சேர்ந்து வாழலாம், வா! – 2

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

ரெ.கார்த்திகேசு


மாரியம்மாள் குற்றவாளிக் கூண்டில் இருந்தாள். பார்ப்பதற்குச் சிக்கென்று இருந்தாள். இரண்டு பிள்ளைகள் பெற்றாலும் தளராத உடற்கட்டு. சிவந்த முகம். அறியாமையும் ஏழைமையும் அவளை இப்படி துவைத்துப் போடாதிருந்தால் எங்காகிலும் அவளைப் பீடத்தில் வைத்துப் போற்றும் ஒரு ஆணழகனுக்கு வாழ்க்கைப் பட்டு நல்ல குடும்பப் பெண்ணாக இருந்திருப்பாள்.

ஆனால் அவளுக்கு வாய்த்தது போதைப் பித்தனான அவளுடைய தாய்மாமன். “காலில் கட்டுப் போட்டால் திருந்திவிடுவான்” என்ற முட்டாள்தனத்தை வாழ்க்கையின் விவேகமாகக் கொண்டுவிட்ட சமூகத்தின் அறியாமைக்குப் பலியானாள். அந்தக் கட்டு பூனைக்கும் எலிக்கும் போட்ட கட்டு ஆயிற்று. அவள் கணவன் அவளைத் தின்று அவள் வருமானத்தைத் தின்று அவளின் மீதமிருந்த கண்ணியத்தையும் கௌரவத்தையும் தொடர்ந்து மென்றவாறு இருந்தான். எல்லாம் பண்ணிவிட்டு இப்போது அவளை நிர்க்கதியாக விட்டுவிட்டு தலைமறைவாகத் திரிகிறான்.

இப்போது தனியளாக இருக்கும் அவளுக்கு இந்த அழகும் உடற்கட்டுமே பெரிய எதிரிகளாக ஆகிவிட்டிருக்கின்றன. வேலியில்லாத செழித்த பயிர். மேய்வதற்கு எல்லா மாடுகளும் ஆசைப்படுகின்றன.

அன்று அவளைக் கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி மூன்றாம் முறையாக சாட்சிக் கூண்டில் நின்றிருந்தார். ஆனந்தன் கேட்டான்:

“இன்ஸ்பெக்டர் துரைசாமி, இந்த மாரியம்மாளை உங்களுக்கு முன்பே தெரியுமா?”

“அவருடைய கணவன் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தெரியும்!”

“அடிக்கடி அவர் வீட்டுக்குப் போயிருக்கிறீர்கள்!”

“விசாரணை தேவைப்படும்போது போயிருக்கிறேன்!”

“மாரியம்மாள் கைது செய்யப் படுவதற்கு முன் அந்த ஒரு மாதத்தில் எத்தனை முறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறீர்கள்?”

“நினைவில்லை. இரண்டு, மூன்று முறை!”

தனது குறிப்பைப் பார்த்தான் ஆனந்தன். “ஏழு முறை போயிருக்கிறீர்கள்”

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் நெளிந்து “இருக்கலாம்” என்றார்.

“அத்தனை முறை விசாரணை நடத்த அவசியம் இருக்கிறதா?’

“தலை மறைவாக இருக்கும் அவருடைய கணவன் அவரைத் தொடர்பு கொண்டிருக்கக் கூடும் என விசாரித்து அறிவது என் கடமை!”

உமா ஆனந்தன் அருகில் வந்து ஒரு சீட்டைக் கொடுத்தாள். படித்துவிட்டு ஆனந்தன் கேட்டான். “அப்படி விசாரிக்கப் போகும் நேரத்தில் அவளுக்குக் கோழி பிரியாணி வாங்கிக் கொடுப்பதும் உங்கள் கடமைகளில் ஒன்றா?”

இன்ஸ்பெக்டர் திகைத்தார். அரசாங்க வழக்கறிஞர் எழுந்து “ஆட்சேபிக்கிறேன்” என்றார். “வழக்கிற்குச் சம்பந்தமில்லாத விஷயம்.”

