நாஞ்சில் நாடன்
பேராசிரியர் த மு பூரணலிங்கனார் கனவை பேராசை என்று துணிய முடியாது. ஒருகையில் நின்று யோசிக்கையில் இந்த டாக்டர் பட்டம் அவரது புலமைக்கு அநாவசியம் என்று தோன்றும்.அவர்க்கென தனியான பெருமையை இது எங்கே சேர்த்து விடபோகிறது ? மறு பக்கம் நின்று யோசிக்கையில் அவருடைய கல்வித்தகுதிகளில் மகுடம் வைத்தது போல இது அமையலும் ஆகும்.
மாடன் கோயில் பூசாரி மகன் மெடிக்கல் காலேஜ் பற்றி யோசிக்கும் சமத்துவம் அன்றும் வந்திருக்கவில்லை.எனவே லோகல் தமிழ்ச் சங்கத்தில் புலவர் படித்தார் பூரணலிங்கன்.நன்னூல் காரிகை அலங்காரம் யாவும் இன்று கூட அவருக்கு நினைவில் இருக்கின்றன.அவருடைய முதல் படைப்பிலக்கியமான முப்பிடாதி அம்மன் பிள்ளைத்தமிழ் இன்று கூட ஏதோ ஒரு பல்கலை கழகத்தில் எம் ஏக்கு பாடமாக இருக்கிறது.
உயர்நிலைபள்ளியில் பயிற்றுவித்துக் கொண்டே பூரணலிஙகன் பி ஏ எழுதினார்.பி ஒ எல் எழுதினார்.பி எட் எழுதினார்.எம் ஏ எழுதினார்.எழுதிக் கொண்டே போனார் இன்று நின்று திரும்பிப் பார்க்கையில் இந்த ஐம்பத்திரண்டு வயதில் நகரில் ஒரு வீடும் ,தமிழ் என்ற நின்ற சொல்லுடன் செல்வன் ,கலை ,அரசி, இன்பன், வேள் எனும் வந்த சொற்களைக் கொண்டு ஐந்து பிள்ளைகளும் ,லெட்டர் ஹெட்டில் அரைப்பக்கம் வருமளவு பட்டங்கள் ,விருதுகள் ,உறுப்பினர்ப் பதவிகள் ஆகியனவும் இருந்தன.
திருக்குறும்பலாயீசன் பல்கலை கழக தமிழ்துறைத்தலைவராக பூரணாலிங்கன் ஆனது சொந்ததகுதிகள் கருதி மட்டுமே.இன்னும் எட்டாண்டுகள் அவருக்கு ஊழிய காலம் இருந்தது.இதில் முனைந்தால் மூன்றாண்டுகளில் முனைவர் பட்டம் வாங்கிவிட முடியும்.அவர் துறையிலேயே பொடிப்பையன்கள் மூன்று பேர் பி எச் டி செய்துவிட்டனர். ‘ ‘பெரும்பாணாற்றுப் படையில் மலைநாட்டு விவசாயம் ‘ ‘, ‘ ‘பெருங்கதையில் கிரேக்க இதிகாசங்களின் ஆளுமை ‘ ‘ , ‘ ‘வடுவூர் துரைசாமி அய்யங்காரும் வண்ணதாசனும் ‘ ‘ சிலருக்கு தலைப்பு பரிந்துரைத்ததே அவர்தான். சிலருக்கு இரண்டாம் பேருக்குத்தெரியாமல் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஆய்வே எழுதிக் கொடுத்துள்ளார்.சட்டப் பேரவையில் ஆளும்கட்சி கொரடாவாக இருக்கும் ‘ ‘பூந்தளிர் ‘ ‘ பொன்னனுக்கு மு வ வின் நாடகங்களிீல் அங்கதச்சுவை என்று ஆய்வு எழுதிக் கொடுத்ததும் அவர்தான்.
தன்னுடைய ஆய்வை திருத்த தமிழ் புலமை எவருக்கு உண்டு என்றா கல்விச்செருக்கு கூட அவருக்கு இலேசாக இருந்தது.தமிழ் துறை வட்டாரங்களில் ஆய்வு அனுபந்தங்கள் தயாரிப்பதில் பூரண லிங்கனை வெல்ல முடியாது என்றோர் அபிப்பிராயம் உண்டு.
