சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்!
‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் அணுகுண்டின் பிதா! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு ஓர் புதிய மரண யந்திரம்! வெடிக் கோளம்! விஷக் கோளம்! கதிர்க் கோளம்! கனல் கோளம்! ஒளிக் கோளம்! அழிவுக் கோளம்! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்ற முடிவான மரணக் கோலம்!’
Fig. 1
First Atomic on Hiroshima
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா மூர்க்க சக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! ‘எநோலா கே ‘ [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு ‘லிட்டில் பாய் ‘ [Little Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில் திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத் தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும் புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!
‘Little Boy ‘ யுரேனியக் குண்டு
Fig. 2
The Ghost City Hiroshima
ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காய முற்றனர். இதில் 43,500 பேர் படு காயப் பட்டனர். குண்டு வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக் கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால் செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக் கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின! எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள், தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரை மட்டமாயின! 13,000 அடித் தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200 பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654 பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44 முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.
‘Fat Man ‘ புளுட்டோனியக் குண்டு
Fig. 3
Nagasaki Atomic Bomb Loaded
‘ஃபாட் மான் ‘ [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது!
வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம் தாக்கப்பட்டு, ‘கதிர்எமன் ‘ கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!
மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது!
குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம் விரியும் என்றும், ‘முகில் காளான் ‘ [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு உஷ்ணம் 15,000 ஊF ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 ஊF ஆகித் தீயில் எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து, கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!
Fig. 4
Damaging Effects of Atomic Bombs
மானிட நரகம் ஹிரோஷிமா
பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள், வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது! மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக் கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும், மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!
விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின! ஒரு குமரிப் பெண் கூறினாள், ‘ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும் எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்! ‘ ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள் முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன! இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறைபோல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!
Fig. 5
Radiation Deaths in Hiroshima & Nagasaki
மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன! அனலில் கரிந்த மாது ஒருத்தி, எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்!
ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில், கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது! அணு ஆயுதம் ஹிரோஷி மாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே இடம் போதாது!
Fig. 6
Sources of Radiation Exposure
வெடியின் விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!
Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: ‘பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க, காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம் கேட்டது. திடீரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர் பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது! வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண் ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும் போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின! எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு என்னை ஆட்கொண்டது! திடீரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும், சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர் களுக்குச் சிகிட்சை செய்திருக்கிறார்!
Fig. 7
Hiroshima in 1945
சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை. வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம் பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது! அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள் அமணமாகக் கிழிந்த துணிகளு டன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப் போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை! மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக் கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!
Fig. 8
Hiroshima After 64 Years
உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்
உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில் இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான ‘மரண அடிக் ‘ [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.
வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள் சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில் ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்!
Fig. 9
Hiroshima Now (2009)
போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப் புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர். புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!
கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப் பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!
Fig. 10
Nagasaki Today (2009)
உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!
ஓர் அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்! அதன் கோரக் கொடுமைகள் தப்பியோ ரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு ‘ விண்ணப்பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானிகளோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது! அதை அகில நாடுகள் உணர வேண்டும்! பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்து கிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப் போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் ‘.
Fig. 11
Nagasaki Bomb Hypocenter
அணு ஆயுத வல்லரசுகளே! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும்! ஜப்பானில் முதன் முதல் போட்ட அணுகுண்டுகளே, உலகின் இறுதியான முடிவு அணுகுண்டு களாக இருக்கட்டும்!
ஆதாரம்:
1. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes
2. Oppenheimer, By: James Kunetka
3. HandBook of World War II, Abbeydale Press
4. The Deadly Element, By: Lennard Bickel
5. Canadian Nuclear Society Bulletin, June 1997
6. http://www.marts100.com/radiation.htm (About Atomic Radiations)
7. http://www.marts100.com/Classifying.htm (Effects of Radiation)
8. http://www.marts100.com/Radioactivity.htm (Radioactive Decay)
9. http://www.marts100.com/NIeffects.htm (Biological Effects)
10. The Impact of Atomic Energy (A History of Responses By Govements, Scientists & Religious Groups) By : Erwin N. Hiebert (1961)
11. http://nucleararmageddon.blogspot.com/2009/03/hiroshima-nagasaki-glimpse-of-what-was.html (Nuclear Armageddon in Hiroshima & Nagasaki)
12. http://en.wikipedia.org/wiki/Atomic_bombings_of_Hiroshima_and_Nagasaki
13. http://www.cfo.doe.gov/me70/manhattan/hiroshima.htm (The Manhatten Project)
14. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B7581-4N7YJVJ-N&_user=10&_coverDate=02%2F28%2F2007&_rdoc=1&_fmt=high&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=fa83c18df87d2d60a84731c12eee9b02 (Long Term Health Hazards of Atomic Bombs)
15. http://www.nrc.gov/reading-rm/doc-collections/fact-sheets/bio-effects-radiation.html (Biological Effects of Radiation By Nuclear Regulatory Commission, USA)
16. http://library.thinkquest.org/3471/radiation_effects_body.html (Hiroshima, Nagasaki, Three Mile Island & Chernobyl Events)
***************************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) February 11, 2010
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1
- மொழிவது சுகம்: ஒளியும் நிழலும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -4
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)
- முள்பாதை 16
- எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா
- வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.
- முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்
- பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்
- ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்
- நிரப்பிச் செல்லும் வாழ்க்கை அசோகமித்திரனின் “நினைவோடை”
- ஒளிமழை
- சிதறிய கவிதைகள்
- மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு
- ஊமை மொழிகள்..
- வேத வனம் -விருடசம் 72
- இடர்மழை
- முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!
- மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன்
- கடைபிடி; முதல் படி!
- கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்
- யார் கூப்டதுங்க…?
- கலியாணம் பண்ணிக்கிட்டா……