நீதிபதி அவரைப் பார்த்தார். “சாட்சி பதில் சொல்லட்டும். அவர் பதில் ‘இல்லை’ என்று இருந்தால் தற்காப்பு வழக்கறிஞர் ஏன் இந்த வீண் கேள்வியைக் கேட்டார் என்று விளக்க வேண்டும். ஆனால் ‘ஆம்’ என்றால் சாட்சிதான் விளக்க வேண்டும்”

இன்ஸ்பெக்டர் சொன்னார்: “ஒரு முறை வாங்கிக் கொடுத்தேன். பிள்ளைகளுக்காகப் பரிதாபப் பட்டு!”

“ஏன்? மாரியம்மாளின் பிள்ளைகள் சாப்பாடில்லாமல் வாடிக் கிடந்தார்களா?”

“அப்படித்தான் தெரிந்தது!”

“மாரியம்மாள் ஒரு சாப்பாட்டுக் கடையில் வேலை செய்து வந்தார் என்பதும் தினசரிச் சாப்பாட்டைக் கடையில் இருந்து கொண்டு வருவார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?”

தயங்கிச் சொன்னார்: “தெரியாது!”

“ஆனால் பிள்ளைகள் சாப்பாடில்லாமல் தவித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்!”

“பார்க்க அப்படித்தான் தெரிந்தது!”

“அந்த பிரியாணியை மாரியம்மாள் என்ன செய்தார்?”

இன்ஸ்பெக்டர் நெளிந்து தயங்கி தரை பார்த்து பதில் சொன்னார். “அதை வாங்கிக் கொள்ளவில்லை!”

“அப்படியென்றால்…?

“வேண்டாம் என்று சொல்லிவிட்டார்!”

” ‘வேண்டாம்’ என்ற வார்த்தையைப் பயன் படுத்தி வாயால் சொன்னாரா?”

“இல்லை”

“எப்படிச் சொன்னார்?”

“சைகையில் சொன்னார்!”

“சரியாகச் சொல்லப் போனால் உங்கள் முகத்தில் தூக்கி எறிந்தார். சரிதானா?”

இன்ஸ்பெக்டர் மீண்டும் நெளிந்தார்.

உமாவின் கூர்ந்த ஆய்வினாலும் நடந்த நிகழ்வுகளை ஆனந்தனிடம் கோர்த்துச் சொல்லும் திறமையினாலும் சரியான நேரத்தில் சரியான கேள்வியை எழுதிக் கொடுத்து உதவுவதினாலும் இந்த வழக்கு எந்தத் திசைக்குத் திரும்ப வேண்டும் என்று அவள் விரும்பினாளோ அந்தத் திசைக்கு அது வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருந்தது.

வழக்கு இன்னொரு நாளுக்கு ஒத்தி வைக்கப் பட்டுத் தங்கள் கோப்புகளைச் சேகரித்துக் கொண்டு இருவரும் கோர்ட்டின் கதவுக்கு வெளியில் வந்த போது ஆனந்தன் கேட்டான்: “உமா, இன்னக்கி ஆபிஸ் முடிஞ்சதும் என்னோட தேனீர் சாப்பிட வர முடியுமா?”

உமா அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். எப்போதும் வழக்கு முடிந்ததும் அவரவர் கார்களை நோக்கி நடப்பதுதான் வழக்கம். இன்று இது வழக்கத்துக்கு மாறாக இருந்தது. “ஏன் ஆனந்த்? எதாகிலும் விசேஷமா?” என்று கேட்டாள்.

“அப்படியும் சொல்லலாம்.”

“என்ன விசேஷம்?”

“சந்திக்கும்போது சொல்றேனே!”

கொஞ்சம் தயங்கிச் சொன்னாள். “சரி!”

மகிழ்ச்சியாக இருந்தது. “ஐந்து மணிக்கு. என் காரிலேயே போயிடலாம். அப்புறம் நானே கொண்டு வந்து ஆபீஸ் கார்பார்க்கில திரும்ப விட்டுட்றேன்!”

