பான் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம் பெற முதன்மையான காரணம், ஜப்பானில் ஒளி வேகத்தில் முன்னேற்றம் காட்டிய அதன் உற்பத்தித் தொழிற்சாலைகள் தான். வாகனங்கள் மின் பொருட்கள் கணிப்பொறி பொருட்கள் என்று ஏராளமாக உற்பத்திச் செற்து தள்ளுகின்றன தொழிற்சாலைகள். ஜப்பானிய கண்டுபிடிப்புகள் ஒரு புறம் இருக்க, அவர்கள் இதர நாட்டினர் கண்டுபிடித்தப் பொருட்களை நவீனப்படுத்தும், தரத்தை உயர்த்தும் நுணுக்கத்தை நன்றாகவே அறிந்தவர்கள் என்றே சொல்லவாம்.

அதனால் தான் வாகன நிறுவனங்களான டொயோடா, ஹோண்டா, சுசுகி, மஸ்தா, நிசான் ஆகியவை உலகத் தரம் வாய்ந்த வாகனங்களை செய்து குவிக்கின்றன.

ஹோண்டா ஏற்றுமதிகாக நிற்கும் வாகனங்கள்

மின் பொருட்கள் பட்டியலில் என்னவெல்லாம் இடம் பெறுமோ அதையெல்லாம் ஒன்று விடாமல் தரம் வாய்ந்த பொருட்களாகத் தருகிறது ஜப்பான். உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒலி ஒளிக் கருவிகள், தொலைபேசிக் கருவிகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் இன்று ஜப்பானிய நிறுவனங்களின் பெயர்கள் இல்லாமல் ஒரு கடையையும் காணவே முடியாது. பேனாசானிக், கேனான், சோனி, ஹிடாசி, தோஷிபா, மஸ்டா போன்ற நிறுவனங்கள் தினமொரு புதுமையைக் புகுத்தி பொருட்களை உற்பத்திச் செய்து வருவதை நாம் கண்கூடாகக் காணலாம்.

தங்கம், வெள்ளி, நிலக்கரி ஆகிய இயற்கை வளங்களைக் கொண்ட நாடு ஜப்பான். எவ்வளவு பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் அந்த தொழிற்சாலைக்குத் தேவையான மூலப் பொருட்கள் ஜப்பானில் அவ்வளவாக இல்லை. பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்படும் பொருட்களே. தொழிற்சாலையில் அனைத்துப் பொருட்களுமே ரோபோ எனப்படும் இயந்திரக் கைகளாலேயே செய்யப்பட்டு விடுகின்றன. உழைப்பும் நவீனமும் தரமும் தான் அவர்களால் இத்தனை உயரத்திற்கு வர முடிந்தது.

ரோபோ கைகளைக் கொண்டு மட்டுமே கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கே காணலாம்.

இதனாலேயே ஜப்பானில் தயாரிக்கும் பொருட்களின் விலை அதிகம். உலகச் சந்தைக்கு இணையாக விலை தர ஜப்பானியர்கள் தங்கள் தொழிற்சாலைகளை, வளர்ந்து வரும் நாடுகளில் அமைத்து, பொருட்களைத் தயாரிக்கின்றனர். சீனா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா என்று பல நாடுகளில் ஜப்பானியத்; தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மற்ற நாடுகளில் செய்யப்படும் இத்தகைய பொருட்கள் சற்றே விலை மலிவாக இருக்கின்றன. ஆனால் தரத்தை மட்டும் ஜப்பானியத் தரத்தோடு தருவதால் உலகமெங்கும் ஜப்பானியப் பொருட்கள் பலராலும் வாங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய நிறுவனங்கள் மக்களையும் வர்த்தகர்களையும் கவரும் வகையில் தங்கள் தொழிலகங்களில் மிகவும் அதி நவீமான கண்காட்சியகங்களை அமைத்து உள்ளன. இதைச் சென்று காண்பதும் நிச்சயம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தரவல்லது.

இதைத் தவிரவும் ஜப்பானில் விவசாயம், வனம், மீன் பிடித் தொழில்களும் மிக முக்கிய அங்கம் வகிக்கும் தொழில்கள். ஜப்பானியர்கள் விவசாயத்திலும் அதிக கவனம் செலுத்தவே செய்கின்றனர். விவசாயம் செய்யும் நிலம் 15 சதவீதம் மட்டுமே இருந்த போதும் நவீனக் கருவிகளின் உதவியுடன் பயிர் செய்யும் முறையிலும் சாதனை செய்பவர்கள் ஜப்பானியர்கள். தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் அவர்கள் சமர்த்தர்கள். கோதுமை சோயா போன்ற இதர உணவுப் பொருட்களை அவர்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்.

இனாகடாதே நெல் திருவிழா

நெற்பயிர் விளையும் காலங்களில், நெல் திருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றனர். வயல் வெளிகளில் அழகிய உருவங்களைத் தீட்டி மகிழ்வர்.
இனாகடாதே எனும் இடத்தில் ஒவ்வொரு வருடமும் நெல் திருவிழா கொண்டாடப்படுகிறது. தங்களது வயல்களை வித விதமாக அமைத்துக் காட்டுகின்றனர்.

சீனாவிற்கு அடுத்து மீன் பிடித் தொழிலில் உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது ஜப்பான்.

இவையல்லாமல் அனைத்துத் துறைகளிலும் ஜப்பானியர்கள் சிறப்பாகச் செயல்பட்டு உலக நாடுகளின் கவனத்தைத் தன் பக்கமே தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.


chitra@netvigator.com

Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்