சிங்கமும் விறகு வெட்டியின் மகளும்

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


(நோர்வே தமிழ் பள்ளிப் பிள்ளைகள்ளுக்காக எழுதியது பா நாடகம் – 22. 02. 2001)

பிள்ளைகள்:-

பாட்டி பாட்டி கதை சொல்லுங்கோ

கதை சொல்லுங்கோ பாட்டி பாட்டி.

சக்கரைக்குள் கசப்பு மருந்தை

ஒழித்து வைத்து தருவாயே

கதையோடு கதையாக

புத்திமதிகள் சொல்வாயே

வெளியே காற்று அடிக்குது

வெண்பனியும் கொட்டுது

பாட்டி பாட்டி கதை வேணும்

கதைவேணும் பாட்டி பாட்டி

பாட்டி :-

என்ன கதை சொல்ல எதனைப் பற்றிச் சொல்ல

எனக்குத் தெரிந்த கதை யெல்லாம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

பிள்ளைகள் :-

சொல்லு பாட்டி கதை சொல்லு பாட்டி

சொல்லா விட்டால் ………

பாட்டி :-

சொல்லாவிட்டால் ?

பிள்ளைகள் :-

சொல்லாவிட்டால் தூங்கமாட்டோம்.

பாட்டி:-

அப்போ ஈசாப் கதை சொல்லவா.

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு காடு

ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு சிங்கம்.

பிள்ளைகள்:-

ஒரே ஒரு காடு வேண்டாம்

வன்னிக் காடு வேண்டும் பாட்டி

பாச்சை பச்சை மரங்கள் வேணும்

பாலி ஆறும் ஓடவேணும்

பாட்டி:-

துருவம் வந்த போதிலும்

தேசம் மறக்க வில்லையா ?

வன்னியிலே காடிருக்கு

சிங்கம் ஏதும் இல்லையே.

பிள்ளை:-

காட்டு வன்னி மண்ணிலே

கரடி கூட இல்லையா.

பாட்டி:-

கெட்டிக்கர பிள்ளைகாள்

சுட்டி தம்பி தங்கைகாள்

( பாட்டி கதை சொல்ல பிள்ளைகள் கதையை நிகழ்த்திக் காட்டுதல் )

பாட்டி:-

பச்சை வன்னிக் காட்டிலே

பாலி ஆற்றம் கரையிலே

கரடி ஒன்று இருந்ததாம்

காட்டை ஆட்சி செய்ததாம்.

காட்டில் விறகு வெட்டியே

காலம் தள்ளும் வேலனின்

வீட்டில் கரடி ராசாவை

விருந்து உண்ண அழைத்தனர்

(விருந்து நடத்தல்.)

வேலன்:-

கரடி ராசா கரடி ராசா

சோறு போதுமா

கறிகள் போதுமா ?

வேலனின் மனைவி:-

மான் பொரியல் பண்டிக் கருக்கல்

மரை வத்தல் உடும்புகறி

காளன் குளம்பு அகத்திச் சுண்டல்

என்ன வேணும் கேழுங்கோ

இன்னும் இருக்கு பாருங்கோ.

கரடி:-

இதுபோலச் சாப்பாடு

ஒருபோதும் தின்றதில்லை

நன்றி வேலா வேலம்மா

இதை யாரு சமைச்ச ஆளம்மா

வேலன்:-

இது நான் சமைச்ச சாப்பாடு

வேலம்மா:-

பொய்யிது பொய்யிது கரடிராசா

வேலன் இந்த வீட்டில

வேலை ஒன்றும் செய்யாது

பிள்ளை 1 :-

அப்ப அந்த வேலனும் எங்க அப்பா மதிரி

அருக்கு பிள்ளையும் தொலைக் காட்சி

பொண்டாட்டியும் தொலைக் காட்சி

பாட்டி :-

கண்டபடி பேசாமல்

கதையைக் கேழடி சின்னப் பெண்ணே

கரடி:-

பொய்யா பொய்யா வேலம்மா

பொங்கி வைச்சது யாரம்மா

வேலன்:-

பொங்கி வைச்சது நீ தான் வேலம்மா

அதை போட்டு வைச்சது நான் தானே சொல்லம்மா

வேலம்ம:-

இதுவும் பொய்.

(சொல்ல வேண்டாம் என வேலன் சைகை காட்டுதல் )

வேலம்மா:-

உங்க காட்டில் விறகு வெட்டி

பிழைக்கிறோமுங்க

எங்களாலே முடிங்ச திந்த

விருந்து தானுங்க

கரடி :-

யாரு சமைச்ச சாப்பாடு

வேலம்மா ;-

சமையல் செய்தது முத்தம்மா

அதை சாப்பிடத் தந்து வேலம்மா.

