நாதன்
நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ் நாடகர்களை ஒரு சேரக்காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் இலக்கிய குழுமனப்பான்மையை நாடக மனப்பான்மை மிஞ்சி விடும் என்றாலும் அவர்களை ஓரிடத்தில் கூடச்செய்ததில் ‘நாடகவெளி ‘ ரெங்கராஜனின் பங்கு முக்கியமானதாகும்.
தனது, ‘தமிழ் நாடகச்சூழல் – ஒரு பார்வை ‘ என்ற நூல் வெளியீட்டு விழாவை மறைந்த கன்னட நாடகக்கலைஞர் பி.வி.காரந்த்துக்கான அஞ்சலிக்காகவும் ‘தமிழில் புதிய நாடகங்களுக்கான சூழல் ‘ என்ற தலைப்பிலான பலரது உரைகளுக்கான இடமாகவும், ‘சுடரில் அதிர்வுற்ற ஒப்பனை முகங்கள் ‘ என்ற முருகபூபதியின் நிழற்படக்கண்காட்சி அரங்காகவும் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கதாகும். இடம்; புக் பாயிண்ட் அரங்கம், அண்ணாசாலை, சென்னை, நாள்; 22.09.02.
அஞ்சலி
***********
இந்திய நாடக அரங்கில் மண்ணின் தன்மையை இழைய விட்டு புதுக்காட்சிகளை சக்தியால் உருவாக்கியவர் பி.வி.காரந்த் இவரது நாடக இசை நிபுணத்துவம் கொண்டது. அதனாலோ என்னவோ காரந்தின் நாடகங்களில் இசைக்கு முக்கிய இடம் உண்டு. நாட்டுப்புறக்கலைகளின் ஜீவனும், கலாச்சாரமும் அவரது நாடகங்களுக்கோர் தனித்த அடையாளத்தைத்தந்தன. எளிமையும், கிராமத்து இயல்பும் மாறாத அவரது பண்புகள் எவரிடமும் நெருக்கத்தை உண்டு பண்ணும்.
காரந்த் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் பேரா. சே. இராமானுஜம் (இவர் தேசிய நாடகப்பள்ளி(தில்லி) மாணவர், தமிழ், மலையாள நாடக உலகில் மிகமுக்கியமான நாடக இயக்குநர்). அவர் பேசியதிலிருந்து..
* தேசிய நாடகப்பள்ளியின் இயக்குநராக இருந்த காரந்த், அப்பள்ளியின் செயல்பாடுகளை டெல்லியோடு மட்டும் நிறுத்திக்கொள்ள விரும்பாமல், பிறமாநிலங்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டார்.
* தமிழகத்தில் பல நாடகப்பட்டறைகள் தேசிய நாடகப்பள்ளியால் நடத்தப்பட்டுள்ளன. அதற்குக் காரணமானவர் பி.வி.காரந்த்.
* காரந்தின் நாடகபாதிப்பு கன்னட நாடகக்கலைஞர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. இன்றும் யாராவது கன்னட நாடகம் போட்டால் அதில் காரந்தின் பாதிப்பு இருக்கும்.
* காரந்த் தேசிய நாடகப்பள்ளியின் இயக்குநராக இருந்தபோது, உருவாக்கிய பாடதிட்டம் மிக முக்கியமானது-சிறப்பானது.
நூல் வெளியீடு
******************
‘நாடகவெளி ‘ என்ற இதழை பல ஆண்டுகள் நடத்திய ரெங்கராஜன், முன்னாள் வங்கி ஊழியர். ‘வீதி ‘ நாடக அமைப்பில் செயலாற்றியவர். தொடர்ந்து நாடகம்-இலக்கியம் தொடர்பாக பல்வேறு இதழ்களில் சிரத்தையுடன் எழுதிவருபவர். இவர் எழுதிய நாடகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்புதான் ‘தமிழ் நாடகச்சூழல்-ஒரு பார்வை ‘. இந்நூலை பேராசிரியர். சே. ராமானுஜம் வெளியிட, ந. முத்துசாமி (கூத்துப்பட்டறை – நிறுவனர்) பெற்றுக்கொண்டார்.
நூலை பெற்றுக்கொண்ட ந. முத்துசாமி, ‘இந்த நூலில் உள்ள பல கட்டுரைகளை முன்னமே படித்திருந்தாலும் ஒரே நேரத்தில் படிக்கும்போது ரெங்கராஜனின் மொழி நடையை, அற்புதமாய் எழுதும் பாங்கை உணரமுடிகிறது. எங்கள் குழுபற்றிய விமர்சனத்தைக்கூட நிதானமாய் கேட்கமுடிகிறது. அவரது விமரிசனத்தில் அக்கறை இருப்பதை அறிகிறேன் ‘ என்றார்.
பேரா.சே.இராமானுஜம், ‘இது ஒரு டாக்குமெண்ட். பல இடங்களில் பல நேரங்களில் நடந்தவற்றை பதிவு செய்திருக்கிறார். இதன் அட்டைப்படம் கூட மிக கவனமாய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பார்சி நாடகம் தொடங்கி பல்வேறு விஷயங்களை ஆழமாகப் பேசுகிறார் நூலாசிரியர். இந்த நூல் முக்கியமான நாடகநூல் ‘ என்றார்.
கருத்தரங்கம்
***************
‘தமிழில் புதிய நாடகங்களுக்கான சூழல் ‘ என்ற தலைப்பில் சே.ராமானுஜம், ந.முத்துசாமி, மு. ராமசாமி, கே.ஏ.குணசேகரன், ஞாநி, நடிகர் நாசர், பிரளயன், மங்கை, பிரசன்னா ராமஸ்வாமி, கே.எஸ்.கருணாபிரசாத், வேலு.சரவணன், முருகபூபதி, கலைராணி ஆகியோர் பேசினர்.
இன்றைய நாடகச்சூழல் எப்படி உள்ளது, அதை எப்படி முன்னெடுக்கலாம் என்று பேசியதை விட தங்களது செயல்பாடுகள் பற்றி கூடுதலாகப்பேசினர்.
* நடிகர்களுக்கு பயிற்சி அவசியம்.
* தொழில்முறை நாடகக்குழுக்கள் நாடகத்திற்கு நிறைய செய்யமுடியும்.
* நாடகம் போடுவதில் தெளிவு வேண்டும்.
* வீதி நாடகங்கள் மக்களைச் சென்றடைய சரியானவடிவம்.
* நாடகசெயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள ஒரு ‘நியூஸ் லெட்டர் ‘ கொண்டுவரலாம்.
* தலித்துகளின் அரங்கம் பற்றி பேசப்படவேண்டும்.
* நாடகத்தில் ஈடுபடுவோர் சினிமாவை மனதில் வைத்து இயங்கக்கூடாது.
போன்றவை முக்கிய பங்கு வகித்தன.
வந்திருந்தவர்கள் பெரும்பாலும் நாடகம் தொடர்பானவர்கள் என்பது முக்கியமானதாகப்பட்டது. பேசியவர்கள் பலரிடம் மேலோட்டம் தலைதூக்கி இருந்தது.
ரெங்கராஜன் போன்று நாடகத்தின் மீது அக்கறை உள்ளவர்களும் விமரிசனம் உள்ளவர்களும் நாடகத்தயாரிப்புகளிலும் ஈடுபடவேண்டும். மேலும் தயாரிக்கப்படும் நாடகங்கள் பல இடங்களில் நிகழ்த்தப்படுவதுதான் ஆரோக்கியமான நாடகச் சூழலை உருவாக்க முடியும்.
***
swami@recruiterscommunity.com
- ஆதங்கம்..
- சகடையோகம்
- திருமாவளவன் கவிதைகள்
- சென்னை நாடக சந்திப்பு
- A Collections of Two Short Stories of Eelam Tamil Writers
- ‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)
- வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)
- தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……
- மெக்சிகோ பாணி கோழி டாக்கோ
- அறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)
- விண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- விழி, மொழி, பழி
- எதிர்பார்ப்பு
- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )
- காவிரீ!
- கடல் பற்றிய நான்கு கவிதைகள்
- நீ.. நான்… அவன்…
- நானும், தாத்தாவும் வேப்பமரமும்.
- பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்
- சின்னப் பயல்கள்
- சென்னை நாடக சந்திப்பு
- கொடுப்பதும் கொள்வதும் கொடுமை
- மன்னியுங்கள், ஞாநி
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- கனடாவில் வீடு