சேன் நதி – 2

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


குரலில், அவளுடைய வேண்டுகோளை மீண்டும் நான் தப்பாக எடுத்துக்கொள்ளபோகிறேன் என்ற கவலை. மேலட்டை பழுப்படைந்திருந்த ‘Le Prisonnier de Zenda’ என்ற புத்தகத்தை என் கையிற் கொடுத்தாள். அவள் வயதுக்கு அப்புத்தகத்தில் ஆர்வம் காட்டியது கண்டு எனக்கு வியப்பு. நான் வாசிக்க, கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அமைதியாக் கேட்டாள், கண்களில் அப்படியொரு பிரகாசம்.

ஓர் அத்தியாயம் முழுவதையும் படித்து முடித்தேன். அந்த அறையிலிருந்த விளக்கை மாத்திரமல்ல பக்கத்து அறை அலங்கார விளக்கையும் அணைக்க வேண்டாமென்றாள். இருட்டுக்குப் பயந்தாள். அவள் தூங்குகிறாளா என்று பார்க்க மூடியகதவுகளை விலக்கி பார்க்கவேண்டியிருந்தது. பிறகு மாடிமுழுக்க அலைந்ததில் தோலினாலான சோபாவொன்றை கண்டேன், இரவை அதிலேயே கழிந்தது.

மறுநாள் காலை, ‘கோந்த்தெஸ் குழைந்தையைப் பராமரிக்கிற வேலை தந்தால், செய்வேனா என்று கேட்டாள். அவளுடைய கலையுலக வாழ்க்கையும், உல்லாச உலகும் பிழுவைக் கவனித்துக்கொள்ள தடையாக இருந்தனவாம். ஆக, அவளுக்கு எனது உதவி தேவையாயிற்று. தனிமையிலிருந்து தப்பிக்கவென்று மரிவோ நாடகப் பயிற்சி பள்ளியில் சேர்ந்திருந்த எனக்கு, அதைத் தொடரமுடியாமற்போனது குறித்து வருத்தங்களில்லை. எனக்கென்று இப்போது சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. உணவிற்கும், உறைவிடத்திற்கும் வசதி செய்து கொடுத்தார்கள், முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு என் மீது நம்பிக்கையும் ஏற்பட்டது.

ழான்-குழோன் வீதியில் குல்ம் என்ற பெயரில் பள்ளியொன்றிருந்தது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருத்தி அதை நடத்திவந்தாள். அவளிடம் பிழுவுக்குத் தனி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலும், பின்னேரமும் பிழுவை அழைத்துவருவதற்காக அந்தப் பள்ளிக்குச் சென்றபோதேல்லாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன் அதாவது பிழுவைத் தவிர வேறு சிறுமிகள் அங்கு படிப்பதற்கான அறிகுறிகளில்லை. அமைதியாகவும் இருண்டும்கிடக்கிற உபயோகத்திலில்லாத தேவாலயத்தைப்போல ஒரு வகுப்பறையில் அவளும் சுவிஸ் பெண்மணியுமாக அமர்ந்திருப்பார்கள். அங்கே அவள் படித்த நேரம்போக மற்ற நேரங்களில் முதலாம் அல்பெர் வீதியிலுள்ள புற்களிட்ட பாதையிலோ, ட்ரொக்காடேரொ பூங்காவிலோ என்னையும் பிழுவையும் காணலாம், பிறகு நதிக்கரை வீதிகள் வழியாக வீட்டிற்குத் திரும்புவதை வழக்காமக் கொண்டிருந்தோம்.

எல்லாமே இரவும் பனியுமான பேழைக்குள் அரங்கேறியவை. பிழுவுக்கு ஏதோ இரவிடம் மட்டும் பயம் என்றில்லை, திரைத் துணிகளில் தெரியும் அவளுடைய அறை மின்சார விளக்கின் நிழலிடத்திலும், கதவிடுக்கினூடாகக் கண்ணிற்படும் பக்கத்து அறையின் லஸ்கர்கர் விளக்கிடத்திலுங்கூட அவளுக்கு அச்சமுண்டு. அவற்றையெல்லாம் தன்னைநோக்கி நீளும் கரங்களாக நினைத்துப் பயந்து கட்டிலில் சுருண்டு படுப்பவளை அணைத்துக்கொண்டு, பயப்பட ஒன்றுமில்லையென அவள் உறங்குவரை தைரியமூட்டவேண்டும். அவளை பயமுறுத்தும் நிழல்களைத் தவிர்க்க அல்லது அவற்றை இல்லாமல் செய்ய பல வழிகளிலும் முயற்சிப்பதுண்டு.