பேராசிரியர் பூரண லிங்கன் என்பதைவிட டாக்டர் பூரணலிங்கனார் என்பது அவருக்கு மிகுந்த கவற்சியை அளித்தது.என்றாலும் மகள் பேறுக்கு வந்திருக்கும் நேரத்தில் தாய் கர்ப்பம் என்பதுபோல இந்த நேரத்தில் போய் ஆய்வுக்கு பதிவு செய்ய நாணமாக இருந்தது.
நீண்ட யோசிப்புக்கு பிறகு இது தன் வாழ்வின் இறுதிப்பட்டமாக இருக்கட்டும் என்றா தீர்மானத்தில் ஆய்வுக்கு பதிவு செய்வது என்று முடிவெடுத்தார்.தலைப்பே பிரமிக்க வைக்கும்படி இருக்கவேண்டும்.ஆய்வு வெளிவந்த பிறகு சீனிவாச சாஸ்திரி ,ராகவையங்கார், வையாபுரியார்,தெ போ மீ வரிசையில் பூரணலிங்கனார் என்று வைப்புமுறை இருக்கவேண்டும்.பின்னால் ஒருவேளை ஏதும் ஒரு பலகலைகழக துணைவேந்தராவதற்கு இது உதவக்கூடும் ஒன்றை முடிவெடுத்தால் அதில் முனைவதில் பூரணலிங்கன் உற்சாகமானவர்.சங்க இலக்கியம் சமய இலக்கியம் சிற்றிலக்கியம் நாட்டுப் பாடல்கள் முற்போக்கு இலக்கியம் என்றெல்லாம் கிட்டத்தட்ட நூற்று எண்பது தலைப்புகள் யோசித்தார்.கடைசியாக ‘ ‘சீவக சிந்தாமணியில் சைவ வைணவ கொள்கைகளின் மேல் சைனக் கொள்கைகளின் மேலாண்மை -ஓர் ஒப்பாய்வும் வேற்றாய்வும் ‘ ‘ எனத்தீர்மானித்து பல்கலைகழகத்தில் பதிவு செய்தார்.
கொஞ்ச நாட்கள் துறையில் இது ஒரு முனகலாக இருந்தது.துணைவேந்தர் ‘ ‘இந்த ஆளுக்குகிறுக்கா ? ‘ ‘என்பது போல ஓர் அபிப்பிராயம் வெளியிடார்.ஆனால் பூரணலிங்கனாரின் ஆற்றல் பற்றிய அறிவு அவருக்கு போதாது. எழுதஎழுத ஆய்வு நீண்டுகொண்டே போயிற்று.எதைச் சேர்க்க எதை நீக்க என்பதே பெரிய சிக்கல்.மேற்கோள்கள் குற்றேவல் கேட்டு நின்றன.
ஈராண்டுகள் கடுமையான உழைப்பு.கோடற்ற நீள் வெண்தாளில் ஆய்வு மட்டும் ஈராயிரத்து நாநூற்று முப்பத்தேழு பக்கங்கள்.அனுபந்தங்கள் நான்கும் சேர அறுபத்திரண்டு பக்கங்கள் .மேற்கோள் காட்டிய நூல்களின் பட்டியல் மட்டுமே பதினேழு பக்கங்கள்.
பல்கலை கழக தமிழ்த் தட்டச்சாளரை தனியாக அணுகி பேரம்பேசி நாநூறு ரூபாய் என்று தீர்மானித்து ஆறு காப்பிகளுக்கு ஏற்பாடு செய்தார்.தட்டச்சு இயந்திரம் தாள் கார்பன் பேப்பர் எல்லாம் பல்கலைக் கழக கணக்கில்.வேலை முடிந்து வர மூன்று மாதமாயின
எல்லாம் சேர்த்து வெளிவிடாமல் அடித்ததில் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறு பக்கங்கள் வந்தன.அச்சாக்கும் போது ஐந்து தொகுதிகளிலாக போட வேண்டி வரும்.தமிழ் நாட்டில் ‘ ‘வனமோகினி ‘ ‘ எட்டு பாகங்கள் விற்று பதினேழு மறு பதிப்புகள் வரும்.ஆனால் ஆய்வு க்கட்டுரைகள் விற்பதில்லை என்ற உள்ளார்ந்த சோகம் அவருக்கு உண்டு.
