சச்சின்

This entry is part [part not set] of 15 in the series 20010422_Issue

லாவண்யா


வரும் ஏப்ரல் இருபத்து நான்கில் பொிதாய் ஏதும் விசேஷம் இல்லை – மொத்த இந்தியாவாலும் தத்தெடுக்கப் பட்டிருக்கும் சச்சின் என்கிற விளையாட்டு வீராின் பிறந்தநாள் என்பதைத் தவிர.

1989ல் பதினாறரை வயதில் இன்னும் முகத்தில் குழந்தைத்தனம்கூட விலகாத பையனாய் சச்சின் இந்தியாவுக்காக விளையாடத் துவங்கி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த வருடங்களில் ஒருநாள் போட்டிகளிலும் சாி, டெஸ்ட் ஆட்டங்களிலும் சாி, சச்சின் சாதித்தவை இன்றைக்கு சாித்திரம். ஒவ்வொரு கட்டத்திலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ மொத்த இந்திய கிாிக்கெட் அணியும் சச்சினை நம்பி இருந்தது. சச்சின் ஆட்டம் இழக்கிறவரையில் எதிர் அணியின் கேப்டன் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் விளையாடினார்கள். உலகத்தின் புகழ்பெற்ற எந்த பந்து வீச்சாளரானாலும் சச்சினுக்கு பந்துவீச உள்ளூர பயப்பட்டார்கள். சச்சின் அவர்களை மைதானத்தின் ஒவ்வொரு மூலைக்கும் விளாசுகையில் கோபப் படுவதற்கு முன்னால், வியந்து போனார்கள். ஒவ்வொரு அணியும் அவர்மேல் பொறாமைப் பட்டதோடு, அளப்பாிய அன்பும் வைத்திருந்தது – ஆஸ்திரேலியாவில் சச்சின் விளையாடப் போனபோது அவரைப்பார்க்கக் கூடிய கூட்டமே இதற்கு சாட்சி. விளையாடுகிற, விளையாடி ஓய்வுபெற்றுவிட்ட அத்தனை மாகானுபாவர்களும் சச்சினையும் அவர் பேட்டிங் திறமைகளையும் பக்கம் பக்கமாய்ப் பாராட்டியாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல கிாிக்கெட் பிதாமகர், சமீபத்தில் மறைந்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மென் – ‘சச்சின் என்னைப் போல விளையாடுகிறார் ‘ என்று பிரம்மாிஷிப் பட்டமே கொடுத்தார். அதை உலகமே ஒப்புக்கொண்டும் விட்டது.

மேல் பத்தியில் கடந்த காலத்தில் சொல்லியிருக்கிற ஒவ்வொன்றும், நிகழ் காலத்திலும் உண்மை, எதிர் காலத்திலும் உண்மை. இந்திய அணியின் மூத்த வீரராகிய சச்சினிடம் பொிய மாற்றம் ஏதும் இல்லை. எப்போதும் போல அவர்தான் அணிக்கு முன்னோடி, அவர் நன்றாக விளையாடினால், எல்லோருக்கும் பொிய ஊக்கம் கிடைக்கிறது. இன்றைக்கும் எந்த ஆட்டம் துவங்கினாலும், எதிர் அணியின் முதல் குறிக்கோள் – சச்சினை ஆட்டமிழக்கச் செய்வதுதான். அவர் நின்று விளையாடத் துவங்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு நன்றாய்த் தொியும். சச்சின் விளையாடுகிற நேரங்களில் இந்திய சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு, எல்லோரும் டிவி முன்பு உட்கார்ந்து அவர் சந்திக்கிற ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டைக் கடக்க வேண்டும் என்று ஆசைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்., தெருமுனையில் ரப்பர் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று கொண்டிருக்கிற சின்னஞ்சிறுவனில் துவங்கி கவாஸ்கர் வரையில் – இந்தியர்களுக்கு சச்சின் ஒரு இணையில்லா கதாநாயகன் – இன்னும் பலப்பல வருடங்களுக்கு. குறிப்பாய் சொன்னால், சச்சின் ஓய்வு பெறும் நாளை கற்பனை செய்யவும் இந்தியர்கள் தயாராய் இல்லை., இந்த நாட்டைப் பொறுத்தவரை சச்சின் என்றால் கிாிக்கெட் என்பது எத்தனை நிஜமோ, கிாிக்கெட் என்றால் சச்சின் என்பதும் அதே அளவு நிஜம்.

சச்சினுடைய மட்டை வீச்சு மற்றும் பந்து வீச்சுத் திறமைகளைப் பற்றி யாருக்கும் சந்தேகம் இல்லை. அவர் எப்படிப்பட்ட மட்டை உபயோகிக்கிறார், எந்த நேரத்தில், எந்த கோணத்தில் பந்தை எதிர்கொள்கிறார், எப்படிப் பட்ட மைதானங்களில் அவருக்கு நிறைய ரன்கள் குவிகின்றன, ஏன், எங்கே அவர் குறைவாய் அடிக்கிறார், அதை நிவர்த்தி செய்வது எப்படி என்றெல்லாம் அலசல்களும் ஆலோசனைகளும் நிறைய எழுதப் பட்டுவிட்டது. அவற்றை விடுத்து, கிாிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல், ஒரு தனி மனிதராக சச்சினை, அவர் குணங்களை ஆராய்வது பல புதிய கதவுகளைத் திறக்கிறது.

சச்சினுடைய ஒவ்வொரு பேட்டியிலும் அவாிடம் தவறாமல் கேட்கப் படுகிற கேள்வி ஒன்று உண்டு, ‘நீங்கள் என்ன குறிக்கோளை நோக்கி

விளையாடுகிறீர்கள் ? ‘

அவரும் சலிக்காமல் ஒரே பதிலைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார், ‘மனதில் சிலவற்றைச் செய்ய யோசிப்பதுண்டு, ஆனால் என் முக்கியக் குறிக்கோள், மைதானத்தில் சென்று மேலும் மேலும் ரன்களை எடுப்பது மட்டுமே ‘

மகாபாரதத்தில் கிளியின் கண்ணில் அம்பு எய்யும்படி சொல்லப்பட்ட அர்ச்சுனனுக்கு கிளியின் கண் மட்டும்தான் தொிந்தது என்று சொல்வார்கள். சச்சினுடைய இந்த பதிலை அதனோடு ஒப்பிடலாம். ஒரு போட்டியில் நூறு ரன்கள் எடுப்பதோ, நூற்று இருபது எடுப்பதோ, ஆட்ட நாயகன் விருதை வெல்வதோ … இவை எல்லாமே குறிக்கோள்கள்தான், ஆனால் இவற்றையெல்லாம் சாதிக்க முக்கியமானது, அதற்கான மனநிலையும், உறுதியும். அவை எப்படி சாத்தியமாகும் ? மேலும் மேலும் ரன்களைக் குவிப்பதன் மூலமாக. இந்த எளிய குறிக்கோளில் மனம் கவனம் செலுத்துகிறபோது மற்றவை தானாய் வந்து சேர்கிறது. சச்சின் விளையாடுவதைப் பார்க்கிற எவரும் இதை கவனிக்கலாம், எந்தக் கணத்திலும் அடுத்த ரன் எடுப்பதில்தான் அவருடைய எண்ணம் இருக்கிறது, அதில் மட்டும் முனைப்பாய் இருந்து, அதைச் செய்து முடிக்கிறபோது மற்ற சாதனைகள் யாவும் அவரைத் தேடி வருகிறது.

இந்த எளிய விஷயம் விளையாட்டுக்கு மட்டுமில்லை, எந்தத் துறைக்கும் பொருந்தும். உதாரணமாய், நிறைய மார்க் எடுத்து மருத்துவனாய் ஆகிற ஆசை கொண்ட பையன், இன்றைய காலாண்டுத் தேர்வை சாியாய் எழுத வேண்டும். பொிய பாடகியாய் வர வேண்டும் என்கிற லட்சியம் கொண்ட பெண், இன்றைய கச்சோியில்தான் முதல் கவனம் செலுத்த வேண்டும்.

சச்சினிடம் எல்லோரும் வியக்கிற இன்னொரு விஷயம், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. தன் நேரத்தின் பெரும் பகுதியை கிாிக்கெட்டுக்காக செலவிட வேண்டியிருக்கிறபோதிலும், அதற்காக சச்சின் தன் குடும்பத்திடமிருந்து விலகிவிடவில்லை. போட்டிகள் இல்லாத சமயங்களை மனைவி, குழந்தைகளுடன் செலவிடுகிறார். (இப்போதுகூட அவர் குடும்பத்தோடு திருப்பதியில் இருப்பதாய்ச் செய்தி !). ‘கிாிக்கெட்டுக்கு அடுத்தபடியாய் என் குடும்பம்தான் எனக்கு உயிர் ‘ என்று சொல்கிற ஒரு பொறுப்பான கணவனை, தகப்பனை சச்சினில் பார்க்க முடிகிறது. பணத்தின்பின்னால் ஓடும் வாழ்க்கையில் நேரமின்மையால் உறவுகளைத் தொலைப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிற இன்றைய அவசரச் சூழலில் இது ஒரு உன்னத குணம். சாியான திட்டமிடலும், அக்கறையும் இருந்தால் வேலை, குடும்பம் இரண்டிலும் நம் கடமையை சாியாய் செய்ய முடியும் என்பதற்கு சச்சின் ஒரு உதாரணம்.

இந்தியர்கள் சச்சின்மேல் வைத்திருக்கிற பாசமும் அன்பும் அளவற்றது. அவர் ஒவ்வொருமுறை விளையாடுகிறபோதும், ஒவ்வொரு பந்தைச் சந்திக்கிறபோதும் அவருக்காக பிரார்த்திக்கிறவர்கள் தேசம் முழுதும் இருக்கிறார்கள். ஒரு விளம்பரப் படத்தில் ஒரு சிறிய பெண் குழந்தை கடவுளிடம் தனக்காகவும், தன் பெற்றோருக்காகவும் வேண்டிக் கொண்டபிறகு, ‘சச்சின் இன்றைக்கு செஞ்சுாி அடிக்க வேண்டும் ‘ என்றும் வேண்டிக் கொள்ளும் – இது வெறும் கற்பனை என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. நிஜமாய் அப்படிப் பிரார்த்திக்கிறவர்கள் இருக்கிறார்கள் – நான் உட்பட. சச்சினுடைய ஒவ்வொரு ரன்னும், ஒவ்வொரு சாதனையும் அவருக்கு மட்டும் சொந்தம் இல்லை. மொத்த தேசமும் அதைப் பகிர்ந்து கொள்கிறது. தங்கள் வீட்டுப் பிள்ளை சாதித்ததாய் நினைத்து சந்தோஷம் கொள்கிறது. இன்பத்தில் மட்டுமில்லை, அவருடைய துன்பத்திலும் தோள் கொடுக்க இந்த தேசம் தயாராய் இருக்கிறது என்பதற்கு, சச்சினுக்கு முதுகுவலி வந்து விளையாட முடியாமல் போனபோது அவருக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனைகளே நிரூபணம். சச்சின் விளையாட வந்த புதிதில் ஒரு போட்டியில் ஒரு பாகிஸ்தானியப் பந்து வீச்சாளர் அவருடைய மூக்கை உடைத்துவிட்டார். (பிளாஸ்திாி போட்டுக் கொண்டு சச்சின் தொடர்ந்து விளையாடினார் என்பது வேறு விஷயம்). அதற்காக என் அப்பா இன்று வரையில் அந்த பாகிஸ்தானியரைப் டிவியில் பார்க்கிறபோதெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார். இரண்டு வருடங்கள் முன்பு சென்னை டெஸ்ட் போட்டியில் கடுமையான முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றும் நோக்கத்தோடு

அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருடைய சங்கடத்தைப் பார்க்கச் சகியாமல் ‘சச்சின் அவுட் ஆக வேண்டும் ‘ என்று பிரார்த்தித்த ஒரு

நண்பனை நான் அறிவேன். இந்தியர்களுக்கு கிாிக்கெட் முக்கியம்தான், ஆனால் சச்சின் அதைவிட முக்கியம்.

