சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம்

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

சின்னக்கருப்பன்


கடவுளை மறுத்தவன்

நாள்தோறும் கூறீனானே நாத்திகம்

பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே

பூத்ததென்ன ஆத்திகம்

திருமகன் வருகிறான் திருநீறை

நெற்றி மீது தினம் பூசி

அதிசயம் அதிசயம்

பெரியார்தாந் ஆனதென்ன ராஜாஜி

தனதன்புத் தாயை

கைதொழும் பாபா தான்

சிந்தையில் என்னாளும்

சின்னஞ்சிறு பாப்பாதான்

***

மேற்கண்ட வரிகளைப் படித்துப்பாருங்கள். கவிஞர் வாலி என்ன சொல்கிறார் ? ஒருவர் (அதாவது பாபா), இதுவரை பகுத்தறிவாளராக இருந்துவிட்டு, இப்போது ஆத்திகராக மாறி திருநீற்றைப் பூசிக்கொண்டு வருகிறான். பெரியார் போல இருந்தவர் இன்று ராஜாஜி போல ஆகிவிட்டார் என்று கவிஞர் வாலி எழுதுகிறார். அடிப்படைத் தமிழ், உவமை உவமானம் என்றால் என்னவென்று தெரிந்தவர்கள், இதில், பெரியார் தன்னுடைய நாத்திகத்தை இழந்து ராஜாஜி போன்ற ஆத்திகராக ஆனார் என்று கூறுவதை கண்டுபிடிக்க முடியும் ? பூ ஆனதென்ன புயல் என்று எழுதினால், பூ போன்று இருந்தவன் புயல் போன்றவனாக மாறிவிட்டான் என்றுதானே பொருளாகும் ? ஒரு நாத்திகன் ஆத்திகன் ஆவதும், ஒரு ஆத்திகன் நாத்திகன் ஆவதும் அவரவர் மனப் பக்குவமும் எதிர்கொள்ளும் பிற கருத்துகளையும், அதற்கு அறிவுபூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் அவன் செய்யும் எதிர்வினைகளையும் பொறுத்தவிஷயம். ஒரு தனிமனிதனின் மனமாற்றத்திற்கு உவமை வடிவில் தான் இந்த வாசகங்கள் வருகின்றன என்பது எல்லோரும் எளிதாய்ப் புரிந்துகொள்ளும் விஷயம்.

இந்த இடத்தில் பெரியார் என்பது அடையாளம். தொடர்ந்த பொதுவாழ்க்கைக்குப் பின்னர் காந்தி என்பது அகிம்சையின் அடையாளமாகவும், பெரியார் என்பது நாத்திகத்தின் அடையாளமாகவும் ஆவது எல்லோருக்கும் தெரிந்ததுதானே ? ‘நான் புத்தன் அல்ல ‘ என்று கோவி மணிசேகரன் ஒரு கதை எழுதிய நினைவு. பெளத்தர்கள் யாரும் புத்தர் பெயரை அவமதித்து விட்டாய் என்று சண்டைக்கு வரவில்லை. நான் காந்தி அல்ல என்று ஒருவர் கூறினால் என்ன பொருள் ? சுப்பிரமணி என்ற பெயர் கொண்ட என் நண்பனை நான், ‘ அவனா அவன் காந்திடா ‘ என்று கூறினால் என்ன பொருள் ? அவன் காந்தி போன்ற அகிம்சைவாதி என்றுதானே பொருள் ? பதிலுக்கு ‘இல்லையே அவன் பெயர் சுப்பிரமணிதானே ‘ என்று சொன்னால், அது ஆனந்த விகடன் நகைச்சுவை துணுக்கு.

ஆனந்த விகடனில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு வீரமணி அவர்களது அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், ‘ பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி என்ற வரிகள் தந்தை பெரியாரை கொச்சைப் படுத்தக்கூடியதாகும். தந்தை பெரியாரும் ராஜாஜியும் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. நிஜமாந்தர்கள். … உண்மைக்கு மாறாக, பெரியார் என்ற நாத்திகர் ராஜாஜி என்ற ஆத்திகராகி விட்டார் என்று எழுதிய பாடல் படத்தில் இடம் பெறுவது உண்மைக்கு மாறானது. தந்தை பெரியாரின் புகழுக்கு குந்தகத்தை ஏற்படுத்தக்கூடியது. தவறான தகவலை மக்களுக்குத் தரக்கூடியது. கொச்சைப்படுத்தக் கூடியது. உடனே அந்த வரிகள் நீக்கப்படவேண்டும் ‘ என்று இருக்கிறது.