நானறிந்த எளியவழிமுறை திரைத்துணிகளை இருபக்கமும் ஒதுக்கிவைப்பது, ஆனால் விளக்கொளி எனது அமைதியான தற்காப்பு முயற்சியைக் காட்டிகொடுத்துவிடும். மின்சார விளக்கைக் கொஞ்சம் வலது பக்கம் கொஞ்சம் இடதுபக்கமென இடம்மாற்றம் செய்து பார்ப்பேன், ம்..பலனில்லை, நிழல்கள் எப்போதும்போல பயமுறுத்திகொண்டுதானிருந்தன.

அவளைப் பார்த்துக்கொள்வதென்கிற பணியில் சேர்ந்து சரியாக பதினைந்து நாட்கள் கடந்திருந்தன. என்னுடைய துணை ஒருவகையில் அவளுடைய அச்சத்தை தவிர்த்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன், இல்லையெனில் Prisonnier de Zenda புத்தகத்தின் படிக்கவேண்டிய அன்றைய அத்தியாத்தை முடிக்கும்முன்பாகவே, திரைத் துணிகளில் தெரிகிற கைகளைப்பற்றிய கவலைகளின்றி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

கடும்பனிபெய்த குளிர்காலம் அது. பாரீஸில் நாங்கள் குடியிருந்த இடம், முதலாம் அல்பெர் வீதி, நவீன ஓவியத்திற்கான அருங்காட்சியக கட்டத்தின் முன்பிருந்த திறந்தவெளி, ஒன்றின் மேலொன்றாக அடுக்கிவைத்ததுபோல இருக்கின்ற ‘பஸ்ஸி’ குன்றின் சரிவில் தெரிகிற வீதீகள் என எல்லாமுமாக சேர்ந்து அப்பகுதியே ஆங்காடின் (4) போல இருக்கிறது. கொன்கோர்டு திடலில்(5) குதிரைமீது சவாரிசெய்வதுபோல பெல்ஜிய அரசர்(முதலாம் அல்பெர்)சிலை. வெள்ளை வெளேரென்று மன்னர் ஏதோ பனிச்சூராவளியில் அகப்பட்டு தப்பித்துவந்தவர் போலவிருந்தார். பழைய பொருட்களுக்கான கடையொன்றில், கவனிப்பாரற்று மூலையிற் கிடந்த மரத்தால் செய்த பனிச் சறுக்கு வண்டியொன்றை பிழுவுக்கு விளையாட உதவுமென்று வாங்கினேன். ட்ரொக்காடேரொ பூங்காவிற்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த அவளுக்கு அதிக சிரமமற்ற சரிவில் விளையாடினாள். மாலை நதிக்கரை வீதிகள் வழியாக இருவருமாக வீடு திரும்பியபொழுது அவளது வழக்கபடி விறைத்தவாறு பனிச்சறுக்கு வண்டியில் உட்கார்ந்து வந்தாள். பார்க்க ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பவள்போல இருந்தாள், வண்டியை நான் இழுத்து வந்தேன். சட்டென்று வண்டியை வண்டியை நிறுத்தி விளையாடினேன். மரங்கள் அடர்ந்த காடொன்றில் தன்னந்தனியே அகப்பட்டுக்கொண்டதுபோல இருவரும் பாவனை செய்கிறோம். அந்த விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, அவள் கன்னங்களிரண்டும் சந்தோஷத்தில் சிவந்துவிட்டன.