இந்த பாசத்துக்கெல்லாம் என்ன காரணம் என்பது சச்சினுக்குப் புாிந்திருக்கிறது. அவர் விளையாடுவது தேசத்திற்காக. அந்த நினைப்பே அவரைச் செலுத்துகிறது, ‘நான் சதம் அடித்து, இந்தியா அந்தப் போட்டியில் தோற்றுவிட்டால் அது எனக்கு எந்த சந்தோஷமும் கொடுப்பதில்லை ‘ என்று அடிக்கடி சொல்லும் சச்சின் ஒரு உண்மையான தேசபக்தர். ஒரு நாட்டின் பிரதிநிதியாய் தான் விளையாடிக் கொண்டிருப்பது அவருக்கு எப்போதும் நினைவில் இருக்கிறது. நாட்டிற்கு தன்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். தன் திறமையில் 101% சதவீதம் வெளிப்படுத்தி ஆடுகிறார். 1998ல் ஷார்ஜா போட்டியில் தனி மனிதராய் ஆஸ்திரேலியாவை வென்று சச்சின் கோப்பையைக் கைப்பற்றினதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டைடன் கோப்பை ஆட்டம் ஒன்றில் கடைசி ஓவாில் ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் நிலையில் தென் ஆப்பிாிக்க அணி வலுவாக இருந்தபோது, பந்து வீச்சில் அதிகம் அனுபவம் இல்லாத சச்சின் தானாய் முன்வந்து அந்த கடைசி ஆறு பந்துகளை வீசி, தன் புத்திசாலித்தனத்தால் இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.

இந்த சம்பவங்களுக்கெல்லாம் மேலான ஒரு நிகழ்ச்சியும் இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையின்போது எதிர்பாராத விதமாய் அவருடைய தந்தை இறந்துவிட, சச்சின் இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்தது. ஆனால் இங்கே அப்பாவின் இறுதிக்கடன்களை முடித்ததும் சச்சின் இங்கிலாந்திற்கு விமானம் ஏறிவிட்டார். போய் இறங்கின கையோடு ஒரு சதம் அடித்து இந்தியாவுக்கு முதல் வெற்றியை சாத்தியமாக்கினார். சச்சின் கிாிக்கெட்டின் மேலும் இந்த தேசத்தின் மேலும் காட்டுகிற அர்ப்பணிப்பு (Dedication) அப்படிப் பட்டது. எந்த தோல்வியும் அவருக்கு சம்மதமில்லை, இந்திய அணி தோற்றுப் போனால் வெளிப்படையாய் அழக்கூடிய மனது அவருடையது (அழுதிருக்கிறார்), அதேபோல் இந்தியாவின் வெற்றியைவிட அவரை சந்தோஷப் படுத்தக்கூடிய விஷயம் வேறு ஏதும் இல்லை. அந்த வகையில் இன்றைய இளைஞர்களுக்கு சச்சின் ஒரு முன்னுதாரணம். உங்கள் தேசத்தைக் காதலியுங்கள், அது உங்களுக்குச் செய்தது நிறைய, பதிலுக்கு நீங்கள் ஏதேனும் செய்யுங்கள் என்று அவருடைய ஆட்டம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியோடு மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது எல்லா வீரர்களும் வீழ்ந்துபட, சச்சின் மட்டும் நிலைத்து நின்று விளையாடினபோது, தோல்வியைத் தவிர்க்க அவரால் ஆனவரை போராடினபோது அதற்காக அவருக்கு ‘பரம்வீர்சக்ரா ‘ விருது தரப்பட வேண்டும் என்று ஒரு பத்திாிக்கையில் எழுதினார்கள். அது கிண்டல் இல்லை, என்னதான் பணம் வாங்கிக் கொண்டு விளையாடினாலும், எல்லாருக்குமா அணியின்மீது இப்படி ஒரு அக்கறை வந்துவிடுகிறது ? கிாிக்கெட் சூதாட்ட ஊழல்களில் பல முன்னணி வீரர்கள் சிக்கிக் கொண்டு தவித்தபோதும் சச்சின்மேல் எந்த குற்றமும் சொல்லப்படவில்லை. அது மட்டுமில்லை, கிாிக்கெட் சூதாட்டம் பற்றி அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சச்சினுடைய நேர்மையை மேலும் கெளரவித்தது. அணிவீரர்கள் சிலர் பணம் பெற்றுக் கொண்டு தேசத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்று தொிந்தபோதெல்லாம் சச்சின் தன்னந்தனியராய் போராடி, துரோகிகள் ஆடாமல் கைவிட்ட ஆட்டத்தையும் சேர்த்துஆடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இதற்காக அவருக்கு வந்த மிரட்டல்களையும், மனத்தளவில் செய்யப்பட்ட கொடுமைகளையும்பற்றிப் படிக்கும்போதே கண்ணில் நீர் துளிர்க்கிறது. நேர்மையாய் இருப்பதற்கு, தன் தேசத்திற்கு உண்மையாய் இருப்பதற்கு ஒரு மனிதருக்குத் தரப்படுகிற கெளரவம் இவ்வளவுதானா என்று வெறுப்பு தோன்றுகிறது. ஆனால் அந்த நிலைமையிலும் தளராமல் தன் பணியைத் தொடர்ந்து செய்து

வந்திருக்கிறார் சச்சின்., தேச கெளரவத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். அந்த வகையில் பார்க்கிறபோது தேசிய விடுதலைக்குப் போராடிய தியாகிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் இருக்கிற ராணுவ வீரர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல சச்சினுடைய தேசப்பற்று.

மேலே சொன்ன அதே உதாரணங்களில் சச்சினுடைய இன்னொரு குணமும் வெளிப்படுகிறது. தோல்வி பக்கத்தில் இருப்பதுபோல பயம் காட்டினாலும்கூட சச்சின் தன்னம்பிக்கையை இழக்காமல் விளையாடக்கூடிய ஒரு வீரர். பல முறை ஆட்டம் நம் கையை விட்டுப் போய்விட்டது என்று எல்லோரும் நினைத்தபிறகும், தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றிக்கு அணியை இழுத்து வந்திருக்கிறார் – பேட் கொண்டு மட்டுமில்லை, சில சமயங்களில் பந்து கொண்டும். எந்த சூழலிலும் தன் இயல்பை விட்டுவிடாமல் இருப்பதையும், கடைசி வரை விடாது போராடுவதையும் சச்சினிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

திறமைசாலிகள் எல்லோருக்கும் அதிர்ஷ்டமும் கைகொடுக்கும் என்று சொல்வார்கள். சச்சின் விஷயத்தில் அது நேர் எதிர். பலமுறை தவறான தீர்ப்புகளில் ஆட்டம் இழந்திருக்கிறார் சச்சின். பலமுறை யாரும் எதிர்பார்க்காத முறைகளில் ஆட்டம் இழந்திருக்கிறார் – மும்பை டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் ஆட்டமிழந்த விதத்தை இன்னும் பலர் நம்பத் தயாாில்லை. பலமுறை உடன் விளையாடுகிற வீரர்களே அவரை முக்கியமான தருணங்களில் ரன் அவுட் செய்திருக்கிறார்கள். ஆனால் சச்சின் இவற்றுக்காக எப்போதும் சலித்துக் கொண்டதில்லை. வாழ்க்கையின் நிகழ்தகவில் எதுவும் நடக்கலாம் என்பதை நன்றாக புாிந்து கொண்டவர் போல., ‘இவையும் ஆட்டத்தின் ஒரு பகுதிதான் ‘ என்று அதை எடுத்துக் கொள்கிறார். இந்த ஏமாற்றங்கள் அவரைப் பாதிக்க அவர் அனுமதிப்பதில்லை, அடுத்த போட்டிக்கு முழுஈடுபாட்டோடு தயாராகிறார், வெற்றியும் பெறுகிறார். திறமைசாலிக்கு அதிர்ஷ்டம் தேவையில்லை, தேவைப்பட்டாலும் தன் அதிர்ஷ்டத்தை தானே செய்து கொள்ள அவனால் முடியும் என்பது சச்சினால் தெளிவாகிறது.

மைதானத்தில் ஒருவாிடம் நேரடியாய் சவால் விடுவது, இழிவாய்ப் பேசுவது போன்ற செயல்கள் இப்போது பரவலாய் நடந்து வருகின்றன. அவற்றால் கவனம் சிதறி மட்டையாளர்கள் ஆட்டம் இழப்பதும் நேர்கிறது, சச்சினையும் பலர் நாவினால் சுட்டிருக்கிறார்கள்., சச்சின் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவருக்கு பேட்டினால் மட்டுமே பேசத்தொியும். உண்மையில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான், முன்பைவிட அதிக ஊக்கத்தோடு அவர் விளையாடுகிறார் என்று தோன்றுகிறது. அப்படிப் பட்ட பந்துவீச்சாளர்களை அவர் பேட்டினால் சுட்ட வடு – ஆறாது. வெற்றி வந்தாலும், தோல்வி வந்தாலும், கற்கள் வந்தாலும், பூங்கொத்துக்கள் வந்தாலும் தன் வேலையில் கவனமாய் இருக்கிறார் சச்சின். உங்கள் துறை எதுவானாலும் அதில் முழு ஈடுபாட்டோடும், முனைப்போடும் பணியாற்றுவதுதான் வெற்றிக்கு முதல் தேவை என்பதை சச்சின் சொல்லாமல் சொல்கிறார்.

மைதானத்தில் இருக்கிறபோது மட்டுமில்லை, அதற்கு வெளியிலும் சச்சின் ஒரு பொறுப்பான இந்திய அணி வீரராகவே இருக்கிறார். ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களை கவனித்து, சிறப்பாய் விளையாடுகிறவர்களை வெளிப்படையாய்ப் பாராட்டுவதையும், தனக்குத் தொிந்த உத்திகளைச் சொல்லிக்கொடுப்பதையும் அவர் தன் கடமைகளாகவே நினைக்கிறார். மிகச் சிறந்த வீரர்கள் பலரை அவர் அணிக்கு சிபாாிசு செய்ததும் உண்டு.

உலகின் சிறந்த மட்டைவீச்சாளர் என்று அவரை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள், ஆனால் அந்த கர்வம் சச்சினுக்கு எப்போதும் இல்லை. எனக்கெதற்கு ஒத்திகை என்று எப்போதும் அவர் ஒதுங்கி இருப்பதில்லை. பயிற்சி முகாம்களின்போது எல்லோரையும் போலவே மணிக்கணக்காய் பேட்டிங் பயிற்சி செய்கிறார். பந்து வீசுகிறார். அணியின் இளைய வீரர்களோடு நெருங்கிப் பழகுகிறார் – அவர்களுக்கு உதவுகிறார். இவற்றுக்கெல்லாம் மேலாக, உலகையே மயக்கின அவருடைய ஆட்டத்திலேயே அவர்கள் திருத்தம் சொல்கிறபோதும், அதை பொறுமையாய் கேட்டுக் கொள்கிறார். சாி என்று படுகிற மாற்றங்களைச் செய்கிறார். வெகு உயரத்திற்குப் போனபோதும் தலைசுற்றிப் போகாமல் நிலையாய் இருப்பது அபூர்வம். சச்சினால் அது முடிகிறது. அவாிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு குணம் இது.

சச்சினைப் பற்றி எழுத வேண்டுமானால், இன்னும் பக்கம் பக்கமாய் எழுதிக் கொண்டே போகலாம். இவற்றை வெறும் புகழ்ச்சி என்று நினைப்பவர்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது – சச்சின் விளையாடுவதை கவனித்துப் பாருங்கள், சச்சின் பேட்டிகளைத் தொடர்ந்து வாசியுங்கள், சச்சின் ஒரு பொிய கிாிக்கெட் திறமையாளர் என்பது மட்டுமில்லை, அவர் ஒரு மாமனிதர் என்பதும் புாியும். அவாிடம் நாம் கவனிக்க வேண்டியதும், கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது. தான் எடுத்துக் கொண்ட பணியில் திறமை, உழைப்பு, நம்பிக்கை, ஈடுபாடு, அக்கறை, நேர்மை, கர்வமின்மை ஆகிய பல குணங்களுக்கு அவர் ஒரு உதாரணமாய் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். நாளைய பாரதத்துக்கு இப்படி ஒரு முன்னோடிதான் அவசியத் தேவை. இன்றைய இளைஞர்களும் நாளைய இளைஞர்களும் சச்சினுடைய விளையாட்டை விரும்பி ரசிக்கிறார்கள், அதே அளவு அவருடைய குணங்களும் போற்றப்பட வேண்டும், பின்பற்றப்பட வேண்டும் என்பதே இந்த எளிய ரசிகனின் ஆசை. அதற்காகவாவது சச்சின் இன்னும் பல வருடங்கள் விளையாடிக் கொண்டேஏஏஏ இருக்க வேண்டும்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சச்சின் !

Series Navigation

லாவண்யா

லாவண்யா