வண்ணத்துப் பூச்சி
உதிரும் மலர் , என்றெண்ணினேன்
கிளைக்குத் திரும்பும் —
வண்ணத்துப் பூச்சி.
(மோரிதேகே)
நிலா – அறுவடைக்காலத்தில்
இந்த நிலாவிற்கு
ஒரு கைப்பிடி வைத்தால்
விசிறிக் கொள்ளலாம்.
(சோகன்)
சொல்லப் படாத காதல்
‘கோடையினால் இளைத்தேன், கண்ணே ‘
அவனிடம் சொன்னேன் ஆனால்
அடக்க முடியாமல் கண்ணீர்.
(கிகின்)
வசந்தத்தில் ஒரு காலைப் பொழுது
வசந்த கால நாட்கள்!
பெயரில்லாத மலை மேலெல்லாம்
இளங்காலைப் பொழுதின் பனிமூட்டம் – திரையாக.
(பாஷோ)
கவிஞனின் கனவு
மலர்கள் போர்த்தியபடி
உடனே நான் இறக்க வேண்டும்
-இந்த நம் கனவில்.
(எத்சுஜின்)
வசந்த காலை மழை
வசந்த காலை மழையில்,
ஒரு குடையும் ஒரு மழை அங்கியும்
– பேசியபடி கடந்து செல்லும்.
(புசோன்)
சோளக் கொல்லை பொம்மை
அஸ்தமன் சூரியனில்
வயல் பொம்மையின் நிழல்
சாலையில் – தனியே.
(ஷோஹா)
அநாதைக் குருவி.
வா விளையாடலாம்,
வா; குருவி இங்கே
உனக்கும் அம்மா இல்லை.
(ஈஸா)
நகர வாழ்க்கை
நகரத்தில் வாழ்க்கை
எல்லாவற்றுக்கும் பணம் —
பனியைக் கரைக்கக் கூட.
(ஈஸா)
இலைகள்
இலைகளே கேளுங்கள்
உங்களில் முதலில் உதிர்வது யார் என –
வீசும் காற்றிடம்.
(க்யோஷி)
ஆங்கில மூலம் தமிழில் கோபால் ராஜாராம்