பாராது
அரசியல் செஸ்ஸில் ஜெயலலிதாவுக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது. நகர்த்திய காயில் முதலாவது தீர்ப்பு சென்றவாரம் வெளியானது. அந்தத் தீர்ப்பின் படி ஆறுமாதத்துக்குப்பின்னர் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ நீடிக்க முடியாது என்று வந்துவிட்டது. இது முதல் செக்.
அவசர அவசரமாக ஜெயாவின் டான்ஸி வழக்கை விசாரணை செய்த நீதிபதி மாற்றப்பட்டது இரண்டாவது செக்.
நிலைமை மோசமானதுதான்.
இன்னும் ஒரு மாதத்துக்குள் அவர் டான்ஸி வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்து அவர் தேர்தலில் நிற்க வேண்டும். தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள வேண்டும். சாதாரண இந்தியனுக்கு வெகு காலம் கடக்கும் அரசின் வேலை, அதிகாரமுள்ள அரசியல்வாதிகளுக்கு மின்னல் வேகத்தில் நடக்கும் என்பது தெரிந்ததுதான். ஆனால், மத்தியில் உட்கார்ந்திருக்கும் அரசுக்கு வேண்டாதவராக இருக்கும் ஒருவருக்கு மத்தியில் ஏராளமான தடங்கல்கள் இருக்கும் என்பது எதிர்ப்பார்க்கக் கூடியதுதான்.
இன்னும் ஒரு மாதத்துக்குள் அவர் டான்ஸி வழக்கை முடிவுக்குக் கொண்டுவர யத்தனித்தாலும், அவர் சம்பந்தமான இன்னொரு தீர்ப்பு வெளிவந்து அவரால் திரும்ப தேர்தலில் நிற்க முடியாமல் போகும் நிலை வர ஏராளமாய் வாய்ப்புண்டு.
எனவே இப்போது கேள்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அவர் நியமிக்கக்கூடிய முதல்வர் யார் என்பதுதான்.
செஸ் விளையாட்டில் ராஜாவாக நிற்கும் ஜெயலலிதாவுக்கு இடது புறம் ஓரத்தில் நிற்கும் யானையை தற்காலிகமாக நடுவுக்குக் கொண்டுவந்து ராஜா தப்பித்துக்கொள்ளலாம். சதுரங்க விளையாட்டில் யானையை நம்பி ராஜா இடம் மாறலாம். இந்திய அரசியலில் எந்த யானையும் முதலில் தான் ராஜா ஆகவே முதலில் ஆசைப்படும். இதுதானே ஜனநாயகம். யார் வேண்டுமானாலும் அதிகாரத்தில் உட்காரலாம் என்பதுதானே இந்திய ஜனநாயகம். (அது ஒரு எல்லையைத்தாண்டிப்போய் ரவுடிகள் முக்கிய அரசியல்வாதிகளாகி விட்டது என்பது வேறு விஷயம்)
எனது பந்தயம் அடுத்த முதல்வர் சோ என்பது.
என் எண்ணத்துக்குக் காரணம் இருக்கிறது. முதலில் நம் எண்ணத்துக்கு வருவது, சசிகலா.
ஆனால் சசிகலாவுக்கு சில குறைபாடுகள் இருக்கின்றன. முதலாவது, அவர் நேரடியாக ஈடுபட்டு தேவரின ஓட்டுக்களைப் பெற்று, தன்னை தேவர் தலைவியாகக் காட்டி, அதிமுகவை தேவரினக் கட்சியாக கட்டியமைத்தது. இது சசிகலாவை ஜெயலலிதா இல்லாமலேயே பலம் பொருந்திய அரசியல்வாதியாக ஆக்கும் விஷயம். ஜெயலலிதா கண்களில், இதை விட வேறு ஆபத்து வேண்டாம். தேவரின கட்சியாக அதிமுகவை பலர் குறுக்கினாலும், இன்னும் அதிமுகவின் அடிப்படை பலம் எம்ஜியாரிடம் தான் இருக்கிறது. தேவரின கட்சியாக அது ஆவதை அதிமுகவிலேயே பலர் விரும்பமாட்டார்கள். தேவர்களின் ஓட்டு நிறைய அதிமுகவுக்கு விழுந்தாலும், அதனால் அது ஆட்சிக்கு வந்தாலும், தேவர் ஒருவரை முதல்வராக்குவது அதிமுகவின் அடிப்படையான ‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் ‘ சிந்தனைக்கு எதிர்மாறானது. ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிமுக ஒன்றிணைந்ததன் காரணம், ஜெயலலிதாவிடம் இருக்கும் தமிழக சாதிகளை பொதுவாக நடத்தக்கூடிய இயற்கையான ‘வெளியாள் ‘ குணம் இருப்பதுதான். (இதுவே எம்ஜியாரிடமும் இருந்தது)
அந்த சமமாக நடத்தக்கூடிய குணத்தை சசிகலாவிடம் பார்க்க இயலுமா என்பது ஜெயலலிதாவின் கேள்வியாக இருக்கலாம். இரண்டாவது, சசிகலாவை நம்பி முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தால், தனக்கு வினையாக வருமா வராதா என்ற கேள்வி. சசிகலா, இன்னொரு சந்திரபாபு நாயுடு வேலை பண்ண எவ்வளவு காலம் பிடிக்கும். அவருக்கு தனிப்பட்ட முறையில் தேவரின ஓட்டுக்கள் குவியும்போது, ஏன் ஜெயலலிதாவை நம்பி அவர் இருக்க வேண்டும் ? ஆகவே, சசிகலாவை நியமிக்க மிகக்குறைவான வாய்ப்புக்களே இருக்கின்றன என்பது என் கணக்கு.
இரண்டாவது நம் எண்ணத்துக்கு வருவது, பொன்னையன், தம்பித்துரை போன்ற ஜெயலலிதா விசுவாசிகள்.
பொன்னையன், தம்பித்துரை போன்றவர்களுக்கும் சசிகலாவிற்கு இருக்கும் பிரச்னை இருக்கிறது என்பதையும் பாருங்கள். பொன்னையன் போன்ற விவரமான, சாதுர்யமான, புத்திசாலியான ஆட்களைப் போடுவதில் பிரச்னை அவர்களுக்கு இந்த தமிழ்நிலத்தில் வேர்கள் இருக்கின்றன என்பதும், அவர்கள் என்னேரமும் இன்னொரு நாயுடு வேலை பண்ணி ஜெயலலிதாவை சிலகாலம் உபயோகப்படுத்தி, தூக்கி எறிந்துவிடக்கூடிய குணம் இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு வேண்டியது, தன்னை நம்பி இருக்க வேண்டிய ஒரு ஆள். ஜெயலலிதா சொல்லும் வேலைகளை செய்யக்கூடிய ஆள். ஜெயலலிதா சொல்லி பண்ணும் அபத்தமான வேலைகளையும், சப்பைக்கட்டி, சரியாக சால்ஜாப்பு சொல்லக்கூடிய விவரமான ஆள். அதே நேரத்தில் தனியாக பிய்த்துக்கொண்டு போய்விட முடியாத, மக்களிடம் ஆதரவு இல்லாத ஒரு ஆள். அதே சமயம், தன்னையும் மிஞ்சி, படு பயங்கர ஊழல் செய்யாத ஒரு ஆள். பின்னொரு காலத்தில் எல்லா பிரச்னைகளும் முடிந்துவிட்டால், மீண்டும் தலைமைப் பதவியை தன்னிடம் கொடுத்துவிடும் ஒரு ஆள். சொல்லப்போனால், அழகான முகமூடி கொண்ட உப்புக்குச் சப்பாணி.
இந்த மேற்கண்ட விவரிப்புகளுக்கு இணங்குபவர்கள் கீழ்க்கண்டவர்கள்
1) ஒரு ஊர் பேர் தெரியாத புது எம்எல்ஏ
2) மத்திய அரசாங்கத்திலும், அரசியலிலும் பழக்கமான, (ஜெயலலிதாவின் சாதியைச் சேர்ந்த) சோ, சேஷன், மணிசங்கர் ஐயர், சுப்பிரமணியசாமி போன்றவர்கள்
3) வீரமணி, நல்லக்கண்ணு போன்ற இடதுசாரி, திராவிடர் கழக அனுதாபிகள் (முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலில் ஊறியவர்கள்)
நரசிம்மராவின் கதையைத் தெரிந்தவர்கள் யாரும், யாரையும் லேசாக கணக்குப்போட்டு விட முடியாதுதான். எந்த ஊர் பேர் தெரியாத எம் எல் ஏவும் பின்னொரு காலத்தில் ஜெயலலிதாவைக் கவிழ்த்துவிடும் அளவுக்கு வளர்ந்துவிட வாய்ப்புண்டு. ஆகவே தெரிந்த பிசாசு தெரியாத தேவதையை காட்டிலும் சிறந்தது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், புது எம்எல்ஏ வரிசையிலிருந்து விழுந்துவிடுகிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் ஊறியவர்களான வீரமணி நல்லக்கண்ணு போன்றோர்களுக்கும் ஓரளவு, ஒரு சாராரின் மக்கள் ஆதரவு உண்டு என்பதையும், இந்த ஆதரவை ஜெயலலிதா உபயோகப்படுத்திக்கொண்டாலும், இந்தக்கொள்கைகளில் ஜெயலலிதாவுக்கு ஆர்வம் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மூன்றாவது வரிசை விழுந்துவிடுகிறது.
ஆகவே, இரண்டாவது வரிசையில் இருப்பவர்களில் ஒருவர் ஜெயலலிதாவின் பொம்மையாக உட்கார வாய்ப்பு இருக்கிறது. இதில் இருப்பவர்களில் மணிசங்கர் ஐயர் தவிர மற்றவர்கள், கொள்கை ரீதியில் (ஊழல் தவிர) ஜெயலலிதாவின் கொள்கைகளோடு ஒத்துப் போகக்கூடியவர்கள்.
