சுந்தர ராமசாமியின் மறைவு

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

நாகூர் ரூமி


நேற்று ஊருக்குப் போயிருந்தபோது தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சுந்தர ராமசாமி மறைந்து விட்டார் என்று. எங்கே எப்போது என்ற விபரங்களை யாரிடம் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சீர்காழி நண்பர் தாஜ் கூடுதலாக ஒரு தகவல் சொன்னார். சு.ரா. இறந்தது கலிஃபோர்னியாவில் என்று.

இறப்பு எல்லாருக்கும் பொதுவானதுதான் என்றாலும், மரணத்தை ஏதாவதொரு வகையில் மீறிய நித்தியர்களின் உடல் ரீதியான இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தவறுவதே இல்லை. இந்த உணர்வு சு.ரா.வின் எதிரிகளுக்கும்கூட இருக்கும் என்றே நினைக்கிறேன்.

எனக்கு தனிப்பட்ட முறையில் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களையும், தனது ‘ஜேஜே சில குறிப்புகள் ‘ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க எனக்கு அவர் அனுமதி கொடுத்து எழுதிய கடிதத்தையும், அவர் கைப்பட அன்பாக எழுதிக்கொடுத்த ஜேஜே நாவலின் பிரதியையும் இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

ஆல்பர்ட் காமுவின் மரணத்தைப் பற்றிய குறிப்புடன் தொடங்கும் அந்த நாவலைப் பிரித்தால் இனி எனக்கு ஆல்பர்ட் காமுவின் இடத்தில் சு.ரா.தான் நினைவுக்கு வருவார்.

இயற்கையை வைத்து அவர் எழுதிய கவிதைகள் என் எழுத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒரு புதிய அணுகு முறையும், சொல்லழகும், முதிர்ச்சியும் கூடிவந்திருக்கும்.

மரங்கள்போல் வாழ்வு என்று கிடைக்கும் ?…

மரங்கள் உன்னதமானவை

கம்பீரமான எளிமை

நிர்மலமான இதயம்

மேலே மேலே என்று செல்லும் அவா

சூரியக் கிரணங்களில் குளிப்பதில் மோகம்

மண்ணை எப்போதும் மறக்காத தன்மை

மெளனம்.

மனிதர்கள் மரங்கள்போல் வாழுகின்ற காலம் வரும். (விருட்ச மனிதர்கள்)

இந்த மின்விசிறிகளின் சுழற்சியில்

இவற்றின் விட்டம் அதிகரிக்க

வழியேதும் இல்லையென்பதை அறியும்போது

என் மனம் வருத்தம் கொள்கிறது.

பூமியை ஒருபோதும் இவை ஸ்பரிசித்ததில்லை

என நினைக்கும்போதும்

ஒருபோதும் இவை வானத்தைக் கண்டதில்லை

என எண்ணும்போதும்

வருத்தம் என் மனதைக் கவ்வுகிறது.

இந்த மின்விசிறிகளின் சுழற்சியும் சரி, ஓய்வும் சரி

இவற்றின் கையில் இல்லை என்பதை உணரும்போது

என மனதில் சங்கடம் படர்கிறது.

தாம் வேர்வை ஆற்றுபவர்கள்

யார் என்பதுகூட அறியாத

மின்விசிறிகள் இவை. (மின்விசிறிகள் சம்பந்தமாக ஒரு வருத்தம்)

கவிதை எனும் நுட்பமான வடிவத்தினை எப்படி கட்டமைப்பது என்பது பற்றி எனக்கு கற்றுக்கொடுத்த கவிதைகள் அவரது. எவ்வளவு எளிமையாகவும் அதேசமயம் இலக்கிய அந்தஸ்துகூடிய கவிதைகளையும் அவர் எழுதினார் என்பதற்கு மேலே தரப்பட்ட உதாரணங்களே போதும்.

கவிதைக்குக் குறைந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அவரது ‘ஜேஜே சில குறிப்புகள் ‘ நாவல். உரைநடையை அதன் உரைநடைத் தன்மையிலிருந்து மீட்டெடுத்து, ஒரு கவிதா அழகை அதற்கு வழங்கிய அழகான தமிழில் எழுதப்பட்ட நாவல் அது. அந்நாவலின் உயிரே அதன் தமிழில்தான் இருப்பதாக எனக்குப் படுகிறது. (இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு நான், ‘மீட்சி ‘ இதழில் ‘கவிதை மொழியும் உரைநடை மொழியும் ‘ என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்).

சிறந்த கவிதை என்றால் எது என்பது பற்றி அவர் என்னிடம் நேரில் சொன்ன பதில்தான் சு.ரா. என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரும். ஒருமுறை குற்றாலத்தில் அவரை (முதல் முதலாகவும் கடைசியாகவும்) சந்தித்தபோது சிறந்த கவிதை எது என்று நான் அவரைக் கேட்டேன்.

அதற்கு அவர், ‘நான் சொல்வதை வைத்து நீங்கள் இந்த உலகத்தில் உள்ள கவிதைகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், கடைசியில் பசுவய்யா கவிதைகள்தான் தலைசிறந்த கவிதைகள் என்ற முடிவுக்கு வரவேண்டி வரும் ‘ என்றார்! (பசுவய்யா என்ற புனைபெயரில் அவர் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்).

திறமை எங்கிருந்தாலும் அவர் ஊக்குவித்தார். பொறாமை பிடித்த இந்த உலகில் இது ஒரு அரிய குணம் என்று சொல்லத் தேவையில்லை. யாத்ரா இதழ் வந்துகொண்டிருந்தபோது, ரூமி, ஆபிதீன் இருவரிடமிருந்தும் வரும் படைப்புகளை பிரசுரிக்கும்படிச் சொல்லி எங்களை அந்தக் காலத்திலேயே உற்சாகப் படுத்தியவர் அவர்.

ரொம்ப துணிச்சலானவர். முதலமைச்சரின் மகாமகக் குளியல் பற்றி அவர் கணையாழியில் எழுதிய கட்டுரையை உதாரணமாகச் சொல்லலாம்.

ரொம்ப பிடிவாதக்காரர். ‘பிள்ளை கெடுத்தாள் விளை ‘ கதை பற்றிய விமர்சனங்களுக்கு அவர் வாய் மூடி மெளனமாக இருந்ததைச் சொல்லலாம்.

ஆனாலும் நவீன தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமை ஒதுக்க முடியாதது. வலு சேர்ப்பது.

அவருக்கு இறைவன் அந்த உலகிலும் கண்ணியம் கொடுத்தருள்வானாக.

ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி