சங்கச் சுரங்கம் – 13: கொங்கு தேர் வாழ்க்கை

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

சு. பசுபதி, கனடா


பாரீசுக்கு வேலை தொடர்பாகப் போய்த் திரும்பின விசு விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்குப் போகாமல், நேரே வாடகை வண்டியில் என் வீட்டிற்கு அவசரம் அவசரமாக வந்தான்.

“ சார், என் வீட்டை நெருங்கும் போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது. பாரீசிலிருந்து ‘ஸம்ஸாரா'(Samsara) என்ற பிரபலமான வாசனைத் திரவியம் (perfume) உள்ள ஒரு பெரிய புட்டியை மறக்காமல் வாங்கி வரச் சொல்லி இருந்தாள் என் சம்சாரம். அவள் சொன்னதை முற்றிலும் மறந்து விட்டேனே? என்ன செய்வது?” என்றான் விசு பயத்துடன். நான் சிறிது யோசித்தேன். அவனும், அவன் மனைவி கமலாவும் வட இந்தியாவில் ஒரு சிற்றூரில் பிறந்து, வளர்ந்த தமிழர்கள். அதிகமாகத் தமிழ்க் கதைகள் தெரியாது. இருவரும் அவ்வப்போது தமிழைப் பற்றிப் பேச, கற்றுக் கொள்ள மட்டும் என் வீட்டிற்கு வருவார்கள். ‘சட்’டென்று ஓர் எண்ணம் உதித்தது.

“பயப்படாதே! ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் சங்க காலக் கவிதையையும் , அதற்குத் தொடர்புள்ள ஒரு கதையையும் சொல்கிறேன். அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவது உன் சாமர்த்தியம்! பழங்காலத்தில் சண்டைக்கு உதவின ‘கதாயுதம்’ போல இந்தக் கதையைச் சாந்திக்கு உதவும் ஒரு ‘கதாயுதமாய்’ப் பயன்படுத்தலாம் என்பதென் கருத்து ! ” என்றேன்.

“சரி, சார்!” என்று சம்மதித்த விசு, ஆவலுடன் என்முன் அமர்ந்தான்.

அந்தக் கவிதையும், அதன் தொடர்புள்ள புராணக் கதையும் இதோ!

தமிழிலக்கியத்தில் இறையனார் என்ற கடைச் சங்கப் புலவரின் பெயர் மூன்று இடங்களில் தென்படுகிறது. குறுந்தொகையில் ‘கொங்குதேர்’ என்று தொடங்கும் கவிதையும், திருக்குறளின் பெருமையைப் பாடும் ‘ என்றும் புலராது’ என்ற பாயிரமும், அறுபது சூத்திரங்கள் கொண்ட அகப்பொருள் இலக்கணமாகிய இறையனாரகப் பொருளும் இவர் பெயரில் வழங்குகின்றன. இறையனார் என்றவுடனே நமக்குக் ‘கடவுளின் பெயர்’ என்று தானே உடனே நினைக்கத் தோன்றுகிறது? அக்காலத்திலும் அப்படி நினைத்தவர் இருந்திருக்கவேண்டும்.
( பேரெயின் முறுவலார் என்ற புலவரும் தெய்வப் பெயர் கொண்டவர் தான் !)
தமிழருக்குத் தமிழ் மொழியின் மேல் உள்ள அதிகமான பற்றுதல், பெருமை, பக்தி பற்றி நமக்குத் தெரியாதா, என்ன? அவ்வளவுதான்; இறையனார் என்ற புலவர் மதுரைச் சொக்கநாதராக ‘மாறினார்’ ; கவிதையைப் பற்றிப் பல கதைகள் உலாவத் தொடங்கின. ‘கொங்கு தேர்’ என்ற குறுந்தொகைக் கவிதை திருவிளையாடல் புராணத்திலும், மேலும் திருவாலவுடையார் புராணம், கடம்பவன புராணம், சீகாளத்திப் புராணம் போன்ற நூல்களிலும் நுழைந்தது. சிவனே அக் கவிதையைப் பாடித் தருமிக்குக் கொடுத்ததாகப் பிறந்த அந்தக் கதையைப் பிறகு பார்ப்போம். முதலில் கவிதையின் இலக்கிய, இலக்கணப் பின்புலத்தைப் பார்ப்போம்.

தலைவியும், தலைவனும் திருமணத்திற்கு முன் காதல் செய்வதைக் ‘களவொழுக்கம்’
என்பர். இருவரும் எதிர்பாராமல் சந்தித்து, காதல் ஏற்பட்டால், அதை ‘இயற்கைப் புணர்ச்சி ‘ என்பர். தொல்காப்பியர் இந்த நிலையில் உள்ள காதலன் என்னென்ன
செய்வான் என்றெல்லாம் பட்டியலிடுகிறார். ( அவற்றுள் ஒன்று: பொய் பாராட்டல்.. ஆம், காதலியிடம் பொய்யை மெய்போலச் சொல்வது!)
அவனுக்கு நிகழும் பல மெய்ப்பாடுகளுக்கு ( நிகழ்ச்சிகள்) இறையனாரின் இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக் காட்டு என்று நச்சினியார்க்கினியரே தன் தொல்காப்பிய உரையில் ஒரு சான்றிதழ் வழங்குகிறார் என்றால், நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன், இந்தப் பாடல் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்று!

தலைவன் தலைவியின் கூந்தலில் உள்ள நறுமணத்தைப் புகழ்கிறான்.

” பூக்களை நாடிப் பூந்தாதை ஆராய்ந்து உண்டு வாழும், அழகிய சிறகுகள் உடைய வண்டே! நீ என் நிலத்து வண்டு என்பதற்காக நான் விரும்பின பதிலைச் சொல்லாமல் நீ கண்டு அறிந்ததைக் கூறு! பலவகை மலர்களிலும் தேனுண்ட அனுபவம் உனக்கு நிறைய உண்டு. உண்மையாகச் சொல்; என்னுடன் பலமுறை பழகினதால் மிக நட்புடன் இருக்கும் இவள் — மயில் போன்ற சாயல் உடையவள் — நெருங்கிய பல்வரிசை அழகுடையவள் — இவளுடைய கூந்தலைப் போல் மணம் வீசும் மலர்கள் உண்டோ?”

” கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?” (குறுந்தொகை — 2)

[ கொங்கு – பூந்தாது, தேன் : தேர்தல் – ஆராய்தல், அஞ்சிறை – உள்ளிடத்தே உள்ள சிறகு ( அகம் + சிறை = அஞ்சிறை என்கிறது நன்னூல் ), அழகான சிறகு : பயிலியது கெழீஇய – ஏழு பிறவிகளிலும் என்னோடு பழகியதால் பொருந்திய : செறி எயிறு – நெருங்கிய பற்கள்: நறியவும் உளவோ – நறுமணமுடைய பூக்களும் உள்ளனவோ? ]

“சரி, சார், அந்தப் புராணக் கதையை நினைவுறுத்துங்கள். இன்னும் இந்தப் பாடலுக்கும் என் இக்கட்டிற்கும் உள்ள தொடர்பு எனக்குப் புரியவில்லை” என்றான் விசு.

” சொல்கிறேன், கேள். கூந்தலை ஆற்றிக் கொண்டிருந்த தன் மனைவியிடமிருந்து வந்த நறுமணத்தை நுகர்ந்து வியக்கிறான் ஒரு பாண்டிய மன்னன். தான் நுகர்ந்த அந்த நறுமணத்தைப் பற்றி நல்ல கவிதை எழுதுபவருக்குப் பொற்கிழி அளிப்பதாக அறிவிக்கிறான். மதுரைக் கோயிலில் பூசை செய்யும் தருமியின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிவன் இந்தக் கவிதையை அவனுக்குக் கொடுக்கிறார். ‘கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது ; அதனால் கவிதையில் பொருள் குற்றம் உண்டு’ என்று வாதிட்டு நக்கீரர் தருமியைத் திருப்பி அனுப்பி விடுகிறார். சிவபெருமானே புலவர் வடிவில் வந்து வாதிடுகிறார். பார்வதி உட்பட எவருடைய கூந்தலுக்கும் இயற்கை மணம் கிடையாது என்று நக்கீரர் சொல்ல, நெற்றிக் கண்ணைச் சிவன் காட்ட, ‘ நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே’ என்று நக்கீரர் சொல்கிறார். நெற்றிக்கண்ணின் நெருப்பால் தொழுநோய் வருகிறது நக்கீரருக்கு. கடைசியில் காளத்தியில் ‘ஞானப் பூங்கோதை’ என்று பெயர் கொண்ட அம்பிகையைத் தரிசித்து, சிவனையும் வணங்கி, ஆற்றில் நீராடிப் புலமைச் செருக்கு அகன்று தன் பழைய உரு பெறுகிறார் நக்கீரர். ”

” உண்மையோ, பொய்யோ, நல்ல கதை தான்! ஆமாம், இந்தக் கதையை நான் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே? ” என்றான் விசு.

“ ஆம், இது மிகவும் பிரபலமான கதை தான். திரைப்படத்தில் கூட வந்திருக்கிறது. இந்தக் கவிதையைப் பற்றிக் கி.வா.ஜகந்நாதன், அ.சீனிவாச ராகவன் போன்ற பல அறிஞர்கள் கட்டுரைகளை எழுதி உள்ளனர். மு.வரதராசனார் ஒரு சொற்பொழிவு நூலே எழுதி உள்ளார். ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்பதைப் புலமையை ஆராயும் திறனாய்விற்கு ஒப்பிட்டு, நடுநிலைமையுடன் ‘காமம் செப்பாது, கண்டது மொழியும்’ திறன் வேண்டும்” என்றெல்லாம் மு.வ சுட்டியிருக்கிறார். நக்கீரர் பாடலில் பொருள் குற்றம் உண்டா? இல்லையா? என்பதைப் பற்றிப் பட்டி மன்றம் கூடச் சிலர் நடத்தி இருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால், நான் முன்பே சொன்னது போல் இந்தப் பாடலில் எந்தக் குற்றமும் இல்லை! மிக அழகான பாடல் இது. இது போலவே கூந்தலுக்கு உள்ள மணத்தைப் பற்றிப் பல புலவர்கள் பாடி உள்ளனர். குறுந்தொகையிலேயே மற்ற சில பாடல்களில் ‘ நறுமென் கூந்தல் ‘ ‘ நாறிருங் கூந்தல்’ ‘ நறுங் கதுப்பு’ என்றெல்லாம் வருகின்றன. இப்பாடலின் கருத்தைப் பிரதிபலிக்கும் நம்மாழ்வாரின் ஒரு திருவிருத்தம் கூட இருக்கிறது !

வண்டுக ளோ!வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில்ஒண்பூ
உண்டு களித்துழல் வீர்க்கொன்று உரைக்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலர்உள வோநும் வியலிடத்தே ? ( திருவிருத்தம், 55 )

“ அப்படியானால், இறையனார் ஒரு ‘வெறும்’ புலவர்தான் என்கிறீரா? “
என்றான் விசு.

“ இதோ பார். அவர் ‘வெறும்’ புலவரல்லர். ‘பெரும்’ புலவர்! பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை சொன்னதைக் கூறுகிறேன். “ இதனை இயற்றியவர் இறையனார். சிறந்த ஒரு தமிழ்ப் புலவர். இப்பெயருடையார் ஒருவர் இறையனார் களவியல் என்னும் அகப்பொருள் நூலை இயற்றியுள்ளார் என்பது நாம் அறிந்து, மகிழத்தக்க ஒரு செய்தியாகும். இவ்வாறு கொள்ளுதலால், நமது தெய்வபக்திக்கு யாதொரு இழுக்குமில்லை “. ( நன்றி: முனைவர் கா.காளிமுத்து, ‘கலைமகள்’ ,
2003 தீபாவளி மலர்.) நக்கீரர் கதையால் ‘நக்கீரக் கண்’ ‘நக்கீரப் பார்வை’ என்றெல்லாம் சொல்லிக் கொள்ளத் தமிழர்க்கு ஒரு மரபு கிடைத்திருக்கிறதே?
பாடலையும் ரசிப்போம்; கதையையும் ரசிப்போமே? மேலும், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் உள்ள உன்னைப் போன்றவர்க்கு இந்தக் கதை உதவினால் அது போதாதா? “ என்றேன்.

“ சரி, எனக்கு நேரமாகிறது. இந்தக் கதையைச் சொல்லி எப்படிக் கமலாவைச் சமாளிப்பது என்று ஒரு மாதிரியாக எனக்குப் புரிகிறது! நான் வருகிறேன்” என்று புறப்பட்டுப் போனான் விசு.

பின் குறிப்பு: வீட்டிற்குச் சென்ற விசு நக்கீரர் கதையைச் சொல்லி, ‘ என் அன்பே! என் வாழ்க்கையின் நறுமணமே! என் உண்மையான ‘ஸம்சாரமே’! நீயே ஒரு ஞானப் பூங்கோதை அன்றோ? உன்னிடம் ஞானம் என்ற மெய்யான மணம் நிறைய அளவு இயற்கையிலேயே இருப்பதால் ஸம்ஸாரா என்ற செயற்கையான , பொய்யான நறுமணம் வாங்கி வரவில்லை. நீயும் இனிமேல் இப்படிப்பட்ட செயற்கை மணங்களை விரும்பாமல் இருப்பாயாக ! அதுவும், மிகவும் விலையுயர்ந்த பிரெஞ்சுச் சரக்காய் இருந்தால் இன்னும் நிச்சயமாக! ” என்று தன் மனைவியிடம் நாடகப் பாங்கில் சொல்ல, அதன் விளைவாகக் கடந்த ஒரு மாதமாக ஓர் உணவகத்திலேயே அவன் சாப்பிட்டு வருவதாகத் தெரிகிறது. ஐயோ, பாவம்! விசுவை வீட்டிற்குப் போகும் வழியில் ஒரு நல்ல கடைக்குச் சென்று, ஒரு வாசனைக் குப்பியை வாங்கிப் போகச் சொல்லியிருக்க வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது! என்ன செய்வது, எனக்கு இரு மாணவர்கள் ‘மைனஸ்’ !

~*~o0O0o~*~
s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா