சிலம்பில் உரைநடை

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

முனைவர். மு. பழனியப்பன்


தமிழ் விரிவுரையாளர்
மன்னர் கல்லூரி புதுக்கோட்டை.

உரைநடை என்ற சொல் காலத்தால் பிந்தையது, ஆனால் உரைநடை என்பது பழமையானது. என்ற கருத்தைக் கொண்டு உரைநடை வடிவத்தின் பழமையை அறியலாம். செய்யுள் , கவிதை வகையினின்று, உரைநடை வடிவம்- மெல்லப் பிரிந்து, தனித்த வகையாகி, அதனுள் பல உரைநடை இலக்கிய வடிவங்கள் கிளைத்தெழுந்து, அதுமட்டுமில்லாது தற்காலத்தில் உரைநடை உதவியின்றி செய்யுளை உணரமுடியாது என்ற அளவிற்குப் பெருமதிப்பை அது பெற்றுள்ளது.
தமிழில், உரைநடையின் எழுச்சி உடனே ஏற்பட்டதல்ல. பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெல்ல கருவாகி பின்வேரூன்றி வெடித்தெழுந்துள்ளது. இதற்கு பலவேறு சான்றுகள் கிடைக்கின்றன.
பாட்டிடை வைத்த குறிப்பினானும்
பாவிற் றெழுந்த கிளவியானும்
பொருளொடு புணராப் பொய்மொழியானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்
உரைவகை நடையே நான்கென மொழிப
(தொல்காப்பியம் செய்யுளியல் 171)

என்ற தொல்காப்பியரின் நூற்பா தமிழ் உரைநடைவகையின் வகைக்கு கருவாக அமைந்ததாகும். அடுத்ததாக தமிழ் உரைநடை சிலப்பதிகாரத்தில் சிற்றிலை விட்டு முகிழ்க்க ஆரம்பிக்கின்றது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காப்பியத்தில் மற்றோர்க்கு, படிப்போர்க்கு உரைக்கும் முகமாக நாடகப்பாங்கின் கூற்று முறையில் சில உரைநடைப் பகுதிகளைப் படைத்துள்ளார்.
இதற்கு அடுத்த நிலையில் இறையனார் களவியல் உரை அமைகின்றது. இந்நூல் குறித்து ”இக்கவிதைத்தன்மை சிலப்பதிகார உரைப்பாட்டுமடை போன்றது. தமிழ் உரைநடையின் ஆரம்பகாலத்தை -கவிதை நிலையிலிருந்து உரைநடைக்குத் தமிழ் மாறுகிற ஒரு காலப்பகுதியைக் களவியல் உரைகாட்டுகிறது” என்று கருத்துரைக்கின்றார் மு. வரதராசனார்.
உரையாசியர்களின் உரைப் பகுதிகளும் தமிழ் உரைநடையின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை தந்தன. காலப்போக்கில் உரைநடை என்ற வகையை வரையறைகளோடு வளர்த்த பெருமை, மேலைநாட்டாரைச் சேரும். இன்றுவரை வளர்ந்து வந்துள்ள உரைநடையின் வளர்ச்சியை உரசிப்பார்க்கும் போது சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் உரைநடைப்பகுதிகள் காலவகையாலும், அமைப்புமுறையாலும் மற்ற தமிழ் உரைநடைப் பகுதிகளைவிட முந்தைய ஒன்று என்பது உறுதியாகின்றது. தமிழ் உரைநடை வளர்ச்சியில் சிலப்பதிகார உரைநடையை விடுத்து விட்டுச் செல்ல இயலாது என்கிற நிலையில் சிலப்பதிகார உரைநடை சிறப்பிடம் பெறுகின்றது. அதன் பகுதிகளே தமிழில் மூத்த உரைநடை இலக்கியப் பகுதிகளாகக் கருதத்தக்கன.

