சாம்பல் செடி

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

த. அரவிந்தன்



பொன்வாசநல்லூர். ஒரே தெருவிலான சிறுகிராமம். கற்போடு அலையும் காற்று. கப்பிக்கற்கள் வழியாக நடந்தால் முதலில் குளம் வரவேற்கும். குளத்தில் சிறிய படித்துறை. ஒருபக்கச் சுவர் வெடித்து வாய் பிளந்து ஆகாயம் வெறிக்கும். மக்கள் நீந்தாத நீர்நிலையில் வெங்காயத் தாமரை தன் அழகைக் காட்டும். படித்துறை பகுதியைக் குளிக்கப் பயன்படுத்துவர். எதிர்ப்புறக் கரையில் மாடுகளைக் குளிப்பாட்டுவர். அதற்கு அடையாளமாக தேய்க்கப்பட்ட கைகொத்தளவிலான வைக்கோலின் திட்டுத்திட்டான மிதவைகள். எண்ணிப் பார்த்தால் பத்து அல்லி மொட்டுக்கள். வட்டமிட்ட மீன் கொத்தி ‘சர்க்’கென்று பறந்து தண்ணீருக்குள் அலகைப் பாய்ச்சி, கிடைத்த கெண்டைக் குஞ்சை துடிக்க, தூக்கி காணாமல் போகிறது.
எண்பது வயதிலும் பொட்டுக் கொடுத்த கிழவி, யாருடைய உதவியுமின்றி பாசி படர்ந்த படிகளில் இறங்கி இந்தக் குளத்தில்தான் குளித்து வருகிறாள்.

கிழவி, கணவர் இறந்த போது, ‘என் பொட்ட கொடுத்துட் டேனே… ஆ…ங்ங்’ என்று வயசுக்கு வந்த மகளைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்தது ஊரையே கண்ணீரில் ஆழ்த்தியது.

ஊனத்தையே பழகப்பழக நண்பர்கள் பரிகாசம் புரிவதுபோல கிழவியின் ஒப்பாரி விடலைப் பசங்களால் பின்னர் கேலிக் குள்ளாகி ‘பொட்டுக் கொடுத்த கிழவி’ன்னு நாளடைவில் பெயர் நிலைத்துவிட்டது.

ஆரம்பத்தில் விடலைப் பசங்கள் ‘பொட்டுக் கொடுத்த கிழவி’ன்னு கூப்பிடும்போது, ‘ஒழுக்கெடுத்த நாய்ங்களே’ என்று எம்பி எம்பி கிழவி அடிக்க ஓடுவாள். பசங்களும் பயந்து ஓடுவதுபோல சிரித்துக் கொண்டே ஓடுவார்கள். இதைக்கண்டு ஊரே ‘கொல்’லென்று சிரிக்கும். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, கிழவியும் பெயரை ஏற்றுக்கொண்டு யார் கூப்பிட்டாலும் அமைதியாகவே பேசக் கற்றுக் கொண்டாள்.

அழுக்கேறிய நைந்த நைலக்ஸ் சேலையை முழங்காலுக்குக் கீழ்வரை சுற்றியிருப்பாள். சேலை யார் உபயம் தெரியவில்லை. ஜாக்கெட், உள்பாவாடை கிடையாது. காய்ந்த மட்டை காற்றில் கிழிந்து தொங்குவதுபோல சுருங்கிய மார்பகம். கிழவி தாங்கித் தாங்கி நடப்பதற்கு ஏதுவாய் அஷ்டகோணலாய்க் கால்கள் வளைந்து இருக்கும். தலையில் வலப்புற முடியை இடப்புறம் போட்டு, இடப்புற முடியை வலப்புறம் போட்டு சீவாமல் நடுவில் கொத்தாக செருகிக் கொள்வாள். கேட்டால், கொண்டையென தின்ற அரிசி உதட்டோரம் ஒட்டிக்கிடக்க, வெற்றிலைக் கறை தெரிய ‘போங்கடா போக்கெடுத்த பசங்களா’ என்பாள்.

முகத்தில் மட்டும் கவலை முள் குத்துவது தெளிவாகத் தெரியும். புருஷன் தனியாய்த் தவிக்க விட்டுப் போன துக்கமா? ஆதரவாய் இருந்த மகளும் சர்க்கரை ஆலை ஆய்வு அதிகாரியோடு பட்டணத்துக்கு ஓடிப்போன கவலையான்னு கிழவிக்கே விளங்கும்.

வயதாகிவிட்டதால் கிழவிக்கு எந்தச் சொந்தமும் ஆதரவுக்கரம் நீட்டவில்லை. இருப்பதற்குக் கூட இடம் இல்லாமல் தவித்த வேளையில் சாமித்துரை வீட்டுத் திண்ணையில் தஞ்சமடைந்தாள். சாமித்துரை குடும்பம் வாழ்ந்து கெட்ட குடும்பம். வாழ்ந்ததற்கு அடையாளமாக இருபுறத்திலும் திண்ணைகள் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். கெட்டதற்கு அடையாளமாக ஓடுகள் சரிந்து விழுந்து சூரியன் வீட்டிற்குள் புகுந்து உரல் இருளையும் விரட்டும்.

சாமித்துரை தன்னைப்போல்தானே கிழவியும் எனத் திண்ணையில் அவளைத் தங்க அனுமதித்தாலும் அவருக்கு லாபமில்லாமல் இல்லை. பாதி வீட்டு வேலையைக் கிழவி இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். கிழவி இருப்பது சாமித்துரை மனைவி அம்புஜத்திற்கும் சந்தோஷம். கல்லடுப்பை மூட்டி நெல் அவிக்க, உலக்கையைத் தூக்கி உரலில் நெல்குத்த என கிழவி உதவியால் வேலை சுலபமாக முடிந்து விடுகிறது. கிழவிக்குப் பயன் இல்லாமல் இல்லை. அம்புஜம் இருப்பதற்கேற்ப பழைய சோறுடன் துவையல் அல்லது சுடு சோறுடன் புளிக்குழம்பு கொடுப்பதுடன், அரிசி, நெல்லும் கொடுப்பாள். சோறைவிட கிழவி அரிசி, நெல்லே விரும்புவாள்.

கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பதைச் சேர்த்து திண்ணைக்கு மேல் உள்ள மரப்பலகை இடுக்கில் கந்தல் துணிகளில் கொட்டி முடிச்சிட்டு தனித் தனியாய் வைத்திருப்பாள்; யார் வீட்டுக் களத்திற்காவது சென்று பயிர் பொறுக்கி அதையும் முடிச்சிட்டு வைத்திருப்பாள். சிறு மூட்டைகளை யாரையும் தொடவிடமாட்டாள். யாரும் தொடுவதில்லை. இதைப்போல எல்லோர் வீட்டிற்கும் வேலை செய்து கிழவி அரிசி, நெல் பெறுவாள். ஒருநாள் உச்சி வெயிலில் வேப்பங்கொட்டை பொறுக்கிக் கொண்டு ‘பகவான் கூப்பிட மாட்டுறானே’ என்று தன் நிலையை நினைத்து சுயபச்சாதாபத்தில் அழுது கொண்டே கிழவி தாங்கி தாங்கி திண்ணைக்கு வந்தாள்.

அப்போது சாமித்துரை பெயரன் அன்பரசு மர இடுக்கில் மூட்டையை எடுக்க எக்கிக்கொண்டிருந்தான். கிழவிக்கு அழுகையும் ஆத்திரமும் முட்டிக்கொண்டது. ‘ஒழுக்கெடுத்த நாயே…’ என்று ஏகவசனத்தில் பேசி அவன் காலில் வேகமாக கிள்ளினாள். அன்பரசு அலறி துடித்தான். வீட்டிற்குள் இருந்த சாமித்துரை பெயரன் சத்தம் கேட்டு ஓடிவந்தார். பெயரன் அழுவதைப் பார்த்து “ஏ… நாயே, என் பேரன் மேலயா கைய வைக்கிற” என்று கோபம் தெறிக்க கைகால்களை ஆட்டி சாமித்துரை கிழவியைக் கத்தினார்.

“என் உசுருப்போல பாதுகாத்திட்டு… வரேன்… இத… ஏன் திருடப் பார்த்தான்” என்று உள்ளூர அதிர்ந்து பயந்து போனாலும் தயங்கித் தயங்கிக் கிழவி கேட்டாள்.

“அதை ஏன்டா… எடுக்கப் போன…” சாமித்துரை, பெயரன் அன்பரசு பக்கம் கோபத்துடன் திரும்பி கன்னத்தில் ‘பளாரென’ ஒரு அறைவிட்டு கேட்டார். அன்பரசு முன்பைவிட வேகமாக அலறி அழுதான்.

“பேரனை அடிக்காதீங்க… விடுங்க…” கொல்லைப் புறத்தில் பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த அம்புஜம் ஓடிவந்து சாமித்துரை கையை வேகமாக உதறி விட்டாள்.

“விட்டுடுங்க…” பிரச்சனை பெரிசாகி விடுமோ என்ற பயத்தில் கிழவியும் கம்மிய குரலில் சொன்னாள்.

“எதுக்குடா எடுத்த?” விடவில்லை சாமித்துரை.

“மூட்டை மூட்டையா இருக்கே என் னன்னு பார்க்கத் தான்” கண்ணை கசக்கிக் கொண்டே அன்பரசு சொன்னான்.

துருதுரு வயது பிள்ளைகளுக்கு இது போன்ற ஆர்வம் எழுவது சகஜமான ஒன்று என்று நினைத்து சாமித்துரை பெயரனை இழுத்து சமாதானம் செய்ய முற்பட்டார். அன்பரசு சாமித்துரை கையை தள்ளிவிட்டு பாட்டி அம்புஜத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்.

“அதுல அப்படி என்னதான் வைச்சிருக்கேன்னு அப்படி குதியோ குதின்னு குதிக்கிற” சாமித்துரை இப்போது கிழவி பக்கம் திரும்பி பொரிந்தார்.

தப்பு செய்துவிட்டோமோன்னு கிழவிக்கு உறுத்த பயந்து கொண்டே, “பட்டணத்துல இருக்கிற என் பேரனுக்கு மோதிரம் வாங்கிக் கொடுக்க அரிசி, நெல்லை சேர்த்துக்கிட்டு வரேன்”என்று இரக்கமாய் சொன்னாள்.

கிழவியின் செய்கையிலும் தப்பு இருப்பதாக சாமித்துரைக்கு தெரியவில்லை. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

“ஆமாம்… பேரன் பேரன்னு நீதான் உசுர விடுற. இது வரைக்கும் உன் பொண்ணோ, மருமகனோ, பேரனோ வந்து பார்த்ததில்லை. நீ எப்படி இருக்கேன்னு கேட்டு லட்டரும் போட்டது இல்ல. ஆறு மாசத்துக் கொரு தடவை பேரன பார்க்கப் போறேன்னு பட்டணத்துக்குப் போற. என்னையும்தான் ஒருதடவ அழைச்சிட்டு போனே… எங்க உன் மருமகனும், உன் பொண்ணும்… பேரன பார்க்க விட்டாங்களா… உன்னையே தெரியாததுபோல் காட்டிக் கிட்டாங்க. அழுதுகிட்டே திரும்பி வந்துட்ட… கசம்புடிச்ச பாட்டி வேணான்டா. உங்க அப்பா பார்த்தா அடிப்பார்ன்னு உன் பொண்ணே பேரன்கிட்ட சொன்னதா சொல்லியிருக்கே…” சாமித்துரை எகத்தாளமாக கிழவியிடம் சொன்னார்.

கிழவிக்கு அழுகை பீறிட்டது. சமாளித்து அடக்கிக் கொண்டாள். “பார்த்துக்கிட்டே இருங்க என் பேரன்தான் எனக்கு கொள்ளிவைக்கப் போறான்… அப்புறம் சொல்லுங்க… சரி… சரி… இதோ வரேன்”னு சொல்லி வெயிலில் இறங்கி வேகமாக நடந்தாள். ஒருமணிநேரம் கழித்து மீண்டும் கிழவி வந்தாள். கையில் வைத்திருந்த பெரிய சொம்பை சாமித்துரையிடம் நீட்டினாள். வாங்கிப் பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.

“ஏது இவ்வளவு கெண்டை குஞ்சு.”

“பேரனுக்காக புடிச்சிட்டு வந்தேன்.”

“ஊத்தா, துண்டு எதுவுமே இல்லாம போனீயே, எப்படி புடிச்சே?”

“ம்… முந்தாணி அவுத்துத்தான்” கிழவி சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சமாளித்து விட்டோமேயென கிழவிக்கு உள்ளுக்குள் பெருமிதம் பொங்கியது. இதன்பிறகு ஆறே மாதங்களில் அன்பரசும் கிழவியிடம் ஒட்டிக்கொண்டான். பேரன்… பேரன்னு கிழவியும் கொஞ்சியது. அவனும் ஆச்சி… ஆச்சின்னு சுற்றி வந்தான்.

ஒருநாள் மதியம் மூணு மணியளவில் களத்து மேட்டுக்கு போயிட்டு வந்த கிழவி கையில் செத்துப்போன குருவியோடு வந்தாள்.

“எப்படி ஆச்சி குருவிய புடிச்ச…” அன்பரசு சந்தோஷத்தில் குருவியைத் தொட, கூசி உடனே கையை இழுத்துக்கொண்டே கேட்டான்.

“நான் எங்க புடிச்சேன்… செத்துக்கிடந்தது. எடுத்துட்டு வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே கிழவி வைக்கோல் குவித்து கொளுத்தி குருவியை போட்டுச் சுட்டாள்.

“ஆச்சி இந்தக் குருவித்தான் உனக்கு உலக்கையைத் தூக்கி குத்துற அளவுக்குப் பலத்த கொடுக்குதா?” சிரித்தபடியே அன்பரசு கேட்டான்.

‘ஆமாம்’ என்பதுபோல சிரித்துக்கொண்டே கிழவி தலை யசைத்தாள். அதற்குள் நெருப்பில் குருவி இறக்கைகள் எரிந்து காணாமல் போயிருந்தன. சின்ன குச்சியால் நெருப்பில் குருவியைப் போட்டுப் புரட்டினாள். வெந்ததற்கான பதம் கிழவிக்கு தெரிந்ததும் நெருப்பை அணைத்து சுடச்சுட சுட்ட குருவியை எடுத்தாள்.

அன்பரசுக்கு பார்ப்பதற்கு ஆசையாகவும், குருவியைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.

“நீயும் சாப்பிடுறீயா?” சுட்டக் குருவியை அக்குஅக்காக பிய்த்து வயிற்றுப் பகுதி சதையை சாப்பிட்டுக்கொண்டே கிழவி கேட்டாள்.

“உவ்வே” கிழவி சாப்பிடுவதை பார்த்து நாக்கில் எச்சில் ஊறினாலும் குமட்டுவதுபோல் செய்கைக் காட்டி ஓடினான். கிழவி பெரிய விருந்துண்ட மகிழ்ச்சியில் தூங்கிப் போனாள்.

குருவியோ, மடையானோ, நண்டோ கிழவியிடம் எப்படியும் சிக்கிவிடுகின்றன. இதில் கிழவி சந்தோஷமாக இருந்தாலும் பட்டணத்து பேரனை நினைத்து அவ்வப்போது அழவும் செய்வாள். அப்போதெல்லாம் அன்பரசை பார்ப்பதில் கிழவிக்கு ஆறுதல்.

திடீரென கிழவி ஒருநாள் இறந்துபோனாள். இந்த அதிர்ச்சி ஊரையே உலுக்கியது. குளத்தில் குளிக்கப்போன கிழவி பாசிபடர்ந்த படிகளில் வழுக்கி விழுந்து இறந்து மிதந்திருக்கிறது. பார்த்தவர்கள் தூக்கிக்கொண்டு வந்து சாமித்துரை வீட்டுத் திண்ணையில் கிடத்தியிருந்தார்கள்.

