தேவமைந்தன்
தமிழறிஞர் ஒருவர். நன்றாகப் பாடுவார். பாவேந்தர் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்ற பாடலை, நிகழ்ச்சி ஒன்றில், அவையினர் முன் அவர் பாட வேண்டிவந்தபொழுது, கண்களை மூடியவாறே ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பாடலைத் தொடங்கினார். வந்து விழுந்த பாடலோ, “பூமியில் மானிட ஜென்மம் எடுத்து” என்று தொடங்கிடும் தியாகராஜ பாகவதர் பாட்டு… அவையினர் வியக்க, அவர்மேல் அன்பு கொண்டோர் திகைக்க, அதைப்போய்ச் செய்தியாக்கி தன் திறமையைக் காட்ட அந்த நிகழ்ச்சி இடம்பெற்ற கல்லூரியின் மாணவி (பகுதிநேர நிருபர்) ஒருவர் – பெரிய நாளேட்டுக்குத் தர, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அது பிரசுரிக்க, அந்தத் தமிழறிஞருக்கு ஆகாதவர்கள் குதூகலம் அடைய, ஆனவர்கள் வருத்தம் உற்று நாளேட்டாசிரியரிடம் தொலைபேசிவழி உறும.. இப்படியே பலருக்கு நேரம் வீணாய்ப் போனது.
அவர் அவ்வாறு பாடத் தொடங்கியதற்குக் காரணம் என்ன? தியாகராஜ பாகவதரின் திரைப்பாட்டின் சாயலில் பாவேந்தரின் பாட்டான “வாழ்வினில் செம்மையை” அழகாக அமைந்ததுதான் காரணம். அதில் என்ன தவறு?
இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் முறையாகத் தொடக்கமாகப் பாடவேண்டிய பாடலாக அரசு ஆணை பிறப்பித்த தமிழ்வாழ்த்துப் பாடலான அதை, தங்கள் மனம் போன போக்கில் விருப்பப்பட்ட ராகங்களில் பாடித் தங்களின் ஆற்றலைக் காட்டுபவர்கள் வேண்டுமானால் தவறு செய்பவர்கள் ஆகலாம்.
“பூமியில் மானிட ஜென்மம் எடுத்துமோர் புண்ணியமின்றி விலங்குகள்போல்..” என்று கம்பீரமாகவும் அதே நேரம் இரக்கம் தோன்றுமாறும் கணீரென்று பாடிய பாகவதர் சாயலில், ‘‘வாழ்வினில் செம்மையை’’ப் பாடுவதுதான் பாவேந்தரே விரும்பிய முறை என்று புதுச்சேரியில் வாழ்பவரும் பாவேந்தரோடு நன்கு பழகியவருமான கம்பன் விழாப் பெரும்புரவலர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அதெல்லாம் அப்படியிருக்க, அரசுவிருது வழங்கும் நடுவர் குழு உறுப்பினர் என்ற முறையில், மதிப்பெண்ணும் தெரிவும் இட்டுத்தர, புத்தகம் ஒன்று என்னிடம் வந்தது. பெயர்: ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மரபுக்கவிதை யாப்பியல்; மரபும் நெகிழ்வும்.’ ஆசிரியர்: இரா.சம்பத், இலக்கியப்புலம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையம்(PILC), புதுச்சேரி – 605008. [ISBN: 81-85452-08-3] வாசித்துக்கொண்டே வந்தபொழுது 104ஆம் பக்கத்தில் பாரதியாரின் எண்சீர் விருத்தம் ஒன்று கண்டேன்.
“களக்கமுறு மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பியுதிர்ந் திடுமோ
வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்தபழங் கர்சனென்ற குரங்குகவர்ந்திடுமோ
மற்றிங்ஙன் ஆட்சிசெயும் அணில்கடித்து விடுமோ?
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ வல்லால்
தொண்டைவிக்கு மோஏதும் சொல்லலரி தாமே?”
என்பது பாரதியாரின் அந்தப் பாடல். (டி.வி.எஸ். மணி & சீனி.விசுவநாதன் முதலான பதிப்பாளர்களின் பதிப்புகளில்: “காய்த்ததொரு கனிதான்,” “வெம்பிவிழுந் திடுமோ?,” “வளர்த்தபழம் கர்சானென்ற,” “சொல்லரிய தாமே?” என்ற பாடங்கள் உள்ளன.)அந்தப் பாடலுக்கு ஒரு பின்புலம் உண்டு. வி. சக்கரை செட்டியாரின் முன்னுரையிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்.
‘‘ஹோம்ரூல் கிளர்ச்சியின் தலைவராயும், 1917ம் வருஷத்திய கல்கத்தா காங்கிரஸின் அக்கிராசனராகவும் ஸ்ரீமதி பெசண்ட் செலுத்தி வந்த செல்வாக்கு தேய்ந்துவரலாயிற்று. மிஸ்டர் மாண்டேகு விஜயஞ் செய்ததும், அவர் அடுத்தபடியாக மாண்ட்போர்டு ரிபோர்டில் கர்டிஸின் தந்திரத்தை நுழைத்ததும் காங்கிரஸ்காரர்களிடையே பிளவுண்டாக்க வுற்றனவாயின…[புதுச்சேரியிலிருந்து பாரதி சென்னைக்குச் சென்றபின்[1918] மூன்றாவது ஆண்டு சென்னையில் இயற்கை[11-9-1921] எய்தியதற்கு முன்னால்]..சென்னைக் கடற்கரையில் பல்லாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டமொன்று நடந்தது. ஸ்ரீயுத ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் தலைமை வகித்தார். மிஸ்டர் நெவின்ஸன் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையாளரும் வந்திருந்தார். [அந்நாட்களில் சென்னைக் கடற்கரையில் அநேக சந்தர்ப்பங்களில் ஜனக்கூட்டத்தின்முன் நின்று பாடிய] ஸ்ரீயுத பாரதியாரும் அச்சமயம் பாடினார். அவரைப் பற்றி அவ்வாங்கிலேயன் ‘’இந்தியாவின் நூதன உணர்ச்சி’’ என்ற தன் நூலில்.. பாரதியாரை [அந்த நிகழ்ச்சியில் பாரதியாரின் பங்குபற்றுதலை] வர்ணிக்கிறான்… “அந்த சென்னையின் தமிழ்க்கவி லஜபதிராய் தேசபிரஷ்டஞ் செய்யப்பட்டபோது தாம் எழுதிய புலம்பலைப் பாடினார். .. .. பின்னர் திடீரென்று மாறி அக்கவி ஏளனஞ் செய்யப் புகுந்து சுயராஜ்யம் (அல்லது ஹோம்ரூலைப்) பற்றி மிஸ்டர் மார்லிக்கும் இந்தியாவுக்கு[இந்தியத்தாய்]மிடை ஓர் சம்பாஷணையை விவரிக்கத் தொடங்கினார்..”(வி. சக்கரை செட்டியார், ராஜீய வாழ்வு, 1.3.1922ஆம் நாள் எழுதிய முன்னுரையின் தமிழாக்கம்.)
அந்த உரையாடலில் இந்தியத்தாய் கம்பீரமாகவும் அழுத்தமாகவும் மார்லிக்கு, அவரிடத்திருந்தும் அவர்தம் தாய்த்தேசமான இங்கிலாந்திடமிருந்துமே தான் கற்றுக்கொண்டுவிட்ட தனிப்பட்ட சுதந்திரத்தையும்(Freedom of Person) வாக்குச் சுதந்திரத்தையும் உபதேசம் செய்கிறாள்.
பாரதியார் பதிப்புகளில் ‘கோக்கலே சாமியார் பாடல்’ என்ற தலைப்பில் வரும் இப்பாடலின் தலைப்புக்குக்கீழ், “[இராமலிங்க சுவாமிகள் ‘களக்கமறப் பொதுநடனங் கண்டுகொண்ட தருணம்’ என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது]” என்ற குறிப்புள்ளது. இந்தக் குறிப்பை முதன்முதலில் அங்கு இட்டவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. கட்டாயம், பாரதியாராக இருக்க முடியாது. [‘திரித்து’ என்பதை இங்கே மேற்கோளில் தடித்த எழுத்துகளில், வாசிப்பவர்களுக்குக் கூர்ப்பாகத் தெரியும் பொருட்டாக இக்கட்டுரையாளனே இட்டுள்ளேன்.] ‘திரித்து’ என்ற சொல், மாறுபாடான பொருளைத் தந்துவிடக் கூடியது.
ஆனால், இந்த ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மரபுக்கவிதை யாப்பியல்; மரபும் நெகிழ்வும்’ என்ற ஆய்வுப் புத்தகத்தில், இரா. சம்பத் கூறுவதாவது: “வடலூர் இராமலிங்க அடிகளின் திருவருட்பாவில் ‘களக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம்’ எனவரும் பாடலின் சாயலை இப்பாடலில் காணலாம்’ (பக்கம் 104)
இந்த அளவுக்கு பாரதியாரின் சிந்தையைக் கவர்ந்து ஓர் அழுத்தமான சாயலை விதைத்த வடலூர் இராமலிங்க அடிகளின் பாடல் இதோ:
“களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பியுதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பிலகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு உளமெதுவோ ஏதுமறிந் திலனே.
Karuppannan.pasupathy@gmail.com
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?
- ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4
- கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி
- வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்
- அல்லாவும் வகாபும்
- தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்
- நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது
- எடின்பரோ குறிப்புகள் – 15
- தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
- பின்காலனியப் பண்பாட்டு அடையாளம்
- இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்
- புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ?
- திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து
- ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)
- சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு
- சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்
- மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு
- வசவுகளும் விஸ்வாமித்ராவும்
- சுடர் ஆய்வுப் பரிசு
- நடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)
- சேர்ந்து வாழலாம், வா! – 2
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2
- கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்!
- கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3
- பசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- கடிதம்
- காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்
- இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி
- சாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா?
- அக், யாத்ரா
- ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்
- அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…
- கடிதம்
- தனிமை..