கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

கிருஷ்ண குமார்


நாம் அறிவியல் பாடத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன என்று படித்திருக்கிறோம். அது இப்போது சர்ச்சைக்கிடையில் பத்தாகிவிட்டது என்று கேள்வி. மேலும் சில அண்டப் பொருட்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும்போது மெர்க்குரி, வீனஸ், மார்ஸ், எர்த், ஜுபிடர், சாட்டர்ன், யுரேனஸ், நெப்ட்யூன், ப்ளூடோ என்று வரிசையாகப் பெயர்கள் வரும். இப்பெயர்கள் பெரும்பாலும் ரோம/கிரேக்கப் புராணங்களின் பெயர்களிலிருந்து வந்தது. இதில் ரோமர்களின் காலத்தில் தோற்றத்தை வைத்து, நடத்தையை வைத்து வைக்கப்பட்டப் பெயர்கள் வீனஸ், மார்ஸ் போன்றவை. வீனஸ் அழகு தேவதையின் பெயரைக் குறிக்கும். மார்ஸ் போர்க்க் கடவுளின் பெயராகும்.

‘எர்த் ‘ என்ற சொல் பழைய ஆங்கிலம் அல்லது ஜெர்மானிக் மொழியிலிருந்து பிறந்தது. பிற்காலத்தில் ஐரோப்பாவில் அனைத்து விஞ்ஞானப் பத்திரிக்கைகளில் ரோமானியக் கலை, வாழ்வின் தாக்கத்தினால் ரோமானியப் பெயர்களே வழங்கலாயின. பிரிட்டன், அமெரிக்காவிலும் அங்ஙனமே.

பின் யுரேனஸ், நெப்ட்யூன் கண்டுபிடிக்கப்பட்டபின் பல்வேறு பெயர்களை வைத்துப் பிறகு மாற்றுவதாக இருந்தது. யுரேனஸைக் கண்டுபிடித்த வில்லியம் ஹெர்ஷல், தனது மன்னனான மூன்றாம் ஜார்ஜின் பெயரை வைத்து ‘ஜார்ஜியம் சைடஸ் ‘ என்று வைத்தான். சில விண்வெளி விஞ்ஞானிகள் ‘ஹெர்ஷல் ‘ என்றே பெயர் சூட்டினர். ஆனால் மற்றொரு விஞ்ஞானி ‘யுரேனஸ் ‘ என்று புராணப் பெயரையே வைத்தான். பிறகு 1850 ல் தான் ஒருவழியாக ‘யுரேனஸ் ‘ என்ற பெயர் நிலைத்து நின்றது.

பிறகு நெப்ட்யூன் ஜான் கெளச் ஆடம்ஸ், மற்றும் உர்பெயின் ஜீன் ஜோசப் லெவெரியர் ஆகிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. லெவரியருக்கு அதை தம் பெயரில் வைக்க ஆசை. ஆனால் மற்ற அறிஞர்கள் ஒப்பவில்லை. ஒருவாறு ‘நெப்ட்யூன் ‘ என்றப் பெயருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

1930- ப்ளூடோ கண்டுபிடிக்கப்பட்டது. லாவல் கண்காணிப்பு நிலையத்தில் பணியாற்றிய க்ளைட் டாம்பாக் கண்டற்ந்து ‘லாவல் ‘ என்று அதற்குப் பெயர் சூட்டினார். அனைத்து மக்களும் ஆளுக்கு ஒரு பெயர் சூட்ட ஆரம்பித்தனர். நியூயார்க் டைம்ஸ் அதை ‘மினர்வா ‘ என்று அழைத்தது. இங்கிலாந்த்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தைச் சேர்ந்த பர்னி என்ற 11 வயது சிறுவன் ‘ப்ளூடோ ‘ என்று அழைத்தான். பாதாளக் கடவுளான ப்ளூடோவின் பெயர் வெகு தொலைவில் அதரப் பாதாளத்தில் இருக்கும் ப்ளூடோவிற்கு அது பொருந்தியது.

இது நடக்கும் போது நமது நாடு வெள்ளைக் காரனுடன் சண்டை போடுவதில் இருந்தது. நமக்குப் பிடித்த பெயர்களை வைக்க நாம் வாதாட போகவில்லை போலும். வாதாடும் குணம் நமக்கில்லை. நாம் நவக் கிரகங்கள் என்று கோவில் கட்ட ஆரம்பித்து விட்டோம். தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் இணையதளத்தில் நவக்கிரகச் சுற்றுலா ஒன்றைப் பார்த்தேன். அதில் பூமி இடம் பெறவில்லை. சூரியன், சந்திரன் போன்றவை நவக்கிரகங்களாகப் பாவிக்கப் பட்டிருந்தன. ராகு, கேது முதலியன யுரேனஸ், நெப்ட்யூனாக இருகுமோ என்று கொஞ்சம் நப்பாசை தான். அடுத்த தடவை கோவிலில் சுற்றும் போது சூரியன்/சந்திரன் கிரகங்கள் இல்லை என்று ஞாபகம் இருக்கட்டும். தமிழர்களின் நம்பிக்கை பெற்ற வழிபாடு அவர்களை வேறு திசைக்கு அழைத்துச் செல்வதை உணர முடிகிறது. ஆனால் அதே தமிழகத்தில் காவலூரில் இருக்கும் நவீன தொலைநோக்கி மயம், அறிவியலார் நம்மிடேயும் இருப்பதை உணர வைக்கின்றது. காவிக்குக் கொடுக்கும் மரியாதையில் நூறில் ஒரு பங்கு காவலூர் அறிஞர்களுக்குச் செலுத்துதல் வேண்டும்.

இப்போது நீங்கள் ஒரு புதுக் கோளைக் கண்டுபிடித்து அதை ‘நான் ‘ என்று நாமகரணம் சூட்டினாலும், IAU ( இன்டெர்நேஷனல் அஸ்ட்ரானாமிக்கல் யூனியனில் ) சொல்லி ஏற்க வைக்க வேண்டும்.

இப்போதைக்கு IAU புது வால்மீன்கள், அண்டக் கோளங்கள், போன்றவற்றிற்கு நாமங்களைச் சூட்டுவதில் முனைந்திருக்கின்றது. அந்தப் பெயர்கள் தான் ஆங்கிலத்தில் மற்றும் அனைத்து விஞ்ஞானப் பத்திரிக்கைகளிலும் வரும்.

http://www.seds.org/billa/tnp/days.html என்ற இணைய தளத்தில் மற்ற அனைத்து மொழிகளிலும் உள்ள கோள்களின் பெயர்கள் பதிவு கொள்ளப் பட்டுள்ளன. தமிழ் அதில் இல்லை. ஆனால் குஜராத்தி உள்ளது. சமஸ்கிருதம் உள்ளது. தமிழுக்கு நான் அனுப்பி இருக்கின்றேன். பார்ப்போம்.

http://planetarynames.wr.usgs.gov/jsp/append4.jsp என்ற இணைய தளத்தில் பெயர்களைப் பற்றிய ஆராய்சிக்கு உதவிய பல்வேறு நாடுகளின் புத்தகங்களின் பட்டியல் உள்ளது.

தம்பி ! நீ கண்டுபிடிக்கும் அந்த அண்டை பால்வீதியின் கோளுக்கு உன் தங்கையின் பெயரான ‘மலர் ‘ என்பதைச் சூட்டுவாயா ?.

Reference

1. http://curious.astro.cornell.edu/question.php ?number=372 downloaded from the web on Feb 8, 2005

2. Tamilnadu Toruism Development Corporation Information on Navagraha tours

http://www.tamilnadutourism.org/fpack.htm downloaded from the www on Feb 8, 2005

—-

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation

கிருஷ்ணகுமார்

கிருஷ்ணகுமார்