சுகுமாரன்
சூசன் சாண்டாக் நேற்று,28 டிசம்பர்2004 செவ்வாய்க்கிழமை நியூயார்க் மருத்துவமனையில் காலமானார். முப்பது ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடியவரை எழுபத்தியொன்றாம் வயதில் மரணம் முழுமையாகத் தின்று தீர்த்துவிட்டது.
அயல்மொழி சிந்தனையாளர்களிலும் எழுத்தாளர்களிலும் என்னைக் கவர்ந்த சிலரில் சூசனும் ஒருவர். அறிவுத்தளத்தில் ஆவேசமாக இயங்குகிற பெரும் மூளைகள் பொதுவாக எனக்குள் ஒருவிதமான ஒவ்வாமையைப் பரவ விடுவதை உணர்ந்திருக்கிறேன்.தர்க்கத்தின் அறுவை மேசை மீது வாழ்க்கையைக் கூறுபோட்டு ஆராய்வதில் எனது நுண்ணுணர்வு ஆயாசத்தையே அனுபவித்திருக்கிறது. சார்த்தர் முதல் தெரிதா வரையான சிக்கலான ஆளுமைகளை அறிமுகம் கொண்டதும் மானசீகமாகப் பல காதங்கள் விலகி ஓடியதுமுண்டு. மனசிலிருந்து கரங்களை விரித்து வரவேற்றுத் தழுவிக்கொண்ட சில ஆளுமைகளில் ஒன்றாக சூசன் சாண்டாகை அவரது எழுத்துக்கள் மூலம் ஏற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. கலைப்படைப்பை அலகு பிரித்து விளக்குகிற சிந்தனையாளராக அவர் இருக்கவில்லை என்பது இந்த மன இசைவுக்குக் காரணமாக இருக்கலாம். ‘ ‘ ஒரு கலைப்படைப்பு என்பது இந்த உலகத்திலுள்ள ஒரு பொருள். அது வெறும் பிரதியோ உலகைப் பற்றிய விளக்கவுரையோ அல்ல ‘ ‘ என்ற அவரது நிலைப்பாடு எனது சிந்தனைப் போக்குக்கு சவுகரியமானதாகவே தொடர்ந்து வந்திருக்கிறது.
நுட்பமும் நம்பகமானதும் கலையின் நெகிழ்வு தென்படுவதுமான ஒரு பார்வை சூசன் சாண்டாகுடையது. பெண் என்பதாலும் படைப்பெழுத்தாளர் என்பதாலும் இந்த இயல்பு அவரது பார்வையை நிர்ணயித்திருப்பதாகக் கருத்துக் கொண்டிருந்தேன். உண்மையான காரணம் அவரது சுதந்திரமான மனம் என்பது தொடர்ந்து அவரை வாசித்துப் புரிந்துகொண்ட சங்கதி.
சூசன் சாண்டாக் கிட்டத்தட்ட பதினேழு நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் பத்துப் புத்தகங்களையாவது நான் புரட்டிப் பார்த்திருந்திருக்கிறேன். ஐந்து புத்தகங்களை முறையாகவும் மற்ற ஐந்து புத்தகங்களை ஒற்றை வாசிப்பாகவும் படித்திருக்கிறேன். தேர்ந்தெடுக்கப் பட்ட அவரது எழுத்துக்களின் திரட்டான ‘சூசன் சாண்டாக் ரீடர் ‘ கணிசமான காலம் எனது வேதப் புத்தகமாகவும் இருந்தது. நண்பர்கள் யாரிடமாவது தவறிப்போய் இரவலாகக் கொடுத்தாலும் வற்புறுத்தித் திரும்ப வாங்கிவிடுகிற புத்தகங்களில் அதுவும் ஒன்று. சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், ஆய்வு, நாடகம், திரைக்கதை, உரை, பதிப்பு என்று எழுத்தின் சகல வடிவங்களையும் கையாண்டிருப்பவர் சூசன். அவ்வளவையும் கற்றுத் தேறுவது அசாத்தியம் என்று சோம்பேறித்தனத்துக்குச் சாக்குச் சொல்லிக்கொள்வது பல சமயங்களிலும் இதமாக இருந்திருக்கிறது. அதை மீறி சூசனின் சில நூல்கள் எனக்குள்ளே ஊடுருவி அறிதலின் வரம்புகளை விசாலமாக்கியவை. கற்பனையின் எல்லைகளை விரிவாக்கியவை.
புகைப்படக் கலையைக் குறித்த சாண்டாகின் புத்தகம் (ஆன் போட்டோ- கிராஃபி) அந்தக் கலையைப் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் நூல். அதன் ஒரு வரி யோசிப்பின் தீவிரத்தில் பல பொருள்களையும் தொடர் சிந்தனைகளையும் முன்வைக்கும். ‘ ‘புகைப்படங்களைச் சேகரிப்பதென்பது உலகத்தையே சேகரிப்பதுதான் ‘ ‘ என்ற சூசனின் வரியை, சில மாதங்களுக்கு முன்னர் கண்ணூரில் நடைபெற்ற கேரள மாநிலப் புகைப்படக்கலைஞர்களின் மாநாட்டில் மேற்கோள் காட்டிப் பேசப் போக எனக்குக் கிடைத்த கரகோஷம் பலமானதாக இருந்தது. அந்தக் கையொலிகள் எல்லாவற்றையும் அப்போதே காற்றில் சாண்டாகுக்கு அனுப்பி வைத்தேன். புகைப் படம் ஒரு நினைவு, காலத்திலிருந்து விண்டெடுத்த நொடிப் பிம்பம், ஓர் ஆவணம், என்று ஒரு முழுமையான படிமத்தை நிறுவியவர் சூசன். ‘ ‘நாம் பார்க்க விரும்புவது எதை, நாம் கவனிக்க வேண்டியது எதை என்று காட்சியின் இலக்கணம் உருவாக்கிய கலை புகைப்படம். அந்த இலக்கணமே காட்சியின் அறத்தை (Ethics of seeing) நிர்ணயிக்கிறது ‘ ‘ என்ற கருத்தாக்கம் தொலைத்தொடர்புகள் காட்சிப் படிமங்களாகச் சிதறிக்கிடக்கும் இன்றைய சூழலில் பரவலான அக்கறையைக் கோருவது.
சூசனின் இரண்டு நாவல்களை சிரத்தையாக வாசித்திருக்கிறேன். ‘மரணப் பொறி ‘ (Death Kit), ‘அமெரிக்காவில்… ‘ (In America). இரண்டு நாவல்களைப் பற்றியும் இப்போது யோசிக்கும்போது தோன்றுவது இரண்டிலும் பொதுவான ஒரு கனவுத்தன்மை விரவியிருந்தது என்பதுதான். ‘மரணப் பொறி ‘ வாழ்க்கை பற்றிய கனவுகளையும் சாவையும் அவற்றுக்கிடையிலுள்ள உறவையும் பேசுகிறது. அமெரிக்காவில்…நாவலின் கதை மையம் ஓர் உண்மை நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டது என்று புத்தகத்தில் பார்த்ததாக நினைவு. போலந்திலிருந்து குடும்பத்துடன் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவுக்கு வரும் ஒரு பெண்ணின் ப்யணம் அந்த நாவல். அமெரிக்காவில் ஒரு கனவுச் சமூகத்தை உருவாக்குவது அவள் நோக்கம். நோக்கம் சிதைந்து கலைந்தபோன பிறகு மேடை நடிகையாக மாறுகிறாள் என்ற அடிப்படையில் கதைச் சரடு இழைத்து முறுக்கேற்றப் பட்ட நாவல். மேரினா சலேவ்ஸ்கா என்ற மையப் பாத்திரத்தின் வளர்ச்சியும் இயல்பும்தான் நாவலில் என்னை ஈர்த்த அம்சங்கள்.ஹாலிவுட்டில் எந்த நடிகைக்காவது மேரினா சலேவ்ஸ்கா என்ற இயற்பெயருண்டா என்று ஆராய்ச்சி செய்ததும் வேடிக்கையான அனுபவம்.
மருத்துவ பரிசோதனையில் புற்று நோய் தன்னைப் பீடித்திருப்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் சூசன் எழுதிய நூல் ‘ ‘ நோய் – உருவகமாக ‘ ‘ (Illness As Metaphor). இந்த நூலில் அவர் முன்வைக்கும் வாதங்கள் தொந்தரவு செய்பவை. நோயை ஒரு தண்டனையாகவே எல்லாரும் கருதுகிறார்கள். அரசியல், ராணுவம், இன்னபிற அதிகார அமைப்புகள் நோயை செய்த தவறுக்குக் கிடைக்கும் தண்டனை என்றே சித்தரிக்கின்றன. இது ஓர் உருவகத்தை மனிதர்கள் மீது திணிப்பது. இந்த உருவகத்தை எதிர்ப்பதே உண்மையான தேவை. நோயை முன்னிருத்தியும் பிரிவினைகள் உருவாவதையும் சூசன் சுட்டிக்காட்டுகிறார். நுரையீரல் புற்று நோய் மதிப்புக்குரியதும் மலத்துவாரத்தில் வரும் புற்று நோய் அருவருக்கத் தகுந்ததுமாகக் கூறப்படுவதிலுள்ள அதிகார அரசியலை வகைப்படுத்தினார். இந்தியச் சூழலில் இந்தக் கருத்தாக்கத்துக்கு பொருத்தம் அதிகம் கூட.
புற்றுநோயை மையப் புள்ளியாக வைத்து எழுதிய இந்நூலை பத்தாண்டுகளுக்குப் பின்பு எயிட்ஸைச் சார்ந்து விரிவுபடுத்தினார். புற்று நோயைவிட, ஒழுக்கவியல் பார்வையில் அதிகம் சர்ச்சை செய்யப்படும் நோய் எயிட்ஸ்தானே.
சாண்டாகின் மிகப் பிரசித்தமான நூல் ‘ ‘விளக்கங்களுக்கு எதிராக மற்றும் கட்டுரைகள் ‘ ‘ (Against Interpretation and Other Essays). ஒரு கலைப் படைப்பையோ கலாச்சார நிகழ்வையோ விளக்கவுரைகள் சுருங்கச் செய்துவிடுவதாக குறிப்பிட்டார். அதற்கு மாற்றாக ‘தெளிவுநிலை ‘யை (Transparency) நிறுவினார். ‘ஒரு பொருளை அதன் உயிரோடும் ஒளியோடும் அனுபவிப்பதே இந்த நிலை. ஒரு கலைப்படைப்பை உருவமும் உள்ளடக்கமுமாக அனுபவித்து உணர்வதில்தான் கலையின் பொருள் அடங்கியிருக்கிறது. ‘ என்ற ஆதாரப் புள்ளியிலிருந்துதான் சூசன் தனது கருத்தாக்கத்தை விரிவாக்கினார். கலையின் மீது அறிவு நடத்தும் பழிவாங்கல் நடவடிக்கையே வியாக்கியானங்கள் என்ற அவரது கருத்து இப்போதும் வலுக் குன்றாமல் சிந்தனையில் தங்கியிருக்கிறது. பொதுவான மேற்கத்திய சிந்தனைப் போக்கின் எதிர்முனை இது. இதன் மாற்றுக் கோணங்களாகவே சூசன் சாண்டாகின் பிற துறை ஆய்வுகளையும் கொள்ளவேண்டும்.
எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான ஆல்பெர் காம்யுவைக் குறித்த கட்டுரையான ‘இலட்சியக் கணவன் ‘ (The Ideal Husband) என்ற சூசனின் கட்டுரை கட்டுரையாளரை அணுக்கமாக்கியது. கட்டுரையில் பேசப்பட்ட எழுத்தாளரை புதிய வெளிச்சத்தில் புரிந்துகொள்ள உதவியது. காம்யுவின் குறிப்பேடுகளைப் பற்றிய நூல் மதிப்புரையில் சூசன் பெரும் எழுத்தாளர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். கணவர்கள், காதலர்கள். கணவர்கள் நம்பகமானவர்கள், புத்திசாலிகள், பரந்த மனம் கொண்டவர்கள், கண்ணியமானவர்கள். காதலர்கள், சுயநலமிகள், நம்பத் தகாதவர்கள், கொடூரர்கள். வாழ்க்கையில் போலவே கலையிலும் இந்த இரண்டு வகையினரும் தேவை. இதில் ஆல்பெர் காம்யு ‘இலட்சியக் கணவன் ‘. கொடூரக் காதலனிலிருந்து நம்பகமான கணவனாகப் பரிணாம வளர்ச்சி பெற்றவர். ‘மறுப்புவாதி ‘ (Nihilist)யாகத் தொடங்கிய காம்யு பொது அறவுணர்வு சார்ந்த நுட்ப மனத்தினரானதாக மாறியதாக சாண்டாக் மதிப்பிடுவது கவனத்தை ஈர்த்தது. காம்யுவின் எழுத்துக்களில் நன்மை சுயேச்சையாகவே தனது செயல்பாட்டையும் அதன் நியாயமான காரணத்தையும் தேட நிர்ப்பந்திக்கப்படுகிறது என்ற புரிந்துகொள்ளல் துல்லியமானதாக காம்யுவை மறுவாசிப்புச் செய்யும் சந்தர்ப்பங்களில் உணர வாய்த்திருக்கிறது.
முப்பது ஆண்டுக் காலமாக இரத்தப் புற்று நோயுடன் போராடிக்கொண்டே வாழ்ந்தவர் சூசன். நோயின் பசிக்கு தனது மார்பகத்திலொன்றை அறுத்துக்கொடுத்தவர். எனினும் வாழ்நாள் முழுவதும் அதைப் பொருட்படுத்தாமல் சமூக நீதிக்கான நிரந்தரப் போரில் ஈடுபட்டிருந்தார். வன்முறைக்கும் யுத்தத்துக்கும் எதிராக இயங்கியவர். போஸ்னியப் போரின்போது மூன்று ஆண்டுகளுக்கு மேல் யுத்தக்களமான சரெயெவோவில் வாழ்ந்தார். பெண்ணியவாதி.மனித உரிமைப் போராளி என்ர நிலையிலும் அயராது செயல்பட்டவர். சொல்லப்பட வேண்டியதை எந்த அதிகார பீடத்தின் முன்னாலும் சொல்லத் தயங்காதவர். செப்டம்பர் 11 ,2001 சம்பவத்தை ‘அமெரிக்காவின் கூட்டணியும் நடவடிக்கைகளும் விளைத்த வினை ‘ என்ற சூசனின் கருத்து நாட்டையே உலுக்கியது.
அயல்மொழி எழுத்தாளர்களில் எனது நம்பகமான பரிந்துரையாளர்களில் சூசன் சாண்டாக் முக்கியமானவர். அவர் சிபாரிசு செய்து மதிப்புரைத்த புத்தகங்களில் பலவற்றைக் கருத்தூன்றிப் படிக்க முயன்றதுண்டு. சமீபத்திய அவரது பரிந்துரையின்பேரில் வாசிக்கத் தொடங்கிய நாவல் சிலி எழுத்தாளர் ராபர்ட்டோ போலானோ(Roberto Bolano) எழுதிய ‘தொலைதூர நட்சத்திரம் ‘ (Distant Star). நவீன சிலி இலக்கியத்தில் காத்திரமான செல்வாக்குச் செலுத்தியவர் போலானோ என்று சாண்டாக் கோடிகாட்டியதில் சிக்கியவர் இந்த நாவலாசிரியர். சென்ற ஆண்டு மரணமடைந்துவிட்டார். சங்கோஜியும் நுண்ணுணர்வு மிகுந்தவனுமான ஒரு கவிஞன் சிலியின் சர்வாதிகாரி பினோஷேவின் விமானப் படையில் சேர்வதும் தேர்ந்த பாசிஸ்ட் கொலைஞனாக மாறுவதும் தான் நாவலின் கதைமையம். சூசன் பரிந்துரைத்திராவிட்டால் கவனத்தில் பதியாமற் போயிருக்கக் கூடும். நன்றி, சூசன் சாண்டாக், நன்றி.
@
சுகுமாரன்
29 டிசம்பர் 2004
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சங்கீதமும் வித்வான்களும்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- மெய்மையின் மயக்கம்-32
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- ரெஜி
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- கடிதம் டிசம்பர் 30,2004
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- ஒரு வேண்டுகோள்
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- கடிதம் டிசம்பர் 23,2004
- சுனாமி
- சுனாமி
- பத்மநாபஐயர்
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- கடற்கோள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- பெரானகன்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- கவிக்கட்டு 42
- பெரியபுராணம் – 24
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கடற்கோள்
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடலம்மா….
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1