தலையாட்டிவிட்டு ஒரு மெல்லிய சிரிப்பைச் சிந்திவிட்டு தன் காரை நோக்கி நடந்தாள்.

வழக்கு மன்றத்தின் கருப்புக் கோட்டு சிலரின் தோள்களில் தொளதொளவென்று ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு தொங்கும். ஒரு முழங்கால் அளவு கருப்பு ஸ்கர்ட்டும் வெள்ளைப் பட்டு பிளவ்சும் அணிந்திருந்த உமாவின் தோள்களைக் கவ்விக் கொண்டு அது தொங்கிய வண்ணம் மிக சிக்கென்று மிக அழகாக இருந்தது. திரும்பிப் பார்க்காத அவளின் விறுவிறுப்பான நடை ஒரு குதிரைக் குட்டியின் துள்ளலை அவனுக்கு ஞாபகப் படுத்தியது.

*** *** ***

ஷங்கிரிலா ஹோட்டலின் கோ·பி ஹௌசில் உயரமான சீலிங்கிலிருந்து தொங்கிய சர விளக்குகளிலிருந்து ரம்யமான ஒளி பூத்து இறங்கிக் கொண்டிருந்தது. ஐந்தரை மணி மாலை வேளையில் அப்படிக் கூட்டம் ஒன்றும் இல்லை. ஒதுப்புறமாக ஒரு இடத்தை அடைந்து உட்கார்ந்தார்கள். உமா ஸ்கர்ட்டின் பின்புறம் சுருங்காமல் இருக்கப் பிருஷ்டத்தைத் தடவியவாறு உட்கார்ந்தாள். காலை மடித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். ஸ்கர்ட் தொடையில் ஏறி வெளீரென்ற கீழ்த் தொடைகளையும் கொஞ்சமாகக் கருத்த முழங்கால்களையும் காட்டியது. ரகசியமாகக் கவனித்து கண் திருப்பிக் கொண்டான்.

பரிமாறுநர் வந்து “யெஸ் சார்! இன்றைக்கு பு·பே டீ இருக்கிறது. சாப்பிடுகிறீர்களா?” என்றார். பக்கத்தில் முட்டை வடிவ மேஜையில் உணவு குவிந்திருந்தது. பத்து வகைக் கேக்குகள், விதவிதமான பன்கள், டோ நட், மலாய் இனிப்பு வகைகள், நாசி லெமாக், பிரட்டிய சோறு, சீனர்களின் பீ ஹ¥ன், கொயித்தியாவ், முட்டையில் செய்த பண்டங்கள், உருளைக் கிழங்கு மசியல், நாலு வகை ஜூஸ், ரொட்டி, ஜேம், பட்டரில் நான்கு வகைகள், சீஸ், காப்பி, டீ, மைலோ இன்னும் பல. ஆளுக்கு 25 ரிங்கிட். அளவில்லாமல் எடுத்துச் சாப்பிடலாம்.

“பு·பே டீ சாப்பிடலாமா உமா?” என்று கேட்டான் ஆனந்தன். “ஐயோ, வேண்டாம் ஆனந்த்! எனக்கு வெறும் டீ மட்டும் போதும்” என்றாள். இவள் இப்படிச் சிக்கென்றிருப்பதற்கு இந்த உணவு மறுப்புத்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவன் நண்பர்களோடு வந்திருந்தால் ஒரு பிடி பிடித்திருப்பான். இப்போது டீ மட்டும் சொன்னான்.

உமா அவன் முகத்தைப் பார்த்தவாறு இருந்தாள். இப்போது ஆரம்பிக்க வேண்டும். ஆனால் முரட்டுத் தனமாக ஆரம்பித்துக் காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது. மென்மையும் நளினமும் கொஞ்சமாகக் காதலும் குழைத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன் முகமன்கள் வேண்டும்.

“எங்க தங்கியிருக்க உமா?”

“கர்னி டிரைவ்ல ஒரு அப்பார்ட்மெண்ட்ல, இன்னொரு தோழியோட!”

“ஓ அப்ப கடல் பார்வையும் கடல் காத்தும் இருக்குமே!”

“எங்க அப்பார்ட்மெண்ட் கடலப் பார்த்ததில்ல! எதிர்ப்புறமானது! ரோட்டையும் கட்டிடங்களையுந்தான் பார்க்கலாம்!”

“உனக்கு சொந்த ஊரே பினாங்குதானா?”

“இல்ல, கூலிம்!”

“ஓ பக்கத்திலதான். பெற்றோர்கள்…?

பேசாமல் இருந்தாள். ஒரு மாதிரியாகச் சிரித்தாள். “ஏன் ஆனந்த், எனக்கு ஏதும் பதவி உயர்வு கொடுக்க இது மறைமுகமான நேர்காணலா?” என்று கேட்டாள்.

தேநீர் வந்தது. பரிமாறுநர் தேநீர் கேத்தல், தங்க இழை உள்ள இரண்டு கோப்பைகள், பால், சீனி என எல்லாவற்றையும் இறக்கி வைக்கச் சில நிமிடங்கள் ஆயின. “உங்கள் தேநீரை அனுபவியுங்கள் சார்!” என்று சொல்லிவிட்டு அவர் அகன்றவுடன் ஆனந்தன் சொன்னான்: “பதவி உயர்வு கொடுக்க எனக்கு அதிகாரமில்ல உமா! அது வஹாப்பைப் பொறுத்தது. ஆனா உன்னுடைய திறமை சுறுசுறுப்புக்கு அது சீக்கிரமாகவே வரும்னுதான் நெனைக்கிறேன்!” என்றான்.

அவள் கோப்பையில் தேநீரை ஊற்றினான்.

“அப்புறம்?”

“ஒரு ஆர்வம்தான். தெரிஞ்சிக்கக் கூடாதா?”

“அலுவலகத்திலேயே தலைமைக் கிளார்க் மிசஸ் லிம்மைக் கூப்பிட்டுக் கேட்டிருந்தா என்னுடைய ·பைலையே கொண்டு வந்து உங்க மேஜையிலே கொடுத்திருப்பாங்களே! உங்களுக்குத் தெரிய வேண்டிய எல்லா விவரங்களும் அதில இருக்குமே!” சிரித்தாள்.

“நான் கேக்கிறது ·பைலிலேயிருந்து தெரிய வேண்டிய விஷயங்கள் இல்ல உமா! மனசில இருந்து தெரிய வேண்டியது!” என்றான். உரையாடல் சாதாரண முகமன்கள் தளத்திலிருந்து தீவிரத் தளத்திற்குப் போயிற்று.

உமா அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். ஒரு முழு நீள நிமிடம். ஆனந்தன்தான் வெட்கப்பட்டு முகம் திருப்பித் தேநீரை உறிஞ்ச வேண்டி இருந்தது.

அவள் அப்புறம் கேட்டாள்: “இது காதல் ஆரம்பமாகும் வேளையா ஆனந்த்?”

“அது உன்னைப் பொறுத்தது.”

யோசித்தாள். சொன்னாள். “ஆனந்த்! இப்ப என் கவனமெல்லாம் இந்த மாரியம்மாள் வழக்கில இருக்கு. அதைக் கலைக்காதிங்க! வழக்கு ஒரு முடிவுக்கு வந்ததும் இதைத் தொடருவோமே!”

அவனுக்கு மாபெரும் ஏமாற்றமாக இருந்தது. தன் காதல் முன்மொழிதலைக் கேட்டு அவள் சிருங்கார மயக்கத்தில் கிறங்கிப் போய் வெட்கித் தலை குனிவாள் எனக் கற்பனை செய்து வைத்திருந்தான். நிறையத் தமிழ் நாட்டு நாவல்களைப் படித்ததன் விளைவோ? ஆனால் இவள் 21-ஆம் நூற்றாண்டுப் பெண். காதலைப் பரிசீலிக்கக் கால அட்டவணை வகுத்துத் தருகிறாள்.

தேநீர் சப்பென்றிருந்தது.

(911)

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு