காந்தியை எப்படி அணுகியிருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ?
ஜெயகாந்தன்:
எப்படி என்றா ? நேரடியாக. மனதை திறந்து போட்டபடி. காந்தியை அறிவது மிக
எளிய விஷயம். அவருடன் ஒட்டி நாமும் நின்றால் போதும்.அவருடைய அந்தரங்கம்
நமது பாரம்பரிய மனம்தான். நமது தாத்தாவைப் புரிந்து கொள்வதற்கும் அவரைப் புரிந்துக்
கொள்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவரது கருணையை நாம் கண்டறிந்தால்
போதும். ஆனால் இடதுசாரிகள் காந்தியை விவாதிக்க அழைத்தார்கள். அதில் காந்தி
தோற்றார். கம்யூனிஸ்ட்டுகள் இலக்கியத்தை அணுகியமுறையும் இதுதான். இந்த தருக்கபுத்தியே
அவர்களுடைய மிகப்பெரிய பலவீனம்.
செ.ஜெகதீஷ்:
காந்தியின் இன்றைய முக்கியத்துவம் என்ன ?
ஜெயகாந்தன்:
நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். காந்தி ஒரு ஆளுமை. ஒரு சித்தாந்தம் அல்ல.
அந்த மனிதரை நாம் அறியும் போது நமது கண்கள் இந்த கலாச்சாரத்தையும் இங்குள்ள
வாழ்வையும் வேறு விதமாகப் பார்க்க ஆரம்பிக்கும். அது மிக முக்கியமானது. நமது கண்கள்
இப்போது நம்முடையவையல்ல. அவற்றில் உள்ள ரத்தமும் சதையும் மட்டும்தான் நம்முடையவை.
பார்வை இரவல் வாங்கப்பட்டது. இரவல் பார்வையும் இரவல் குரலுமாக எவரும் இந்நாட்டு
மக்களை அணுகி விட முடியாது.
ஜெயமோகன்:
காந்தி தரிசனங்களின் அடிப்படைகள் என்று சில உள்ளன. ஒன்று இயற்கைக்கும் மனிதனுக்கும்
இடையேயான பிரியம் நிரம்பிய பணிவுள்ள உறவு. இரண்டு சுகபோகங்களில்
புலனடக்கமும் நுகர்வுப்போக்குக்கு எதிரான எளிய வாழ்வும். மூன்று மையப்படுத்தலுக்கு
எதிராக எல்லா நிலையிலும் பரவலாக்கத்தை முன்னிறுத்திப் பார்த்தல். குறிப்பாக அதிகாரம்,
திட்டமிடல், செல்வப்புழக்கம் முதலியவற்றில். நான்கு சிறிய விஷயங்களின் தத்துவார்த்தமான
முக்கியத்துவம். இவையெல்லாம் காந்திய தரிசனங்களை விட்டு வளர்ந்தெழுந்து சமகாலத்து
முக்கியமான கருத்தியல் போக்குகளாக மாறியுள்ளன.
ஜெயகாந்தன்:
யார் அப்படி கருதுகிறார்கள் ? காந்தியை புரிந்து கொள்ளாத
சில மேற்கத்திய அறிஞர்கள். அவர்கள் காந்தியைத் தங்கள் மேதமையால், தருக்க அறிவால்,
புரிந்து கொள்கிறார்கள்.அவர்கள்தான் காந்தியிலிருந்து காந்தியிசத்தை உருவாக்குகிறவர்கள்.
ஆளுமையிலிருந்து சித்தாந்தத்தை உருவிஎடுத்தாக வேண்டும் அவர்கள். அது அவர்களுடைய
மரபு. அந்த சித்தாந்தங்களும் பிற சித்தாந்தங்களைப் போல உதவாத சொற்களாக மாறும்.
எல்லா சித்தாந்தங்களும் வெறும் விவாதப் பொருளாக கண்டிப்பாக ஒரு நாள் மாறும்.
