சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

பாவண்ணன்


டோக்கியோவின் புறநகர்ப்பகுதியில் இயங்கக்கூடிய விசித்திரமான விடுதியொன்றின் அறிமுகத்தோடு தொடங்குகிறது நாவல். அது முதியோர்களை மட்டுமே வாடிக்கையாளர்களாகக் கொண்டு நடத்தப்படுகிற ஒரு விடுதி. விடுதியின் அறைக்குள் பின்னிரவில் வாடிக்கையாளர் நுழையும் முன்னரேயே இளம்பெண்கள் படுக்கையில் உறங்கிக்கொண்டிருப்பார்கள். அனைவருமே கன்னிப்பெண்கள். மின்சாரத்தால் கதகதப்பூட்டப்பட்ட போர்வைக்கடியே அவர்கள் வாடிக்கையாளர்களைப்பற்றிய எந்த விவரத்தையும் அறியாத நிலையில் நிர்வாணமாக உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். முதியவர்கள் இளம்பெண்கள் அருகில் உறங்கலாம். ஆனால் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது கறாரான விதி. அவர்களை எழுப்பும் எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்பது மற்றொரு விதி. உறக்கம் வராத நிலையில் அருகில் உள்ள துாக்கமாத்திரைப் புட்டியிலிருந்து ஒன்றிரண்டு மாத்திரைகளை அவர்கள் எடுத்து உட்கொண்டு உறங்கலாம். இரவில் அனுமதிக்கப்படும் முதியவர்கள் அதிகாலையில் வெளியேறிவிடவேண்டும் . படுக்கையில் உறங்கும் இளம்பெண்களுக்கு முதியவர்கள் வருகையோ நெருக்கமோ தெரிவதற்கான வாய்ப்பே இல்லை.

இந்த விசித்திர விடுதிக்குள் 67 வயதான எகுச்சி என்னும் முதியவர் முதன்முதலாக நுழைவதோடு தொடங்குகிறது நாவல். படுக்கையில் இளம்பெண்ணொருத்தி வழக்கம்போல ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருக்கிறாள். அவருடைய இருப்பின் அணுவளவுகூட அவளை எட்டவில்லை. எடுத்ததுமே அந்த உண்மை அவரை உறுத்துகிறது. அந்தப் பெண்ணிடமிருந்து வெளிப்படும் சுவாசத்தின் வாசம் பால்வாசத்தை ஞாபகப்படுத்துகிறது அவருக்கு. இதன் வழியே பால்வாசம் மாறாத தன் பேரக் குழந்தையையும் திருமணம் புரிந்துகொண்டு பிள்ளைகளைப் பெற்று வீட்டைவிட்டு வெளியேறிய தன் மூன்று பெண்களையும் அவர் நினைத்துக் கொள்கிறார். அந்த நினைவுகள் கலையக்கலைய திருமணத்துக்கு முன்பு எகுச்சிக்கு இருந்த ஒரு காதலியின் நினைவு எழுகிறது. அவளுடைய மார்பகத்தில் லேசான ரத்தக்கறை தென்பட்டதைக் கவனித்ததும் ஞாபகம் வருகிறது. அதைக்கண்டு அவருக்குத் துாக்கிவாரிப் போட்டதையும் அதைப்பற்றி மேலும் எதையும் அவளிடம் கேட்காமல் அந்த மார்பகத்தை நாவால் தடவிவிட்டு நகர்ந்துவிட்டதும் ஞாபகம் வருகிறது. இரவு முழுக்கப் பல விதமான நினைவுகளில் உழல்கிறார் எகுச்சி.

