சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

சின்னக்கருப்பன்


குற்றவாளி என்று நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுடன் இரண்டு முறை தேர்தல் கூட்டு ஏற்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி இன்று குற்ற மந்திரிகள் மத்திய அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டதை விமர்சித்து பாராளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.

தேஜகூ அமைச்சர்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேச எழுந்தபோதெல்லாம் வெளி நடப்பு செய்த காங்கிரஸ் கட்சியினர் இன்று குற்ற அமைச்சர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

தேஜகூ கீழ்க்குறிப்பிட்ட அமைச்சர்கள் மத்திய மந்திரிசபையில் இருக்கக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறது.

லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிர ஜனதாதளம்). மாட்டுத்தீவன் ஊழல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்தவர். குஜ்ராலின் அறிவுரைப்படி தன் மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சராக ஆக்கி சிறையிலிருந்து கொண்டே பிகாரின் நிர்வாகத்தைக் கவனித்தவர்.

தஸ்லிமுதீன் (ராஷிட்ர ஜனதாதளம்) பல முறை பல குற்றங்களுக்காக சிறை சென்றவர். தேவ கவுடா அரசாங்கத்தில் பதவி ஏற்றபின்னர் குற்ற பின்னணிக்காக பதவியிலிருந்து விலக்கப்பட்டவர்

ஜெய் பிரகாஷ் யாதவ் (ராஷ்டிர ஜனதாதளம்). 2002இல் போலி பிஈடி பட்டங்கள் மோசடி வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டதால் ராப்ரி தேவி மந்திரிசபையிலிருந்து விலக வேண்டி வந்தவர்.

எம் ஏ ஃபாதிமி (ராஷ்டிர ஜனதாதளம்) தாவூத் இப்ராஹிம் என்ற மாஃபியா தலைவனின் நண்பனான பாஜ்லுர் ரஹ்மானுக்கு பாதுகாப்பான இடம் கொடுத்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர். கடத்தி பணம் பறிப்பது போன்ற வழக்குகளில் இருப்பவர்.

ஷிபு சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) பி வி நரசிம்மராவிடம் லஞ்சம் பெற்றதற்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்

ஜக்தீஷ் டைட்லர் (காங்கிரஸ்) 1984இல் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய கலவரத்தில் முக்கிய குற்றவாளி என நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டவர்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாபரி மசூதி வழக்குகளை விட இது ஒன்றும் பெரிய வழக்குகள் அல்ல என்று கூறுகிறார்கள். ஆனால் இதே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் ‘சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் ‘ என்று பேசினார்கள். அதுவும் மன்மோகன் சிங் பேசினார்.

நான் முன்பே எழுதியதுபோல, பரிசுத்தமான ஆள்தான் என்னைக் குற்றம்சாட்டவேண்டும் என்ற கோரிக்கை அபத்தமானது. இவர்கள் மந்திரிசபையிலிருந்து நீக்கப்படவேண்டும். மேலும் காங்கிரஸின் வருங்காலப் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி கூறியிருப்பதும் நகைச்சுவையானது. ‘பாத்திரம் கருப்பாக இருக்கிறது என்று சட்டி குறை கூறுவதைப் போன்றது ‘ என்று கூறியிருக்கிறார். இந்த வார்த்தை மூன்றாம் நபர்கள் கூறுவது. இங்கே பாத்திரமான காங்கிரஸ் தலைவரே கூறியிருப்பது, காங்கிரஸ் அரசு ஊழல் அரசுதான் என்று ஒப்புக்கொள்வது போன்றது. புரிந்துதான் பேசுகிறாரா என்று தெரியவில்லை.

மேலும் தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசில் பங்கு பெற்ற மந்திரிகள் மீது வழக்குகள் இருந்தனவே தவிர அவர்கள் எந்த நீதிமன்றத்தாலும் குற்றவாளி என்று அறிவிக்கப்படவே இல்லை. (வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர ஏராளமான நேரம் காங்கிரஸ் அரசு காலத்திலும், ஜனதாதள அரசு காலத்திலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு காலத்திலும் இருந்தது. டான்ஸி வழக்குப் போல இழுத்தடிக்கப்பட்டது) ஹெச் கே எல் பகத், ஜக்தீஷ் டைட்லர், லலித் மாகான் ஆகிய மூன்று காங்கிரஸ் தலைவர்களும் முக்கியப் பங்கு வகித்ததாக அனைத்து மனித உரிமை குழுக்களும் கூறியிருக்கின்றன.

இந்த அரசில் பங்கு பெற்றிருப்பவர்கள் ஏற்கெனவே நீதிமன்றத்தால் குற்றவாளி என பல முறை அறிவிக்கப்பட்டவர்கள், சிலர் சிறைச்சாலை வாசமும் புரிந்தவர்கள்.

முன்பு தேஜகூ மந்திரிகள் பதவி விலகவேண்டும் என்று கோரிய டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து ஆகிய பத்திரிக்கைகள் வாய் மூடி இருக்கின்றன. போலிட்பரோவிலிருந்து எந்த கடிதமும் இன்னும் வரவில்லையோ என்னவோ ? குஜராத் கலவரங்களுக்கு எதிராக மிகச்சரியாகவே குரல் எழுப்பிய டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தி ஹிந்துவும், இன்று ஜக்தீஷ் டைட்லர் மந்திரிப்பதவி பெறுவதைப் பற்றி எந்தவிதமான கவலையையும் தெரிவிக்கவில்லை. இதில் ஏதும் ஆச்சரியமில்லை.

இந்த மந்திரிகள் மத்திய மந்திரிசபையிலிருந்து நீக்கப்படவேண்டும்.

***

சோனியா காந்தி எந்த அரசாங்க கோப்புக்களையும் பார்க்கலாம். அதற்காகத்தான் அவருக்கு காபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார் சட்ட மந்திரி பரத்வாஜ்.

http://www.newindpress.com/Newsitems.asp ?ID=IEH20040608140145&Title=Top+Stories&Topic=0&

இதில் அபத்தம் என்னவென்றால், காபினட் அந்தஸ்துக்கும் கோப்புக்களைப் பார்க்கும் உரிமையும் வெவ்வேறானவை. இது கூடத்தெரியாத இவர் ஒரு சட்ட மந்திரி.

கோப்புக்களை பார்க்க வேண்டுமென்றால் அவர் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும். அவர் ரகஸியக்காப்பு பிரமாணம் எடுக்கவேண்டும். ரகசியக்காப்புப் பிரமாணம் எடுக்காத எவரும் அரசாங்க கோப்புக்களைப் பார்க்கவியலாது.

எப்படி சோனியா கோப்புக்களைப் பார்க்கலாம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி பாய்ந்தது. உடனே காங்கிரஸ் சார்பாக பத்திரிக்கையை சந்திப்பவர் ‘அவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஒப்புக்கொண்டிருக்கும் குறைந்தபட்ச திட்டம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க கோப்புக்களை கேட்கும் உரிமை அவருக்கு இருக்கிறது ‘ என்று பேசுகிறார்.

இதைப்பற்றியும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ அல்லது தி ஹிந்துவோ கவலைப்படவில்லை..

நடத்துங்கள்..

***

ரொனால்ட் ரீகன்

அமெரிக்காவின் எம்ஜியார் என்று பேசி எம்ஜியாரை அவமரியாதை செய்ய பலருக்கு உதவிய ஹாலிவுட் பி பட ஹீரோ ரொனால்ட் ரீகன் முற்றிய அல்ஜைமர் வியாதி காரணமாக மறைந்தார். வயது 93.

இவர் அமெரிக்காவில் ஆள ஆரம்பித்த காலமே அமெரிக்காவை தீவிரவாதம் கைப்பற்ற ஆரம்பித்த காலம். ஆப்ரஹாம் லிங்கன் இருந்த ரிபப்ளிகன் கட்சி பாட் ராபர்ட்ஸனின் தீவிரவாத அமெரிக்க கிரிஸ்துவ தாலிபானாக உருமாற ஆரம்பித்த காலம். அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு வெளியே அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கண்காணிப்புக்கு வெளியே வெளிப்படையாக நிகராகுவா, ஈரான் காண்ட்ரா, ஈராக் சதாம் உசேனுக்கு ஆபத்தான ஆயுதங்கள் சப்ளை, சோவியத்துக்கு எதிராக முஜாஹிதீன் பாலூட்டி வளர்ப்பு ஆகிய அனைத்தும் ஆரம்பித்து வைத்தவர் இவரே. இவர் பொறுப்பா அல்லது இவரது முகமூடிக்குப் பின்னால் ஜார்ஜ் புஷ் (மூத்தவர் ) ஆடிய ஆட்டமா என்பது வரலாற்றாசிரியர்களிடம் விட்டு விடுகிறேன்.

சாவைக் காட்டி ஓட்டு வாங்குவதை இந்திய அரசியல் வாதிகளிடம் கற்றுக்கொண்டார்கள் போலிருக்கிறது. ரொனால்ட் ரீகனை வைத்து ஓட்டுப் பொறுக்க ரிபப்ளிகன் கட்சி ஆரம்பித்துவிட்டது என்றே தோன்றுகிறது.

***

ஜி-8 என்ற வளர்ந்த நாடுகளின் மாநாட்டில் ஜார்ஜ் புஷ் ஈராக்குக்கு இவர்கள் நிறையச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சுமார் 10 லட்சம் மக்களும் குழந்தைகளும் சாவின் விளிம்பில் பட்டினியை எதிர்கொண்டு சூடானின் டார்ஃபார் பகுதியில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் அது கவலையாக இல்லை. சூடானில் எண்ணெய் இல்லை என்பதால் அமெரிக்காவுக்குக் கவலை இல்லை. அங்கே கருப்பின முஸ்லீம்களை அரபு முஸ்லீம்களேதான் அடிக்கிறார்கள் என்பதால் இடதுசாரிகளுக்கும் கவலையில்லை. முஸ்லீம்களை கிரிஸ்துவர்களோ அல்லது யூதர்களோ அல்லது இந்துக்களோ அடிக்கவில்லை என்பதால் முஸ்லீம் நாடுகளுக்கும் முஸ்லீம் போராளிகளுக்கும் கவலையில்லை. யூதர்கள் அடிபடவில்லை என்பதால் உலகப் பத்திரிக்கைகளுக்கும் கவலையில்லை. கிரிஸ்துவர்கள் அடிபடவில்லை என்பதால் மேலை நாடுகளுக்கும் கவலையில்லை.

இந்துக்கள் அடிபடவில்லை என்பதால் இந்து அமைப்புகளுக்கும் கவலையில்லை. தேவைப்பட்டால் மட்டும் ‘வசுதைய்வ குடும்பகம் ‘ என்று பேசும் இந்து அமைப்புக்கள் இதுவரை ஒரு உலகளாவிய உதவி அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் மனித நேயத்தின் பொருட்டு, இயற்கை அழிவின் போதும், மனிதன் உருவாக்கிய அழிவின் போதும், உதவிக்கரம் நீட்ட இவர்களல்லவா ஒரு அமைப்பை ஏற்படுத்தி உதவி தந்திருக்க வேண்டும் ?

யாருக்கும் வெட்கமும் இல்லை.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்