சங்கீதமும் வித்வான்களும்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

எஸ்.கே


ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் ( ‘சுப்புடு ‘ அவர்களுடன் கூட) நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும் காதைப் பெற்றதே பெரும்பேறு என்று எண்ணி மணிக்கணக்காக கச்சேரிகளைக் கேட்டுக் கொண்டு வருகிறேன். திருச்சி கீழப் புலிவார் ரோடு வன்னி மரத்தடியில் மதுரை சோமு கச்சேரியையும், தஞ்சை மேல வீதியில் பூச்சொரியலின்போது திருவெண்காடு, மன்னார்குடி, திருவீழிமிழலை போன்ற பெரிய செட்டு நாகஸ்வரங்களையும் விடியவிடியக் கேட்டு அனுபவித்திருக்கிறேன். ஆனால் அந்த ரஸானுபத்தில் அரை எடுப்பு. கால் எடுப்பு, திஸ்ரம், மிஸ்ரம், கண்டஜாதி திருபுடை தாளம் போன்ற டெக்னிகல் சமாசாரங்கள் தலையிட அனுமதிப்பதில்லை. நுணுக்கங்கள் பார்க்கும் நிபுணத்துவத்தில் இறங்கினால் இசை என்கிற mechanical pressure waves நம் உள்ளத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள், moods முதலிய அனுபவங்களை அமுக்கி விடும் என்பது என் எண்ணம். இது பலருக்கு ஒவ்வாத கருத்தாக இருக்கலாம்.

ஆனால் சங்கீதம் என்பது ஒருவித அனுபவம்; சங்கீதக் காரர்களை அருகில் காண்பது வேறுவித அனுபவம்! ஒரு கை விரல்களைக் கொண்டு எண்ணக் கூடிய வெகு சிலரைத் தவிர மீதியுள்ள வித்வான்களைக் காதால் மட்டும் கேட்டு விட்டு ஓடிப்போனால் உங்களுக்கு நல்லது! கூடுமானவரையில் அவர்களுடன் நெருக்கமில்லாமல் இருந்தால் நலம். சபா செயலர்கள் எப்படி நெருங்காமலிருக்க முடியும் என்று கேட்கலாம். அவர்கள் நிலை வேறு. அந்த இரு சாராரும் ஒரு மாதிரி symbiotic existance-ல் உள்ளவர்கள். இருவர்களும் ஒருவரை ஒருவர் ஆழம் பார்த்துக் கொண்டு ‘தடுக்கும் கோலமுமாக ‘ இருப்பார்கள். மேலும் அந்த இரு சாராரும் ஒரு மொத்த அமைப்பின் complementary-ஆக, ஒருவர் மற்றவரைச் சார்ந்து இருப்பதால் ஒரு வணிகம் சார்ந்த உறவு கொண்டு ஒழுகும் கட்டாயத்தில் இருப்பவர்கள். இவர்களை விட்டு விட்டு நம்மைப் போல் சாதாரணர்களைப் பற்றிப் பார்ப்போம்!

மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால், மக்கள் மத்தியில் பிரபலமானவர்களிடம் – விளையாட்டு வீரர்கள், நுண் கலைகளில் ஈடுபட்டவர்கள், திரையுலக மற்றும் டி.வி நடிகர்கள், வேறுபல துறைகள் மூலமாக மக்களால் அறியப் பட்டவர்கள் – பெரும்பாலும் இவர்களில் பலரிடம் ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கும் – ‘தாம் மக்களால் கொண்டாடப் படுகிறோம். அதனால் மற்றோரிடம் எப்படி வேண்டுமாலும் நடந்து கொள்ளலாம் ‘ என்பதாக. தான் பிறரிடம் பேசுவதே அவர்கள் செய்த பாக்கியம் என்று நம்புவார்கள். புகழ் சிறிது வந்தவுடனே அந்த போதை தலைக்கேறிவிடும். யாராவது ஒரு அசடன் அவர்களில் சிலரை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து, தான் இப்பிரவி எடுத்த பயன் பெற்றது போல புளகாங்கித மடைந்திருக்கும் வேளையில் இந்த பிரபலம் தன் சபலத்தைக் காட்ட ஆரம்பித்து விடும். இவர்களிடம் கொஞ்சம் அஜாக்கிறதையாக இருந்தால் முதலுக்கே மோசம்தான். இவ்வளவு புகழ் பெற்றிருக்கும் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பது ஏனையோர் கடன் என்பது இவர்களின் தீர்மானமான கருத்து. இதே எண்ண ஓட்டத்தைத்தான் ஒரு பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெடர் வெளிப்படுத்தினார் என்று ஒரு பெண் பாலியல் புகாரில் கூறியிருந்த செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இவர்களில் பலர் (பெண்கள் உட்பட) மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். நான் ஒரு முறை என் மனைவியுடன் பயணிக்கும் போது, நான் மிகவும் மதிக்கும் ஒரு சிறந்த இசையமைப்பாளர் தன் நண்பருடன் அந்தப் பெட்டியில் (cubicle) அமர்ந்திருந்தார். ஆனால் எங்களைக் கண்டது முதல் கண்டக்டரை அணுகி ஏதோ கேட்ட வண்ணம் இருந்தார். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, ‘நாங்கள் பிரயாணத்தின் போது சிறிது தீர்த்தம் சாப்பிடுவோம். உங்கள் மனைவி முன் அதை ஆரம்பிக்க கூச்சமாக இருக்கிறது. அதனால் வேறு எங்காவது ‘பெர்த் ‘ காலியாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் ‘ என்றார். அந்த அளவுக்கு அவர் நாகரிதத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தார். ஆனால் எல்லோரும் அவ்வாறு இருப்பதில்லை. இதுபோன்ற பொது இடங்களில் தாறுமாறாக நடந்து கொண்டு தகாத சொற்களைப் பேசி ‘தனக்கு நிகரில்லை ‘. தான் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ள லைசன்ஸ் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் பல பிரபலங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சரி. இப்போது கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு வருவோம். அவர்களின் உலகத்தில் பாலிடிக்ஸ் மிக அதிகம். ஒருவரை ஒருவர் அடிவெட்டு வெட்டுவது அங்கு சர்வ சாதாரணம். ஒருவர் தன்னைவிட நன்றாகப் பாடி கொஞ்சம் பெருமை பெற ஆரம்பித்தால் போதும் – ஒன்று அவர்களின் சங்கீதம் பற்றிய துர் விமரிசனம் செய்வார்கள் அல்லது அவர்களின் நடத்தை பற்றி அவதூறாக வதந்திகளைப் பரப்பத் தொடங்குவார்கள். இது தொன்று தொட்டு நடக்கும் சமாசாரம்.