சிலப்பதிகாரம்- உரைநடையை உள்ளடக்கிய நூல்
சிலப்பதிகாரம் உரைநடையை உள்ளடக்கிய நூல் என்பதைப் பதிகம் சுட்டுகின்றது. ”இவ்வாறு ஐந்தும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள”(பதிகம் 86-88) என்ற பதிகஅடிகள் இணு;கு நோக்கத்தக்கன. இவ்வடிகளுக்குச் சிலப்பதிகார உரையாசிரியர்கள் பின்வருமாறு பொருள் கொள்ளுகின்றனர்.
”அரும்பதவுரையாசிரியர் பாட்டும், உரையும் கலந்து வந்த காவியம்”
”அடியார்க்கு நல்லார்- உரையிடையிட்டனவும், பாட்டுடையனவுமாகிய செய்யுளை. . . ”
பெருமழைப்புலவர்”நாடக வழக்கத்தால் உரைச் செய்யுள்களை இடையிடையே கொண்டுள்ளதும் நாடகத்திற்கும் இசைக்கும் உரிய பாடல்களையும், இயற்றமிழக்கேயுரிய செய்யுள்களையுடைய இக்காப்பியத்தை என்க”
” ஆர் கே. சண்முகம் செட்டியார் உரைச் செய்யுளை இடைஇடையே தொடுத்த பாட்டுடைச் செய்யுள்”
என்கின்றனர்.
மேற்கண்டவர்களின் கூற்றுள், சண்முகம் செட்டியாரின் கூற்று மற்றவர்களிடமிருந்து வேறுபாடுடையது. மற்றவர்கள் செய்யுள், இசைப்பாடல்கள், உரைப்பகுதிகள் கலந்த காப்பியமாகச் சிலப்பதிகாரத்தைக் காண, இவர் மட்டும் சிலப்பதிகாரத்தை உரைச் செய்யுளை இடையிடையே கொண்டுள்ள பாட்டுடைச் செய்யுள் என்று காட்டுகின்றார். இதன்மூலம் சிலப்பதிகாரத்தில் உரைநடை செய்யுள் வடிவில் இடம்பெற்றுள்ளது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. தற்கால உரைநடையைச் சிலப்பதிகார உரையோடு ஒப்பிடும்போது இளங்கோவடிகள் பயன்படுத்திய உரைநடை- செய்யுள் சாயலுடையது என்ற கருத்து ஏற்புடையதே.
சிலபத்திகாரம் செய்யுள் அடியாக எழுந்துள்ள காப்பியம் என்பது உறுதி. அதனைச் செய்யுள் காப்பியம், பாடல் இணைந்த காப்பியம், உரை இயைந்த காப்பியம் என்னும் பொருள்பட ”உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பதிகத்தில் சுட்டுவதன் மூலம், பதிக ஆசிரியர் எதனைச் சிறப்பிக்க விரும்புகின்றார் என்பது குழப்பமாக உள்ளது. சிலப்பதிகாரம் காப்பியம் என்பதால் அதனைச் செய்யுளால் இயன்றது எனக் குறிப்பிட வேண்டியது தேவையற்றதாகிவிடுகின்றது. இவ்வளவில் பதிக அடிகள் ஏதேனும் ஒரு சிறப்பு கருதியே இவ்வடியினை எடுத்துக்காட்டியிருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி. அதனை கட்டுரையின் பின்பகுதி விளக்கும். எதுஎவ்வாறு ஆயினும் சிலப்பதிகாரம் உரை இடைஇடையே அமைந்த காப்பியம் என்பதில் மாற்றமில்லை.
சிலம்பில் உரை என்னும் சொல்லும், உரை என்னும் வடிவமும்
சிலப்பதிகாரத்தில் உரை என்ற சொல் மற்றவர்க்கு உரைத்தல் என்ற பொருளில் பல இடங்களில் எடுத்தாளப் பெற்றுள்ளது. எடுத்துகாட்டாக வழக்குரைகாதை என்ற தலைப்பினைச் சுட்டலாம். கண்ணகி வழக்கினை உரைக்கும் பகுதிக்குத் தலைப்பிடப் பெறுகையில் அவளின் உரைக்கும் முறையை முன்னிறுத்தி வழக்குரைகாதை எனப்பட்டது.
கட்டுரைக்காதை என்ற பகுதியில் கட்டுரை என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மதுராபதி தெய்வம் முன்னை வினைகளைத் தொகுத்து உரைக்கும் காதை கட்டுரைக்காதை ஆகின்றது. இக்காதைக்கான தலைப்பு கூட்டி உரைக்கும் முறை கருதி வைக்கப்பட்டதே அன்றி உரை சார்ந்த நிலையில் வைக்கப்படவில்லை என்பதை அறிய வேண்டும். மேலும் கட்டுரைக்காதை சிலப்பதிகார உரை வகைகள் எதனையும் தன்னுள் கொண்டமையவில்லை. இப்பகுதி காப்பியத்தில் இடம்பெறும் செய்யுள் அமைதிக்கு ஏற்ப உள்ளது.
மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியைக் குறித்துக் கூறும் உலவாக் கட்டுரை கண்ணகியின் அழகு என்னும் ஒருபொருள் குறித்த கோவலனின் உரைக் கூற்றுத் தொகுப்பாக விளங்குகின்றது.
இளங்கோவடிகள் ஒருவர் மற்றவர்க்கு நேர்முகமாக கருத்துக்களைத் தொகுத்து உரைப்பதாக காப்பியத்தில் சூழல்கள் அமையும்போது, அவற்றைக் குறிக்க உரை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். காப்பியச் செய்யுள் முறைமைக்கு மாறுபாடின்றி நிகழும் இவ்வுரைகளைக் கூற்றுக்கள் எனக் கொள்வது இங்கு ஒரு தௌ¤வினை ஏற்படுத்தும்.
மேலும் உரை என்ற போது கூறுவார் ஒருவரும் கேட்பார் ஒருவரும், அல்லது பலரும் சுட்டப்பட்டே உரைக்கப் பெற்றுள்ள பொதுமை இங்கு நோக்கத்தக்கது. சிலப்பதிகாரமே சீத்தலைச் சாத்தனார் கேட்க, இளங்கோவடிகள் கூறியது என்பதால் சிலப்பதிகாரம் உரைக்கும் நிலையினது என்பது கவனிக்கத்தக்கது.
காப்பியச் செய்யுள் நடையில் அமையாது, அதனினும் நீர்த்த நிலையில் கூற்றாக அமைக்கப்படுவனவே உரைநடை வகையின எனக் கொள்வது சிலம்பில் இடம்பெறும் உரைநடைகள் பற்றியதான சிந்தனையில் ஒரு தௌ¤வினை ஏற்படுத்தும். அவ்வகையில் உரை என்ற சொல்லிற்கும், உரை என்ற வடிவிற்கும் வேறுபாடு உண்டு என்பது தௌ¤வாகின்றது. செய்யுள் அடிப்படையில் அமைந்த கூற்று(உரை)ப் பகுதிகளை விடுத்துக் காணும்போது சிலப்பதிகாரத்தில் பின்வரும் இடங்களில் உரைநடைப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சிலம்பில் இடம் பெறும் உரைநடைப்பகுதிகள்
1) பதிகத்திற்கு அடுத்து அமைந்துள்ள ளூஉரைபெறு கட்டுரைஸ்ரா
2) கானல்வரியின் கோவலன் பாடத்தொடணு;கும் நிகழ்வைக் கூறுவதற்கு முன்னதாக அமைந்துள்ள கட்டுரைப்பகுதி
3) கானல்வரியில் மாதவி பாடத்தொடணு;கும் நிகழ்வைக் கூறுவதற்கு முன்னதாக அமைந்துள்ள கட்டுரைப்பகுதி
4) புகார்க் காண்ட முடிவில் உள்ள கட்டுரைப்பகுதி
5) ஆய்ச்சியர் குரவையில் இடம்பெறும் உரைப்பாட்டுமடை
6) ஆய்ச்சியர் குரவையில் இடம்பெறும் கருப்பம்
7) வழக்குரை காதையில் வரும் கருப்பம்
8) மதுரைக்காண்ட முடிவில் உள்ளகட்டுரைப் பகுதி
9) குன்றக்குரவையில் இடம்பெறும் உரைப்பாட்டுமடை
10) வஹ்சிக்காண்ட முடிவில் காணப்பெறும் கட்டுரைப்பகுதி
11) நூலின் இறுதியில் இடம்பெறும் நூற்கட்டுரை
மேற்கண்ட உரைநடைப் பகுதிகள் அனைத்தும் இளங்கோவடிகளால் செய்யப் பெற்றனவா என்ற ஐயம் உரையாசிரியர்களிடத்தில் காணப்பெறுகின்றது. அடியார்க்கு நல்லார் அனைத்தும் இளங்கோவடிகளால் செய்யப்பட்டன என்று கருத்தினை முன்வைக்கிறார். பெருமழைப்புலவர் சில உரைப்பகுதிகள் மட்டுமே இளங்கோவடிகளால் படைக்கப்பெற்றன என முடிவு கொள்ளுகின்றார்.
உரைபெறுகட்டுரை-இளங்கோவடிகளால் படைக்கப்பட்டதா
உரைபெறு கட்டுரை என்ற தொடருக்கு உரைத்துப் போகிற கட்டுரை என்று அரும்பதவுரை பொருள் கொள்ளுகின்றது.
இவை முற்கூறிய கட்டுரைச் செய்யுள் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசாலடிகளருள (பதி 87-8) என்றமையால் காப்பியங்கட்குச் சிறுபான்மை இவ்வுறுப்புகளும் சில வருமெனக் கொள்க என்பது அடியார்க்குநல்லார் தரும் விளக்கம்.
இதனால் இவ்வுரைபெறு கட்டுரை என்னும் உறுப்பும் இளங்கோவடிகளாரே இயற்றியது என்பது அடியார்க்கு நல்லார் கருத்து என்பது அறியப்படும். இதன் கண் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று கள வேள்வியால் சாந்தி செய்ய எனவரும் சொற்றொடரே அடிகளார் இதனைச் செய்திலர் என்பதற்குப் போதிய சான்றாம் என்பது பெருமழைப்புலவரின் மறுப்பு ஆகும்.
இவற்றின் மூலம் உரைபெறு கட்டுரை என்ற பகுதி இளங்கோவடிகளால் எழுதப்பெற்றதா என்ற விவாதம் முக்கியமானதாகின்றது. உரைபெறுகட்டுரை பெரும்பாலும் கல்வெட்டுக்களில் காணலாகும் ஓம்படைக் கிளவிகளை ஒத்துள்ளன. அவற்றில் கண்ணகி பாத்திரத்தின் பெருமைகள், அவளைக் காவல்தெய்வமாக்கும் முயற்சிகள் பேசப்பட்டுள்ளன. நூலுக்கு முன்னதான காப்புரையாகவே இது காணப்பெறுகின்றது. தவிர இது இளங்கோவடிகளின் படைப்புச்சாயலைச் சிறிதளவேனும் பெற்றிருக்கவில்லை என்பது கற்ற அளவிலேயே புலப்பட்டு விடுகின்றது. இவை போன்ற கருத்துக்களால் உரைபெறு கட்டுரை இளங்கோவடிகளால் படைக்கப் பெற்றதல்ல என்ற முடிவு உறுதியுடையதாகின்றது. இதனை இளங்கோவடிகள் படைத்தார் எனக் கொண்டால் உரை இடையிட்ட பாட்டுடைச்செய்யுள் என்ற முறைமைக்கு, மாறாக உரை முன்னும், இடையும், பின்னும் கொண்ட பாட்டுடைச்செய்யுள் என்று சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு புதிதான ஒரு முறைமையை வகுக்க வேண்டிவரும். இவற்றால் இப்பகுதி இளங்கோவடிகளால் எழுதப்படவில்லை என்பது பொருத்தமுடையதாகிறது.
காண்ட இறுதிக் கட்டுரைகள், நூற்கட்டுரை – இளங்கோவடிகளால் படைக்கப்பட்டனவா
ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும் வரையப்பெற்றள்ள கட்டுரைப்பகுதிகள் இளங்கோவடிகளால் செய்யப்பட்டன அல்ல என்பது பெருமழைப்புலவரின் கருத்து.
இந்நூலின் பதிகத்தை அடுத்துள்ள உரைபெறுகட்டுரையும், ஈண்டு இக்காண்டத்திறுதியிலுள்ள இக்கட்டுரையும் இங்ஙனமே எஞ்சிய இரண்டு காண்டங்களின் இறுதியிலுள்ள கட்டுரையிரண்டும், நூலிறுதியிலமைந்த நூற்கட்டுரை என்பதும் இளங்கோவடிகளால் செய்யப்படாதன. பிற்காலத்தில் பிறராற் பாடிச் சேர்க்கப்பட்டன என்று கருதுதற்கிடனுளது. … இக்கட்டுரையகத்தே அடிகளார் இந்நூலில் ஓரிடத்தேனும் கூறப்படாத சகோடம் என்னும் சொல் புணர்க்கப் பட்டிருத்தலும் இதுவும் அடிகளாராற் செய்யப்பட்டதில்லை என்பதற்கு ஓரகச் சான்றாகும். என்ற மேற்கண்ட உரையாசிரியரின் உரைப்பகுதி இளங்கோவடிகளால் எழுதப்படாத உரைநடைப்பகுதிகள் குறித்து தௌ¤வுபடுத்துகின்றது.
காண்டங்களின் பின்பகுதியல் அமைந்துள்ள கட்டுரைப்பகுதிகள் மூன்றும் தொடக்க வரிகளால் ஒப்புமையுடையினவாக உள்ளன. முடியுடை வேந்தர் மூவருள்ளும் (புகார், வஹ்சி) முடிகெழுவேந்தர் மூவருள்ளும் (மதுரை)- இவை அக்கட்டுரைப்பகுதிகளின் தொடக்க வரிகளாகும். மேலும் பதிகத்துள் காணப்படும். முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரியது என்ற பதிகஅடிகளும் மேற்கண்டவையோடு ஒப்புநோக்கத்தக்கது. இவற்றுக்குள் காணப்படும் ஒற்றுமை பதிக காலத்தில், இவை தோற்றம் பெற்றிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய ஐயப்பாடுகளுக்கிடையில் பெருமழைப்புலவரின் சந்தேகத்திற்கிடமான உரைநடைப் பகுதிகளை விடுத்து மற்றவையே இளங்கோவடிகளால் எழுதப்பட்டன என்று கொள்வது இங்கு பொருந்துவதாகின்றது.
மேற்கண்ட விவாதங்களின் அடிப்படையில் விலக்கப் பெற்ற பகுதிகள் தவிர மற்ற பகுதிகள் உரைநடை வகைச் சாயலுடையன என்பதில் ஐயமேதுமில்லை. கட்டுரை, உரைப்பாட்டுமடை, கருப்பம் ஆகியன சிலப்பதிகார உரைநடை வகைகளாகக் கொள்ளத்தக்கன. இவை குறித்த விளக்கங்கள் இவற்றின் பண்பை அறிய உதவும்.