(வேலன் அச்சப் படுதல் )

கரடி:-

முத்தம்மா ?

முத்தம்மா சாப்பாடு

அத்தனையும் அமுதம்

கோடி கோடி பரிசு தரணும்

கூப்பிடு இந்த நிமிசம்

வேலன்:-

முத்தம்மாவுக்கு சுகமில்லை

கரடி ராசாவே

வேலம்மா:-

முத்தம்மாவுக்கு சுகமில்லையா

யாரு சொன்னது ?

முத்தம்மா .. முத்தம்மா…

முத்தம்மா:-

வணக்கம் கரடி ராசாவே

வயிறு நிறைய சாப்பிடுங்க

கரடி:-

இத்தனை அழகா முத்தம்மா

என்னைக் கல்யாணம் பண்ணம்மா

ஆல மர பொந்துக்குள் என்

வசந்த மாளிகை

அத்தனையும் முத்தம்மா

உனக்குக் காணிக்கை

பாட்டி:-

இப்பொழுதே முத்தம்மாவைக் கல்யணம் பண்ணிவை

இல்லையென்றால் எல்லோரையும் கொன்று போடுவேன்

என்று கரடி மிரட்டுதாம் எல்லோருக்கும் நடுங்குதாம்.

பிள்ளைகள் :-

சொல்லுங்க பாட்டி..

முத்தம்மா பாவம் பாட்டி

எல்லாம் வேலம்மாவால தானே பாட்டி

பாட்டி :-

வேலன் அழுகிறான் வேலாம்மா அழுகிறாள்

முத்தம்மா சிரிக்கிறாள்

முத்தம்மா மட்டும் சிரிக்கிறாளாம்

பிள்ளைகள்:-

பாட்டி பாட்டி முத்தம்மா

பயப்பட வில்லையா பித்தம்மா

முத்தம்மா:-

காட்டு ராசாவே அழகு கரடி ராசாவே

கண்டவுடன் உங்கள் மீது காதல் கொண்டேனே.

வேலன்:-

முத்தம்மா உள்ள போடி

வேலம்மா:-

உள்ள போடி முத்தம்மா

முத்தம்மா:-

அம்மா அப்பா கேளுங்க உங்க

புதுமைப் பெண்ணை நம்புங்க

கண்ணீர் எல்லாம் ஏனுங்க

காத்திருந்து பாருங்க.

கரடி:-

மயிலைப்போல அழகு காட்டும்

கண்ணே முத்தம்மா – என்னை

மணமுடிக்க சம்மதமா

கண்ணே முத்தம்மா

முத்தம்மா:-

பயம் வருகிதே நகத்தைப் பார்க்க

கரடி ராசவே உங்க

பல்லைப் பார்க்க குலை நடுங்குதே

கரடி ராசாவே

கரடி:-

உன்னைவிட எனக்கு இந்தப்

பல்லுப் பெரிசில்லை

ஒருபோதும் எனக்கு இந்த

நகமும் பெரிசில்லை

முத்தம்மா:-

அப்பா வாங்க கரடி ராசா

நகத்தை வெட்டுங்க

அம்மா வாங்க கரடிராசா

பல்லைப் புடுங்குங்க

கூறைச் சேலை கட்டிக் கொண்டு

நானும் வருகிறேன்

கெட்டி மேளத்தோடு தாலி

கட்டிக் கொள்ளலாம்

கரடி:-

நான் பல்லை நகத்தை எடுத்துப் போட்டு

தாலி கட்டுவேன்.

என் பவள மல்லிகை சிங்காரிக்கு

மாலை சூடுவேன்

பிள்ளைகள்:-

பாட்டி பாட்டி

பாட்டி பிறகு என்ன நடந்திச்சு.

பாட்டி:-

பல்லும் நகமும் இல்லாக் கரடி

பலமில்லாக் கரடி

பிள்ளைகள்:-

பல்லில்லாத கரடிக்குப் பயப்பட மாட்டோம்

நாங்க பயப்பட மாட்டோம்

பாட்டி:-

பயமில்லாமல் முத்தம்மா

போடா என்றாளாம்

வேலம்மா ஓடு என்றாளாம்

வேலன் அடிக்கப் போனானாம்

கரடிக்கு அடிக்கப் போனானாம்

( எல்லோரும் கரடியை அடித்து விரட்டுதல் )

ஐயோ ஐயோ என்றபடி கரடி ஓடிச்சாம்

அழுதபடி காட்டுக்கு கரடி ஒடிச்சாம்

எல்லோரும்:-

கதையும் கேட்டு முடிஞ்சுதாம்

கண்ணுறக்கம் வருகுதாம்

Series Navigation