நா.பாஸ்கர்
தொலைக்காட்சி சானல்களை ஒவ்வொன்றாய் மாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு சானலலிலும் உருப்படியான புரோக்கிராம் இல்லை. கொஞ்ச நேரத்தில் ராஜ் டிவியில் பாட்டுப்போட்டார்கள், யாரோ ஒரு பெண்மணி ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…… ‘ பாடலை தனது தோழிக்கு டெடிகேட் செய்வதாய் சொன்னார்.
என்னையே அறியாது என் விரல்கள் ரிமோட்டில் விளையாடி வால்யூமை கூட்டியது. திடாரென்று உள் அறையில் உறங்கும் அக்கா நினைவு வரவே மறுபடியும் வால்யூம் குறைத்தேன். இன்றைக்கு காலைல தான் பெங்களூர் வந்தாள். ஓட்டல் சாப்பாடும் ஊரைச்சுற்றிப்பார்த்த களைப்பும்
அவளுக்கு தூங்கத்தை வரவழைத்திருக்க வேண்டும். கடந்த மூன்று வருடமாக நான் இங்கு இருந்தும் இவள் இங்கு வருவது இதுதான் முதல் முறை. காலையில அழைத்து வர இரயில் நிலையம் சென்றபொழுது ‘இப்போதான் இந்த தம்பி ஞாபகம் வந்ததா ? ‘ என்று கேட்டுவிட அவளுக்கு கோபம் வந்தது. இவள் இன்னும் மாறவே இல்லை.
‘அம்மா அப்பா எப்படி இருக்காங்க ? ‘
‘நல்லா இருக்காங்க, உனக்கு ஒரு லெட்டர் கூட கொடுத்தாங்க உள்ள இருக்கு வீட்டுக்கு போனதும் தரேன் ‘
‘மாமா எப்போ ஊருக்கு போனார் ? ‘
‘விழாயக்கிழமை காலையில சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல போனார் ‘
பேசிக்கொண்டே வர வண்டி வீட்டை நெருங்கியது.
உள்ளே வந்ததும், ‘உன் ஒருத்தனுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு ‘ என்றாள்.
கடந்த முறை அம்மா அப்பா வந்தபோது அவர்கள் சொன்னது போலவே இவளும் சொன்னாள்.
காலையிலிருந்து பெங்களூர் சுற்றிக்காட்டினேன். சாயங்காலம் பிரிக்கேட் ரோடில் சில ஷாப்பிங் செய்தாள். அம்மாவுக்கு அவளுக்கு என்று புடவைகள், எனக்கும் மாமாவுக்கும் பேன்ட், சர்ட். நந்தினியில் உணவு முடித்து எட்டரைமணிக்கு வீடு அடைந்து மீண்டும் அரை மணி பேச கொட்டாவி விட்டாள். சரி போய்த்தூங்கு என்று சொல்லிவிட்டு இந்த டிவி முன் சரணடைந்தேன்.
அப்பா இவளை இஞ்சினீயராக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் பிடிவாதமாக பி.ஏ. ஃசைக்காலஜி தான் படிப்பேன் என்று அப்பாவோடு சண்டையிட்டு அழுது புலம்பி பின் எம்.ஏ படித்து சாதித்துக் கொண்டாள். ஒரு மனநலமருத்துவரிடம் கவுன்சிலராக இருந்துகொண்டே டாக்டரேட் செய்கிறார். அப்பாவுக்கு இவள் கொடுத்த ஒரேயொரு சந்தோஷம் துக்கம் என்னவென்றால் மாமாவை காதலித்தது. அவர் ஒரு இஞ்சினியர் என்பதில் அப்பாவுக்கு சந்தோஷம் ஆனால் அவர் வேற்று ஜாதி என்பதில் கோபம். இவளுடைய இலக்கிய ஆர்வம்தான் அவரை அறிமுகம் செய்தது. ஒரு இலக்கிய விழாவில் கம்பனைப்பற்றி மாமா கவிதைப்படிக்க, அந்தக்கவிதையில் தான் இவள் காணாமல் போனாள். பின்
அடிக்கடிப் பேசி நட்பாகி வீட்டுக்கு வருமளவுக்கு பழக்கமாக, இலக்கியத்துக்கு இடையே காதலும் வளர, அப்பாவின்
சம்மதத்திற்க்கு காத்திருந்து அவரையே கல்யாணம் செய்துகொண்டார். நல்ல மனிதர், சென்னையில் ஐடி கம்பெனி
ஒன்றில் ப்ராஜக்ட் மேனேஜராக வேலை செய்கிறார்.
******
மீண்டும் தொலைக்காட்சி சானல்கள் முரண்டு பிடித்தன. தொலைக்காட்சியை அணைத்தபோது பக்கத்தில் யார் வீட்டு இரும்பு கேட்டோ திறக்கப்படும் ஓசைக்கேட்டது. அலமாரியில் ஒரு புத்தகம் உருவிக்கொண்டு திரும்புகையில் அந்த இரும்பு கேட்டுச்சத்தம் எங்கிருந்தோ வரவில்லை என்வீட்டில் தான் என்பதை வாசலில் ஒலித்தச் செருப்புச்சத்தம் உணர்த்தியது. யார் இந்த நேரத்தில், சென்று கதவை தொட்டப்பொழுது மணி ஒலித்தது.
என் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ் நண்பர்கள். ராஜேஷ், சசிதர், பாலா மற்றும் சுதாகர். சனிக்கிழமை இரவு என்றால் இங்கே வருவார்கள். கொஞ்ச நேரம் அரட்டையடிப்பார்கள், இரவு பன்னிரண்டுவரை பேசிவிட்டுத்தான் திரும்புவார்கள். பாலா கொஞ்சமாய் படிப்பான். எதையோ நிறைய எழுதுவான் அதைவிட கொடுமை அதை கவிதை என்பான். ஒன்றுமே புரியாது, கேட்டால் ‘புரியலை இல்ல அப்போ அது கண்டிப்பா கவிதைதான் ‘ என்பான் ‘எவ்வளவு நம்பிக்கை ‘ என்று நான் வியந்து கொள்வேன். ராஜேஷ் தமியாசிரியர் பையன், பாலாவை ஊக்கப்படுத்த இவன் ஒருவன் போதும். சசிதர் தான் இவன் கவிதைக்கு கிடைத்த ஒரே ரசிகன். ‘இன்னைக்கு இந்த ஒருத்தன்தான் என்கவிதை ரசிகன் நாளைக்குப் தமிழ்கூறும் நல்லுலகமே என் கவிதைகளைத்தான் போற்றும் ‘ என்று பாலா தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொள்வான்.
‘அட ராமா இருக்கிறவங்க தமிழை கொல்றது போதாதென்று இவன் வேறக்கொல்லனுமா ‘ நான் உள்ளுக்குள்
நொந்துக்கொள்வேன்.இவர்கள் இங்கு அடிக்கும் அரட்டைக்கு ‘இலக்கிய இரவு ‘ என்று அபத்தமான பெயர் வேறு. பாவம் சுதாகர், இவர்களின் பேச்சைக்கேட்கவந்த ஒரேயொரு பார்வையாளன் ஜனத்திரள் எல்லாம்.
‘என்னடா எப்படி இருக்க, மத்தியானம் வீட்டுக்கு வந்தோம் ஆளையே காணோம் ? ‘ என்று அக்கறையாய் கேட்டு என் பதிலுக்கு காத்திராது நான் கதவை சாத்தும் முன்னமே உள்ளே சென்று விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் உட்கார்ந்தார்கள். நான் வந்து அமர்ந்ததும் ‘பாஸ்கி என்ன வீடு ரொம்ப சுத்தமா இருக்கு ? தப்புடா இது ரொம்பத் தப்பு, பேச்சிலர் வீடுன்னு ஒரு அடையாளமே தெரியாம போய்விடும் ‘ என்று பாவச்செயல் போல் கண்டித்தான் ராஜேஷ் ?.
‘டேய் பாஸ்கி, இன்னிக்கி நம்ம சிச கப்சா உண்மையாயிடிச்சி ? ‘ பாலா சொன்னான்.
‘புரியலையே ? ‘
‘மத்தியானம் சாப்பிட போனப்போ ஓட்டல்ல ஒரு பொண்ணு இவனப்பார்த்து சிரிச்சதை நாங்கெல்லாம் பார்த்தோம் ‘
எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த சசிதர் எப்பொழுதும் பெண்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பான். சாலையில் எதிரே ஒரு பெண் கடந்து சென்றால் போதும் உடனே ‘சிரிக்கிறாளேடா ‘ என்பான். எங்கே என்று நாம் பார்க்கையில் ‘திரும்பிட்டா ‘ என்பான். பேருந்திலும், ஓட்டலிலும், கடைத்தெருவிலும் எதிரே ஏதேனும் ஒரு பெண்ணைப்பார்த்துவிட்டால் போதும் ‘சிரிக்கிறாளேடா ‘ என்பான். இதன் விளைவு ‘சசிதர் ‘ என்ற இவன் பெயர் ‘சிரிக்கிறாளேடா சசிதர் ‘ என்றே மாற்றிவ்ட்டோம். அதுவே நாளடைவில் சி.சசிதராகி இப்பொழுது ‘சிச ‘வில் வந்து நிற்கிறது.
கல்லூரியில் நிறையப்பெண்கள் இவனை காதலித்ததாகச் சொல்லுவான். எங்களுக்கு ஒரு வியப்பாக இருக்கும். இவனை மட்டும் எப்படி இத்தனைப்பேர் காதலித்தார்கள் ? இவனுக்கு எப்படி இவ்வளவு செல்வாக்கு ? ஒரு பொழுதும் புரிந்ததில்லை. சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் பரிசாக ஒரு பெண் அனுப்பியதாக ஒரு வாக்மேன் கொண்டுவந்தான். எதற்க்காக அந்தப்பெண் வாக்மேன் பரிசளிக்கவேண்டும் ? ‘அந்தப்பொண்ணுக்கு என்மேல ஒரு காதல் ஆனா எனக்குத்தான் பிடிக்கலை ‘ என்றான்.
பாலாவுக்கு சசிதர் மேல் கொஞ்சம் பொறாமை. சில பெண்கள் எழுதியதாக கடிதங்கள் காண்பிப்பான். இதையெல்லாம் பார்த்ததனால் இவன் ‘சிரிக்கிறாளேடா ‘ என்று கூறும்பொழுதெல்லாம் ‘உண்மையாக இருக்கலாம் ‘ என்று ஒரு நம்பிக்கை இருந்த்தது. பெயரை ‘காதல்சசி ‘ என்று தான் எழுதுவான். அதோடு மட்டுமல்லாது பெண்களை எப்படி புரிந்துகொள்வது என்று யோசனையும் கேட்போம். இவன் அனுபவசாலி என்பதை நம்பினோம். ராஜேஷ் தனது காதலுக்கு இவனிடம் யோசனைக்கேட்டதும் உண்டு.
‘நிஜமாவா, என்னால நம்பவே முடியலை ‘ என்றேன்.
‘கேளு சொல்றேன், ஓட்டல்ல பக்கத்து பெஞ்சில ஒரு பொண்ணு சிரிச்சிகிட்டு இருந்தா உடனே நம்மாளு ‘சிரிக்கிறாளேடா ‘ என்றான், நாங்க திரும்பிப்பார்க்கிறோம் உண்மையாவே சிக்கிறா, அப்புறமா சைட்ல பார்த்தா க்யூட்டா ஒரு குழந்தை தவழ்ந்து தவந்து நடந்து போயிட்டு இருந்த்தது அதைப்பார்த்துத்தான் அந்த பொண்ணு சிரிச்சா ‘ என்றான் சுதாகர்.
எல்லோரும் அவனை நோக்கி கேலியாக சிரித்தோம். அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நினைவு வந்தது. உள்ளே அக்கா உறங்குவது. இவர்களை எச்சரிக்கும்முன்பே அக்கா அறையை திறந்து வந்துவிட்டாள்.
‘தூங்கலையாக்கா ? ‘ என்றேன். அனைவரும் திரும்பி அக்காவை நோக்கினார்கள்.
‘இல்ல, புது இடம் தூக்கம் வரல ‘ என்றாள்
நாங்கள் பேசிக்கொண்டிருந்தது இவளுக்கு சுவாரசியமாய்ப்பட்டிருக்க வேண்டும் அதனால் தான் உடனே வந்துவிட்டாள். எல்லோருக்கும் அக்காவை அறிமுகம் செய்துவைத்தேன். சசிதரிடம் வரும்பொழுது வழக்கம்போல ‘சிச ‘ என்றேன் ‘சிசா ‘வா என்றாள் அனைவரும் சற்றே குறும்பாய் சிரித்தார்கள். அக்காவுக்கு ஒன்றும் புரியவில்லை திருதிருவென விழித்தாள் அது ஒன்றும் இல்லை என்று மழுப்பிவிட்டேன்.
