கோடி கோடி ஆண்டுகளில்…

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


தாவரங்கள்
வேர்களை நினைத்து
வெட்கப்பட்டன.

துள்ளி எழும் துளிர்களின்
மறுபக்கம்
விலங்கிட்டுக்கொண்ட
வேதனையில் தாவரங்கள்.

தாவரங்கள் தம்மை தாமே
ஆணி வேரால் அறைந்துக் கொண்டதற்கு
ஆத்திரப்பட்டன.

அதை
அடிமைத்தனமாய் நினைத்தன.

சின்னக்காம்பில் சிரிக்கும் பூக்கள்
சிந்திக்கத் துவங்கின.

கால்களால் நிற்க
கனவு கண்டன.

வேர்களை
வெளியில் தெரியும்
விரலாக்கிக் கொள்ள
விருப்பப் பட்டன.

கம்பியில் நடப்பவனின்
கையிருக்கும் கோல் போல
கிளையொன்று கரமென்று
சுழன்றது.

தன் சுமையே
தன்னை நிற்க வைக்க
அதை
காற்று அசைத்து
கால் தடுமாற வைத்தது.

தடுமாற்றத்தில்
தன்னை நிறுத்தி
தான்
விழாத சந்தோசத்தில்
விண்ணைப் பார்த்தது.

அசைந்ததில்
திரும்பி
திசைகளைப் பார்த்தது.

அப்புறமும் தடுமாறி
அடியெடுத்து வைப்பதை
அப்போது அறிந்தது.

நடையின் இரகசியம்
இடை இடையே புரிந்தது.
இடையின் அவசியம்
இடை இடையே புரிந்தது.

ஒற்றைக்கால் தவம்துறந்து
இரண்டுகால்
எடுத்துவைத்து நடந்தது.

கால்களை மடக்கி நடக்கையில்
கல்லொன்று இடறினால்…

விழுந்தபின்
ஊன்றி எழ..

அடிப்பட்ட இடங்களை
அன்பொடு தடவிவிட…

பயணங்களுக்கு
பாதைகள் போட…

தெரியாதவைகளுக்கு
திசைகள் காட்ட…

கைகள்… கைகள்.
கைகள் வேண்டுமென

கிளைகளை கைகளாய்
துளிர்களை கைவிரல்களாய்
துணையாக்கிக் கொண்டது.

காலத்தை வெல்லும் கனவோடு
நடை மறந்தோட செய்தது.

ஓடிக்கொண்டிருந்த மரம்
ஒரு நிமிடம் நின்றது.

தான்
அடையமுயன்றதை
அடைந்து நின்றது யார் ?

தான்
சொல்ல நினைத்ததை
சொல்லி விட்டது யார் ?

அதோ
அவன்தான்.

தலைநிமர்ந்து
தன்னோடு நடந்த துணையிடம்…

“அதோ
அவன்தான்”
என்றது.

அப்போது அவன்
அந்த இடத்தைவிட்டு
பறந்தான்.

—-
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி