‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

சித்ரா ரமேஷ்


தொலைக்காட்சித் தொடர்களில் கதை எழுதி பிரபலமடைய வேண்டும் என்று துடிக்கும் கதாசிரியர்களுக்கு சுலபமாக ‘தொடர்கதை’ எழுதும் திறன் வளமடையவும், மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவும் தன்னம்பிக்கையூட்டும் ஒரு கட்டுரை இது. முதலில் கதையை ஆரம்பிப்பது எப்படி என்று ஒரு குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும். ஒரு சிறுகதையை (அது அவர்களே எழுதியிருந்தால் இன்னும் உத்தமம்) கொஞ்சம் கொஞ்சமாக நீ….ட்டிக் கொண்டேப் போனால் அது மிகச் சிறந்த தொலைக்காட்சித் தொடராகி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
வேலையில்லாமல் திண்டாடும் ஒரு இளைஞன் அல்லது இளைஞி வேலைக்காகப் போராடுவதாக கதைத் தொடங்கும். வீட்டில் ஐந்து இல்லை ஆறு தம்பி, தங்கைகள், தங்கைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கதையில் கதாநாயகனுக்கு முக்கியத்துவமா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டுமா என்ற குழப்பமே வேண்டாம். நம் கண்மணிகளான பெண்கள்தான் எப்பாதுமே கதையின் நாயகி. முதல் நேர்முகத் தேர்வில் தன்னைப் பார்த்து ஜொள்ளு விடும் பெரிய ஆபிஸரின் முகத்தில் காறித் துப்புவது, செருப்பை எடுத்துக் காட்டுவது போன்ற தீரச்செயல்கள் செய்யும் வீரப் பெண் பின்னாளில் தனக்கு எதிராக மாமியார் வீட்டில் நடைப்பெறும் எந்த அநீதியையும் தட்டிக் கேட்க மாட்டாள். தன்னை விரல் நுனியால் கூடத் தீண்டாதக் கணவனை அல்லது ஒரு குழந்தையோடு தவிக்க விட்டு இன்னொருத்தியோடு குடும்பம் நடத்தும் கயவனைக் கடைசிக் காட்சியில் தன் தாலியை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு தன்னுடன் அழைத்துச் சென்று விடுவாள். அந்த அப்பாவி ஆபிஸர் சற்று இளைஞனாக இருந்தால் அவனையே கதையின் முக்கிய வில்லனாக மாற்றி விடலாம். நம் கதாநாயகியை எப்பாடு பட்டேனும் அவளுக்குத் திருமணம் ஆகி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவ்வைப் பாட்டி ஆகியிருந்தாலும் அவளை அடையத் துடித்துக் கொண்டேயிருப்பான். நல்ல வசமாக வாய்ப்புக் கிடைத்தாலும் ‘ நான் அடைய நினைத்தது அவள் மனசைத்தான்’ என்று நல்ல விதமாக வசனம் பேசி கதாநாயகியின் கற்பைக் காப்பாற்றிவிட வேண்டும். உதவாக்கரைப் புருஷனுக்காக பூஜை செய்து, தீ மிதித்து, மண் சோறு சாப்பிட்டு காப்பாற்றும் மெய் சிலிர்க்கும் காட்சிகள் அவ்வப்போது தலைக் காட்ட வேண்டும். காலையில் எழுந்து குளித்து பூஜை முடித்து காபி பலகாரம் செய்து எல்லோருக்கும் பரிமாறி மதியச்சமையலையும் முடித்து விட்டு மாமனார், மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று வேலைக்கும் போய் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றும் அருமையானப் பெண்ணை அவள் மாமியார் ஏன் வெறுக்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடையேத் தெரிய வேண்டாம். அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை, அதற்குக் காரணம் உண்மையிலேயே அவள் புருஷனாக இருந்தாலும் நம் பத்தினித் தெய்வம் அதை வெளியில் சொல்லாமல் பழியைத் தன் மேல் போட்டுக் கொண்டு மாமியாரின் இடிப் பேச்சுகளைத் தாங்கி கொள்வாள். திடீரென்று அவர்கள் குடும்ப ஜோஸ்யர் அவர்கள் வீட்டுக்கு வந்து தத்து பித்தென்று ஏதாவது உளறி விட்டுப் போய்விடுவார். மொத்தக் குடும்பமும் கதி கலங்கி நிற்கும் போது வெள்ளிக்கிழமை தொடரும் போட்டு விடலாம். அதற்குப் பரிகாரம் என்ற பெயரில் தொடரும் மூட நம்பிக்கைகள்! அவ வெள்ளிக்கிழமை கருப்புப் புடவை கட்டும் போதே நினைச்சேன் நம்ம குடும்பத்துக்கு ஏதாவது நடக்கும்னு என்று வசனம் பேசும் மூத்த நாத்தானார், அவளது கணவன் குழந்தை குட்டி மாமியார் சகிதம் கும்பலாக அம்மா வீட்டிலேயே தங்கி விட வேண்டும். கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விடும் சின்ன நாத்தானாருக்காக அந்தப் பழியையும் தன் மீது போட்டுக் கொள்ளும் தியாகச்செம்மல் அண்ணி, ‘புருஷன் ஊர்ல இல்லாதப்போ கர்ப்பம் எப்படி’ போன்ற அறிவுபூர்வக் கேள்விகள் கேட்பதற்கே திரையில் தோன்றும் அத்தை, பாட்டி!இப்படி எக்கச்சக்க உபரிக் கதாப்பாத்திரங்களைச் சேர்த்துக் கொண்டே போகலாம். பெரிய ராஜராஜசோழன், முகலாயர்கள், குப்தர்கள் வம்சம் போல் நீ இந்தப் குடும்பத்துக்கு ஒரு குத்து விளக்கு, இந்தா இங்க வர மருமகளுக்கு நாங்க தரும் குடும்பச்சொத்து என்று ஒரு குட்டி அட்டிகையை கழுத்தில் போட்டு விடும் மாமியார்,இந்தக் வம்சத்துக்கு ஒரு வாரிசைப் உன் வயித்துல சுமக்கிறே என்று சொல்லும் மாமனார், நம்ம குடும்பத்துல இதெல்லாம் நடக்காது என்று சவால் விடும் ஒன்று விட்டச் சித்தப்பா என்று அவ்வப்போது குடும்பச்சூழலைச் சித்தரிக்கும் காட்சிகள்!

இங்கே கதாநாயகி வீட்டில் நடக்கும் கூத்துகளின் பட்டியல்! கதாநாயகிக்கு அப்பா அல்லது அம்மா மட்டுமே உயிரோடு இருக்க வேண்டும். இருவரும் உயிரோடு இருந்தாலும் சேர்ந்து வாழக் கூடாது. சேர்ந்து வாழ்ந்தாலும் சிறப்பாக வாழக் கூடாது. அப்பா காலணா காசுக்குப் பிரயோஜனம் இல்லாமல் காலட்சேபம் செய்து கொண்டு ஆறு குழந்தைகளை மட்டும் தவறாமல் பெற்றுக் கொண்டு விடவேண்டும். நம் கதாநாயகிக்கு இருபது அல்லது இருபத்தியைந்துக்குள் தான் வயதிருக்கும். இருபது இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றித் தெரியாத காலமா என்ன என்றெல்லாம் யாரும் யோசிக்கக் கூடாது. கடைசி தம்பிக்கு பத்து பன்னிரண்டு வயதுதான் இருக்கும். இதில் அப்பாவுக்கு இரண்டாவது மனைவி வேறு இருந்து அந்த மனைவி மூலமும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு தம்பி என்று கூடப் பிறந்தவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போகவேண்டும். வேலை வெட்டி இல்லாத அப்பாவை நம்பி ஒன்றுக்கு இரண்டாகப் மனைவிகள் ஏன் என்று யாரும் கேட்கக் கூடாது. தங்கைகளின் கணவன்மார்கள் குடிகாரன், துர்க்குணம் கொண்டவன், சந்தேகப்படுபவன், அசடு என்று விதவித குணநலன்களோடு காட்ட வேண்டும். நல்லவனாக யாரும் இருந்து விடாமல் இருக்க இருக்க இன்னும் அதிகப்படியான வாரங்களை ஓட்டலாம். அப்படியேத் தப்பித் தவறி தங்கையின் புருஷன் நல்லவனாக இருந்து தொலைத்து விட்டால் தங்கையை வில்லியாக மாற்றி விடலாம். வரதட்சிணைக் கேட்டு துன்புறுத்தும் மாமியார், போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வீட்டிலேயே திருடும் தம்பி, கடனில் மூழ்கி கொட்டுகிற மழையில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவது போன்ற மனதை உருக்கும் காட்சிகள்,நகைச்சுவைக்காக ‘அக்கா வயிறு ஏன் பெருசா ஆச்சுன்னு எனக்குத் தெரியும்’ என்று ரெண்டுங்கெட்டான் தம்பியோ தங்கையோ மழலையில் பிதற்ற ‘ஏன்’ என்று அதிர்ச்சியோடு எல்லோரும் கேட்க ‘நேத்திக்கு சக்கரையைத் நிறையத் தின்னுட்டாங்க அதனால் தானே அத்தான்’ என்று சொன்னதும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். கதாநாயகி மட்டும் வெட்கப்பட்டுக் கொண்டு உள்ளே ஓட வேண்டும். இந்த நிகழ்ச்சி பிறகு இவர்கள் குடும்பம் எப்படியெல்லாம் மகிழ்ச்சியோடு இருந்தது என்று ‘·பிளாஷ் பேக்கில்’ காட்ட உதவும்.

கதாநாயகி கஷ்டப்பட்டு முதல் வில்லனை திருத்தி அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது அடுத்த வில்லனை கொண்டு வர வேண்டும். இதற்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். வீட்டிலேயே இருக்கும் மச்சினன், மாப்பிள்ளை, அத்தை, ஓரகத்தி இருக்கவே இருக்கிறார்களே மாமியார்கள், நாத்தனார்கள், சொந்த புருஷன் இப்படி யாரை வேண்டுமானாலும் வில்லன் வில்லி ஆக்கி விடலாம். கொஞ்சம் இளவயதுப் பெண்ணாக இருந்தால் வில்லிகளுக்கென்று ஆடை அணிகலன்களில் சில விதிமுறைகள் உண்டு. அதற்கேற்ப பிரமாதமாக காட்டிவிடலாம். பகல், இரவு, விடியற்காலை எந்நேரமாக இருந்தாலும் பளபளவென்று சேலை, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நகைகள், நெத்திச்சுட்டி, கல் வைத்த குஞ்சலம், ஒட்டியாணம், மாட்டல், அட்டிகை, கொண்டையிலிருந்து தொங்கும் நவமணிமாலைகள், வங்கி, காசுமாலை என்று நம் பெண்கள் நகைப் பட்டியலில் காணாமல் போன அத்தனை நகைகளையும் அணிந்து கொண்டுதான் நம் வில்லி காரில் நகர் வலம் வருவாள். அவ்வப்போது ஒரு அசட்டுக் கும்பலைச் சேர்த்துக் கொண்டு ஏதேதோ பயங்கரத் திட்டம் தீட்டுவாள். கதாநாயகி ஓட்டும் சைக்கிள் டயரை பங்க்சர் பண்ணுவதிலிருந்து, அவள் நடக்கும் பாதையில் எண்ணெய் கொட்டுவது வரை என்னென்ன வில்லத்தனங்கள் உண்டோ அத்தனையும் செய்வாள். ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் ‘தற்செயலாக’ கதாநாயகியும் தப்பித்துக் கொண்டே வரவேண்டும். கடைசியில் அல்பமாக கதாநாயகி தலைவாரிக் கொள்ளும் சீப்பை நம் சர்வலங்கார பூஷிதை ஒளித்து வைக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டு விடுவாள். ஆனால் நம் கதாநாயகி வழக்கம்போல் பெருந்தன்மையாக மன்னித்து விட்டுவிடுவாள். இத்தனை வில்லத்தனம் செய்வதற்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் காட்டலாம். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய பிரபல காரணம் ‘கதாநாயகனைக்’ காதலித்த முறைப்பெண்! மற்றபடி கதாநாயகியின் பள்ளி பருவத்துத் தோழி. சின்ன வயதில் சாக்கலேட் தராமல் எமாற்றியதற்காகப் பழி வாங்குகிறள், தடுக்கி விட்டதற்காகப் பழிவாங்குகிறாள் என்று என்ன காரணம் வேண்டுமானாலும் காட்டலாம்.அசட்டு முகத்தோடு பம்பளிமாஸ் கணக்காக வரும் கதாநாயகனுக்கு கிளி போல் பெண்டாட்டி, மயில் போல ஒரு காதலி, குரங்கு போல் ஒரு வைப்பாட்டி என்று அசாத்திய வாழ்வுதான்!

வில்லி அல்லது வில்லன் பக்கம் எல்லோரும் சேர்ந்து கொண்டு கதாநாயகியின் மேல் பழி போட வேண்டும். பின்னணியில் இடி சத்தம், மின்னல் கீற்று எல்லாம் காட்டப்பட வேண்டும். கொட்டுகிற மழையில் நிறைமாதக் கர்ப்பிணியான கதாநாயகியை வீட்டை விட்டு துரத்தும் காட்சி அப்போதுதான் யதார்த்தமாக அமையும். அம்மா அம்மா என்று இடுப்பைப் பிடித்துக் கதறிக் கொண்டு நடுத்தெருவில் விழும்போது அவளை இரண்டு கரங்கள் தாங்கிப் பிடிக்க வேண்டும். இப்போது மீண்டும் வெள்ளிக்கிழமை யுத்தி. ரிட்டயர் ஆகிப் பல்லுப்போன சென்ற தலைமுறை பிரபல நடிகர் அல்லது பிரபல நடிகை காதாநாயகியை காப்பாற்றும்
டாக்டர், ஆனாதை ஆசிரமத்துத் தலைவராகக் காட்டப்படும்போது இப்படிப்பட்ட மர்மங்கள் வேண்டாமா? நடுவில் நகைச்சுவைக்காக எப்போதும் வாழைப்பழம் வாங்கிவரும் மாமா, குடித்து விட்டு உளறிக் கொட்டும் பக்கத்து குடித்தனக்காரர், கிழமே என்று வயதான புருஷனைக் கூப்பிடும் வீட்டுக்கார அம்மா, பெருசு என்று தாத்தாவைச் செல்லமாகக் கூப்பிடும் கடைசித் தங்கை! நம் தொடரைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழும் தாய்க்குலங்களுக்கு அவ்வப்போது
சின்னப் போட்டிகள் வைத்து ஓடாத கடிகாரம், ஓட்டைஎவர்சில்வர் குடம், பியூஸாப்போனப் பல்புகள் போன்ற வீட்டுப் பொருட்கள் வியாபாரம் செய்யும் திருநெல்வேலிக்கார கடை முதலாளிகளைப் பிடித்து பரிசுப்பொருட்களை தரச்சொல்லி விளம்பரப்படுத்தலாம்.
கேள்விகள் மிக எளிதாகவும் யார் வேண்டுமானாலும் பதில் போடும்படியாகவும் அமைய வேண்டும். மல்லிகாவின் கணவர் யார்? இது சற்று எளிதானக் கேள்வியாகத் தோன்றினாலும்
இதற்குள் மூன்று கேள்விகள் உள்ளன. மல்லிகா என்ற கதாப்பாத்திரத்தின் கணவர்ப் பெயர் என்ன? இல்லை மல்லிகா என்ற கதாப்பாத்திரத்தில் கணவராக நடிப்பவரின் பெயர் என்ன? இல்லை மல்லிகாவாக நடிக்கும் நடிகையின் கணவர் பெயர் என்ன? என்ற மூன்று கேள்விகள்.
கடைசியில் அல்பமாக ‘செல்வகுமார்’ என்ற சரியான விடையை எழுதிய அதிர்ஷ்டசாலிகள்
தண்டையார் பேட்டை பானு, கீரனூர் விஜயலட்சுமி, நியூயார்க் வாசு என்ற மூவர். பரிசுகள் விரைவில் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து விடலாம். யாராவது
போய் தண்டையார் பேட்டை பானுவிடமோ,கீரனூர் விஜயலட்சுமியிடமோ நியூயார்க் வாசுவிடமோ பரிசு வந்து சேர்ந்ததா என்று கேட்கப் போகிறார்களா என்ன?

அவ்வப்போது சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் காட்சிகள் அமைந்திருந்தாலும் தமிழ்ப்பண்பாடு, இந்தியப்பண்பாடு, உலகப்பொதுப் பண்பாடு எதையும் பொருட்படுத்தாமல்
கள்ளக்காதலி, நண்பன் மனைவி, அண்ணி, மைத்துனி, உடன் வேலை பார்க்கும் தோழி என்று எல்லாப்பெண்களையும் காமப்பார்வையால் படுக்கயறை வரை கொண்டுபோகும் வக்கிரங்கள்,
வீட்டுக்கு விருந்தாளியாக வருபவரை சகட்டுக்கு அவமானப்படுத்தியனுப்பும் கேவலக் காட்சிகள்,
காரணமேயில்லாமல் ஒருவரைக் கொடுமைப்படுத்துவது, கொச்சைப்படுத்திச் சிரிப்பது போன்ற
நிகழ்ச்சிகள் தவறாமல் நடைபெற வேண்டும். இவை திரும்பத் திரும்ப நினைவலைகளில் வந்து மீண்டும் அதே வழியில் பழி வாங்குவது போன்ற மனதைக் குளிர வைக்கும் காட்சிகள் அமைத்து ரசிகர்களுக்குத் தாங்களே பழிவாங்கிவிட்டதைப் போன்ற ஒரு திருப்தியைத் தரவேண்டும்.

இறுதியாக தலைப்பு என்ன வைக்கலாம் என்று மண்டைக் காய வேண்டாம். வளைகாப்பு, வலங்கைமான், வேங்கைப்புலி, வேண்டுதல், வானம்பாடி என்று எதை வேண்டுமானாலும் வைக்கலாம். வளைகாப்பு என்று பெயர் வைப்பதானால் எப்பாடு பட்டேனும் ஒரு வளைகாப்புக் காட்சிக் காட்டிவிடலாம். வலங்கைமான் என்றால் கதாநாயகன் கடைசியில் கதாநாயகியைப் பார்க்க வலங்கைமானுக்குப் போவதாக ஒரு காட்சி! வேண்டுதல் என்றால் கேட்கவே வேண்டாம்! பழனி, திருப்பதி போன்ற திருத்தலங்களுக்கு இருவரும் ஜோடியாகப் போவதாக ஒரு வேண்டுதல் என்று எப்போதாவது ஒரு முறை வசனம் வந்தால் போதும். மற்றபடி வேங்கைப்புலி, வானம்பாடி என்றால் நான் மானத்தில் வேங்கைபுலி மாதிரி, வானம்பாடி மாதிரி உங்களுக்காகக் காத்திருப்பேன் என்று வசனத்தால் ஒப்பேற்றி விடலாம்.
டைட்டிலில் நான் வானம்பாடி! நானே வானம்பாடி என்று பிரபலக் கவிஞரை பாட்டு எழுத வைத்து, ஒரு பிரபல கர்நாடக இசைப்புயலை உச்சஸ்தாயியில் பாட விட்டு, நொடிக்கொருப் புடவையும் நகையுமாக நம் கதாநாயகியை காடு, மலை, மேடு, வயல்வெளி, அருவி என்று எல்லா இடங்களிலும் ஓடவிட்டு இடை இடையே கதையில் வரும் யாராவது இருவர் சிரிப்பது, ஒருவர் ஒன்னொருவரை பளாரென்று அறைவது, சம்பந்தமே இல்லாத ஒருவர் கதாநாயகிக்கு தாலி கட்டுவது, யாராவது பயந்து அலறி ஓடுவது, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது, பூஜை செய்வது, முகத்தில் கட்டுப்போட்டு தலையில் ஒரு ரூபாய் காசு வைத்தப் பிணம், அதற்குக் கொள்ளி வைப்பது, கார் வேகமாக ஓடுவது, ஆஸ்பத்திரியில் படுத்திருப்பது போன்றக் கதைக்காட்சிகளையும் காட்டி ஐந்து நிமிடம் ஓட்டிவிடலாம். அப்புறம் காட்டியக் காட்சிகள் எதையாவது சேர்க்க முடியவில்லையென்றால் இன்னும் மெகாசீரியல் எடுக்கும் கலை கைவரப்பெறவில்லை என்று யாரும் சிரிக்கப்போவதில்லை.
முதலில் அல்பமாக நம்மூர் சோப்புத்தூள் கம்பனிகள், பல்பொடிகள், லேகியங்கள், சீயக்காய்த் தூள் போன்ற விளம்பரங்கள் கிடைத்தாலும் ரேட்டிங் அதிகமாக அதிகமாக சர்வதேச அளவில் விளம்பரங்கள் கிடைத்து விடும். இந்தப் புகழை வைத்துக் கொண்டே இன்னும் மூன்று மெகா சீரியல் ஓட்டிவிடலாம். முதல் தொடரின் பெயரைச் சேர்த்துதான் அடுத்தத் தொடரைத் தொடங்கவேண்டும். வளைகாப்பின் விடுதலை, வானம்பாடியின் சூர்யகாந்தி, ஜிம்மி டைம்ஸ்ஸின் வலங்கைமானின் கரண்டி என்றெல்லாம் பெயர் வந்தாலும் அசரக்கூடாது. இப்படியே கிட்டத்தட்ட ஒரு மாமாங்கத்திற்கு பணம் சம்பாதித்து விட்டு நடுவில் ஒரு திரைப்படம் எடுத்து நடுத்தெருவிற்கு வந்து தற்கொலை முயற்சியில் இறங்கிப் பேரும் புகழும் பெற வாழ்த்துக்கள்!

சித்ரா ரமேஷ்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்