பூரணலிங்கனின் மற்ற நாற்பத்தேழு நூல்களில் ஒன்றுமே மறு பதிப்பு வரவில்லை.அதில் முப்பது நூல்கள் ஆயிரம் காப்பிகள் அடித்ததில் எழுநூறுக்கும் குறைவின்றி இன்னும் மிச்சமிருந்தது.நூலக ஆணையாளரை இனியும் நம்பி பயனில்லை.எங்காவது சில நூல்கள் பாடமானால் ரப்பர் ஸ்டாம்பில் விலையை கூட்டி குத்தி பணத்தை எடுத்துவிடலாம்.
இந்த ஆய்வு நூலின் தலையெழுத்து வேறாக இருக்கும் என்று நம்பினார் அவர்.இந்த ஆய்வு சீவக சிந்தாமணியின் பல இருண்ட பிரதேசங்களில் ஒளி பாய்ச்சும்.எனவே ஐந்து பாகங்கள் ஆயிரம் காப்பிகள் போட்டால் இரண்டாண்டுகளில் தீர்ந்து விடவும் வாய்ப்பு உண்டு.நல்ல விலை வைத்தால் தமிழரசி கல்யாணத்துக்கு ஆகும் என்றார் மனைவியிடம்.
படைப்பிலக்கியத்துக்கான சாகித்திய அகாடமி பரிசு பத்தாயிரம் கிடைக்கவும் கூடும்.உறுப்பினரைகண்டு பேசவேண்டியிருக்கலாம்.
ஆய்வை மூன்று செட்டுகள் பைண்டு செய்தார்.புதுக்கார்பனில் கூட மங்கலாகவே விழுந்திருந்தது.தட்டெழுத்தருக்கு இந்த நுணுக்கங்கள் தெரியும்.ஆறாவது காப்பியையும் ஐந்தாவது காப்பியையும் வெளி பலகலை கழகத்துக்கு ஏற்பாடு செய்து விட்டு சுமாராக வந்திருந்த நான்காவது காப்பியை சொந்தப்பல்கலை கழகத்துக்கு கொடுத்தார்.
வெளிப்பல்கலை கழகம் எனும்போது வழக்கமாக ஒரு காப்பி மலேசியாவுக்கு போகும்.அல்லது கொழும்பு போகும்.மலேசிய பலகலை கழக தமிழ் துறைத்தலைவர் டாக்டர் சுப்பா நாயக்கர் பூரணலிங்கனாரின் தோழர்.மதிப்பீட்டுக்கு அவருக்கே போகும் படி பார்த்துக் கொள்வது பெரிய விஷயமல்ல.மற்ற இந்திய பல்கலை கழகம் ஒன்றுக்கு இன்னொரு காப்பி போகும்.அங்கெவரும் பூரணலிங்கனாரை அறியாமல் இருக்க முடியாது.ஏதாவது குசும்பு செய்ய நினைத்தால் அவர்கள் மாணாக்கர் ஆய்வுகள் அவரிடம் வரும் போது கதை சிக்கலாகிவிடும் என்று யோசிக்காமல் இருக்கமாட்டார்கள்.மற்றும் எவன் இதை உட்கார்ந்து பொறுமையுடன் படித்துவிட போகிறான் ? பிரச்சினை சொந்த பல்கலைகழகத்தில் தான்.மற்றவர்கள் ஆய்வுகள் வரும்போது செய்வதைபோல இதை செய்துவிடமுடியாது.சாதாரணமாக ஆய்வுகள் வரும் போது நியாயமான சில மாதங்கள் கிடப்பில் வைப்பார்.ஒரு
விடுமுறை நாளில் சம்பந்தப்பட்டவர் பழக்கூடை ,பட்டுப்புடவை, ஃபேன் ,மிக்ஸி ,பிரஷ்ஷர் குக்கர் என்ற ரீதியில் மரியாதை செய்துவிட்டு போவார்.போகும் போது பூரணலிங்கனாரின் நாற்பத்தேழு நூல்கள் அடங்கிய ஒரு செட் வாங்கிப் போவார்.ஆய்வு தேறிவிடும்.
இங்கு தன்னுடைய ஆய்வை யார் மதிப்பீடு செய்வார்கள் தெரியவில்லை.துணைவேந்தருக்கே கூட நல்ல தமிழறிவு உண்டு.கவிதைகளும் எழுதுவார்.அவரே மதிப்பீடு செயலாம்.
பூரணலிஙகன் அஞ்சியது சரியாக போயிற்று.மலேசியாவும் மதுரையும் அவரது ஆய்வை அங்கீகரித்துவிட்டதாக சொந்த ஹோதாவில் தகவல்கள் வந்தன.பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்க சொந்தப் பல்கலை கழகம் அனக்கம் காட்டவில்லை.ஒருநாள் துணைவேந்தரிடம் தற்செயலாக கேட்பதுபோல விசாரித்தபோது அவர் வள்ளென்று விழுந்தபோதே விஷயம் புரிந்து விட்டது திருக்குறும்பலாயீசன் பலகலைகழகம் தலைப்பிலேயே முரண்பாடு இருப்பதாக -பதிவு செய்து மூன்றாண்டுகள் கழிந்து -அறிவித்து ஆய்வை மறு பரிசீலனைக்கு அனுப்பியது. இடைக்கால நிவாரணம் போல ரெடிமேட் தலைப்பு ஒன்றில் ஆய்வு செய்து பட்டம் வாங்கிவிடலாம் என்றாலும் மறுபடி மூன்றாண்டுகள் வீணகிபோகும்.மாத்திரமல்லாமல் இது தனக்கொரு மூக்கறுப்பு. ‘ ‘ஜானகி நகுவள் ‘ ‘என்ற மனோபாவம் வந்து விட்டது. பூரணலிஙகனுக்கு அகடமிக் வாழ்வில் தோல்வி என்பது இதுவே முதல்முறை.ஐம்பத்திரண்டு வயதிலும் அது தாங்க முடியாததாகவே இருந்தது.வழியில் பூக்காரி இயலபாக சிரித்தால்கூட அவருக்கு சந்தேகம் வந்ததது.
இந்த துணைவேந்தர் சமீபகாலத்தில் பதவி ஏற்றவர்.பதவியாண்டுகள் இன்னும் இருந்தன.கல்வியமைச்சரின் மனைவியின் தமக்கை கணவர்.எனவே பதவி நீட்டிப்புகூட கிடைக்கலாம்.இனியோர் ஆய்வு எழுதினாலும் மறுபடியும் அதை நிராகரிக்க மாட்டார் என்பது என்ன உறுதி ?
சுரத்தில்லாமல் சில மாதங்கள் திரிந்தார்.சீவக சிந்தாமணி என்ற பெயரை கேட்டாலே எரிச்சல் பீறியது.வழக்கமாக சிந்தமணியை எம் ஏக்கு அவர் தான் நடத்துவார்.அடுத்த பாடத்திட்டத்தில் சிந்தாமணியே வராமல் பார்த்துக் கொண்டார்.
டாக்டர் பட்டத்தோடு ‘ ‘சிந்தாமணி செல்வர் ‘ ‘ என்ற பட்டத்தையும் ஆய்வு கொணரும் என்று எதிர்பார்த்ததில் முதலுக்கே மோசம் ஆயிற்று. ‘ ‘ஆயிரம் பக்கம் பீராய்ந்த அபூர்வ சிந்தாமணி ‘ ‘என்று பி ஏ மூன்றாமாண்டு வகுப்பு கரும்பலகையில் எழுதியிருந்தது தன்னை குறிக்கவே என்று அவருக்கு தோன்றாமல் போகவில்லை. எப்படியும் இந்த துணைவேந்தருக்கு ஒரு பாடம் படிப்பிக்காமல் விடக்கூடாது என்று சத்தமில்லாமல் சூளுரைத்தார். இனி ஏதும் அரசியல் கட்சியில் சேர்ந்து முதலமைச்சர் ஆகி டாக்டர் பட்டம் வாங்க வயது போதாது.கிருஷ்ண க்ஷஸ்ரீக்ஷனிவாசையும் பழக்கம் இல்லை.வெறுமனே சூளுரைப்பதைவிட என்ன செய்ய முடியும் ?முலைக்கு பதில் வேண்டுமென்றால் ஒரு விதையை திருகி எறியலாம் . ‘ ‘ஒரு விதைகுறைந்த பூரணலிங்கன் ‘ ‘ என்ற அடைமொழி கிடைக்குமே ஒழிய தீப்பற்றாது.
மூல பவுத்திரத்துக்கு மருந்து வாங்க டாக்டரிடம் போனபோது பூரணலிங்கனுக்கு ஒரு யோசனை தோன்றியது.அது குறித்து டாக்டரிடம் நீண்ட நேரம் உரையாடினார்.மனைவிக்கு கூட சொல்லாமல் ஓராண்டு மீண்டும் படிப்பதும் எழுதுவதுமாக இருந்தார்.பிழைப்பே ஈதாகிபோனதனால் அந்த அம்மையார் பொருட்படுத்தவில்லை. பூரணலிங்கன் முகத்தில் மட்டும் பொலிவு கூடிக் கொண்டே போனது. எர்ர குண்டலா நாட்டுவைத்திய கழகம் மூல பவுத்திரத்துக்கான சிகிட்சையில் பூரணலிங்கனாருக்கு டாக்டர் பட்டம் தபாலில் அனுப்பியது.
தகப்பனாரின் திவசத்துக்கு விடுப்பு கேட்டு புதிய லெட்டர் ஹெட்டில் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பினார். டாக்டர் பூரணலிங்கனார் என்று பெரிய எழுத்தில் இருந்ததைகண்டு ஆரம்பத்தில் அவர் சிரித்தாலும் சிரிப்பின் விகாசம் மங்கிக் கொண்டே போயிற்று.
வெளிக்கு தெரியாமல் வேறேதும் பல்கலைகழகத்தில் பதிவு செய்து டாக்டர் பட்டம் வாங்கியிருப்பாரோ எனில் அது ஓராண்டில் எப்படி முடியும் ?
பல்கலை வளாகம் முழக்க இதே பேச்சுதான்.புதிய லெட்டர் ஹெட்டில் காரணமின்றி நலம் விசாரிக்கும்கடிதங்களாக எழுதி தள்ளினார் டாக்டர் பூரணலிங்கனார்.குறிப்பை புரிந்து கொண்டு நிறைய வாழ்த்துக்கள் வந்தன.அவற்றில் பல துணைவேந்தர் மூலமாக வழிப்படுத்தப் பட்டிருந்தன. துணைவேந்தருக்கு நாளுக்கு நாள் தாங்க முடியமல் போயிற்று.வரும் புதன்கிழமை மாலையில் தம்மை வந்து பார்க்கும்படி குறிப்பு அனுப்பினார்.அதில் டாக்டர் என்று குறிப்பிடாமல் போனதில் பூரணலிங்கனாருக்கு வன்மம் எல்லை மீறியது.
துணைவேந்தரை பார்க்கப் போனபோது அவர் முகத்தில் வைத்து தேய்க்க என கையோடு தன் பட்டத்தையும் கொண்டு போனார்.
அமரச் சொல்லி தேநீர் வழங்கி தமிழ் பாடத்திட்டத்தில் சீரமைப்பு பற்றி ஓர் அறிக்கை தயாரிக்கச் சொல்லி சுற்றி வளைத்து விஷயத்துக்கு வந்தார் துணைவேந்தர்.
விஷயம் தெளிந்தபோது அவருக்கு திகைப்பே மிஞ்சியது.உலகத்தில் இனி எந்த சக்தியாலும் டாக்டர் பூரணலிங்கனார் என்று போடுவதை தடுக்க முடியாது என்றும் திருக்குறும்பலாயீசன் பல்கலைக் கழகம் பூரணலிங்கனாரின் ஆய்வை அங்கீகரிப்பதே ராஜ தந்திரம் என்றும் தோன்றியது!
****
[ பேய்க் கொட்டு தொகுப்பு.விஜயா பதிப்பகம் கோவை]
தட்டச்சு உதவி : ஜீவ ஆனந்தம்
- வசந்தத்தின் வாசல்இதுவல்ல
- என் கணக்கு வாத்தியார்
- ம்…
- திண்ணை அட்டவணை – சூன் 2001
- சுந்தர ராமசாமிக்கு இயல் விருது – 1
- அவல் புலாவ்
- ஒயின் வறுத்த சாதம் (ஒயின் ஃப்ரைட் ரைஸ்)
- நொறுங்கிய பழமை
- மூன்று கவிதைகள்
- கனவுக் குதிரைகள் (Walt Bresette நினைவாக)
- சிறியன செய்கிலாதார்…
- முத்தமிடு!
- நல்ல நாள்
- இருமை.
- மரணம்
- அரசாண்ட கூடு.
- காதலுக்கு மரியாதை ?
- இந்த வாரம் இப்படி — சூன் 17
- கடன்