சுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

செழியன்


சிறந்த சினிமா அறிமுகம் : திரைவெளி

-உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல்.
———————————————————————————————–
நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம், நுட்பம், அரசியல் சார்ந்த பின்புலங்களை அறிந்து கொள்வதற்கும் பரவலான அறிமுகம் தேவைப்படுகிறது. அந்த அக்கறையுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட ஒர் பார்வையாளரின் குறிப்புகளென ” திரைவெளி “வந்திருக்கிறது.

செம்பேன் உஸ்மான் என்கிற ஆப்ரிக்க இயக்குநரில் இருந்து ஆலிவர்ஸ்டோன் என்கிற அமெரிக்க இயக்குனர் வரை அரிதான படங்களைப் பேசும் இந்த நூல் “ஸ்ரீ கனகலெட்சுமி ரெக்கார்ட் டான்ஸ் குரூப்” என்னும் சுவாரஸ்யமான தெலுங்கு நகைச்சுவைப் படம் குறித்த தகவலையும் தருகிறது. சோமரத்னே திசனாயக்கே எனும் இலங்கை இயக்குனரின் தேசியவாத பற்றிச் சொல்கையில், ‘இலங்கையின் உயர் அதிகாரம் இன வர்க்க மேலாதிக்கமும் தமிழர்களை நிலையற்றவர்களாய் வைத்திருக்கும் துயரமும் இந்தப் படத்தில் சரியாகவே வெளிப்படுகிறது’ (ப.62) என்று சொல்லும் இந்நூல், ஈழத் தமிழர்கள் பிரான்ஸ’ல் எடுக்கும் மூன்றாந்தரமான வீடியோ படங்கள் குறித்த செய்திகளையும்(‘எண்பதுகளில் வெளி வந்தவற்றில் தனிப்புறா, நீதியுன் சோதனை குறிப்பிடத்தக்க படங்கள்.ப.65) மாற்றாக ஒரு நல்ல குறும்படமான குடா என்கிற ஆதிவாசிகள் பற்றிய கேரளப்படத்தைப் பற்றியும் இஸ்லாமியப் பெண்கள் மீது மதரீதியான அடக்குமுறையைச் சொல்லும் சப்மிஷன் என்ற வெளிநாட்டு குறும்படம் பற்றிய செய்தியையும் பதிவு செய்கிறது.(ப.116).

உலகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசும் அதே ஆர்வத்துடன் இந்தியாவின் பிற மொழிப்படங்கள் குறித்த செய்திகளையும் இந்த நூல் பதிவு செய்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, இந்தி, வங்காளம், மராத்தி முதலிய மொழிகளில் நிகழ்ந்திருக்கும் திரைப்பட முயற்சிகளும் பதிவாகியிருக்கின்றன. ‘ஆசுவாசம் தரும் மராத்திய திரைப்பட உலகம்”, தெலுங்கு திரைப்பட உலகம் 88’ போன்ற எளிய தலைப்புகளால் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் அதன் தரம் சார்ந்த விவரங்களை நூலாசிரியர் சுப்ரபாரதிமணியனின் அபிப்ராயங்களுடனும் இந்த நூல் பதிவு செய்கிறது. ஆதிவாசிகளின் இயல்பான பாடல்களும் அவர்களின் மரபு ரீதியான இசையும் படத்திற்கு உயிர்ப்பூட்டுபவை. ஆனால் வெளிப்பாட்டு முறையில் கதாபாத்திரங்களின் வகையும் சற்று மிகையாக சில இடங்களில் வெளிப்பட்டுவிடுகிறது.( ப.22).

படங்கள் பற்றிய செய்திகளை நேரடியாகச் சொல்லாமல் தனது சந்திப்பு மற்றும் பயணஅனுபவம் சார்ந்த கட்டுரைகளாகவும் தனது வாசிப்பு சார்ந்த பதிவுகளாகவும்மாற்றுவது இந்தக் கட்டுரைகளின் பலம். பல இடங்களில் கட்டுரைகள் நேரடியான தகவல்களாகவும் அமைந்து விடுகின்றன. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட போதும் தவறாக பக்க எண்கள் குறிக்கப்பட்ட பொருளடக்கம் புத்தகத் தயாரிப்பிலிருக்கும் குறை. நேரடியான கட்டுரைகள்றவிர அயல்நாட்டு இயக்குனர்களின் சிறு பேட்டிகளும் இங்மர் பெர்க்மனின் ஒரு கடிதத்தின் மொழியாக்கமும் இந்த நூலில் உள்ளன.

பலருக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்தாலும், வெகுசிலரே தாங்கள் பார்த்த படங்கள் பற்றி எழுதுகிறார்கள். வெறுமனே பார்த்த படங்களின் பெயர்களை அடுக்கி பெருமை பேசுவதையும் இங்குள்ள படங்களை விமர்சிப்பதையும் விடுத்து, நல்ல திரைப்படம் மீது அக்கறை உள்ளவைகள் அது குறித்து எழுத முன்வர வேண்டும். அந்த வகையில் திரைவெளி வழங்கும் அறிமுகம் முக்கியமானது.

= செழியன்
=====================================================================

( செழியன்= “காதல் உட்பட பல தமிழ்த்திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர்)

” திரைவெளி ” திரைப்படக்கட்டுரைகள் = அம்ருதா பதிப்பகம், 5, அய்ந்தாவது தெரு,
சக்தி நகர், போரூர், சென்னை 116. ரூ 80/

=====================================================================

Series Navigation

செழியன்

செழியன்