இரவுநேர கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் புறப்படும் அவசரத்தில் (மாலை எழுமணி அளவில்) கோந்த்தெஸ் மகளுக்குக் கொடுக்கும் முத்தங்களைப் பற்றி சொல்லி என்ன ஆகப்போகிறது. அந்த வீட்டில் புரியாதப் புதிராக இருந்த மதெலென்-லூயீஸ் என அழைக்கப்பட்டவளுக்கு பின்னேரம் முழுக்க தொலைபேசியில் கதைத்தாகவேண்டும், எங்களைக் கவனிக்க அவளுக்கும் நேரமில்லை. குஸ்தி போடுபவனைப்போல முகத்தை வைத்துக்கொண்டு தொனதொனவென்று தொலைபேசியில் பேசவேண்டிய அவசியம் என்னவோ? ஈரமற்ற குரலில், கேட்கின்றவர்களுக்கு அவளுடைய அலுவலகத்தில் சந்திப்பதற்கான நேரத்தைச் சொல்கிறாள், முகவரியும் கொடுக்கிறாள், “ஆர்க்காட் த்யு லிடோ”, ஆம் அங்குதான் அவளுடைய அலுவலகமுள்ளது. கோந்த்தெஸ் மீது அவளுடைய ஆதிக்கம் நிறைய என்பது வெளிப்படை. அவள் சோனியாவென்று பெயர்சொல்லி அழைத்ததில்லை, எப்போதும் ‘ஒதெத்’ என்றழைத்தே பழகியவள். புபூல் சொல்வதுபோல கோந்த்தெஸ¤க்கு வேண்டிய ஆடம்பர செலவுக்காண பணத்தை இவள்தான் கொடுக்கிறாளோ?, என்னை நானே கேட்டுக்கொண்டேன். முதலாம் அல்பெர் வீதியில் தான் இவளும் வசிக்கிறாளா? கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் முடித்துக்கொண்டு அதிகாலையில் திரும்புகிறபோது பெரும்பாலும் அவளும் சோனியாவும் ஒன்றாகத்தான் வருகிறார்கள். ஆனால் அவளது அலுவலகத்தில்தான் மதலின் லூயி தூங்குகிறாளென நினைக்கிறேன்.

கடைசிகாலத்தில் சொந்தமாக ஒரு சொகுசு படகொன்று வாங்கியிருந்தாள், அதை எப்போதும் புய்த்தோ தீவென்று சொல்கிற இடத்தில் கரையோரமாக நிறுத்தி வைத்திருப்பாள். ஒரு ஞாயிற்றுக் கிழமை அவளை படலில் வைத்து பார்க்கவென்று பிழு, கோந்த்தெஸ், நானென்று மூவருமாகச் சென்றிருந்தோம். உள்ளே விருந்தினர்களை உபசரிக்கவென்று வசதி செய்யபட்டு மெத்தை தைத்த நாற்காலிகளெல்லாம் வாங்கிப்போட்டிருந்தார்கள். அன்றையதினம் தொப்பியும், காற்சட்டையுமணிந்து பார்க்க உடற்பெருத்த இளம் கப்பல் பணியாளர்போல இருந்தாள், முகத்தில் கவலை தெரிந்தது.

எங்களுக்குத் தேநீர் வழங்கினாள், தேக்குமரத்திலான சுவற்றில் சிவப்பு சட்டமிட்ட நிழற்படம் தொங்கிக்கொண்டிருந்தது. குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிருடன் படத்தில் இருந்தவள் அவளுடைய சிநேகிதி, சுர்கூ·ப் (6) வழி வந்தவள்; தோணித்துறை, படகு, மழையில் நனையும் துறைமுகம் என்பதான அவளதுபாடல்கள் பிரசித்தம். பாடகி ஏற்படுத்திய தாக்கத்தில்தான் சொகுசுபடகை வாங்கியிருப்பாளா?

இரவு வந்தது. மதெலென்- லூயியும், கோந்த்தெஸ்ஸ¤ம் என்னையும் பிழுவையும் விருந்தினர்களை உபசரிக்கும் இடத்திலேயே தனித்து விட்டிருந்தனர். புதிர் விளையாட்டொன்றை அவளுக்கென்று கண்டுபிடித்தேன், இடம் பெரியதாக இருந்ததால் ஆர்வத்துடன் சிரமங்களின்றி விளையாடப் பழகிக்கொண்டாள்.

அப்பனிக்காலத்தில், சேன்நதியில் புது வெள்ளம் – சொகுசுப்படகின் சன்ன¨லை நீர்மட்டம் தொட்டிருந்தது. லீலா பூக்களின் மணமும் சேற்றின்மணமும் சொகுசுப்படகுக்குளேயும் இருந்தன.

இருவருமாக படகில் சதுப்பு நில பிரதேசங்களெங்கும் பயணித்தோம். நதியில் தொடர்ந்து செல்ல செல்ல எனக்கும் வயதுகுறைந்து அவள் வயது பையனாக மாறினதுபோல நினைப்பு, ‘லெ ப்வா'(le Bois) வுக்கும் ‘லா சேன்'(La Seine)னுக்கும் இடையிலிருக்கிற பூலோஜ்ன்(7) கடல்வரை சென்றிருந்தோம், நான் பிறந்ததும் அங்குதான்.

