சாமி படிக்க வைக்கும்

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

கே.பாலமுருகன் மலேசியா


கட்டுரை
சாமி படிக்க வைக்கும்
கே.பாலமுருகன்

வகுப்பில் ஒரு மாணவிக்கு தமிழே படிக்க வராது. எத்தனை பிரயத்தனங்களை மேற்கொண்டும் அந்த மாணவிக்கு தமிழ் எழுத்து வடிவங்கள் பிடி கொடுக்காத அந்தரத்தில் தொங்கும் பேய் போல மாறிவிட்டிருந்தன. தமிழைப் படிக்க சொல்லி அழைத்தாலே அழுதுகொண்டுதான் வருவாள். தமிழ் சொல் வடிவமெல்லாம் அவளுக்கு பூச்சாண்டிக்கு நிகரான தோற்றத்துடன் பல்லிழித்து நாக்கை நீட்டி அச்சுறுத்துவது போலவே இருக்கிறது போல.
“அம்மா அப்பா” இதைத்தவிர அவளுக்கு வேறெந்த சொல்லையும் எழுத்தையும் அடையாளம் காண இயலவில்லை. இதை ஒரு தோல்வியென என்னால் கருத முடியவில்லை. எழுத்தை அடையாளங்காணல் என்பது வெறும் எழுத்து- பார்வை- வாசித்தல் என்ற கோபாடுகளில் நிறுத்தி பார்க்க முடியாது. அதையும் கடந்து மூளை வளர்ச்சி, அனுபவம், பின்னனி என்ற பல உளவியல் தத்துவங்களையும் அணுக வேண்டியுள்ளது. அந்த மாணவியால் தமிழில் பிராந்திய வட்டார வழக்கில் சரளாமாக பேச முடிகிறது. மற்ற மாணவிகளிடமும் இலகுவான மொழியில் அவளால் தமிழில் உரையாடவும் முடிகிறது.
தற்செயலாக அவளின் பெற்றோரைச் சந்தித்து இதைப் பற்றி விசாரித்தேன். ஒருவேளை அவளின் குடும்ப பின்னனியில் ஏதாவது தகவல்கள் சிக்கலாம் என்கிற நோக்கத்தில்தான். ஆனால் அவரின் பெற்றோர்களின் பதில்களெல்லாம் பகுத்தறிவு தர்க்கத்திற்கு அப்பால்பட்டது. அவர்களிடம் கேட்டபோது, அவள் அடிக்கடி கீழே விழுந்துவிடுவதாகவும் அதனால் படிப்பு மண்டையில் ஏறவில்லையென்றும் சொன்னார்கள். அவளுக்குக் கவனமாக நடக்கவும் இருக்கவும் தெரியாது அதனால் அவளால் படிக்க முடியவில்லை என்றும் சொன்னார்கள்.
கல்வி என்பது வெறும் மண்டையில் ஏறும் சமாச்சாரம் ஆகிவிடுமா? கல்வியை வலிந்து புகுத்தினால், அது மருந்திற்கு நிகரான கசப்பைக் கொடுத்துவிடும். மேலும் பெரியவர்களின் சொற்களும் வசையும் காத்திரமான ஆபத்தைக் கொண்டவை. அவர்களின் சொற்கள் குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அந்த மாணவியிடம் தனிப்பட்ட முறையில் விசாரித்தபோது, அவரின் அப்பா அவளை அடிக்கடி, “முட்டாக்கழுதை” என்று திட்டுவாராம். அந்தச் சொற்களை அவள் உச்சரிக்கும்போதே அவளிடம் ஒரு தடுமாற்றமும் பதற்றமும் இருந்தது. அவளின் கவனம் சிதையவில்லை, அவள் சொற்களால் சிதைக்கப்பட்டிருக்கிறாள், அதனால் சொற்கள் அவளைத் துண்டித்துக் கொண்டு ஏதோ பேய் போல உருமாறியிருக்கலாம்.
அவரின் பெற்றோரிடம் மேலும் விரிவாகக் கேட்டபோது அவர்கள் பிடி கொடுத்து பேச மறுத்தார்கள். தங்களின் பிள்ளைக் கல்வி வளர்ச்சிக்காக என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “சாமிக்கு வேண்டியிருக்கிறோம், அடுத்த வருஷம் பிள்ளை படிச்சிறும்.. சாமி படிக்க வைக்கும்” என்றார்கள். குப்பென்று வியர்த்துக் கொட்டியது.
கல்வி குறித்து நம்மவர்கள் காட்டும் அக்கறைகள் வீட்டின் எல்லையைக்கூட கடந்ததில்லை. நம்முடைய அவசர யுகத்தின் தத்தளிப்புகளைக் குழந்தைகளிடம் காட்டும் அவசரமும் ஆர்வமும் அவர்களின் வளர்ச்சியில் காட்டப்படுவதில்லை. அவர்களை நிராகரிப்பதே அவர்களுக்குச் செய்யும் பெரும் பாவம். எழுத்தை அடையாளங்காணல் என்பது சடாரென்று எல்லோருக்கும் வந்துவிடாது. அது சிறு சிறு அடிப்படை பயிற்சியின் மூலமே பெற முடியும். குடும்ப சூழலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உலகத்தில் அவர்களின் பெற்றோர்கள் உதிர்த்துவிட்ட வசை சொற்களைத் தவிர வேறொன்றும் இருப்பத்தில்லை. அவர்களின் கலைசொற்களே அதுதான். மூளை சிறு வயது முதல்கொண்டே புரவெளியில் அடுக்கப்படும் சொற்களை அடையாளங்கண்டு தனக்குள் சேமித்துக் கொள்கிறது. அதன் சொல் சேமிப்புக்கிடங்கு எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம். அது பெற்றோர்களின் (அவர்கள்தான் பிள்ளைகளுக்கு நெருக்கமானவர்கள்) வசைச் சொற்களால் அறுத்து தூக்கியெறியப்படலாம்.
ஒரு “முட்டாகழுதை” சொல்தான் என் வகுப்பு மாணவிக்கு அவளின் மனதை நிர்ணயம் செய்யவும் மதிப்பீடவும் களமாக இருக்கிறது. அவள் எப்படி இந்தச் சொல்லைக் கடந்து போயிருப்பாள்? அல்லது அந்தச் சொல்லின் உக்கிரத்தில் இன்னமும் தத்தளித்துக் கொண்டிருபவளாக இருக்கலாம். இனி அவளுக்கு நாம் செய்வதெல்லாம் அந்தச் சொல்லைக் கடப்பதற்கான துடுப்பைக் கொடுப்பதுதான்.

கே.பாலமுருகன் மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்