அரட்டையில் அக்காவும் சேர்ந்துக்கொண்டாள். அக்கா இருப்பதால் நிறையப்பேசவில்லை. அரைமணிக்குப்பின்பு கிளம்பினார்கள்.
‘சாரிக்கா உன்னோட தூக்கத்தை கெடுத்துட்டாங்க ‘ என்றேன்.
‘பரவாயில்லை, ரொம்ப நல்லா டைம்பாஸ் ஆச்சு. ஆமா என்ன எதோ பொண்ணு, சிரிச்சா அது இதுன்னு ஏதோ பேசினீங்களே ‘ என்றாள்.
சசிதரைப்பற்றி எல்லாம் சொன்னேன். பொறுமையாய் கேட்டுவிட்டு எதையோ சீரியஸாய் யோசித்துக்கொண்டே ‘இது ஒரு வகை நோய் ‘ என்றாள். ‘புரியலை ‘ என்றேன்.
‘ஆமான்டா, பையனுங்க ரொம்ப பேரு ட்ரீமெர்ஸ், எப்போவும் கனவு கண்டுகிட்டு இருப்பாங்க. அதுவும் இந்த வயசுல தன்னைப்பற்றி சிந்திக்கிறதைவிட பொண்ணுங்களைப்பற்றித்தான் அதிகமா சிந்திப்பாங்க. இது அடலொஸன்ட் அப்படின்னு சொல்லுவாங்க. இவன் காலே^ல படிக்கும்போது நிறையப்பேரைக் காதலிச்சி இருப்பான் ஒரு பொண்ணும் இவனை சீண்டி இருக்கமாட்டா, அதனால மனசுக்குள்ள ஒரு ஏக்கம் வந்திருக்கும். அது நாளுக்கு நாள் வளர்ந்து இப்படி தன்னைப்பற்றிப் பெருமையா சொல்லிக்கிட்டு திரியறான். கிடைக்காத ஒண்ண கிடைச்சதா சொல்லிக்கிட்டுச் சுத்தறதுல ஒரு சந்தோஷம். இது ஒரு கற்பனா சந்தோஷம். பேசிக்கிட்டு இருந்த இவ்வளவு நேரமும் இவனைத்தான் அனலைஸ் பண்ணிட்டு இருந்தேன், இது ஒருவகை மனநோய். ‘ என்றாள்.
நான் ஏதோ புரிந்தாற்போல் தலையாட்டினேன்.
******
ஒரு மதியப்பொழுது உணவு முடித்துக்கொண்டு அலுவலக நண்பர்களுடன் நடந்து செல்லும் பொழுது எதிரே ஒரு பெண் வர ‘சிரிக்கிறாளேடா ‘ என்றான் சசிதர். சிலர் அந்தப்பெண்ணிருக்கும் திசை நோக்கினர் சிலர் அவனை பார்த்து கேலியாய் சிரித்தனர். நான் மட்டும் அவனை ஒரு நோயாளியைப்பார்ப்பது போல் பரிதாபமாகப் பார்த்தேன். ‘இது ஒரு மனநோய் ‘ அக்கா சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது.
- கயிற்றரவு
- முதல் உலகத் தமிழ்த் திரைப்படவிழா
- முட்டை சமைக்க சில வழிகள்
- மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.
- 1)ச் இந்தியா 2)கருகும் நினைவுகள்
- பின் லேடன்
- நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும்
- அறிவெனும் சக்தி
- வயிற்றுப்பா(ட்)டு
- மேலும் சில மனிதர்கள்…
- ராகு காலம்
- செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்…
- எதிர்பார்ப்புகள்…
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 7,2001
- தமிழ்த் தேசியம் முதலான கேள்விகளை எழுப்பிய நண்பர் திராவிடனுக்குப் பதில்
- மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.
- சேவல் கூவிய நாட்கள் – 6 – குறுநாவல்
- சிரிக்கிறாளேடா….