பிழுவுடன் தனிமையிலிருக்கிறபோது, இரவுநேரங்களில் அந்த ஆளின் காலடிச் சத்தத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை கேட்டிருப்பேன். அவனுக்கு முப்பது வயதிருக்கும்.. அவனிடத்தில் ஒரு திறப்பு இருக்கவேண்டும், முன் கதவினை உபயோகிக்காமல் வேலைக்காரர்களுக்கான கதவின் வழியாக உள்ளே வருகிறான். முதல் முதலாக அவனைச் சந்திக்க நேர்ந்தபொழுது தனது பெயர் ‘ழான்-பொரி” என்றும் ‘சோனியா’வுக்குத் தான் சகோதரனெறும் அறிமுகபடுத்திக்கொண்டான். ஆனால் இருவருக்கும் இனிஷியல் வேறாக இருந்தது ஆச்சரியம்?

ஓ’தொயே என்றழைக்கப்படும் சோனியாவுடைய குடும்பத்தவர்களுக்குப் பூர்வீகம் அயர்லாந்து; பிரபுக்கள் வம்சத்தைச் சார்ந்தவர்கள்; பதினெட்டாம் நூற்றாண்டில் போலந்து நாட்டில் குடியேறியவர்கள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்களென்ற ரகசிய தகவலை மெல்லிய குரலில் ஒருநாள் மதெலென் என்னிடம் தெரிவித்தாள். தகவல் உண்மையெனில் எதற்காக அவள் தன்னை சோனியா ஓ’தொயே என்று அழைத்துக்கொள்வதற்குப் பதிலாகத் ‘சோனியா ஓதெத்’தென்று வெளியிற் சொல்லிக்கொள்கிறாள்?

சோனியாவின் சகோதரனென்று சொல்லிக்கொண்டு ஒடுங்கிய முகமும், மெல்லிய தேகமுமாக இருந்த ‘ழான்-பொரி’, பார்க்க எனக்கு நல்லமனிதனாகத்தான் தெரிந்தான். சீன சமையற்காரன் பறிமாற அவன் சாப்பிடுவதென்பது வழக்கமாக நடப்பது, ஒரு சில நாட்கள் அப்படியான சந்தற்பங்கள் அவனுக்கு அமைவதில்லை. அந்நாட்களில் எங்களுடன் சாப்பிடவிரும்பி தேடிக்கொண்டு வருவான், நாங்களும் – பிழுவும் நானும் – அவனுடன் சேர்ந்து உணவருந்துவோம். சிறுமியிடத்தில் அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத பிரியம் அவனிடத்திலிருந்தது. அவளுடைய தகப்பனோ? உடைவிஷயத்தில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்பவன் என்பதை, டையுடன் பின்னும் குத்தியிருக்கப் புரிந்துகொண்டேன். இரவில் படுப்பது எங்கே? முதலாம் அல்பெர் வீதியிலென்றால் சோனியாவின் அறையிலா அல்லது குடியிருப்பில் மூலையில் போட்டுவைத்திருக்கிற சோபாவிலா?

வருகிறபோதெல்லாம் வெகுநேரம் கழித்து பொதுவாக ‘ழானுக்கு’ என்று எழுதப்பட்ட காகித உறையுடன் புறப்பட்டுச்செல்வான். பெரிய எழுத்துக்களில் அதை பார்க்கிறபோதே சோனியாவுடைய கையெழுத்தென்று விளங்கிவிடும். மதெலென் இருக்கிறபோது எங்களைப் பார்க்க அவன் வருவதில்லை.

ஒரு நாள் இரவு சிறுமி தூங்கும்போது, அவள் அருகிலிருக்க விரும்பினான். அவளுடைய கட்டிலருகே அமர்ந்து ‘Prisonnier de Zinda’ வாசிக்கக் கேட்டான். பிறகு இருவரும் சிறுமியை முத்தமிட்டு படுக்க வைத்தோம்.

வரவேற்பறை (எனக்கு அப்படி அழைக்க விருப்பமில்லை) என்று சொல்லப்படுகிற பெரிய அறையொன்றில் சீனன் மதுவை ஊற்றிக்கொடுத்தான்.
– ஒதெத் எனக்கென்னவோ புரிந்துகொள்ளமுடியாத பெண்ணாக இருக்கிறாள்…

சட்டென்று தனது பர்சிலிருந்து முனை மடிந்து பழுத்திருந்த ஒரு நிழற்படத்தை எடுத்து நீட்டினான்.

– பிற்காலத்தில் பெரிய அளவில் ஒதெத் வாழ்விலேற்பட்ட மாறுதல்களுக்கு அந்நிகழ்ச்சிதான் ‘தொடக்கம்’. ஐந்து வருடங்கள் ஆகிறது. முக்கியமான நபரொருவரின் கண்ணிற்படநேர்ந்தது அன்றைய இரவு கொண்டாட்டத்தின்போதுதான். போட்டோ எப்படி, பிரமாதமாக இல்லை?

வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட மேசைகள், ஓவ்வொரு மேசையிலும், படாடோபமாக உடையணிந்த மனிதர்கள், மண்டபத்தில் கோடியிலிருந்த மேடையில் ஓர் இசைக்குழு. ஒளிமழையில் நனைந்தபடி காகித அட்டைகளால் ஆல்ப்ஸ்மலையை தத்ரூபமாக கொண்டுவந்திருந்தார்கள். மலைகள், அருகிலிருந்த. கிறிஸ்துமஸ் மரம், மரத்தாலான மூன்று சிறு குடில்களென அனைத்துமே செயற்கைப்பனியில் மூழ்கியிருந்தன. எதிரே விருந்தினர்களாக கறுப்பு கோட்டிலும், இரவுக்கான கேளிக்கை உடையிலும் ஆண்களும் பெண்களும், இரண்டு வரிசைகளில் விறைத்துக்கொண்டு நிற்கிற ஆல்ப்ஸ்மலை ஆபத்துதவிகள் 30பேர். அவர்கள் அருகே நிறுத்திவைத்திருக்கிறக பனிச்சறுக்கு மட்டைகள். தரையெங்கும் பனிமூடியிருக்கிறது, அதுவும் செயற்கையாக இருக்கவேண்டும். இரவு முழுக்க ஆபத்துதவிகளால் எப்படித்தான் விறைத்து நிற்க முடிந்ததோ, அவர்களுக்கு அது சிரமாக இல்லையா? நிகழ்ச்சியில் ஒதெத்துடைய பங்குதான் என்ன? நிகழ்ச்சி நன்றாக நடக்க ஒத்துழைத்ததுதான் அவளுடைய பங்கா அல்லது வேறு ஏதேனுமா? ழான்பொரியிடம் தயக்கமின்றி எனது சந்தேகத்தைக் கேட்டேன்.

– அதுவொரு கேளிக்கை இரவு. ‘பனிச்சறுக்கு விளையாட்டு இரவு’ என்ற பெயரில் நடத்தினோம்.

ஒதெத்துடைய ‘தொடக்கமென்று’ சொல்லப்படுகிற கேளிக்கை இரவுக்கான அர்த்தமற்ற அப்பனிக்காலமும் செயற்கை இரவும் பல நேரங்களில் உண்மைபோல தோற்றந்தந்து, குழப்பின. அதிலிருந்து தப்பிக்க சன்னலைத் திறந்துவைத்துக்கொண்டு முதலாம் அல்பெர் வீதியில் பெய்யும் பனியை அவதானிக்கலானேன்.

– குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையை ஒதெத் உனக்குக் கொடுத்திருக்கிறாளே, நல்ல ஊதியமா?

– ஆமாம்,- யோசிப்பதுபோல சட்டென்று முகம் மாறியது.

– சிறுமியை இவ்வளவு பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் நீங்க உண்மையில் நல்லவர்தான்.

அவனை வழியனுப்ப வாசற்கதவுவரை சென்றவன், “அவனும் அவன் சகோதரியும் பிரபுக்கள் வம்சமா? பதினெட்டாம் நூற்றாண்டில் அயர்லாந்திலிருந்து போலந்துக்கு குடியேறியதாகச் சொல்லப்படுவதில் உண்மை இருக்குமா?” மனதை அரித்துக்கொண்டிருந்த தகவல்கள் குறித்து அவனிடம் விசாரித்தேன். அக்கேள்விகள் அவனைக் குழப்பியிருக்கவேண்டும், முகத்தைப் பார்க்க அப்படித்தான் தெரிந்தது.

– என்ன … நாங்கள் போலந்து நாட்டவர்களா? யார் சொன்னது..ஒதெத்தா?

அவனது பெரிய கனடா கம்பளி ஆடையைய அணிந்துகொண்டான்.

– உங்களுக்கு விருப்பமென்றால், நாங்கள் போலந்து நாட்டவர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம். ஆனால் நாங்கள் ‘போர்த் தோரே'(8) போலந்துக்காரர்கள்.

இறங்கிகொண்டே அவன் சிரித்த சிரிப்பு படிகளில் பரவித் தணிந்தது. கோட் ராக் வைத்திருக்குமிடத்தில் நான் சிலைபோல நின்றேன்.

இருண்டும், தரை விரிப்புகள் சுருட்டப்பட்டும், ஆள் நடமாட்டமின்றியும் இருந்த அறைகளை மீண்டும் கடந்து வந்தேன். தளவாடங்கள் அகற்றப்பட்ட அடையாளத்துடனிருந்த வெற்றுத்தரையைப் பார்க்க ஏதோ அமீனா புகுந்த வீடுபோல இருந்தது. சீனர்கள் இருவரும் வழக்கம்போல சமையற்கட்டுக்குள் சீட்டுவிளையாடியபடி இருக்கவேண்டும்.

அவள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். ஒருக்களித்து கன்னத்திற்கு தலையணையை கொடுத்திருந்தாள். ஆள் அரவமற்று வெறிச்சோடிகிடக்கும் வீட்டில் சிறுமி ஒருத்தி உறங்குவதும், அவளைக் கண்காணிக்கவென்று அருகிலேயே ஒருவன் இருப்பதும், அப்படியொன்றும் அலட்சியபடுத்தக்கூடிய விஷயங்களல்ல.

எல்லாம் ஒரு நாள் குட்டிச்சுவரானது. பிழுவை எப்பாடுபட்டாகிலும் கேளிக்கைக் கூட மேடைகளில் ஏற்றி நட்சத்திரமாக்கிக்காட்டுவதென்ற மதெலென் லூயியின் யோசனையை, சோனியா சந்தோஷத்துடன் வரவேற்றதோடு அதை நிறைவேற்றி காட்டுவதென்றும் தீர்மானம் செய்ததே அதற்கான காரணம். அவர்களிருவரின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டி பிழுவுவைத் தயார் செய்ய ஆரம்பித்தார்கள். முறைப்படி கொடுக்க வேண்டிய பயிற்சியையும் பாடத்தையும் கொடுத்தால் பிழுவும் நாளைக்கே அமெரிக்க குழந்தை திரை நட்சத்திரத்தைப்போல பேரும் புகழும் அடையலாம் யார் கண்டது. இனி தன்னுடைய வாழ்க்கையே பிழுதான் என்று முடிவெடுத்தவள்போல தனது கலைவாழ்க்கையைக் குறித்து அக்கறைகொள்வதை சோனியா முற்றாகத் தவிர்த்தாள். மதெலென் லூயியும், சோனியாவும் தங்கள் நிறைவேறாத ஆசைகளை சிறுமி பிழுவின்மூலம் அடையத் தீர்மானித்ததாகத்தான் எனக்குப் பட்டது.

ழான் குட்ழோன் வீதி, க்யுல்ம் பள்ளி தலைமை இயக்குனரான பெண்மணியிடம், பிழு இனி அவளது தனிவகுப்புக்கு வர சந்தர்ப்பமில்லையென்றேன். தனக்கிருந்த ஒரே மாணவியை இழந்த வருத்தம் அவளுக்கு. அவளுக்காகவும் பிழுவுக்காகவும் நானும் வருந்தினேன்.

இனி தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதவிதமான ஆடை அலங்காரத்துடன் நிழற்படங்கள் எடுத்து அனுப்பவேண்டியிருக்குமில்லையா? அந்த ஆடைகளையெல்லாம் வைப்பதற்கு இடம் வேண்டுமே, முன்னேற்பாடாக அலமாரியொன்று தருவிக்கப்பட்டது. குதிரை வீரனைப்போல, நார்வே பனிச்சறுக்கு வீராங்கனையான சொஞ்சா ஹெனிக்கே உரிய பாவனையில், ஆடைஅலங்கார துறைசார்ந்த சிறுமியைப்போல விதமான உடைகள் தயாரிக்கப்பட அவற்றை அணிந்துப் பார்க்கவென்றே நேரங்காலமின்றி அவர்கள் வெளியில் போகவேண்டியிருந்தது. மதெலென் லூயியும் சோனியாவும், மூடிய சொகுசுக்காரில் சிறுமியை வலிய அழைத்துக்கொண்டுபோய் திணிப்பதும், பனிமூடிய முதலாம் அல்பெர் வீதியிலிருந்து கார் புறப்பட்டுப்போவதுமான காட்சி நாள் தவறாமல் நடந்தது. என்னால் முடிந்ததெல்லாம் சன்னலூடாக வேடிக்கைப் பார்ப்பது, பார்த்தேன். அந்நேரத்தில் மதெலென்-லூயியைப் பார்க்க சர்க்கஸ் கூடாரங்களில் குதிரைகளை பயிற்றுவிக்க கையில் சாட்டையுடன் திரிகிற பயிற்சியாளர்போல இருப்பாள்.

பிழுவின் நட்சத்திர தகுதிக்காக, அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள், அத்தனை வகுப்புக்களுக்கும் அழைத்துசெல்லும் பொறுப்பு எனக்கென்று ஆயிற்று.: பியானோ வகுப்பு, நடன வகுப்பு, சொற்களை சரியாக உச்சரிக்க போட்ழோன் வீதியிருந்த எங்கள் பழைய ஆசிரியை என ஏற்பாடு செய்திருந்தார்கள். பயிற்சி வகுப்பு முடிந்த நேரங்களில் எனா வீதிலிருந்த நிழற்பட நிறுவனமொன்றிற்கு செல்லவேண்டும், அங்கே பலவிதவிதமான தோற்றத்தில், விதவிதமான ஆடை அலங்காரத்துடன் பிழுவைப் படமெடுப்பார்கள். குதிரை ஏற்ற வகுப்புமுண்டு. அது புலோஜ்ன் பகுதியிலிருந்த குடைராட்டின மரக்குதிரையில் நடந்தது- அதுவொன்றுதான் திறந்தவெளியில் அவளெடுத்துக்கொண்ட பாடம். அந்த வகையில் சிறுமிக்கு மிகவும் சந்தோஷம், சிவந்த கன்னங்களூடாக அம்மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டாள். சின்னன்சிறு பிள்ளையாய், கொள்ளை அழகுடன் அதிகாலை பனிமூட்டத்தையும், பனிப்பொழிவையும் நினைவூட்டும் சாம்பல் வண்ணக்குதிரையில் அவள் சுற்றிவரும் காட்சி இன்றைக்கும் கண்முன்னே தெரிகிறது.

பாடங்கள் பயிற்சிகள், படமெடுத்துக்கொள்ளவென்று ஸ்டுடியோக்கள் என அலைந்து களைத்தபோதிலும், குழந்தை பிழு ஒருவரிடமும் தனது வருத்தத்தை சொல்லிக்கொண்டதில்லை. மதெலென் லூயியும், சோனியாவும், அவளை படுத்தியதுபோதும் என்று நினைத்தார்களோ என்னவோ, அவளுடை வழக்கமான காரியங்களிருந்து விடுதலைத் தந்தார்கள். இருவருமாக ட்ரொக்காடெரோ பூங்காவரை சென்று வந்தோம். குழந்தை பனிச் சறுக்கு வண்டியியிலே ஆழ்ந்து உறங்கிவிட்டாள்.

பாரீஸ் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது என்றாகிவிட்டது, நான் பிரான்சின் தென்பகுதியிலிருந்த ‘லெ மிதி'(9) க்குச் செல்வதென்று தீர்மானித்தேன். நகராட்சி பள்ளியில் என்னுடன் படித்த நண்பன் கொடுத்த அடையாள அட்டையில் இருந்த பெயர்கூட மறந்துவிட்டது. பிழுவை பிழுவென்று ஒருவரும் அழைத்ததில்லை, சோனியாவும் அப்படித்தான், சோனியா என்ற பெயரில் ஒருவரும் அவளை அழைத்து கேட்டதில்லை. என்னையும் லெனோர்மாண்ட் என்று பெயரிட்டு ஒருவரும் அழைத்ததில்லை.

பிழுவை என்னுடன் அனுப்பிவையுங்கள், லெ மிதியில் அவள் சந்தோஷமாக இருப்பாள் என்று சொல்லிப்பார்த்தேன் பலனில்லை. பிறரை சந்தோஷப்படுத்தி பார்த்திராத கனத்த சாரீரத்தவளான மதெலென் லூயி அவளை திரை நட்சத்திரமாக்கித் தீருவது என்ற யோசனையில் பிடிவாதமாக இருந்தாள். சோனியாவோ சுயமாக சிந்திக்கப் போதாதவள், உறுதியற்றவள், எண்ணத்தில் தெளிவற்றவள்… பிறகு ‘Sonate au clair de lune’ போன்ற பாடலைக் கேட்பதில் பித்தாக இருப்பவள்…எனினும் அவள் எதையோ பிறரிடம் மறைக்கிறாள் என்பது நிச்சயம், மெல்லிய திரைக்கும், புகைமூட்டத்திற்கும் பின்னே சேரிப்பெண் ஒருத்தி ஒளிந்திருக்கிறாள்.

ஒரு நாள் விடியற்காலை, சிறுமி உறக்கம் கலைவதற்காக முன்பாகவே நான் புறப்பட்டு விட்டேன். ஒரு சில மாதங்கள் கடந்திருக்கும், நீஸ் நகரில் வார இதழொன்றில் திரைச்செய்திகள் தலைப்பிட்ட பக்கத்தில், அவளுடைய படத்தை போட்டிருந்தார்கள். ‘Le Carrefour des archers’ என்ற திறைபடத்தில் அவளும் நடிப்பதாகச் செய்தி. இரவுக்கான ஆடை, முகம் கொஞ்சம் ஒடுங்கியிருப்பதுமோல தெரிந்தது, கையில் டார்ச்சுடன் யாரையோ தேடுவதுபோல- படம். படத்திலிருந்த இடங்கூட முதலாம் அல்பெர் வீதியிலிருந்த தொகுப்பு வீட்டை ஒத்திருக்கிறது. யாரைத் தேடுகிறாள்?

ஒருவேளை என்னையா?

அதன்பிறகு அவளைப் பற்றிய எந்த செய்திகளுமில்லை. எத்தனையோ பனிக்காலங்கள் வந்துபோய்விட்டன. அவற்றைக் கணக்கிடத்தான் எனக்குத் தைரியமில்லை.

புபூலும் ஒரு வழியாக வாழ்க்கையில் ஜெயித்துவிட்டான், நெகிழ்வும், துள்ளலும் கொண்ட ஒரு ரப்பர் பந்தின் குணத்தை அவன் பெற்றிருந்தது காரணமாகவிருக்கலாம். ழான் கூட்ழோன் வீதியிலும், க்யுல்ம் பள்ளியிலும் காலையும் மாலையும் தேடிச்சென்று என்னால் அழைத்து வரப்பட்ட அவள் இனியில்லையென்றாகிப்போனது. நதிக்கரை வீதிகளில் இப்பொழுதும் நடந்துபோகிறேன். குதிரைகளில் முதலாம் அல்பெர் சிலையையும், சிமொன் பொலிவார் சிலையையும் பார்க்கிறேன், இரண்டுக்குமான இடைவெளி ஒரு நூறு மீட்டர்கள் இருக்கலாம். குளிர்காலத்தில், சிலைகளிரண்டும் வெண்பனியால் போர்த்தப்பட்டிருப்பதை பார்க்கிறபோதெல்லாம், எப்போதோ வந்துபோன அப்பனிக்காலத்தை நினைத்துக்கொள்கிறேன். குதிரை வீரர்கள் மாத்திரம் அங்கேயே இருக்கிறார்கள், இடம்பெயர விருப்பமில்லை போலிருக்கிறது. தங்களுக்குபின்னே சாம்பல் வண்ன நீரில் தோணிகள் ஏற்படுத்திய ததும்பும் நீரலைகளைக் குறித்த அக்கறையின்றி விறைத்துக் கொண்டு குதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
——————————————————————————————————–
1. பிழு(Bijou)- jewel- பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் பிரியத்துக்குரிய பொருளை செல்லமாக ‘பிழு’ என்று சொல்லிக்கொள்வார்கள், தமிழில் ‘என் தங்கம்’, ‘என் வைரம்’ என்று சொல்லிக்கொள்வதுபோல.
2. Comptesse- பிரபுவின் மனைவி அல்லது பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணி.
3. Music-Hall – பாரீஸில் உள்ள புகழ்பெற்ற கேளிக்கை விடுதி
4. பனி உறைந்த ஏரிகளும், பனிமூடிய மலைகளும் நிறைந்த சுவிஸ் நாட்டின் தென்பகுதிலுள்ள குளிர்கால விளையாட்டிற்கு புகழ்பெற்ற ஸ்தலம்.
5. Place de la Concorde- பாரீஸில் புகழ்பெற்ற ஷான்செலீஸே அவென்யூவுக்கு அருகிலுள்ள மிகப்பெரிய திறந்தவெளி
6. Robert Surcouf பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த பிரெஞ்சு போர்கப்பல் தளபதி
7. Boulogne, பிரான்சு நாட்டின் வடபகுதியைச் சேர்ந்த கடற்கரை பிரதேசம்
8. Porth Dore – போர்த் தொரே- தமிழில் சொல்வதென்றால் நுழைவு வாயில்- பாரிஸ் மாநகரத்தின் உட்புக பல நுழைவிடங்களுள்ளன, அவற்றுள் இதுவுமொன்று. 1920-30களில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவந்த ஏழை போலந்துமக்களைக் குறித்த அருங்காட்சியகமொன்று அங்கிருந்தது.
9. பிரான்சுக்கு தெற்கேயுள்ள பிரதேசம்

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா