கோபால் ராஜாராம்
பட்டியல்கள் எப்போதுமே ஆபத்தானவை. காலத்தில் நிலைப்புக் கொண்டவை. ஜெயமோகனின் நாவல் பட்டியல்கள் பெற்றுவந்திருக்கும் மாற்றங்கள் பற்றியும், க நாசு வின் பட்டியல்கள் பற்றியும் நாமறிவோம். இருப்பினும் பட்டியல்களுக்கு ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு. அது பட்டியலின் வழியாக சில கோட்பாட்டு அடிப்படைகளைப் புரிந்து கொள்வது. பட்டியலிட்ட நபரின் ரசனை-புரிதல் வழியாக நமது ரசனை புரிதல்களை உரசிப் பார்ப்பது.
தீரா நதி இதழில் சி மோகன் சில பட்டியல்களை இட்டுள்ளார்.பட்டியல்கள் அல்லாமல் சில கருத்துகளையும் கூறியுள்ளார். ‘ஆனால் நாவல் கலை விடுக்கும் சவாலை எதிர்கொள்ளும் தீவிர படைப்பாளுமை நம்மிடம் உருவாகவில்லை ‘ என்பது ஒரு கருத்து. ‘யோசிக்கிறேன் என்று ஒரு படைப்பாளி தன்னை முன்னிறுத்தும்போது உண்மைகள் வெளியேறிவிடுமென்று தோன்றுகிறது. ஒரு பிரதி பல்வேறு யோசனைகளுக்கானதாக உருவாகும் போது தான் உண்மைக்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து சரிந்தவை ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘, ‘கன்னியாகுமரி ‘ ஆகிய நாவல்கள். சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகளு ‘ க்கு ஏற்பட்டதும் இப்படியான ஒரு வீழ்ச்சி தான். ஆரம்பத்தில் எனக்குப் பிடித்தமான நாவல் அது. ஆனால் கடந்த ஏழு எட்டு வருடங்களாக அது முக்கியமான நாவலா என்று சந்தேகமாக இருக்கிறது. கருத்துரீதியிலான தகவல்களை அது அடுக்கிக் கொண்டே போகிறது. அதில் வாசகனுக்கு மயக்கம் ஏற்படுகிறது.அதில் வாசகனுக்கு மயக்கம் ஏற்படுகிறது. இந்தக் கருத்துகளுக்கு நாம் நகர்ந்தபிறகு இந்தப் பிரதியை நம் வாசிக்கும் அவசியமற்றுப் போகிறது. ‘ என்பது இன்னொரு கருத்து.
‘ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் எல்லாரும் ஒரு வகையைச் சேர்ந்தவர்கள்.ஜெயகாந்தன் இயல்பாகவே வெகுஜன எழுத்தாளராகிவிட்டார். ஜெயகாந்தன் இயல்பாகவே வெகுஜன எழுத்தாளராகிவிட்டார். ஜெயகாந்தனுக்கும் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோருக்குமிடையில் பெரிய வேறுபாடெல்லாம் ஏதும் கிடையாது. உருவத்தில், கச்சிதத்தன்மையில் வெண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். வடிவத்தில், தொழில் நுட்பத்தில் ஜெயகாந்தனைவிடச் சற்று மேம்பட்டவர்கள் இவர்கள். இப்போது நடுத்தர இதழ் என்று ஒன்று பேசப் படுகிறதில்லையா, அதில் எழுதுபவர்களாக இவர்கள் இருந்திருக்க வேண்டும். .. இவர்கள் மூவருமே நடுத்தர எழுத்தாளர்கள் தான்.
‘ என்பது மற்றுமொரு கருத்து.
உயர்தர எழுத்தாளர்கள், நடுத்தர எழுத்தாளர்கள் என்ற பாகுபாடு எதை வைத்துச் செய்யப் படுகிறது என்று மோகன் தெளிவாக்க வில்லை. ஆனால் அவர் தரும் உதாரணங்களை வைத்துப் பார்க்கும் போது, எழுதுபொருள், நிலைக்களன் ஆகியவற்றைக் கொண்டல்ல, ஆனால் எழுதும் முறைமையைக் கொண்டு என்று ஊகிக்க இடம் இருக்கிறது. எழுதும் முறையைக் கொண்டு என்றால் எழுத்தில் உள்ள பூடகத் தன்மையை முன்வைத்து இந்தப் பாகுபாடு, உயர்வு-நடுத்தரம் பகுப்பு செய்யப் படுகிறது என்று யூகிக்கலாம். (பழைய உருவம் உள்ளடக்கம் விவாதத்திற்குள் நான் இதனைக் கொண்டு செலுத்த விரும்பவில்லை.) இந்த இலக்கியப் பார்வை எலீட்டிசம் என்று முன்னரே பலரால் விமர்சன செய்யப் பட்டிருக்கிறது. அதில்லாமல், ஜனரஞ்சகம் என்று எதை வைத்து நிர்ணயிப்பது ? ரமணி சந்திரனின் ஜன ரஞ்சகமும், அசோகமித்திரனின் ஜனரஞ்சகமும் ஒன்று தானா ? ஆமாம் என்றால் எப்படி ? இல்லை என்றால் இரண்டையும் ஜனரஞ்சகம் என்று வரையறுப்பது குழப்பத்தையல்லவா தரும் ? இரண்டும் ஜனரஞ்சகம் என்றால் , அசோக மித்திரன் நடுத்தரம் என்றால், ரமணி சந்திரன் கீழ்த்தரமா ?
இந்த ஜனரஞ்சகம் என்ற வார்த்தை மிகத் தவறாக உபயோகிக்கப் படும் வார்த்தைகளில் ஒன்று. பத்தாவது வரையில் தமிழ் படித்த எவரும் புரிந்து கொள்ளும் வகையில் தான் ஜெயகாந்தன் , அசோகமித்திரன், சுந்தர ராமசாமியின் படைப்புகள் உள்ளன. இதில் எந்த இழிவும் இல்லை. சொல்லப்போனால், உலகின் மிகச் சிறந்த இலக்கியங்கள் எல்லாமே எளிமையைக் கைக்கொண்டவை தான். ஆனால் எளிமை மட்டுமே அதன் அடையாளங்கள் அல்ல. ரமணி சந்திரனின் படைப்புகளுக்கு எளிமை மட்டுமே அடையாளம், அசோகமித்திரனின் முதல் படியாக மட்டுமே எளிமை நிற்கிறது.
ஜே ஜே சில குறிப்புகளையும், சண்முக சுந்தரத்தையும் ஒப்பிட்டு ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறார், மோகன். சுந்தர ராமசாமி ஒரு முறை சண்முக சுந்தரத்தின் வர்ணனைக் களத்தை வேறு வழியாக வந்தடையக் கூடிய வாசகனுக்கு சண்முக சுந்தரத்தின் எழுத்து எந்தக் கிளர்ச்சியையும் தராது என்று சொன்னது, ஜே ஜே சில குறிப்புகளுக்கும் பொருந்தும் என்று எழுதியிருக்கிறார். ஆனால் அது ஏன் எப்படி இந்தக் குணாம்சம் புரிந்துகொள்ளப் படவேண்டும் என்று எதுவும் சொல்ல வில்லை.
சிறந்த இலக்கியத்தின் குணாம்சம் என்றால் என்ன ? நான் புரிந்து கொண்ட அளவில் தனித்த ஓர் அனுபவத்திலிருந்து உலகுமயமான ஓர் அனுபவத்தை நோக்கி நகர்வது தான் நல்ல இலக்கியத்தின் கலாசாரக் குணாம்சம் என்று புரிந்துகொள்கிறேன். நல்ல இலக்கியத்தில் , இதை நான் வேறு விதமாய் வரையறுக்கலாம் என்று , இதற்கு இணையாக ஒரு கோட்பாடை முன்வைப்பேன். அது ‘பிராந்தியத் தன்மையிலிருந்து உலகு தழுவிய தன்மைக்கு ‘ (From provinicial to the universal.) இந்தப் புரிதலை முன்வைத்துப் பார்த்தால் தான் ஜே ஜே சில குறிப்புகளும் , சண்முக சுந்தரத்தின் நாவல்களும் எந்தப் புள்ளியில் இணைகின்றன என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். சண்முக சுந்தரத்தின் நாவல்கள் தரும் பிராந்தியத் தன்மை, நிகழிடம் சம்பந்தப் பட்ட விஷயம். ஜே ஜே தரும் பிராந்தியத் தன்மை கருத்துலகம் சம்பந்தப் பட்ட விஷயம். ஆனால் இரண்டுமே பிராந்தியத் தன்மையைத் தாண்டாதவை தான்.ஜே ஜே யின் ஐம்பதுகளின் கருத்தாக்கம் படர்ந்த ஓர் கருத்துலகில் அவன் மேற்கொள்ளும் போராட்டங்கள் , ஐம்பதுகளின் பிரசினைகள் வெறும் வரலாறான காலகட்டத்தில் அர்த்தமற்றவை. (தமிழின் முதல் கருத்துலக நாவல் என்று சொல்ல வேண்டுமானல், ‘பாரிசுக்குப் போ ‘வைத் தான் சொல்ல வேண்டும். சாரங்கனின் போராட்டங்கள் வெகுவான பிராந்தியத் தன்மை கொண்டவை தாம். தமிழ்ச் சினிமா உலகின் இசையுலகை விடவும் பிராந்தியத் தன்மை வேறெதெற்கு இருக்க முடியும் ? ஆனால் தமிழ் சினிமா இசையின் ஊடாக ஒரு உணர்வுகள் நிரம்பிய இசைக் கலைஞனின் போராட்டங்கள் வரலாறாக ஆகிவிட்டாலும் கூட ‘பாரிசுக்குப் போ ‘ எழுப்பிய கேள்விகளும், அதற்குத் தரப்பட்ட விடைகளும் நிலைத்து நிற்கும்.) ஆனால் ‘புளிய மரத்தின் கதை ‘ அப்படியல்ல. புளியமரத்தின் பெளதீக இருப்புப் பற்றி அறியாத ஒரு வேற்றாள் கூட இந்த நாவலின் அடிப்படைச் சரடைப் புரிந்துகொள்ள முடியும். அதனாலேயே, இது பிராந்தியத் தன்மையிலிருந்து உலகத் தன்மைக்குத் தாவுகிறது.
வேறு ஒரு ஊடகத்திற்குப் போகலாம். சத்யஜித் ரேயின் சினிமா உலகம் பிராந்தியத் தன்மைகள் நிரம்பியது. அசலான வங்காளிகளின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது. ‘பதேர் பாஞ்சாலி ‘யும் , ‘சாருலதா ‘வும் காண்பிக்கிற நிகழ்களம் உலகத் தன்மைக்குத் தாவுவதாய்ப் பாவனைகள் கூடச் செய்வதில்லை. ஆனால் ஒரு தேர்ந்த கலைஞனின் கையில் அவை உலகத் தன்மைக்குத் தாவுகின்றன. அதே சமயம், ரித்விக் கடக்கின் படங்கள் பிராந்தியப் படங்களாகவே நிற்கின்றன. தமிழில் பாரதி ராஜாவின் படங்கள் பிராந்தியத்தன்மையை விட்டுத் தாண்டாதவை. ஆனால் பாலு மகேந்திராவின் படங்கள் அப்படிப் பட்டவையல்ல. ‘வீடு ‘ ஒன்றை ஒரு பெண் கட்ட எடுக்கும் முயற்சிகள் சென்னையின் களத்தில் நிகழ்வதாயினும் , அதற்கு ஓர் உலகத்தன்மை பாலு மகேந்திராவின் கலைச் சிறப்பால் சாத்தியமாகிறது.
‘புனை களம் ‘ முதல் இதழை வரவேற்று திண்ணை பக்கங்களில் நான் பதிவு செய்தபோது ஒரு கேள்வியை எழுப்பியிருந்தேன். முத்துசாமிப் பாவலரின் வில்லுப் பாட்டு எப்படி கலையாகிறது என்ற அந்தக் கேள்வியை எதிர்கொண்ட மோகன் அது கலை தான் என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது ஒரு கலைஞனின் தனித்த வாழ்க்கைப் பார்வையை வில்லுப்பாட்டு அளிக்கிறதா என்பது என் கேள்வி. மோகன் முத்துசாமிப் பாவலரின் வில்லுப்பாட்டினை தனித்துவம் கொண்ட கலை என்று வாதிட்டார். அவரே இப்போது அசோகமித்திரன், ஜெயகாந்தன் ஜனரஞ்சகம் என்று – சற்று ஏளனமாகவே – குறிப்பிடுவது எனக்கு வியப்பை அளிக்கிறது.
இந்த ஜனரஞ்சகம் என்ற வார்த்தையை எறிந்து படைப்பாளிகளை மிரட்டும் காலம் கடந்து விட்டதாய் நினைத்திருந்தேன். கடந்தகாலத்தினை மீண்டும் மீண்டும் நிகழ் காலத்தில் இடற வேண்டியதாய் உள்ளது.
அசோகமித்திரனின் ’18-வது அட்சக் கோடு ‘ ரஜாக்கர்களின் ஹைதராபாத்தில் நிகழ்கிறது. ஆனால் கதையின் உட்சரடு ஹைதராபாத்தின் அப்போதைய நிகழ்வுகளின் உடனடித் தன்மையைத் தாண்டிச் செயல்படுகின்றன. ‘இன்று ‘ நாவலின் களம் அவசர நிலை இந்தியாவாய் இருக்கலாம். ஆனால் அவசர நிலைப் பதிவு மட்டுமல்ல இந்த நாவல். ஜெயகாந்தனின் ‘ ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ‘ தமிழ் நாட்டின் அன்றைய சபாநாடகங்களின் பின்னணியைக் கொண்டிருக்கலாம். சென்னை பாஷை புழங்குவதாய் இருக்கலாம். ஆனால் இது ‘பற்றிய ‘ நாவலாய் அது சுருங்கிவிடாமல் இருக்க விரிவு பெறும் எழுத்துத் திறன் தான் அதில் மிகுதி.
பாமா, விசாலம், கி. ராஜ நாராயணன் , சிவகாமி ஆகியோரை தமிழின் சிறந்த பிராந்திய எழுத்தாளர்களாய்க் குறிப்பிடலாம். அசோக மித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றோரை உலகத்தன்மை கொண்டவர்கள் என்று குறிப்பிடலாம். இவர்கள் வெகுஜனங்களைச் சென்றடைய வேண்டியவர்கள், நிச்சயம் அவர்கள் வெகுஜனங்களைச் சென்றடைய பாஷை ஒரு தடையுமல்ல என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அது அவர்களின் பலம் என்பது தான் எண்ணம்.
பூடகத்தன்மையை ஆராதித்த காலம் எப்போதோ முடிந்துவிட்டது. தமிழின் பூடகத்தன்மைகள் மெளனியைத் தவிர்த்து மற்றவர்களிடம் எந்த அசல் தன்மையையும் கொண்டிருக்கவில்லை.
‘மெளனி தீவிர எழுத்தாளர் தான். ஒரு காலத்திலும் அவர் வெகுஜன எழுத்தாளராவதற்கு வாய்ப்பு இல்லை.சிறு பத்திரிகைகளில் மட்டும் தான் மெளனி எழுதமுடியும். ‘ என்ற மோகனின் அறிவிப்பில் தொக்கி நிற்பது இது தான் : சிறுபத்திரிகையில் மட்டுமே வெளிவரும் தகுதி ஒன்றுதான் ஒரு எழுத்தாளனை தீவிர எழுத்தாளன் ஆக்க முடியும். ‘பிரமிளின் ஒரு கவிதையைக் கூட வெகுஜன இதழ்கள் போட முடியுமென்று தோன்றவில்லை. ‘ என்பது மோகனின் இன்னொரு வாக்கு. எனக்கு இதைப் படித்தவுடன் தோன்றியது இது தான் – மோகன் பிரமிளைப் படிக்கவே இல்லை. பிரமிளின் கிண்டல் கவிதைகள், விமர்சனம் என்ற பெயரில் தமக்கு எதிரிகள் என்று அவர் எண்ணிய சிலரின் மீது வீசிய அம்புகள் வெகுஜனப் பத்திரிகைகளின் சவால், கிசு கிசு தரத்தினைத் தாண்டாதவை. அவருடைய கதைகளின் பூடகத் தன்மை, பூடகத்தன்மையைக் கழற்றிக் கொண்டு வேறேந்த திசையிலும் நகர முடியாமல் சோம்பிப் போனவை. அவருடைய கட்டுரைகளில் மிக ஆழமான கருத்துகள் உண்டு. ஆனால் அடுத்த வரியிலேயே தம் எதிரிகளை நோக்கிய சொல்லம்புக்குத் துணையாக மட்டுமே இந்தக் கருத்துகள் பயன் படுத்தப் பட்டு, அந்தரத்தில் நிற்கக் காணலாம். அவருடைய சாதனைகள் கவிதைகள் தான். மிகச் சிறப்பான உரைநடை மொழி அவருக்கு இருந்தது. ஆனால் அந்தச் சிறப்பை அவர் உபயோகித்த விதத்தில் , தமிழுக்கு எந்த புதிய சேர்க்கையையும் அவரால் தரமுடியவில்லை.
இந்த சிறுபத்திரிகை உரைகல்லில் தோய்க்க அவர் எடுக்கிற அடுத்த ஆளுமை கோணங்கி. கோணங்கி சிறந்த உரைநடைக் கலைஞன். பிராந்தியத்தன்மையை விட்டு மேலே எழுகிற எல்லாச் சாத்தியமும் புலப்பட நேர்ந்த தருணத்தில் பாவம் , மாந்திரீக யதார்த்தத்தில் புகுந்துகொண்டு புதைந்து போனவர்.
கலாப்ரியா (நெல்லை வாழ்க்கையின் துணுக்குகள்), விக்கிரமாதித்தன் (ஒரு தமிழ் நாடுப் பிரயாணியின் அனுபவக் கீற்றுகள்) , வைரமுத்து (பாடல் மற்றும் தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்கள் கட்டமைத்த மொழிப் பிராந்தியம்), ஆத்மாநாம் (நகர் சார் உலகம்) ஆகியோரும் இப்படி பிராந்தியக் கலைஞர்களாய்க் காணப்படவேண்டும். இவர்களில் தம்முடைய பிராந்தியத் தன்மையை மீறி எழும்பும் ஒரே கவிஞர் கலாப்ரியா தான்.
‘நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஒட்டுமொத்தமாக மெளனி, பிரமிள், நகுலன், சம்பத் ஆகியோரை மிகச் சிறந்த ஆளுமைகளாய்க் காண்கிறேன். ‘ என்பது மோகனின் கூற்று. இதன் உட்கிடை இவர்கள் தான் என்பதாய்ச் சொல்லலாம். இது மிகவும் விவாதத்திற்கு உரியது. இதன் ஒரே அளவுகோல் பூடகத்தன்மை தான் என்று மோகனை நான் முன்பு மேற்கோள் காட்டியுள்ளேன்.
பிரமிள் பற்றி ஏற்கனவே என் விமர்சனத்தை முன்வைத்துள்ளேன். நகுலன் மெளனி இருவருமே சிருஷ்டித்த சோதனைக் களன்கள் தமிழில் மிக விசேஷமான இடம் பெறுபவை என்பதால் அவர்களின் முக்கியத்துவம் பற்றி எனக்குச் சந்தேகம் இல்லை. சம்பத்தின் ஒரே தகுதி . மாந்திரீக யதார்த்தம் என்ற சொல் புழக்கத்தில் வருவதற்கு வெகு காலம் முன்பே மரணத்தை பஸ்ஸில் பிரயாணம் செய்ய்ச் செய்தவர். ஆனால் அவருடைய கதைகள் கதைகளின் முழுமையை அடையும் முன்பே நின்று விடுபவை.
எளிமையின் ஏமாற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாத மனத்தடை மோகனுக்கு இருப்பதால் தான் அவருக்கு ஆ.மாதவன், ஜெயகாந்தன், தி ஜானகிராமன் போன்றோர் இருக்கும் பரப்பில் தீவிர படைப்பாளுமை அவர் கண்களுக்குப் புலப்படவில்லை என்று கருதுகிறேன்.
************
gorajaram@yahoo.com
- இணையம் என்றொரு வேடந்தாங்கல்!
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)
- விடியலை நோக்கி
- கொள்ளையின்பம்
- புதுவருடக் கவிதைகள் இரண்டு
- வேர் மனது
- மனசுக்குள் வரலாமா ?
- சி மோகனின் பட்டியல்கள்
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.
- கரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)
- ஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
- டார்வீனியத்திற்கு அப்பாலான உயிரியல் ? (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)
- அறிவியல் துளிகள்
- ஒரு புல்லாங்குழலின் புதுப்பயணம்…
- நினைவலைகள்
- பச்சை விளக்கு
- எல்லாம் ஆன இசை
- மெளனத்தை நேசித்தல்
- வருக புத்தாண்டே வருக
- கனல்மணக்கும் பூக்கள்.
- சொலவடையின் பொருளாழம்
- புத்தம் புது வருடம்..
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்
- பெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி
- தீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்
- கிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.
- கிறிஸ்துமஸ் பரிசு
- பலூன்
- ஒழுக்கம்