வெவ்வேறு கால இடைவெளிகளில் இந்த விடுதியில் எகுச்சி கழித்த ஐந்து இரவுகளை நாவல் சித்தரிக்கிறது. ஒருபுறம் உறக்கத்தில் அமிழ்த்தி வைக்கப்பட்ட கன்னிப்பெண்கள். மறுபுறம் முதுமையின் விளிம்பில் இருக்கும் எகுச்சி. இளமையை முன்னிலைப்படுத்தி முதுமை தன் இளமை அனுபவங்களை அசைபோட்டுக் களைக்கிறது. ஐந்து இரவுகளில் அசைபோடப்படும் ஞாபகங்களின் தொகுப்பில் நாம் காண்பதெல்லாம் எகுச்சியின் நிறைவேறாத பாலியல் கனவுகளும் கசப்பான அனுபவங்களும் மட்டுமே. அதிருப்தி ததும்பிய இரவுகளின் தொகுப்பு அவர்மீது மோதி மனச்சமநிலையைக் குலைக்கிறது. இளமையில் கிட்டாத திருப்தியை தூங்கும் அழகியை எழுப்பி நுகர எழும் இச்சைகளை அவரால் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. அப்பெண்ணை எழுப்பவும் புரட்டிப்போடவும் அத்துமீறி அவர் செய்யும் முயற்சிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. ஒருமுறையாவது கண்திறந்து தன் இருப்பை அவள் உணரவேண்டும் என்கிற அவர் விழைகிறார். ஒரு தலையணை அல்லது தேநீர்க்கோப்பை போன்ற ஜடப்பொருளைப்போல உறங்கும் அவளை அவரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. ஒருவித தோல்வியுணர்வு சுரந்ததும் பெண்சார்ந்த இளமையின் தோல்வியுணர்வுகள் மேலெழத் தொடங்குகின்றன. மரணத்தின் விளிம்பில் இருக்கிற ஒரு மனத்தில் பொங்கியெழும் ஆத்திரங்களும் கோபமும் வெறியும் பாலுணர்வும் விசித்திரமாக உள்ளன. முதுமை என்பதைக் கனிவின் இருப்பிடமாகவும் நிறைவின் இருப்பிடமாகவும் எண்ணும் நம் கற்பனைகள் எகுச்சி வழியாக நொறுங்கிச் சரிகின்றன.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிறைவேறாத உறவுகளையும் கவரமுடியாத பெண்களையும் உதறிவிட்டு மறைந்த உள்ளங்களையும் தொகுத்துப் பார்த்துக்கொள்வதன்மூலம் முதுமை தன் பாலுணர்வு வேட்கையைத் தணித்துக்கொள்ளும் விசித்திரம் இக்கதையில் நிகழ்கிறது.

நாவலில் எல்லாக் குறிப்புகளுமே திட்டமிடப்பட்டு அரைகுறையாகவே விடப்படுகின்றன. எதுவுமே முழுமை செய்யப்படவே இல்லை. துண்டுதுண்டான நினைவோட்டங்கள் மட்டுமே சித்தரிக்கப்படுகின்றன. மறுதுண்டு கிடைத்தால் மட்டுமே அந்த நினைவுகளின் வடிவமும் முழுமையடையும். எகுச்சியின் நினைவுகளாக மட்டுமே விரிவடையும் கதையில் இந்த மறுதுண்டுகள் விடுபட்டுப்போவதற்கான அடிப்படை நியாயம் இருக்கவே செய்கிறது. பாலுறவைப் பொறுத்தமட்டில் ஆண் ஒருபாதி. பெண் மறுபாதி. எகுச்சி நாடிச்சென்ற இல்லத்தில் முழுஉறவுக்கு வழியே இல்லை. எகுச்சியின் வாழ்வில் நிறைந்திருப்பதும் பாதிப்பாதியான அதிருப்தி மிகுந்த நினைவலைகளே.

எகுச்சியின் அதிருப்திக்குக் காரணம் அவரை அலைக்கழிக்கும் நினைவுகள் மட்டுமல்ல. வாழ்க்கை நெடுக தனக்குக் கிடைத்த பெண்துணைகளைப்பற்றிய ஒரு கேள்வி அவரை வாட்டியெடுப்பதையும் காரணமாகச் சொல்லவேண்டும். வாழ்வின் கோலத்தை எழுதவேண்டிய தருணங்களில் புள்ளிகளின் இணைப்பு ரகசியம் தெரியவில்லை. சிக்கலாகவும் தப்புத் தப்பாகவும் கோடுகள் இழுக்கப்பட்டு விடுகின்றன. தெளிவு பிறக்கும் தருணத்தில் இணைப்பதற்குக் கோலத்தில் புள்ளிகள் எதுவும் மிச்சமில்லை.

முதுமையின் பாலுணர்வு சுயகெளரவம் என்னும் போர்வையால் போர்த்தப்பட்டு மெளனத்தில் உறைந்திருக்கிறது. துாங்கும் அழகிகளின் பாலுணர்வு விதி என்னும் போர்வையால் போர்த்தப்பட்டு வேறொரு விதமான மெளனத்தில் உறைந்திருக்கிறது. எந்த மெளனத்தில் உண்மை உள்ளது என்பது முக்கியமான கேள்வி.

துாங்கும் அழகி என்னும் படிமம் நம் மனத்தில் கிளர்த்தும் நினைவுகள் ஏராளமானவை. தொட்டுத் துய்க்கிற தொலைவிலேயெ பாலுணர்வுகளை நிறைவு செய்யும் அம்சமாக அவள் காட்டப்படுகிறாள். அவ்வளவு நெருக்கமாக அவள் படுத்திருக்கும்போதும் அவளை ஒருபோதும் யாரும் அடைய முடிவதில்லை என்பதுதான் புதிர். இப்புதிரின் மையத்தில்தான் நாவலின் சிறப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவளை அடைய முடியாமைக்கு அவளது தூக்கம் ஒரு காரணம் என்பதுதான் எல்லாருக்கும் தோன்றும் எண்ணம். ஆனால் இப்புதிரைநோக்கி வாசகன் வந்துசேர வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இந்தத் தூக்கத்தில் அவள் ஆழ்த்தப்படுகிறாள். விழைவு அல்லது நாட்டம் துாண்டப்படாத நிலையில் ஒரு பெண்ணை அடைவது அல்லது அவளுடன் இன்பம் துய்ப்பது என்பது மிகப்பெரிய அபத்தம் என்னும் உண்மையை நெருங்குவதற்காகவே அந்தத் தூக்கம் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த உண்மைப் புள்ளியை கிட்டத்தட்ட நெருங்கிவிடும் ஒவ்வொரு மனத்திலும் எழும் உடனடியான கேள்வி தான் பாலின்பம் நுகர்ந்த ஒவ்வொரு தருணத்திலும் தன் துணையின் விழைவை அல்லது நாட்டத்தை முறையான விதத்தில் அறிந்துதுண்டா என்பதாகும். சிற்றின்பத்தில் இருமனம் இணைவதே பேரின்பம் என்னும் உண்மை மெல்லமெல்ல துலக்கமடைகிறது. தன் நினைவுகளில் மூழ்கும் எகுச்சி கண்டடையும் உண்மை இதற்கு நேர்மாறானதான இருக்கிறது. காலம் முழுக்கப் பெண்களுடன் தான் துய்த்த இன்பத்துக்குப் பொருளே இல்லை என்னும் சுடும் உண்மையை அவர் புரிந்துகொண்டதும் அவர் பதற்றமடைகிறார். மரணபயம் அவர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வைக்கிறது. இல்லத்தைவிட்டு வேகமாக அவர் வெளியேறிவிடுகிறார்.

படிம அழகு மிகுந்த இந்த நாவலை ஜப்பான் மொழியில் எழுதியிருப்பவர் யசுநாரி கவாபட்டா. இவர் 1899ல் பிறந்து 1972ல் மறைந்தார். 1968 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசைப் பெற்றவர். பனித்தேசம், ஏரி, மலையின் ஓசை ஆகியவை இவருடைய மற்ற சிறந்த நாவல்கள். ‘தூங்கும் அழகிகளின் இல்லம் ‘ நாவலைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பவர் லதா ராமகிருஷ்ணன். இவர் ரிஷி என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். ‘மூங்கில்இலைப் படகுகள் ‘ என்னும் தலைப்பில் யசுநாரி கவாபட்டாவின் சிறுகதைகள் லதா ராமகிருஷ்னணால் மொழிபெயர்க்கப்பட்டு ஸ்நேகா பதிப்பகத்தாரால் 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

நவீன படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வளம்சேர்க்கும் வகையில் வெளிவரும் சிற்றிதழ் உன்னதம். நவீன சிறுகதையாசிரியரான கெளதம சித்தார்த்தன் இந்த இதழின் ஆசிரியர். இந்த நாவலை வெளியிட்டிருப்பவரும் அவரே. அவருக்குத் தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது. நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் லதா ராமகிருஷ்ணன் பாராட்டுக்குரியவர்.

( தூங்கும் அழகிகளின் இல்லம், ஜப்பானிய நாவல். யசுநாரி கவாபட்டா, தமிழில்: லதா ராமகிருஷ்ணன், உன்னதம் வெளியீடு, 4/3 முத்து வேலப்பா வீதி, ஈரோடு-1 விலை ரூ40. பக்கங்கள் 96)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்