பெரியார் என்ற நாத்திகர் ராஜாஜி என்ற ஆத்திகராகி விட்டார் என்று எங்கே இருக்கிறது கவிதையில். கவிதை என்றாலே என்னவென்று தெரியாதவர்கள்கூட அப்படி ஒரு விஷயத்தை மேற்கண்ட கவிதையில் எப்படி பார்க்க முடியும் ? ஏதேனும் கம்ப்யூட்டர் அனிமேஷன் போல, இறப்பதற்கு முன்னர் பெரியார் தாடியெல்லாம் கரைந்து ராஜாஜி ஆகி விட்டார். அப்படி பெரியார் ராஜாஜி ஆவதற்கு முன்னால் ராஜாஜி என்ற ஒருவர் இல்லை, அல்லது ராஜாஜி ஆனதன் பின்னால் பெரியார் இல்லாமல் போய்விட்டார்..இப்படி மக்கள் புரிந்து கொண்டுவிடுவார்களா என்ன ? என்ன உளறுகிறார்கள் ?

திராவிடர் கழகம் இதனை எதிர்த்து போராட்டமும் வழக்கும் தொடரப்போவதாக மிரட்டியதும், ரஜினிகாந்த் பெரியாரை அவமதிக்கும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை என அந்த வரிகளை நீக்க முடிவு செய்துவிட்டார்.

நீக்கியிருக்கக்கூடாது. நாஸ்திகர்களின் மனம் புண்படும் (அல்லது பெரியார் சீடர்களின் மனம் புண்படும்) என்று திராவிடர் கழகம் போட்டக் கூச்சல்தான் உலக மகா நகைச்சுவை. அதனை ஆதரிக்கும் மனிதர்கள்தாம் மிகவும் ஆச்சரியமானவர்கள்.

இந்துக்களின் மனம் புண்படும் என்று எதனையாவது பேசாமல் இருந்திருக்கிறார்களா திராவிட கழகத்தினர் ? கிரிஸ்தவர்களின் மனம் புண்படும் என்று எதனையாவது பேசாமல் இருந்திருக்கிறார்களா திராவிட கழகத்தினர் ? அப்படி இருக்கும் போது, நாஸ்திகர்களின் மனம் புண்படும் என ஏன் ஆஸ்திகர்கள் விட்டுக்கொடுத்துவிட்டுப் போகவேண்டும் ? அப்படி விட்டுக்கொடுக்கவேண்டும் என எப்படி திராவிட கழகத்தினர் கோரலாம் ?

சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்று சொல்கிறாயே, அவள் மலஜலம் கழிப்பது உன் வாயிலா என்று கேட்டு சுவரெங்கும் (அனுமதியின்றி) எழுதிக்கொண்டிருப்பவர்கள், கோடானு கோடி மக்கள் கும்பிடும் சரஸ்வதியை கொச்சைப் படுத்துகிறோம் என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்களா ? சரஸ்வதியின் புகழுக்கு குந்தகம் ஏற்படுத்துகிறோம் என்று எழுதுவதை நிறுத்தினார்களா ? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கொவில் ஆண்டி என்பது போல செய்துகொண்டேதானே இருந்தார்கள் ?

மனம் புண்படும் என்பதெல்லாம் பம்மாத்து. நான் உன்னை என்னவேண்டுமென்றாலும் விமர்சிப்பேன், கேவலப்படுத்துவேன், ஆனால், என்னை விமர்சிக்காதே, என்னை பற்றிப் பேசாதே என்று சொல்லும் அடாவடித்தனம்.

இந்துமத பெண் தெய்வங்களின் பெயர் கொண்டவர்கள் ஒருபால் உறவு கொள்வதாக படம் எடுக்காதீர்கள் என பாஜகவினர் போராட்டம் செய்வதற்கும், பெரியார் பெயரை உன் கவிதையில் பயன்படுத்தாதே எனச் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் ? இவர்கள் அவர்களை சகிப்புத்தன்மையில்லாதவர்கள் எனச் சொல்வது சட்டி கருப்பாக இருக்கிறது எனச் சொல்லும் தோசைக்கல் கதை அல்லவா ?

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்