காந்தியை அறிதல் என்பது முற்றிலும் வேறு விஷயம்.
ஜெயமோகன்:
மக்கள் சித்தாந்தங்களைப் புரிந்துகொள்வதில்லை, மனிதர்களையே புரிந்துக் கொள்கிறார்கள்
என்று ஒரு கருத்து உண்டு இல்லையா ?
ஜெயகாந்தன்:
மக்களுக்கு அறிவு அதிகம். அறிவுஜீவிகளை விடவும்.
ஜெயமோகன்:
விவேகானந்தர் மீது உங்களுக்கு எப்போதுமே ஒரு ஈடுபாடு இருந்து வந்துள்ளது இல்லையா ?
என்ன காரணம் ?
ஜெயகாந்தன்:
விவேகானந்தர் இந்த மண்ணின் ஆண்மையின் அடையாளம். சிறுவயதில், அவருடைய
எந்த நூலையும் படிப்பதற்கு முன்னதாகவே, அவரைப் பற்றி கேள்விபடுவதற்கும் முன்பே,
அந்தக் கைகாட்டி நிமிர்ந்து நிற்கும் கோணம் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் உள்ள
தன்னம்பிக்கை. பிறகு விவேகானந்தரை படித்தும் சிந்தித்தும் நெருங்கிய போது தெரிந்தது.
அவர் சொல்வதும் அதுதான். பயமின்மை. தெளிவாகவும் தெளிவின்றியும் நம்மை பீடிக்கும்
எந்த அச்சத்தையும் நம்மீது ஒட்டவிடாமலிருத்தல். அஞ்சாமை. அதுதான் விவேகானந்தர்
தத்துவம். விவேகானந்தரின் தனிப்பட்ட குணமும் அதுதான். விவேகானந்தர் யோகத்தைப்
பற்றியும் பிரம்மச்சரியத்தைப் பற்றியும் சொல்லியிருக்கும் விஷயங்கள் இன்றும் எனக்கு
ஏற்புடையவை அல்ல. அவர் திருமணம் செய்து கொண்டிருந்தால் மேலும் அதிக காலம்
வாழ்ந்திருப்பார். மேலும் அதிக தூரம் போயிருப்பார்..
ஜெயமோகன்:
பாரதி இதைச் சொல்லியிருக்கிறார்.
ஜெயகாந்தன்:
ஆம். பாரதி எப்போதும் சரியானதையே சொல்வான்.
செ.ஜெகதீஷ்:
பாரதியைப் பற்றி சொல்லுங்கள்.
ஜெயகாந்தன்:
சென்ற நாற்பது வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். பாரதி நமது குலதெய்வம்.
நமது என்றால் என்னுடைய, உன்னுடைய, இந்த மொழியில் எழுதுகிற , எழுதப் போகிற
அனைவருடையதும். ஒரு தடவை க.நா.சுப்ரமணியம் கேட்டார். ‘பாரதி பாரதி என்று
சொல்லிட்டிருக்காயே பாரதி எழுதலைண்ணா என்ன பண்ணியிருப்பே ‘ என்று.
‘அதையெல்லாம் நான் எழுதியிருப்பேன் ‘ என்று பதில் சொன்னேன். பாரதி நம்மிலிருந்து
வேறல்ல. நமது கனவுகளிலிருந்து பிறந்தவன் அவன். நம்முடைய நவீன இலக்கியத்தின்
ஒவ்வொரு கிளையும் அவனால் தொடங்கப்பட்டது தான்.
செ.ஜெகதீஷ்:
பாரதியின் கவிதைகளில் உங்களுக்கு எந்தவகை கவிதைகள் பிடிக்கும் ? பக்திகவிதைகளா ?
அரசியல் கவிதைகளா ? சமூகக் கவிதைகளா ?
ஜெயகாந்தன்:
என்னால் அப்படிப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. பாரதியின் எல்லாக் கவிதைகளும் ஒரே
உணர்வுதளம் சார்ந்தவை தான். பாரதிக்கு மொழியுடனான இயல்பான தீவிர உறவு, முன்னேறி
முன்னேறி பறந்து போவதற்கான தீவிரமான துடிப்பு எல்லாம் அவருடைய எல்லா கவிதைகளிலும் உண்டு.
ஜெயமோகன்:
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு உண்டா ?
ஜெயகாந்தன்:
இல்லாமல் ஒருவரால் தமிழில் எழுத முடியுமா என்ன ? பண்டைத் தமிழ் கவிதை மீது எனக்கு
எப்போதுமே ஒரு தீவிரமான ஈடுபாடு உண்டு. முதலில் பக்தி இலக்கியங்கள். பிறகு
காவியங்கள். பிறகுதான் சங்க இலக்கியம். பழைய இலக்கியங்களில் உள்ளது
போன்ற நீதிப்பிரக்ஞையை என்னால் இன்று ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக
சங்க இலக்கியங்களின் அறமும் ஒழுக்கமும் எனக்கு பிடிக்கவில்லை.
ஜெயமோகன்:
காதல்..வீரம்..
ஜெயகாந்தன்:
பரத்தையர் கூடல், சாதிப்பிரிவினைகள், வன்முறை..அப்படி பல விஷயங்கள்.
ஆனால் நம்மொழியின் அழகும் மகத்துவமும் அவற்றில் தான் வெளிப்படுகின்றன.
ஜெயமோகன்:
திருக்குறள் ?
ஜெயகாந்தன்:
திருக்குறள் இல்லாமல் நமது நீதியுணர்வு இல்லை. மிக அபூர்வமாகவே
அதனுடன் மாறுபடும் தருணங்கள் எனக்கு ஏற்பட்டுள்ளன. அது ஒரு நீதி நூல். ஆனால்
நீதியை கவிதை வழியாக முன் வைக்கிறது. கவிதை ஒவ்வொன்றையும் மாற்றி விடுகிறது.
திருக்குறள் நமது தருக்கத்துடனல்ல, நமது ஆன்மிகத்துடன் உரையாடும் நூல்.
ஜெயமோகன்:
ஆம், தண்டனைகளைப் பற்றி பேசாத ஒரே நீதி நூல் அது.
ஜெயகாந்தன்:
அது நமது ஆன்மிகத்தை தொட்டு எழுப்புகிறது. அதனூடாக நமது அன்பை, கருணையை,
நீதியுணர்வை எழுப்புகிறது. இலக்கியத்தின் வழிமுறை அது. திருக்குறள் முதன்மையாக
ஒரு இலக்கியப் படைப்பு. நீதி இலக்கியம் என்று சொல்லலாம்.
செ.ஜெகதீஷ்:
உங்கள் படைப்புகளில் பிற முற்போக்கு இலக்கியங்களைப் போல
ஒரு நோக்கம், இலக்கு இருந்தது. சமூக மாற்றங்களுக்காக..
ஜெயகாந்தன்:
ஆம். அது அந்தக் காலக் கட்டத்தில் பொதுக் கனவு. எப்போதும் இலக்கியத்திற்கு
அத்தகைய பெரும் கனவு தேவை. பெரிய மாற்றங்களைக் கனவு கண்ட தலைமுறை
நாங்கள். எனது பெரும்பாலான கதாபாத்திரங்கள் புரட்சிக்காரர்கள். கருணையும்
பொறுப்பும் கலந்த சமர்தான் புரட்சி. நாமறிந்த போராட்டக்காரர்கள் பெரும்பாலானவர்கள்
புரட்சிக்காரர்களல்ல கலகக் காரர்கள் தான். காந்தி புரட்சிக் காரர். கெளரிபாட்டியும் (யுகசந்தி)
ஜோசபும் (யாருக்காக அழுதான்) புரட்சிக்காரர்கள். அவர்கள் போராடிய காரணங்கள்
இன்று மறைந்து விட்டிருக்கக்கூடும். ஆனால் அந்த இயல்பு என்றும் உள்ள ஒன்று.
அதுதான் அப்படைப்புகளின் சாராம்சமான வலிமை.
ஜெயமோகன்:
முன்பு பலரிடம் நீங்கள் கோபித்துக் கொள்ள வழிவகுத்த கேள்வி.
ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியது ஒரு சமரசம் அல்லவா. தவிர்த்திருக்க முடியாதா ?
ஜெயகாந்தன்:
எங்கு சமரசம் செய்தேன் ? பிரசுரமானவை முழுக்க எனது சொந்தப் படைப்புகள். யாருக்காகவும்
எதன் பொருட்டும் நான் எழுதியதில்லை. இலட்சக்கணக்காக பணம் தர முன்வந்த சினிமாக் காரர்களுக்காகக்
கூட (என் கதைகள் மீது ஈடுபாடு கொண்ட பீம்சிங் அவற்றைப் படமாக எடுத்தார்) என் படைப்புகளை
சுருக்கவோ மாற்றியமைக்கவோ நான் அனுமதித்ததில்லை. கருத்துகளில் சமரசம் செய்து
கொண்டதே இல்லை.
ஜெயமோகன்:
இல்லை. நீங்கல் ப்ரக்ஞைப் பூர்வமாக சமரசம் செய்துகொள்பவரல்ல என்று அறியாதவர்களல்ல
நாங்கள். நாங்கள் கேட்டது தெரியாமல் நிகழும் சமரசங்களைப் பற்றி. உதாரணமாக
பழைய ‘சரஸ்வதி ‘ கதைகளில் உங்கள் மொழிநடையில் ஒரு ஒலி நெகிழ்ச்சி இருந்ததாக
ஞாபகம். பிற்பாடு அது சொற்பொழிவுதன்மையாக மாறியது.
ஜெயகாந்தன்:
இது எனக்கு புதிய தகவல். அப்படி நிகழ்ந்திருந்தால் அது என் ஆளுமையில் ஏற்பட்ட
மாற்றத்தின் விளைவாக இருக்கலாம்.
ஜெயமோகன்:
வாசக எதிர்பார்ப்பு நம்மையறியாமலேயே நம்மை மாற்றுகிறது. வாசகனுடைய மெளனமான
நிர்பந்தம், கோரிக்கை நம்மை திசை மாற்றம் கொள்ளச் செய்கிறது. படைப்பு என்பது
ஓர் உரையாடலும் கூட. அதை நமது முன்னிலையை மெளனமாகத் தீர்மானிக்கிறது.
நீங்கள் தேர்ந்த, இடதுசாரிப் போக்குள்ள வாசகர்களிடமிருந்து விலகி வெகுஜன
வாசகர்களை முன்னிலைப் படுத்தினீர்கள்.
ஜெயகாந்தன்:
அது உண்மை தான். ஆனால் நான் பெருவாரியான வாசகர்களைப் பொருட்படுத்தியதே
இல்லை. வாசகர் கடிதங்களை நான் படிப்பது இல்லை. இன்னொரு விஷயம்; எதன்
பொருட்டு நான் அதிகமாக பாராட்டப் படுகிறேனோ அதை விட்டு உடனடியாக
விலகி விடுவதே என் வழக்கம். என்னைப் பிறர் ஒரு குறிப்பிட்ட விதத்தில் வரையறுத்த
உடனே அதை உடைத்து தாண்டிவிடவே முயல்வேன். பிறருடைய எதிர்ப்பார்ப்புக்கு
எதிராக இருக்கவே எப்போதும் விரும்புவேன். அது ஒரு வகையான அகங்காரம்
அந்த அகங்காரமே எனக்கு என் தனித்தன்மையை பேணிக் கொள்ள உதவியது.
-தொடரும்