கட்டுரை
இதற்கு அரும்பதவுரையிலும், அடியார்க்கு நல்லார் உரையிலும் விளக்கம் இடம்பெறவில்லை. பொருள் பொதிந்த உரைநடையால் இயன்ற செய்யுள் என்று பெருமழைப் புலவர் உரைகாணுகின்றார். பொருள் பொதிந்த, என்பதற்கு ஏதேனும் ஒரு பொருள் பற்றியதான ஒருவரின் கூற்று எனக் கொள்வது சிறப்பாகும். கானல்வரியில் இடம்பெறும் கட்டுரைப்பகுதிகள் ஆசிரியர் கூற்றின் பாற்பட்டதாக ஒரு பொருள் பற்றியதாக அமைந்துள்ளமை கருதத்தக்கது. இப்பகுதி செய்யுள் வடிவத்தினின்று சற்று தாழ்வான செறிவுடையது என்பது கவனிக்கத்தக்கது.
உரைப்பாட்டுமடை
உரை போன்ற நடையமைந்த பாட்டினை இடையிலே மடுத்தது, உரையாகிய பாட்டை இடையிலே மடுப்பது என்பது பெருமழைப்புலவரின் விளக்கமாகும். ஆய்ச்சியர் குரவையுள் மாதரி தன் மகளை அழைத்து உரைக்கும் பகுதியாக பாட்டுமடைகள் இடம்பெறுகின்றன. வரப்போகின்ற தீங்கு குறித்ததான முன் அறிவிப்பாக மூன்று நிமித்தங்களை இப்பகுதி விளக்குகின்றது. குன்றக்குரவையின் தொடக்கப் பகுதியிலும் உரைப்பாட்டுமடை இடம்பெறுகின்றது. குருவி யோப்பியும் எனத் தொடங்கும் இப்பகுதி கண்ணகியை குன்றத்தோர் வினவுவதாகவும், அதற்கு அவள் பதில் உரைப்பதாகவும் அமைந்துள்ளது. இவை இசைப்பாட்டு வடிவத்தினின்று சற்று தாழ்ந்து அமைந்தவை என்பது கவனிக்கத்தக்கது.
கருப்பம்
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கருப்பம் என்ற பகுதி உரைவகையின் பாற்பட்ட ஒன்றாகக் கருதத்தக்கது. இதற்கான விளக்கத்தை இவை எல்லாம் பின்வரும் கேட்டிற்கு முதலாம் , இத்தீநிமித்தமெல்லாம் இனிவரும் கேட்டிற்குக் கருக்கள் ஆம் என்று விளக்கம் தருகிறார் பெருமழைப்புலவர். கருப்பப்பகுதிகள் பெரும்பாலும் முன் உரைத்த பகுதியின் மறுபதிவாக, செய்யுள் நடைப்பட்ட உரைநடையாக இயற்றப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் சிலப்பதிகாரத்தில் உரைப்பாட்டுமடை, கட்டுரை, கருப்பம் ஆகிய மூன்று உரைநடைப்பகுதிகள் எவ்விதமாறுபாடும் இன்றி உரையாசிரியர்கள் அனைவராலும் இளங்கோவடிகளால் செய்யப்பட்டன என்று ஏற்கப்பெற்றுள்ளமை தெரியவருகின்றது.
கட்டுரை என்பது செய்யுள் வடிவத்தில் ஒரு பொருள் குறித்து, தொகுத்து, ஒருவரால் மற்றொருவருக்கு உரைக்கப்பெறும் பகுதி என்ற கருத்தினைச் சிலப்பதிகார கட்டுரைப்பகுதிகளை ஒருங்கிணைத்துக் காணும்போது பெற முடிகின்றது.
உரைபாட்டுமடை என்பது பாட்டு வடிவில் ஒரு பொருள் குறித்து ஒருவரால் மற்றொருவருக்கு உரைக்கப் பெறும் பகுதி என்ற முடிவு உரைபாட்டுமடைப்பகுதிகளை ஒருங்கிணைத்துக் காணும் போது பெறமுடிகின்றது.
கருப்பம் என்பது முன்னர் கூறப்பட்ட ஒன்றின் மறுபதிப்பாக உரைநடை வயப்பட்டதாக அமைவது என்பது கருதத்தக்கது.
இக்கருத்துக்களை அடியொற்றி சிலப்பதிகார உரை என்பதை பின்வரும் நிலைகளில் பகுப்பாகப்பெறலாம். பதிக ஆசிரியர் குறிப்பிட்ட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற அடியை உரையிடையிட்ட செய்யுள், உரையிடையிட்ட பாட்டு என இருவகைப்படுத்திப் பகுத்துக் கொள்ளவேண்டும்.
சிலப்பதிகார உரை வகையின் தகுதிகள்
காப்பியம் தொய்வின்றிச் செல்ல வடிவ அமைப்பின் செய்யுள் உத்திகள் உதவுகின்றவெனின், தொடர்புக் கண்ணிகளமைக்கவும், செய்திகள் வழங்கவும், கருத்தழுத்தம் தரவும் உரைநடை உதவுகின்றது என்று சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் உரைநடையை காப்பிய உத்தியின் ஒரு பகுதியாக ச. வே. சுப்பிரமணியம் கருதுகின்றார். இவ்வளவில் செய்யுள் நிலைக்கு அடுத்ததான இடத்தை சிலப்பதிகாரத்தில் உரைநடை பெறுகின்றது என்பது கருதத்தக்கது.
கட்டுரைப்பகுதியின் உரைநடைத்தகுதி

சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர் புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம் போல்வனப்பெய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பு மென்று
இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கிப்
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசையெழீஇப்
பண்வகையால் பரிவுதீர்த்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏருடைப் பட்டடை யென இசையோர் வகுத்த
பட்டவகைதன் செவியின் ஓர்த்து
எவலன்பின் பாணியாதெனக்
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்
(கானல்வரி 1)
ஆங்குக் கானல்வரிப் பாடல்கேட்ட மான் நெடுங்கண் மாதவியும்
மன்னுமோர் குறிப்புண்டிவன் தன்னிலை மயங்கினானெனக்
கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கித்
தானுமோர் குறிப்பினள் போல் கானல்வரிப்பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மனமகிழக்
கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் பாடத் தொடங்குமன்
(கானல்வரி 24 )

இவ்விரு கட்டுரைப்பகுதிகளும் அமைப்புமுறையில் சிலம்புச் செய்யுள் வகைபோல அமையவில்லை. மாறாக அதனின்று அளவாலும், கட்டமைப்பாலும் இளகிய வடிவுடையனவாக உள்ளன. இவ்வுரைப்பகுதியில் எதுகை மோனை நடையைக் காணமுடிகின்றது. உவமைகள் இடம்பெறுகின்றன,; வகைமைகள் இடம்பெறுகின்றன,; செய்திகள் கோர்க்கப்பெற்று , அடுத்து நிகழ்வது யாதென அறியத் துண்டுவனவாக இக்கட்டுரைப்பகுதிக்ள உள்ளன.
டாக்டர் ஜான்சன் உரைநடைக்கான வரையறையை அது ஒரு மனதின் பேச்சு வடிவம், வடிவ ஒழுங்கு வரைமுறை அற்றது. செரித்து உணரத்தக்கதல்ல, இயல்பானதும் அல்ல. ஆனால் முறையான செய்கையுடையது என்று வரையறுக்கின்றார். இவரின் கருத்துக்கு ஏற்ப மேற்கண்ட உரைநடை அமைந்துள்ளது.