சென்ற தலைமுறையினருக்கு நன்றாக நினைவிலிருக்கும், மறைந்த மாமேதை ஜி.என்.பி-யை என்ன பாடுபடுத்தினார்கள் என்று. அவர் பளீரென்று இசை உலகில் பிரவேசித்து தன் மின்னல் வேக பிருகாக்களால் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பித்து விட்டார். எல்லா இசை ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார். அந்தக் காரணத்தினால், தன் குருமார்களின் வீட்டில் வேஷ்டி, புடவை துவைத்துப் போட்டு வித்வான்களாக ஆகிய, ‘கொய்ங் ‘ என்று இழுத்து இழுத்துப் பாடும் சம கால பாடகர்கள் பலர் வாய்ப்பிழந்து ‘வி.ஆர்.எஸ் ‘ஸில் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்கும் ‘ஜிஎன்பி ‘ பற்றிய பேச்சு தான். படிப்பறியாத தற்குறிகள் மலிந்த இசையுலகில் ஒரு B.A.(Hons) பட்டம் பெற்ற, உயரமான, லக்ஷணமான இளைஞரை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்ததை எப்படிப் பொறுப்பது! அவ்வளவுதான். A no-holds-barred war was started. It was G.N.B Vs others! எதிரணியை நடத்திச் சென்றவர் ‘ராஜ சேவை ‘யில் நிபுணர். பெரிய இடங்களில் ஆளுக்குத் தகுந்தபடி பேசி ஜால்ரா தட்டி அவர்கள் எண்ணப் போக்கை தன் பக்கம் திருப்புவதில் வல்லவர். அவருக்கு சாதகமான விஷயம் ஒன்று கிடைத்தது. அதுதான் ஜி.என்.பியின் வித்யா கர்வம். யாரையும் வலுவில் போய் ‘ஸ்வாமி. நமஸ்காரம். உங்களை மாதிரி பெரியவா உண்டா. நீங்கதான் கிருபை பண்ணனும் ‘ என்றெல்லாம் sycophancy-யில் ஈடுபட்டு ‘உடம்பு பிடித்து விட ‘ மாட்டார். இதை சாதகமாக ஆக்கிக் கொண்டு வேறுபல hitting below

the belt முறைகளைக் கையாண்டு அவரை வீழ்த்த முற்பட்டார்கள். ‘அவரோட கச்சேரியை வைக்கிறேளா ? பேஷா வையுங்கோ. பிரமாதமா பாடரார். யாரோட சிக்ஷையும் இல்லாம சுயம்புவா பாடரார். ஆனா சித்த ஜாக்கிறதையா இருந்துக்குங்கோ. ஆத்தில பொம்மனாட்டியெல்லாம் இருக்காளோல்லியோ ‘ இந்த ரீதியில் விஷ வித்துக்கள் விதைக்கப் பட்டன. மேலும் அரசு பதவியில் இருப்பவர்களை வேப்பிலை அடித்து ஈகோ சர்வீஸிங் செய்து அவருக்கு வர வேண்டிய சிறப்புக்களை தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது இவற்றில் வெற்றி கண்டார்கள். அகில இந்திய ரேடியோவில் தலைமை புரொட்யூஸர் என்ற பதவி ஜி.என்.பிக்கு வரவிருந்ததை எப்படியோ தடுத்தது மட்டுமில்லாது அவர் பாடி A.I.R-இல் பதிவு செய்து வைத்திருந்த பல சிறந்த கச்சேரிகள் பிற்காலத்தில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவற்றை அழித்து விட்டார் ஒரு மகானுபாவர் என்று சொல்வார்கள்!

பழைய, ஆனால் பெரிய இடத்து செல்வாக்கு மிக்க இத்தகைய வித்வான்களை முன்னுக்கு வரும் இளைய தலைமுறையினர் அடிக்கடி கண்டு கொண்டு தோப்புக் கரணம் போடவில்லையென்றால் அவர்கள் கைவசம் எப்போதும் வைத்திருக்கும் பிரம்மாஸ்திரத்தை வீசி விடுவார்கள். அது என்ன தெரியுமா ? அதுதான் ‘சுருதி சேரவில்லை ‘ என்கிற வதந்தி. ‘சுருதி ‘சற்றே விலகியிரும் பிள்ளாய் ‘ தான் ‘ என்று வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் விமரிசனம் செய்வார்கள். திருப்பித் திருப்பி இதே மாதிரி சொல்லப்பட்டால் பலர் இதை நம்பத் தொடங்குவர். ஜி.என்.பி அவர்களையும் அப்படித்தான் சொன்னார்கள். இந்த கொடுமையைப் பொறுக்க முடியாமல் மறைந்த வயலின் வித்வான் செளடையா அவர்கள் மைசூரில் நடந்த ஒரு கச்சேரியில் ஜி.என்.பி பந்து வராளி ஆலாபனை பாடி முடித்தவுடன் ஆவேசமாக, ‘யார் யார் இவரைப் பார்த்து சுருதி சேரல்லெ, சேரல்லெ-ன்னு சொல்லராங்களோ அவாளெல்லாம் இங்கே வாங்கோ, இவர் பாடரத்தைக் கேளுங்கோ! தன் கையால ஒண்ணும் ஆகல்லேன்னா பிறத்தியாரைக் குறை சொல்லக்கூடாது யாரும் ‘ என்று ஒரு அறை கூவல் விட்டார். அந்தக் கச்சேரியில் ஜி.என்.பியின் பைரவி RTP பிரமாதமாக இருந்தது என்பது வேறு விஷயம்!