சாமித்துரை, கிழவி மருமகன், பொண்ணுக்கு பட்டணத்துக்கு தகவல் அனுப்பினார். காத்திருந்ததுதான் மிச்சம். கடைசி வரை வரவில்லை. “கிழவிய கடைசி நேரத்திலேயாவது பார்க்கணும்னு எண்ணமில்லாத பொண்ணு… என்னய்யா பொண்ணு? இரக்கமில்லாம? காசு செலவாகுமோன்னு வராம இருப்பாங்கய்யா. நாமே தூக்கிடுவோம்” ஊர் தலையாரி பாண்டியன் எடுத்துக்கொடுக்க எல்லோரும் ஆமோதித்தனர். சாமித்துரைக்கும் சரியென்று பட்டது.

“என் பேரனே கிழவிக்கு கொள்ளி வைக்கட்டும்” யார் ஆலோசனையும் தேவையில்லை என்பதுபோல சாமித்துரை சொன்னார். அதன்படி சுடுகாட்டில் கிழவிக்கு அன்பரசு கொள்ளி வைத்தான். எல்லாம் முடிந்ததும் அனைவரும் சோகத்துடன் திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்தனர்.

மூன்று நாட்கள் கழித்து அன்பரசு, கிழவி இருந்த திண்ணையையே அழாத குறையாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்படியே மர இடுக்கில் இருந்த மூட்டைகளையும் பார்த்தான்.

“தாத்தா… இந்த மூட்டைய என்ன பண்ணுறது.”

“முன்னேயே ஞாபகமிருந்தா கிழவியோட போட்டு எரிச்சிருக்கலாம். சரி இப்ப மண்ண வெட்டித்தான் புதைக்கணும்” என்று சாமித்துரை அடிக்குரலில் சொன்னார்.

“அத எடுங்க… கிழவி என்னத்தைதான் வைச்சிருக்கும்னு பார்ப்போம்” அம்புஜம் சொன்னாள். சாமித்துரையும் அன்பரசுவை எடுக்கச் சொன்னார். அன்பரசு எக்கி சிறுசிறு மூட்டையை இறக்கினான். அதை சாமித்துரை வாங்கி முடிச்சுகளை அவிழ்த்து பார்த்தார்.

அரிசி, நெல்லு, பயிறு என தனித்தனியாக இருந்தது. எதேச்சையாய் பயிறை தடவியபோது சிறிய கல்லுப்போல கையில் தென்பட்டது. அதை தடவி கண்டுபிடித்து சாமித்துரை பார்த்தார்.

“பார்த்தீங்களா கிழவி எவ்வளவு ஆசையா… அது பேரனுக்கு மோதிரம் வாங்கி வைச்சிருக்கு” என்று சோகத்துடன் அம்புஜம் சொன்னாள்.

“இந்த மோதிரத்த பட்டணத்துல உள்ள கிழவி பேரனிடம் போய் கொடுத்துட்டு வந்துடுறேன்.

அப்பத்தான் கிழவி ஆத்மா சாந்தியடையும்” சாமித்துரை ஒரு பணியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுபோல சொன்னான்.

“அதெல்லாம் வேண்டாம். அதுங்க கிழவி செத்ததுக்கே வரல… இத கொண்டு போய் கொடுப்பாங்களா? கொள்ளிப் போட்ட நம்ம பேரன் கையிலேயே போட்டுடுங்க…” அம்புஜம் சொல்ல சாமித்துரை சிறிதுநேர யோசிப்புக்கு பிறகு தலையாட்டினார்.

அன்பரசை மோதிர விரலை காட்டச்சொல்லி, மோதிரத்தை போட்டுவிட்டார். அவன் ஏற்கெனவே மூட்டையை பார்த்ததற்காக வாங்கிய அடியை நினைத்துக்கொண்டே தயங்கித் தயங்கி போட்டுக் கொண்டார்.

ஒரு மாதம் கழித்து கிழவி எரிக்கப்பட்ட இடத்தைப் பார்த்தபோது சாம்பலில் இருந்து சிறு செடி துளிர்த்திருந்தது.


thavaram@gmail.com

Series Navigation

த.அரவிந்தன்

த.அரவிந்தன்