உரைப்பாட்டுமடையின் உரைநடைத்தகுதி
குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் வருவதொன்றுண்டு
உறிநறு வெண்ணெய் உருகா உருகும்
மறிதெறித்து ஆட வருவதொன் றுண்டு
நான்முலை ஆயம் நடுங்குபு நின்றரங்கும்
மான்மணி வீழும் வருவதொன்றுண்டு (ஆய்ச்சியர் குரவை-1,2,3 )
குருவிஒப்பியும் கிளிகடிந்தும்குன்றத்துச் சென்றுவைகி
அருவி ஆடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
மணமதுரையோடு அரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக்
கணவனையாங்கு இழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
என்றலும் இறைஞ்சி அஞ்¢சி இணைவளைக்கை எதிர்கூப்பி
நின்ற எல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினர்
இவள்போலும் நம் குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின்
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொளுமின் சிறுகுடியீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வணுங் கொள்ளுமின் சிறுகுடியீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்¢சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒரு முலை யிழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே. (குன்றக்குரவை 1-22)

உரைப்பாட்டுமடையாக அமைந்த இப்பகுதிகள் ஆக்ஸ்போர்டு அகராதி வரையறுக்கும் உரைநடைக்கான இலக்கணத்துடன் அமைந்துள்ளமை கருதத்தக்கது. கட்டுரை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றியதான அல்லது பொருளின் ஒரு கிளை பற்றியதான நீட்சி என்ற மேற்கண்ட அகராதியின் கருத்தினுக்கு ஏற்ப இவ்வுரைப்பகுதி ஒரு பொருளின் கிளைபற்றியதான நீட்சியாக உள்ளது. இப்பகுதியில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல செயல்கள், கருத்துக்கள் திருப்பித் திருப்பி கோர்த்து உரைக்கப் பெற்றுள்ளன.
கருப்பப்பகுதிகள்
இவை உரையாசிரியர்களின் இயல்பைப்போல, மூலத்திற்கு மறுபடி உரையெழுதும் போக்கினதாக உள்ளது.
குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணணெ யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியும் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடாடிய குரவையாடுதும் யாம் என்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே.(ஆய்ச்சியர் குரவை 1,2,3) இப்பகுதி மேற்கண்ட முன்னர் கூறப்பட்ட உரைப்பாட்டுமடையின் உரைவிளக்கமாக அமைந்துள்ளது.
செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறித்துவீழ்தரும்
நங்கோன்தன் கொற்றவாயில் மணிநடுங்க நடுங்கும் உள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு மன்னவற்கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்து விளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்நிரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் மானமதத்தின் சாந்தேந்தினர்
கண்ணிஏந்தினர் பிணையலேந்தினர் கவரி ஏந்தினர் தூபமேந்தினர்
கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழிலிளைஞர் செறித்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர் உரை விரையஇய பலர்வாழ்த்திட
ஈண்டு நீர் வையம் காக்கும் பாண்டியன் பெருந்தேவிவாழ்கென
(வழக்குரைகாதை1-19)

இப்பகுதிகள் சிலப்பதிகார உரைநடைவகைகளுள் மிக இளகிய வடிவம் உடையன. கட்டுரையின் கரு என்பது மனித எண்ணங்கள் சார்ந்த எவ்வகைப்பட்ட துறை குறித்தும் இருக்கலாம் என்ற கருத்தினுக்கு ஏற்ப மனித அழிவின் அறிகுறியை முன்னுரைப்பதாக இப்பகுதிகள் அமைந்துள்ளன.
இம்மூன்று பகுதிகளும் சிலப்பதிகாரத்தில் உரைநடை உத்தி இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன. இவற்றின் தகுதிகள் இக்கால உரைநடை வகைகளுக்கான இலக்கணத்துடன் ஒத்து அமைவது நோக்கத்தக்கது.
பாவாணர் உயர்ந்த கட்டுரைக்கான இலக்கணங்களாக கருத்து ஒருமைப்பாடு, பொருட்பொலிவு, ஒழுணு;கு, பாகியமைப்பு, நன்னடை ஆகியவற்றைக் காட்டுகின்றார் . இவையணைத்தும் சிலப்பதிகார உரைநடை வகைகளுள் அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை. எனவே சிலப்பதிகார உரைநடைகள் அமைப்புமுறையாலும், தகுதியாலும் தமிழில் மூத்த உரைநடை இலக்கியமாக விளங்குகிறது என்பது உண்மை.


(தமிழ் விரிவுரையாளர்
மன்னர் கல்லூரி புதுக்கோட்டை.)

muppalam2003@yahoo.co.in
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்