சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா
‘பரிதிக்குப் பின்புறம் இருக்கும் மனித நடமாட்டமற்ற உலகுக்கு ஏகுவோம்! நாம் இன்னும் மூப்படைய வில்லை! புத்துலகைத் தேடி, புதிய அறிவைத் தேடி, பூரணச் செம்மை தேடிப் புறப்படுவோம், வாரீர் தோழர்களே! ‘
கிரேக்க இதிகாசத் தீரன்: யுலிஸிஸ் [Ulysses in Dante ‘s Inferno (1265-1321)]
முன்னுரை: பரிதியின் தீவிரமான பேரளவு வெப்பசக்திக்கு ஓர் உதாரணம் வேண்டுமா ? ஒரு மெகா டன் டி.என்.டி வெடிப்புத் திறமுடைய [1 Mega Ton T.N.T Explosive Power] ஹைடிரஜன் குண்டுகள் 100 பில்லியன் ஒன்றாய் வெடித்து வெளியேற்றும் சக்தியைக் கற்பனித்துப் பார்க்க முடிகிறதா ? அத்துணைப் பேரளவு அசுரச் சக்தி கொண்ட சூரியன், விண்வெளியில் ஓர் சிறிய சுய ஒளி விண்மீனாகக் கருதப்படுகிறது! பால்மய வெளியில் [Milky Way] நமது பரிதியைப் போல், 100 பில்லியன் விண்மீன்கள் சீரான முறையில் இயங்கி, சிக்கலான பண்புகளைக் காட்டி ஊர்ந்து வருவதாக அறியப்படுகிறது. பரிதி மஞ்சள் நிறக்குள்ளி விண்மீன் [Yellow Dwarf Star] என்னும் இனத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது! நமது பரிதி மண்டலம் தோன்றிக் குறைந்தது 4.7 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன! பூமிக்கு நெருங்கிய சுய ஒளி வீசும் விண்மீன் பரிதி தோன்றிய பிறகுதான் அதைச் சுற்றிவரும் மற்ற அண்ட கோளங்கள் உண்டாயின! இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குச் சூரியன் வெப்பமும் ஒளிச்சுடரும் பூமிக்கு அளிக்கும்!
கற்கால மனிதன் அனுதினமும் கண்ட வானியல் நிகழ்ச்சிகள்: ஒரு திசையில் சூரிய உதயம், பிறகு எதிர்த்திசையில் சூரிய மறைவு. மூன்று பில்லியன் ஆண்டுகளாக பரிதியின் நகர்ச்சி பூகோள உயிரினங்களை உண்டாக்கி வளர்த்துக் கட்டுப்படுத்தி வந்துள்ளது! மூன்று மில்லியன் ஆண்டுகளாக மனிதனைச் சார்ந்த விலங்கினங்களை வாழ்வித்து வருகிறது! சூரியன் பூமியைச் சுற்றி வருவதாகப் பல நூற்றாண்டுகள் மக்கள் நம்பி வந்தனர்! ஆனால் கி.மு. (310-230) ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டார்செஸ் [Aristarchus] தன்னச்சில் சுற்றும் பூமியைப் பற்றிச் சொல்லி யிருப்பது பதினைந்து நூற்றாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது! வானியல் மேதை காபர்னிகஸ் [Copernicus (1473-1543)] பரிதியின் உதயமும், மறைவும் பூமி தன்னச்சில் சுற்றுவதால் ஏற்படுகின்றன என்றும், பூமியும் மற்ற அண்டக் கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்றும் முதன் முதலில் எடுத்துரைத்தார்! காலிலியோதான் [1564-1642] முதலில் தொலைநோக்கி வழியாகப் பரிதியின் கரும் வடுக்களைக் [Sunspots] கண்டவர்!
யுலிஸிஸ் விண்ணுளவி பரிதி நோக்கி ஏவியதின் காரணம்
இதுவரை விஞ்ஞானிகள் பூதளத்தில் இருந்து கொண்டோ அல்லது விண்கப்பலில் அமர்ந்து கொண்டோ கருவிகள் மூலம் பரிதியை ஆராய்ந்து வந்துள்ளனர்! அந்த ஆய்வுகள் அனைத்தும் பரிதியின் மத்திமப் பகுதியில் [Solar Equator] அண்டக் கோள்கள் சுற்றிவரும் நீள்வட்ட மட்டத்திலே செய்யப்பட்டவை. பரிதியின் துருவப் பகுதிகளை நோக்கி இதுவரை யாரும் ஆராய முடிய வில்லை! அப்பணியைச் செய்து முடிக்கத் திட்டமிட்ட நாசா [NASA], ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் குழு ஈசாவுடன் [ESA, European Space Agency] இணைந்து, ‘யுலிஸிஸ் ‘ விண்ணாய்வுக் கப்பலைப் [Ulysses Spacecraft] பரிதியை நோக்கி 1990 ஆம் ஆண்டில் ஏவியது. பத்துப் பதினைந்து ஆண்டுகள் யுலிஸிஸ் பரிதியின் மட்டரேகைப் [Lattitudes] பகுதிகளில் பறந்து விஞ்ஞானத் தகவல்களை உளவிப் பூமிக்கு அனுப்பும். யுலிஸிஸ் பரிதியின் துருவப் பகுதிகளின் மேலாகப் பறந்து [1994-2003] புரிந்த ஆய்வுகளையும், எதிர்காலத்தில் அனுப்பப் போகும் [2004-2007] தகவல்களையும் பற்றிக் கூறுகிறது, இக்கட்டுரை.
பரிதியைப் பற்றிய பொதுவான வானியல் விபரங்கள்
சூரியன் ஒரு வாயுப் பிழம்புக் [Gas Plasma] கோளம். நான்கு ஹைடிரஜன் அணுக்கருக்கள், பரிதியின் நடுவே 15 மில்லியன் டிகிரி C உஷ்ணத்தில் பிணைந்து ஒரு ஹீலிய அணுக்கருவாகி வெப்பத்தையும், ஒளியையும் உண்டாக்குகிறது. பூமியில் தோன்றிய நாம், பரிதி என்னும் ஓர் அசுர வெப்ப அணுக்கருக் கனல் உலைக்கு [Giant Thermo-nuclear Reactor] 100 மில்லியன் மைல் தொலைவில் வாழ்ந்து வருவதை மறந்து விடுகிறோம்! பரிதி ஒவ்வொரு வினாடியும் 600 மில்லியன் டன் ஹைடிரஜன் வாயுவைப் பிணைத்து, 386 எக்ஸா மெகாவாட் [1 Exa Mega Watt =10 followed by 18 Zeros (Mega Watt)] சக்தியை வெளியாக்குகிறது!
பூத உருக்கொண்ட சூரியனின் நிறை பூமியைப் போல் 333,000 மடங்கு! அதன் விட்டம், பூமியின் விட்டத்தைப் போல் 110 மடங்கு (865,000 மைல்)! அண்டக் கோள்களைத் தன்வசம் இழுத்துச் சுற்ற வைக்கும் பரிதியின் தள ஈர்ப்பு [Surface Gravity] பூமியின் ஈர்ப்பு போல் 28 மடங்கு! எரிவாயு மண்டிய பரிதியில் நடுக்கரு உஷ்ணம் 15 மில்லியன் டிகிரி C! நடுக்கருவில் உள்ளவை: 35% ஹைடிரஜன், 63% ஹீலியம், 2% [கரி, நைடிரஜன், ஆக்ஸிஜன்]. நடுக்கருவின் வாயுத் திணிவு 150 கிராம்/கன செ.மீ [Density 150 g/cm cube]. நடுக்கருவில் உருவாகும் மில்லியன் கணக்கான உஷ்ணம் விளிம்புக்கு வரவரத் தணிந்து, மேல்தளத்தில் உஷ்ணம் 6000 டிகிரி C ஆகக் குன்றுகிறது! மேற் பரப்பில் இருப்பவை: 70% ஹைடிரஜன், 28% ஹீலியம், 2% [கரி, நைடிரஜன், ஆக்ஸிஜன்]. மேல்தளத்தில் வாயுத் திணிவு காற்றைப் போல் 1/16000 மடங்காகக் குறைகிறது!
பரிதி மண்டலத்தில் சூரியனே மிகுதியானப் பிண்ட நிறை [Mass] கொண்டதாக உள்ளது. சூரிய குடும்பத்தில் பரிதி மட்டும் 99.8% நிறை கொண்டு, மற்ற அண்டக் கோள்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ, கோடான கோடி விண்கற்கள் [Astroids] ஆகியவை யாவும் 0.2% நிறையைக் கொண்டுள்ளன! 4.7 பில்லியன் ஆண்டுகளாக வெப்பத்தையும், பேரொளியையும் வெளியாக்கி வரும் பரிதி இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குச் சக்தியை அளிக்க அதனிடம் மூல எரிவாயுக்கள் மண்டி யுள்ளன!
பரிதியின் கரிய வடுக்களைத் [Sunspots] தன் தொலைநோக்கி மூலம் முதலில் கண்டவர், காலிலியோ. கருமை நிறமான பரிதியின் வடுக்கள் அருகில் மிதக்கும் பிழம்பை விடச் சற்று உஷ்ணம் குன்றியவை. வடுக்கள் பக்கத்துப் பகுதியை விட 1500 டிகிரி C உஷ்ணம் தணிந்தே உள்ளன. பரிதியின் கரு வடுக்கள் குறைந்தது 600 மைல் அகண்டு, கூடியதாக 25,000 மைல் விரிந்ததாக கணிக்கப் படுகின்றன. குன்றிய அகற்சியில் உள்ள வடுக்கள் குறுகிய ஆயுள் [சில மணி நேரங்கள்] கொண்டவை. விரிந்த வடுக்கள் பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை நீடிக்கலாம். பரிதியின் உட்புறப் பகுதியில் எழும் வலுவான காந்த தளத்தால், வடுக்கள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
Discovery Releases Ulysses
பரிதிச் சூழ்வெளியில் யுலிஸிஸ் விண்ணுளவியின் குறிப்பணிகள்
யுலிஸிஸ் குறிப்பணி-41 திட்டம் [Mission STS-41] முழுவதும் நிறைவேற நாசா 500 மில்லியன், ஈசா 250 மில்லியன் US டாலர் நிதித் தொகை அளித்துள்ளன. 1990 அக்டோபர் 6 இல், பிளாரிடா கெனாவரல் கென்னடி ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட டிஸ்கவரி விண்மீள் கப்பல் [Discovery Space Shuttle] 370 கிலோ கிராம் எடையுள்ள யுலிஸிஸ் விண்ணுளவிச் சிமிழைத் [Ulysses Probe] தூக்கிக் கொண்டு பரிதியை நோக்கிச் செங்குத்தாக ஏறியது. புளுடோனியக் கதிர்வீச்சு வெப்பமின் ஜனனிகள் [Radioactive Thermoelectric Generators (RTG)] விண்ணுளவிக்குத் தொடர்ந்து மின்சாரம் பரிமாறி வந்தன. பரிதியின் கடும் வெப்பம் தாக்காதபடி, பொன்னிறக் கவசப் போர்வைகளால் [20 layer Kapton with a layer of Indium Tin Oxide] விண்ணுளவி மூடப்பட்டு இருந்தது. முதலில் அகில தேசப் பரிதி துருவ ஆய்வுப்பணி [International Solar Polar Mission (ISPM)] என்று பெயரிடப்பட்டது. தாந்தே எழுதிய கிரேக்க இதிகாசம், ‘நரகத்தில் ‘ வரும் டிரோஜன் யுத்த மாவீரன் [Greek Mythology: the Trojan War in Dante ‘s Inferno], இதாகாவின் பேரரசன் யுலிஸிஸ் பெயர் [King of Ithaca] பின்னால் அத்திட்டத்துக்கு இடப்பட்டது.
யுலிஸிஸ் திட்டத்தின் முக்கிய குறிப்பணி: சூரிய கோளத்தின் உட்புறப் பெளதிகத்தை [Physics of the Inner Heliosphere], மத்திய ரேகைக்கு [Solar Equator] இணையாக அமைந்துள்ள அனைத்து மட்டரேகைப் பகுதிகளிலும் [Solar Latitudes] இறுதித் துருவம் வரை ஆராய்தல். டிஸ்கவரி விண்மீள் கப்பல் வீசிய யுலிஸிஸ் பதினாறு மாதங்கள் பயணம் செய்து, 1992 பிப்ரவரியில் பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றி, அதன் வலுத்த ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திக் ‘கவண்வீச்சுச் சுற்று முறையில் ‘ வேகத்தை மிகையாக்கி [Slingshot Swingby Boosting] நீள்வட்ட மட்டத்தைக் [Elliptical Plane of the Planets] கடந்து, அதற்குச் செங்குத்து நீள்வட்டத்தில் தாவி, பரிதியின் துருவங்களைச் சுற்ற ஆரம்பித்தது! கவண்வீச்சுச் சுற்று முறையில், விண்சிமிழ் செங்குத்துப் பாதைக்குத் தாவுவது இதுவே முதல் தடவை!
1994 ஜூனில் பரிதியின் தென்துருவத்தின் மேல் யுலிஸிஸ் முதன்முதலில் பறந்தது. சரியாக ஓராண்டு கழித்து, யுலிஸிஸ் வடதுருவம் மேல் பறந்தது. அப்போது யுலிஸிஸ் விண்ணுளவி கீழ்க் காணும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
1. காந்தமானிகள் [Magnetometers] மூலம் வியாழன், பரிதி ஆகியவற்றின் துருவப் பகுதிகளில் உள்ள காந்த சக்திகளைச் சோதிப்பது.
2. பரிதிக் காற்றின் முப்புற அமைப்பை [3D Structure of Solar Wind] அறிதல். பிழம்புக் கருவியைப் பயன்படுத்திப் பரிதிக் காற்றில் உள்ள பரமாணுக்களை [Solar Wind Plasma Experiment] ஆராய்தல்.
3. யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழில் மோதும் பரிதிக் காற்று மின்னிகளின் தொகுப்பையும், இயக்க உஷ்ணத்தையும் ஒளிப்பட்டை மானி [Solar Wind Ion Composition Spectrometer] மூலம் அளப்பது.
4. சக்தி வலுத்த பரிதிப் பரமாணுக்களின் பரவல், வளர்வேகம் ஆகியவற்றை அறிதல் [Propagation & Acceleration of Energetic Solar Particles, Composition Experiment]
5. பரிதியின் சக்தி தணிந்த பரமாணுக்களை உளவி அறிதல் [Low Energy Charged Particle Detector]
6. அகிலக் கதிர்களின் பரவல், தளர்வேகம் பற்றி அறிதல் [Propagation & Deceleration of Cosmic Rays & Solar Particle Instrument]
7. அண்டவெளி விண்மீன்களிலிருந்து தப்பி வரும் ஹீலிய அணுக்களை அளப்பது; தொலைநோக்கி மூலம் பரிதிக் காற்றில் இடைச்சக்தி மின்னிகளைக் [Ions of Medium Energy] கண்டறிவது; [Distribution of Interstellar Neutral Gas & Cosmic Dust Experiment]
8. பரிதிக் காற்றிலிருந்து வெளியாகும், பிழம்பு அலை, ரேடியோ ஒலிகளை [Radio Noise] அறிதல் [Unified Radio & Plasma Wave Experiment]
9. தொலைநோக்கி மூலம் பால்மய வீதியின் காலக்ஸி [Milky Way Galaxy] உமிழும் அண்டவெளிக் கதிர்கள், எக்ஸ்-ரே கதிர்கள் ஆகியவற்றை அறிவது [Solar Flare X-Ray & Origin of Cosmic Gamma Ray Bursts Experiment]
10. பரிதியிலிருந்து அடிக்கும் கனல்வீச்சின் [Corona] திசைவேகம், திணிவு, கொந்தளிப்பு [Velocity, Density, Turbulence] ஆகியவற்றை அறிதல் [Coronal Sounding Experiment & Gravity Wave Search]
யுலிஸிஸ் விண்ணுளவியின் குறிப்பணி 2004 டிசம்பர் 31 இல் முடிகிறது. அடுத்து மேற்கொண்டு 2007 நவம்பர் 30 வரை அதன் புதுப்பணிகள் நீடிக்கத் திட்டங்கள் தயாராக உள்ளன. அப்பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதித்தொகை அங்கீகாரமானதும், நாசா மறுபடியும் தன் யுலிஸிஸ் பணியைத் தொடரும்.
யுலிஸிஸ் விண்ணுளவி தீர்க்கப் போகும் பரிதியின் புதிர்கள்
1. வெளிக்கனல் வெப்ப மூட்டும் முறைப்பாடு [The Coronal Heating Process]
பரிதியின் கருவில் எழும் வெப்பசக்தி மைய ஆரங்களின் வழியே கதிர்வீச்சாக [Radiation], மேலெம்பு [Convection] முறைகளில் வெளியேறுகிறது. தளப்பரப்பை எட்டும் போது, கதிர்வீச்சு வெப்பத்தைக் கக்குகிறது. மேலெழுச்சி சுழற்சி வெப்பம் 0.85% மைய ஆரத்திலிருந்து கிளம்பி, ஒளிவிளிம்புக் கோளம் [Photosphere] வரை எம்பிச் சுற்றுகிறது. விளிம்பை எட்டியதும் மேலெம்பு வெப்பமும் கதிர்வீச்சு முறையில் வெளியாகிறது. ஒளிவிளிம்புக் கோளம் சீரானச் சுடருடன் இருப்ப தில்லை. தானியப் புள்ளிகள் மேவிய[Granulations] சீரற்ற அமைப்பே, ஒளிவிளிம்புக் கோளம். மிகச்சிறு தானியப் புள்ளிச் சுடர் சுமார் 620 மைல் அகண்டது! 124,300 மைல் மைய ஆழத்தில் மேலெம்பும் பூத வெப்பக் குளங்கள் [Giant Convection Cells] பரிதியில் உள்ளன என்று கணிக்கப் படுகிறது. கோடான கோடி மேலெம்புச் சுழற்சிக் குளங்களைக் [Cells of Convection] கொண்டது பரிதிக் கோளம்!
நிறவொளிக் கோளம் [Chromosphere] என்பது ஒளிவிளிம்புக் கோளத்துக்கு அப்பால் 6000 மைல் புறத்தே உள்ளது. அது சூரிய கிரகணத்தின் போது தான் காணப்படுகிறது. நிறவொளிக் கோளத்தின் உஷ்ணம் 4500 டிகிரி C இல் ஆரம்பித்து, நீண்டு உயர உயர 100,000 டிகிரி C உஷ்ணத்துக்கு மிகையாகிறது! இந்த விந்தை நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று கண்டு பிடிப்பது, யுலிஸிஸ் பணிகளில் ஒன்றாகும். பிறகு நிறவொளிக் கோளம் கனல்வீச்சுடன் [Corona] சங்கமம் ஆகிறது.
கனல்வீச்சு வெப்பம் மேலும் ஒரு புதிராக, விந்தையாக 1000,000 டிகிரி C [1 Million degree C] ஏறுகிறது! ஆனல் கண்ணில் படும் பரிதியின் தளப்பரப்பு உஷ்ணத்தின் அளவு 6000 டிகிரி C தான்! கனல்வீச்சு உஷ்ணம் எப்படி மிகையாகிறது என்று காண வேண்டியது முதல் புதிர்! ஒரு மில்லியன் டிகிரி C உஷ்ணத்தைச் கனல்வீச்சில் எது நீடித்து வைத்துக் கொள்கிறது என்பது இரண்டாம் புதிர்! பேரளவு வேக வளர்ச்சியில் [Acceleration] கிளம்பும் பரிதியின் காற்று [Solar Wind] எப்படி எழுகிறது என்பது மூன்றாம் புதிர்! கனல்வீச்சின் உஷ்ணம் ஏறுவதற்கு வெப்பத்தைப் பரிதியின் காந்தத் தளக்கோடுகள் தாக்குவது, ஒரு வேளை காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
2. பரிதியின் தீநாக்குகள் [Flares] தீவளைவுகள் [Prominences]
அடுத்து பரிதியின் மேல்தளத்திலிருந்து கிளம்பும் தீநாக்குகள், தீவளைவுகள் பரிதியின் காந்த மண்டலக் கொந்தளிப்பால் [Magnetic Disturbances] நிகழ்பவை! தீநாக்குகள் திடாரென்று தீவிரமுடன் எழுபவை! எப்போதாவது ஒளியுடன் தெரிபவை. தீநாக்குகள் அடிக்கடி மின்காந்த அலைகளை எக்ஸ்-ரே வடிவில் உமிழ்கின்றன. பரிதியின் கருவடுக்களுக்கு அருகே உள்ள பகுதிகளில் தீநாக்குகள் எழுகின்றன! அவை பரிதி மேல்தள வாயுக்களை உடனே எரித்து, நொடிப் பொழுதில் உஷ்ணத்தை மில்லியன் கணக்கில் ஏற்றி விடுகின்றன! பூமியில் சூறாவளிப் புயல் காற்று எப்போது உருவாகிறது என்று எவ்விதம் காண முடிவ தில்லையோ, அதுபோல் பரிதியில் தீநாக்குகள் எழுவதும், கனல்வீச்சுகள் வாயு அயனிகளை உமிழ்வதும் [Coronal Mass Ejections] விஞ்ஞானிகளுக்கு இன்னும் புதிராகவே உள்ளன!
பரிதியின் மேல் பரப்பில் திடாரென எழும் தீநாக்குகள் பேரதிர்ச்சி வெடிப்பாக வெளியே தாவுகின்றன! நொடிப் பொழுதில் அருகில் உள்ள வாயுக்கள் சூடேறிப் பிழம்பாகி, மில்லியன் மெகா டன் டி.என்.டி [Mega Ton T.N.T] வெப்பம் வெளியேறுகிறது! தீநாக்குகள் உமிழும் சக்தி பல வடிவில், பல கதிரலைகளில் கிளம்புகின்றன! உதாரணமாக மின்காந்த அலைகளான காமா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் [Electro-magnetic Rays: Gamma Rays, X-Rays], சக்தி வலுத்த எலெக்டிரான்கள், புரோட்டான்கள் [Energetic Particles: Electrons, Protons], பிழம்புத் துகள் ஓட்டங்கள் [Mass Flows]. நிமிடம் முதல் சில மணி நேரங்கள் வரை நீடிக்கும் தீநாக்குகள் ஏராளமான அளவு பிழம்புத் துகள்களை [Plasma Masses] அண்ட வெளியில் வாரி இறைக்கின்றன! அப்போது அந்த மின்காந்த வீச்சுகள் பூமியில் இயங்கிவரும் ரேடியோ மின்னியல் போக்குவரத்துகளைப் பெருமளவில் பாதிக்கின்றன! 1973 இல் நாசாவின் விண்வெளி ஆய்வுச்சிமிழ் [Skylab] இதுவரை காணாத 367,000 மைல் நீளத் தீநாக்கைப் படமெடுத்துள்ளது!
வாயுப் பிழம்பான தீவளைவுகள் [Prominences] கனல்வீச்சுகளில் [Coronos] தென்படுபவை. சூரிய கிரகணத்தின் போது அவற்றைக் கண்கொள்ளாக் காட்சியாகக் காணலாம்! சூரிய கிரகணத்தின் போதுதான் தீவளைகளைக் காண முடியும். கனல்வீச்சில் தணிந்த பிழம்புத் துகள்களே தீவளைவுகளாகத் தோன்றுகின்றன. அவை திடாரென்று கிளம்பினாலும், ஒரு மணி அளவுக்குக் குறைந்த நேரம் வரை நீடிக்கிறது. தீவளைவு 435,000 மைல் உயரங் கூட எழலாம்! எழுந்து ஒரு பெரும் காந்த வளையமாக வளைந்து மீண்டும் ஒளிவிளிம்புக் கோளத்தைத் [Photosphere] தொடலாம்!
அடுத்து சூரியனைச் சூழ்ந்துள்ள பிரம்மாண்டமான வெய்யக்கோளம் [Heliosphere]. வெய்யக்கோளம் பரிதியைச் சுற்றிலும் 9 பில்லியன் மைல் தூரம் அண்ட வெளியில் விரிந்தது! வெய்யக்கோளத்தின் விளிம்புதான் சூரிய மண்டலத்தின் இறுதி எல்லையாகக் கருதப்படுகிறது. அந்த வரம்பைக் கடந்தால் அடுத்து நுழைவது அகில விண்மீன்களின் விரிவு வெளி [Intersteller Space]!
3. மறைந்து ஒளியும் நியூடிரினோக்கள் [The Missing Neutrinos]
அண்ட வெளியில் கருவிகள் மூலம் காண்பதை விட இரண்டு மடங்கு நியூடிரினோக்களைப் பரிதி உற்பத்தி செய்ய வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள்! மாயத் தோற்ற முடைய அந்த நியூடிரினோக்கள், பரிதியின் உட்கருவில் நேரும் அணுக்கருப் பிணைவு இயக்கங்களிலிருந்து [Nuclear Fusion Reaction] உண்டானவை. பிறகு அவை பரிதிக் கனல்பந்து வழியே நழுவி வெளியேறுகின்றன. நியூடிரினோவைக் கருவிகள் மூலம் கண்டு பிடிப்பதும் கடினமானது! ஆனால் பல சோதனைகள் மூலம் ஆராய்ந்த போது, எதிர்பார்த்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் பூமியில் அளக்கப்பட்டன. எஞ்சிய மூன்றில் இரு பங்கு நியூடிரினோக்கள் எங்கே போய் ஒளிந்துள்ளன என்று காண்பது அடுத்த புதிராக உள்ளது!
சூரியனை ஆராயும் எதிர்காலத்து அகில நாட்டுத் திட்டங்கள்
2005 ஆம் ஆண்டில் சோலார்-பி விண்ணாய்வுக் கப்பலை [Solar-B Scacecraft] அனுப்பி ஜப்பான் விண்வெளி விஞ்ஞான ஆய்வகம் [Institute of Space & Astronautical Science (ISAS)], அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இணைந்து, பரிதியை ஆராயத் திட்டமிட்டுள்ளது. ஜப்பான் சோலார்-பி விண்ணுளவிச் சிமிழ், ஏவும் ராக்கெட் வாகனம், மற்றும் சில கருவிகளைத் தயார் செய்கிறது. மிட்ஸுபிஷி மின்சாரக் கார்பொரேஷன் [Mitsubishi Electric Corporation (MELCO)] விண்ணுளவிக் கப்பல், பரிதிக் காட்சித் தொலைநோக்கி [Solar Optical Telescope (SOT)], எக்ஸ்-ரே தொலைநோக்கி [X-Ray Telescope (XRT)], பிம்பக் காட்சி ஒளிப்பட்டை மானி [Extreme Ultraviolet Imaging Spectrometer (EIR)] ஆகியவற்றைப் படைக்கும்.
பிரிட்டிஷ் துகள் பெளதிக வானியல் ஆய்வுக்குழு [Particle Physics & Astronomy Research Council (PPARC)] பரிதியின் ஒளிவிளிம்புக் கோளம் [Photosphere], கனல்வீச்சு [Corona] ஆராயும் கருவிகளைத் தயாரிக்கும். நாசா SOT தொலை நோக்கிக்குத் தேவையான, குவிமட்ட தொகுப்பை [Focal Plane Package (FPP)] தயாரித்து அனுப்பும்.
சோலார்-பி விண்ணுளவியின் குறிப்பணி: EIR, XRT கருவிகளைப் பயன்படுத்திப் பரிதியின் காந்த தளமும் கனல்வீச்சும் சங்கமம் [Magnetic Field & Corona] ஆகும் போது நேரும் உஷ்ண மாறுதல் விளைவுகளைப் பதிவு செய்யும். அந்த மாறுபாடுகள் சூரிய வெப்பசக்தி மிகையாகுவதையும், அதனால் பூமியின் காலநிலையில் வேறுபாடுகள் விளைவதையும் எடுத்துக் காட்டும்.
யுலிஸிஸ் விண்ணுளவிச் சிமிழ் கண்ட ஒளி மாறுதல்
யுலிஸிஸ் பரிதியில் விளைந்த ஒரு முக்கிய மாறுதலைச் சமீபத்தில் தெரிவித்துள்ளது! தற்போதைய ‘ஒளிப்பண்பு மாற்றச் சுற்றில் ‘ [Cyclic Change in Quality of Light], சூரியனின் முழுக் கதிர்வீச்சு 0.1% மாறி இருப்பதாகவும், அதனால் பரிதியின் கருவடுக்கள் [Sunspots] ஒளிச்சுடர் மிகுந்துள்ளதாகவும் அறியப்படுகிறது! அப்பெரும் ஒளித்திற மாறுதல் பூமியில் காலநிலைகளை எவ்வித மெல்லாம் பாதிக்கும் என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது! உதாரணமாக கடல்நீர் தற்போது சற்று சூடேறி விட்டது! வட துருவ ஆர்டிக் வட்டாரத்தில் உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள் உடைந்து தற்போது உருகி வருகின்றன! கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் சூறாவளியும், சுழற் காற்றும், பேய்ப் புயலும், பெரு மழையும் அதிகரித்திருப்பது, பரிதியில் ஏற்பட்ட இந்தக் கதிர்வீச்சு மாற்றத்தினால்தானா ?
தகவல்கள்:
1. The Solar Ulysses Mission [June 30, 1997]
2. Ulysses Mission Overview & Science Objectives
3. Ulysses Spacecraft sees Galactic Dust on the Rise [Aug 10, 2003]
4. History of Space Exploration: Ulysses Spacecraft [1996-2000]
5. Discovery Space Shuttle Mission STS-41 Ulysses
6. Cosmos By Carl Sagan [1985]
7. The Stars Belong to Everyone By: Helen Sawyer Hogg [1976]
8. Exploring the Planets By: Brian Jones [1991]
9. Astronomy By Readers Digest [1998], The Space Encyclopaedia
10 Future Solar Missions: Solar-B Spacecraft [Japan, U.K. & NASA]
11 The Big Questions: The Coronal Heating Process & The Missing Neutrinos [June 1998]
*****
jayabar@bmts.com
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
- சில சீனத் திறமைகள்
- பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)
- நியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்
- தேவை இன்னும் கொஞ்சம் தாகம்
- அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)
- மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)
- சூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]
- மெளனம் பற்றி ஏறி
- இணையக் காவடிச் சிந்து
- மாயமான்.
- ‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?
- வலை
- வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4
- பட்டாபிஷேகம் நடக்கிறது…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு
- குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக
- கருத்தும். சுதந்திரமும்.
- வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி
- நூல் வெளியீட்டுவிழா
- குமரிஉலா 5
- தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்
- கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)
- கடிதங்கள்
- பயணம் – ஒரு மைக்ரோ கதை
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி
- இன்னுமொரு உலகம்…….
- கனடாவில் நாகம்மா
- வடிகால்
- விடியும்! நாவல் – (16)