அதில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, ஜெயலலிதாவுக்கு சமீபத்தில் மிகவும் உதவிய சோ அவர்கள்தான் அவரது எதிர்கால முகமூடி என்பது இங்கு நான் கொள்ளும் எதிர்பார்ப்பு. (சோவை விட சேஷனுக்கு வாய்ப்பு அதிகமில்லை. மணிசங்கர் ஐயர், ஜெயலலிதா அனுதாபி என்றாலும் அவர் சோனியாவுக்கு ஜெயலலிதாவை விட அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். சுப்பிரமணிய சாமியை நம்பி ஜெயலலிதா ஏற்கெனவே கையைச் சுட்டுக்கொண்டாய் விட்டது). மேலும் சமீபத்தில், தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு பெற்றிருக்கும் பாஜக தலைமைக்கு நெருங்கியவராக அவர் இருந்து, பெரும்பாலான தாக்குதல்களின் முனையை மழுங்கடித்ததில் சோவுக்கு பெரும் பங்கு இருக்கிறது, இருந்திருக்கிறது எனவும் நான் கருதுகிறேன்.
மேலும், சோ, ஜெயலலிதா சார்பாக மூப்பனாரிடமும் ராமதாஸிடமும் பேசியபோது ‘ஜெயலலிதா முதல்வராக வரவில்லை என்றால் உங்களுக்குத்தான் ‘ எனவும் அவர்களிடம் சொல்லியிருக்கலாம். அதற்காகவே அவர் ஜெயலலிதா முதல்வராக ஆனபோது, ‘ஜெயலலிதா இன்னொருவரிடம் முதல்வர் பதவி கொடுத்திருக்க வேண்டும் ‘ என்று சொன்னதன் மூலம் மூப்பனாரையும் ராமதாஸையும் திருப்தி பண்ணியதாக சிலர் பேசுகிறார்கள். இதற்கு இன்னொரு முகமும் இருக்கலாம். இதற்கெல்லாம் முன்பு சோவை ஜெயலலிதா சந்தித்துப் பேசியபோது ‘நான் முதல்வராக ஆகவில்லை என்றால் உங்களுக்குத்தான் முதல்வர் பதவி ‘ என்றும் சொல்லியிருக்கலாம். அதனால் கூட, தான் முதல்வராக வேண்டும் எனக்கருதி, சோ ‘இன்னொருவரிடம் ‘ முதல்வர் பதவியை ஜெயலலிதா கொடுக்க வேண்டுமென பேசியிருக்கலாம். எல்லாமே யூகங்கள் தான்.
முதலில் சினிமா கதாசிரியரான அண்ணாவுக்கு முதல்வர் பதவி கொடுத்த தமிழர்கள், பின்னர் வசனகர்த்தாவான கருணாநிதிக்கும், பின்னர் கதாநாயகனாக நடித்த எம்ஜியாருக்கும், பின்னர் கதாநாயகியான ஜெயலலிதாவுக்கும் முதல்வர் பதவி கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது, அடுத்த வாய்ப்பு காமெடி நடிகருக்குத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏன் வில்லன் வரக்கூடாது என்று கேட்பது எனக்குக் கேட்கிறது. மேல் கண்ட எல்லோருமே மக்கள் நலத்துக்கு வில்லன்கள் தானே ?
ஆகவே நான் முதல்வர் சோவை வரவேற்கத் தயாராகிறேன்.
(வேறொரு ஆளை அவர் முதல்வராக நியமித்தால், ஏன் எப்படி என்று இன்னொரு கட்டுரை எழுதி சால்ஜாப்பு பண்ண இப்போதே சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்)
**
வாசகர்களுக்கு திண்ணை ஆசிரியர்:
இந்தக் கட்டுரையை ஒட்டியும், வெட்டியும், நீங்கள் எழுதும் வித்தியாசமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. யாரையும் புண்படுத்தும்படி எழுதாதீர்கள். உங்கள் கருத்துக்கள் அனுப்ப வேண்டிய முகவரி editor@thinnai.com
**
- புதுமைகள்
- சோ அடுத்த முதல்வரா ?
- கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.
- திண்ணைக்கவிதைகள் – ஒரு விமர்சனம்
- போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய
- மிளகாய் பூண்டுச் சட்டினி
- அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.
- மூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)
- சேவியர் கவிதைகள்
- ‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்
- காதல் விண்ணப்பம்
- எலிப்பொறி
- மேகம்
- சாத்தான் சொல்லும் வேதங்கள்
- ஆலும் மரம்
- சோ அடுத்த முதல்வரா ?
- கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.
- அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.
- கால அதிர்ச்சி!
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 26 2001
- போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய
- எழுத்தோ எழுத்து