சென்னையில் இருக்கும் பிரச்னை மிகுந்த ஒரு பெத்த சபையைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறதாம். அந்தக் கூட்டத்தில் சம்பத்தப் பட்ட சிலர் பிரபலமாக இருக்கும் வித்வான்களின் கச்சேரிகளை பதிவு செய்து வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தவறான பழக்கங்களை ஏற்படுத்தி அவர்கள் சீரழிவுக்கும் காரண கர்த்தாவாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்களை எந்த வித்வான்களும் பகைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் இவர்களின் செல்வாக்கு ஒரு பக்கம், அது தவிர இவர்களால் பரப்பப்படும் வதந்திகள் ஒரு வகை stigma-வை உண்டாக்கி வித்வான்களின் பெயர் கெட்டுவிடச் செய்து விடும் வல்லமை பெற்றவை!

ஒரு பழம் பெரும் வித்வான் தன் பக்கவாத்தியக் காரர்கள் அடக்கி வாசிக்க வேண்டும் என்று விருப்பப் படுவார். ரசிகர்கள் கைதட்டுகிறார்களே என்று குஷி பிறந்து கொஞ்சம் கூட ஆலாபனையோ, ஸ்வரமோ வாசித்து விட்டால் அவ்வளவுதான், அடுத்த கச்சேரியில் அவர் கிடையாது. அது போல் ஒரு வயலின் வித்வான் தனக்குக் கிடைத்த அப்ளாஸினால் குஷி பிறந்து விஸ்தாரமாக வாசிக்க ஆரம்பித்து விட்டார். அவ்வளவுதான். வாய்ப்பாட்டுப் பெரியவருக்கு கோபம் வந்து விட்டது. வயலின்காரருக்கு வைத்த மைக்கை நகத்தி வைத்து விட்டார். கண் தெரியாத அந்த வயலின் வித்வான் பாவம், ‘என்ன இது, feedback-ஏ இல்லையே ‘, என்று பரிதாபமாகக் கேட்க ஆரம்பித்து விட்டார். அதற்கு அந்த ‘வயித்தில பல்லு ‘ வித்வான், ‘போறுண்டா, நீ வாசிச்சது. நீ மெயின் வித்வானா, நான் மெயின் வித்வானா ‘ என்று அதட்டினார். அவ்வளவுதான். அவர் பாவம், சர்க்கஸ் புலி மாதிரி சமத்தாயிட்டார்!

பக்க வாத்தியக்காரர்களுக்குள்ளும் போட்டா போட்டி பலமாக இருக்கும். சில மிருதங்க வித்வான்களுக்கு கஞ்சிரா, கடம் வாசிப்பவர்களைக் கண்டால் ஆகாது. அவர்களுக்கு தனி மைக் வைக்கக் கூடாது என்று சொன்னவர்களும் உண்டு. அது தவிர முன் கூட்டியே சவுண்டு சர்வீஸ் காரர்களைக் கவனித்து மெயின் பாடகர்களை விட தன் வாத்திய சத்தம் கூடக் கேட்கும்படியாக ஏற்பாடு செய்பவர்களும் உண்டு. ஒரு பெரிய கான சபையில் சமீபத்தில் நான் கேட்கப் போன கச்சேரி நடந்த இரெண்டரை மணிநேரம் முழுவதும் அந்த பிரபல மிருதங்க வித்வான் ஆடியோவுடன் மன்றாடிக் கொண்டிருந்தார். கச்சேரியின் நடுவே மிருதங்க ஒலி பாட்டையே அமுக்கி விட்டது. இந்த களேபரத்தில் ரசிகர்கள் காதில் விழுவது ஒரு cacophony தான்; சங்கீதமல்ல!

அநேகமாக எல்லாக் கச்சேரிகளிலுமே இத்தகைய ஆடியோ போராட்டத்தைப் பார்க்க முடிகிறது. நடு நடுவே மைக் செட் காரர் பக்கம் கை விரலை கீழிருந்து மேலாக ஆட்டி ஆட்டி ‘இன்னும் கொஞ்சம் வால்யூம் கூட்டு ‘ என்று ‘Oliver Twist asking for more ‘ என்பது போல் விடாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள்!

ஆனால் சில பழைய வித்வான்கள் தங்கள் சாரீரம் மேல் ஸ்தாயியில் செல்ல இடம் கொடுக்காததால் வயலின் காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நிஷாதத்துக்கு மேல் வில்லால் ஒரு அமுக்கு அமுக்கி அட்ஜஸ்ட் செய்ய வைப்பார்கள். அவர்களும் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் சரி என்று இதற்கெல்லாம் உடன் படும் நிலையில் உள்ளார்கள்.

புகழ் பெற்ற வித்வான்களை சுற்றி ஒரு வேப்பிலை கோஷ்டி எப்போதும் இருக்கும். ‘அண்ணா, பிச்சுட்டேள் போங்கோ. ஒரு கொம்பனும் உங்க கிட்ட நெருங்க முடியாது ‘ என்று சொல்லியே படுகுழியில் இறக்கி விடுவார்கள்.

இப்போதுகூட சில புகழ்பெற்ற வித்வான்கள் கச்சேரி ஆரம்பிக்கும் நேரத்தில் பேசிய ரேட்டை விட கூடப் போட்டுக் கொடுங்கள்; அப்ப தான் பாட வருவேன் என்று அடம் பிடிப்பதும் உண்டு என்று கூறுகிறார்கள். வெளியூர்களில் கச்சேரி ஏற்பாடு செய்பவர்களிடம் கூசாமல் பலவித அதிகப்படி தேவைகளை முன் வைத்து சங்கடத்துக்கு உள்ளாக்குவதும் உண்டு. காசி அல்வா இரண்டு கிலோ பொட்டலம் கட்டி எடுத்து வந்தவர்களைப் பற்றிக் கூட கேள்விப் பட்டிருக்கிறேன். மொத்தத்தில் இவர்களை ஏற்பாடு செய்பவர்கள் ரொம்ப tough-ஆக இருத்தல் அவசியம்!

இவ்வளவையும் தாண்டி ஒரு நல்ல சங்கீதத்தை ரசித்துக் கேட்டு விட்டு அந்த ரீங்காரம் நம் மனதில் மிதந்து கொண்டு வருவது ஒரு தெய்வீக அனுபவம்தான்!

ஆனால் எல்லா வித்வான்களும் அப்படியல்ல. மிகச் சிறந்த மனித நேயத்துடன் பழகும் நல்ல வித்வான்கள் பலர் உள்ளனர். பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கும் பெண் வித்வாம்சினிகள் பலர் நல்ல ஒழுக்கத்துடனும், வாக்கு சுத்தத்துடனும், அனாவசிய பந்தாவோ, கூழைக் கும்பிடோ இல்லாமல், தாங்கள் உண்டு, தங்கள் சங்கீதம் உண்டு என்று இருக்கிறார்கள்.

இவர்களால் தான் மழை பொழிகிறது – இசை மழையும் சேர்ந்துதான்!

—-

எஸ்.கே

http://kichu.cyberbrahma.com/

Series Navigation

எஸ்.கே

எஸ்.கே