கோகெய்ன்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ராம்ப்ரசாத்


‘இது துரோகம் இல்லையா, செல்வா?’

‘எது துரோகம் ராஜி? அந்த வழுக்கை மண்டையன் எனக்கு பண்ணினது தான் துரோகம். என் அப்பா கொத்து வேலைக்கு சவுதி வந்தப்போ இந்தாளுகிட்ட வாங்கின 500 தினார் கடனுக்கு இந்தாளு ஆறே மாசத்துல 5000 தினார் கடன்னு கடனுக்கு வட்டி போட்டு, அதுக்கு ஈடா என்ன பெரியாளாக்குறேன்னு சொல்லி சின்ன வயசுலயே இங்க கொண்டாந்துட்டான். அன்னைலேர்ந்து இந்தாளோட கஞ்சா, அபின் , கோகெய்ன்னு எல்லா கடத்தல்லயும் என்ன வேல வாங்குறான் சம்பளமே இல்லாம‌. லீவ் கிடையாது. சாப்பாடு கூட ரெண்டு வேல தான். இருபத்தியஞ்சு வருஷம் போச்சு. எனக்குனு எதுவுமே இல்ல. ஊர்ல அப்பா செத்ததுக்கு கூட இவன் என்ன விடல. என்னோட இந்த எல்லா இழப்புக்கும் ஒரே செட்டில்மென்ட். அவனோட இந்த சரக்க நான் ஆட்டைய போட்டு இந்தியா போகப் போறேன். அதுல கிடைக்கிற பணத்துல அப்டியே எங்கனா செட்டில் ஆகப் போறேன்’.

‘இவன் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டான்னா?’.

‘இது கடத்தல் சரக்குடா. போலீஸுக்கு போனா அவனுக்கு தான் டேஞ்சர். அதனால போக மாட்டான்.’

‘ம்ம்… சரி ஆனா ஏர்போர்ட்ல இம்மிக்ரேஷன் அது இதுன்னு செக் பண்ணுவானே. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி அபின் கடத்தினப்போ, நியூஸ் லீக் ஆயி மஜீத் மாட்டினானே. அப்படி ஏதாச்சும் ஆயிட்டா?’.

‘சரக்க எடுத்துக்கிட்டு துபாய் ஏர்போர்ட் வரைக்கும் வந்தாச்சு. இந்நேரம் நான் சரக்கோட எஸ் அயிட்டத கண்டுபுடிச்சிருப்பான். இனிமே திரும்பி போக முடியாதுடா’.

‘ம்ம்.. சரி அப்டி என்ன சரக்குதான் வச்சிருக்க இப்ப?’.

செல்வா ஒரு துண்டு சீட்டை எடுத்து நீட்டினான். ஒரு ஏ4 சைஸ் பேப்பரில் கைவாகாய் சின்னதாய் கிழித்தது போலிருந்த பேப்பரில் ‘subject code: 33’ என்று எழுதியிருந்தது.

கடத்தப்பட இருக்கும் பொருளின் சங்கேத வார்த்தை. கடத்தலில் இயங்கும் ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென சங்கேத மொழி வைத்திருப்பார்கள். 33 என்பது இவர்களைப் பொருத்தவரை, CC என்பதாக விரியும். cocaine என்பதின் சுருக்கம் அது.

‘கோகெய்னா, அய்யயோ, ரிஸ்க் ஜாஸ்தியாச்சேடா’. கிசுகிசுப்பான குரலில் கத்தியே விட்டான் ராஜி.

‘ம்ம்..’ என்று ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தவன், ராஜியின் பயத்தை அனுமானித்தவனாய் ‘சரி நான் தனியா போறேன் சரக்கோட. நீ தனியா போய்க்க’ என்றபடி வலதுகையிலிருந்த சூட்கேசை இடது கைக்கு மாற்றிவிட்டு, பாண்ட் பாக்கேட்டிலிருந்து பாஸ்போர்ட், விசா மற்றும் இடிக்கட்களை எடுத்துக்கொண்டு செக்கின்னை நோக்கி நடக்க ஆரம்பித்தான் செல்வா. தன் பதிலுக்கு காத்திராமல் செல்வா நடப்பதை உணர்ந்தவன் அதை முகத்தில் காட்டாதவனாய் சற்றே இடைவெளி விட்டு செல்வாவை தொடர்ந்தான் ராஜி.

செல்வாவின் பேக்கேஜை எக்ஸ்ரே கருவி சோதனைக்கு உட்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வகை கருவிகள் துப்பாக்கி, வெடிபொருட்கள் முதலானவைகளை கண்டுபிடிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ்ரே மிஷின் அமைதியாகவே அவனின் பேக்கேஜை விழுங்கி புறம்தள்ளியது. மாஸ்டர் பேக்கேஜ் செக்கின் முடிந்து செல்வாவிடம் போர்டிங் பாஸ் தரப்பட்டதும் தான் ராஜிக்கு மூச்சு வந்தது. நல்லவேளை இதுவரை எதுவும் ஆகவில்லை. இப்படியே சென்னை மீனம்பாக்கம் ஏர்போட்டிலும் க்ளியர் ஆகிவிட்டால் நன்றாக‌ இருக்கலாமென்று தோன்றியது. இரண்டு வெள்ளைக்கார பெண்மணிகளுக்கு பின்னர் ராஜியும் செக்கின் செய்துவிட்டு போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டான்.

சற்றே இடைவெளி விட்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் விமானம் ஏறினர் இருவரும். விமானம் கிளம்பும் வரை திக்திக்கென்றது ராஜிக்கு. செக்கின் செய்யப்பட்ட பேக்கேஜ்களை விமானத்தில் ஏற்றுவதற்கு முன் ஃபிக்ஸட் சைட் சிஸ்டம்ஸ் என்கிற ஒரு பெரிய இயந்திரத்தில் வைத்து சோதிப்பார்கள். இது ஒரு விமானத்தில் பயணம் செய்யும் அனைவரது பேக்கேஜ்களையும் ஒரே நேரத்தில் சோதிக்க உதவும் எக்ஸ்‍ரே கருவி. இக்கருவி கொண்டு வெடி பொருட்கள், துப்பாக்கிகள் முதலானவற்றை கண்டுபிடிக்க இயலும். இது தவிர கெமிக்கல்களை கண்டுபிடிக்க கே9 யூனிட் வைத்திருப்பார்கள். கே9 யூனிட் என்பது மோப்ப நாய்களைக் குறிக்கும்.

கோகெய்ன், அபின், கஞ்சா முதலானவைகளை மோப்பம் பிடித்து பழக்கப்பட்ட நாய்களைக் கொண்டு எந்த பேக்கேஜ்ஜிலாவது அப்படிப்பட்ட பொருட்கள் இருக்கிறதா என்று தேடுவார்கள். இது போன்ற மோப்ப நாய்கள் மிகவும் துள்ளியமாய் கண்டுபிடிக்கும் திறனுள்ளவை.

ஃப்ளைட் கதவுகளை மூடும்வரை ராஜிக்கு ஒரே பதட்டமாக இருந்தது. ஃப்ளைட் கதவுகள் மூடப்பட்டு, ரன்வேயில் வண்டி ஓடத்துவங்கிவிட்ட பிறகே அவனுக்கு நிம்மதியாக‌ இருந்தது. பாதிக் கிணறு தாண்டியாகிவிட்டது. மீதிக்கிணறு சென்னை விமான நிலையம். ஆனால், சரக்கை எப்படி கே9 நாய்கள் கண்டுபிடிக்காமல் விட்டன? ஒரு வேளை, சரக்கு கடத்தப்படுவதாக செய்தி போலீசுக்கோ, இன்டர்போலுக்கோ இது நேரம் வரை கசியாமல் இருந்திருக்கலாமென்று தோன்றியது. அப்படித்தான் இருக்க வேண்டும். சவுதி மோப்ப நாய்கள் மிகத் துள்ளியமானவை. அவைகளிடமிருந்து தப்புவது முடியாத ஒன்று.

எப்படியோ, விமானம் சற்று நேரத்தில் அரபிக் கடல் மீது பறக்கத்தொடங்கியிருந்தது. மீதிக்கிணறும் இதே போல் தாண்டிவிட்டால் சந்தோஷம் தான் என்று நினைத்துக்கொண்டான் ராஜி.

ஆறுமணி நேரம் பல யுகங்கள் போலக் கடந்துகொண்டிருந்தது. ராஜி அவ்வப்போது எக்கிஎக்கி மூன்று வரிசை முன்னால் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் செல்வாவை நோட்டம் விட்டான். செல்வா ஏதோ உல்லாசப்பயணம் செய்யும் பிரயாணி போல் சற்றும் பதட்டப்படாமல், எதிர் சீட்டின் பின் பக்கத்தில் அமைந்த சின்ன டிவியில் டினோசார்களைப் பற்றிய டாகுமென்டரி பார்த்துக்கொண்டிருந்தான்.

அடப்பாவி, இத்தனை களேபரத்திலும் எப்படி இவனால் சாதாரணமாக இருக்க முடிகிறது. இத்தனைக்கும் ராஜியோ, செல்வாவோ இதற்கு முன் இப்படி கடத்தியதில்லை. கடத்தல்களில் இவர்களுக்கு வேலை இல்லை. இவர்களின் வேலை கடத்தப்பட போகும் சரக்கை தரம் பிரிப்பது, எங்கிருந்து வந்தது, எங்கு போகிறதென்று தகவல் சேகரிப்பது , பாஸின் சொந்த அலுவல்களைப் பார்ப்பது, ஊருக்கு ஊர் இருக்கும் பாஸின் வப்பாட்டிகளுக்கு மாதம் தவறாமல் பணம் அனுப்புவது போன்ற வேலைகள் தான். கடத்தலை மஜீத் போன்றவர்கள் தான் செய்வார்கள்.

செல்வா சொன்னதுபோல் ஒடிவிட்டது தான் 25 வருஷங்கள். ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. அந்த வழுக்கை மண்டையன் ஒரு ஷேக்கின் பார்ட்னர். சவுதியில் மண்ணின் மைந்தர்களை அன்றி வேறு எவரும் பெரியதாக எதுவும் செய்துவிட முடியாது. யாரேனும் புதியதாக வியாபரம் தொடங்க வேண்டுமானால் எதாவதொரு ஷேக்குடன் இணைந்துதான் தொடங்க முடியும். தனியாக தொடங்க முடியாது. ஷேக் கள்ள பிஸினஸ் செய்ய இந்த வழுக்கை மண்டையனைத் தான் பயன்படுத்துகிறான். ஏதாவது பிரச்சனையாகிவிட்டால் இவனைக் கழட்டிவிட்டுவிடலாமென்று ஷேக் கணக்கிட்டிருக்கலாம். இந்த வழுக்கை தான் ஷேக்கின் வலதுகை. இவன் தான் தங்களை இங்கே கொண்டுவந்ததும். இங்கு வந்ததில் குடும்பம் குழந்தையென்று எதுவும் இல்லை. வாழ்க்கையில் தோற்றுவிட்டோமோ என்று விரக்தியாக சில நேரங்களில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. எங்கே தப்பாகிப்போனது என்று புரியவில்லை. ராஜி வெகுவாக சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஆறுமணி நேரம் கடந்தது தெரியவில்லை.

விமானம் சென்னையில் தரையிற‌ங்கியது.மீண்டும் ஒரு பதட்டம் அவனை பீடித்தது. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று மனம் அடித்துக்கொண்டது. மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. போலீஸ் தலைகள் வழக்கத்தைவிட அதிகமாக தென்பட்டன. அதிக அள‌வில் மோப்ப நாய்கள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தன. ராஜிக்கு புரிந்துவிட்டது. ராஜியையும், செல்வாவையும் சரக்கோடு காணவில்லை என்பதைப் புரிந்துகொண்ட வழுக்கை மண்டையன், விமானம் பறந்து கொண்டிருந்த இந்த ஆறு மணி நேரத்தில் வேண்டுமென்றே கடத்தல் பற்றிய செய்தியை போலீஸுக்கு கசிய விட்டிருக்கிறான். படுபாவி பழிவாங்கிவிட்டானே. சற்று முந்தான் செய்தி கிடைத்திருக்கவேண்டும். ஏனெனில், விமான‌த்திலிருந்து பேக்கேஜ்களை இறக்குகையிலேயே சோதித்திருந்தால் இப்போது இங்கே பயணிகள் தங்கள் பேக்கேஜ்களை எடுத்துக்கொண்ட பின்னர் சோதிக்கவேண்டிய அவசியமில்லை.

போலீஸார் எல்லோரையும் வரிசையில் வரச்செய்து மோப்ப நாய்களைக்கொண்டு சோதித்தனர். பேக்கேஜ்களை வலது புறத்தில் நின்றபடி இரண்டு நாய்களும், இடது புறத்தில் பயணிகளை மேலோட்டமாய் ஒரு போலீஸ்காரரும், இன்னொரு நாயும் சோதித்தனர். செல்வாவின் முறை வந்தது. போலீஸ்காரர் சோதித்தார். நாய்கள் அவனுடைய பேக்கேஜ்ஜை சோதித்தன. ஆனால் பெரிதாக ஏதும் நிகழவில்லை. செல்வா பேக்கேஜை கையிலெடுத்துக்கொண்டு, பல்ஸ் இன்டெக்ஷன் எக்ஸ்ரே கருவியில் ஊடுறுவி வெளியேறி விமான நிலையத்தின் வெளிப்புறத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தான். ராஜிக்கு ஆச்சரியமாக இருந்தது. கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் முழுமையாக எந்தச் சிக்கலுமில்லாமல் சவுதியிலிருந்து கடத்தப்பட்டுள்ளது. அதுவும் செல்வா மாதிரி ஒரு கத்துக்குட்டியால். கண்முன்னே சாத்தியாமாகியிருக்கிறது.

ராஜிக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. அத்தனை மோப்ப நாய்களும் ஏமாறிவிட்டனவா? இல்லை செல்வாவுக்கும் இந்த போலீஸுக்கும் எதாச்சும் கையூட்டு இருக்குமா? யோசித்தபடியே ராஜி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, மெயின் ரோட்டில் செல்வாவைத் தேட, ஒரு ஆம்னி டாக்ஸி வண்டியில் வந்த செல்வா கையசைத்து ராஜியை வண்டியில் ஏறிக்கொள்ளச்சொன்னான்.

ராஜி வண்டியில் ஏறிக்கொள்ள‌ வண்டி வெகுவிரைவாக வேகமெடுத்து விழுப்புரம் நோக்கி விரைந்தது. ராஜிக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படி இது நடந்தது என்கிற கேள்விக்கு பதில் கிடைக்காமல் அவன் ரொம்பவும் அலைபாய்ந்திருந்தான். செல்வாவும் ராஜியும் பொத்தாம் பொதுவான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசினார்கள் விழுப்புரம் வரை. விழுப்புரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன் அவர்கள் இறங்கிக்கொள்ள, வண்டி திரும்பி வந்த வழியே போனது.

‘டேய், எப்டிடா சரக்கு எஸ்கேப் ஆச்சு?’ ஆர்வம் கொப்புளிக்க ராஜி கேட்க, லேசாக சிரித்தபடியே செல்வா, கொண்டுவந்திருந்த பேக்கேஜை திறந்து ஒரு சாம்பல் நிற தடிமனான உருளை வடிவ பொருள் ஒன்றை எடுத்தான். கிராமத்தில் சிறுவனாக இருந்த காலத்தில் திருவிழாக்கூத்துகளில் பார்த்த கண்ணகி காற்சிலம்பு போலிருந்தது. செல்வா, இரண்டு கைகளாலும் அதைப் பிடித்து, அழுத்தம் கொடுத்து உடைக்க, தெரித்து பேக்கேஜின் மேற்பரப்பிலிருந்த துண்டின் மேல் ஒன்றிரண்டு படர்ந்து விழுந்தது. மினுமினுப்பாய் வைரங்கள்.

ராஜி அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருக்க, ‘சரக்கு இந்த வைரம்தான். ஆனா, இந்த வைரத்தோட கோட்வோர்ட் தான் 33, கோகெய்ன்னு வச்சேன். நம்மல பழி வாங்குற கோபத்துல அந்த வழுக்க மண்டையன் கோகெய்ன் தான் கடத்தபடுதுன்னு போலீஸ்ல நம்பத்தகுந்த இடத்துல பத்தவச்சிருப்பான். நமக்கு அதுவே சாதகமா போயிடிச்சு’ என்று செல்லிக்கொண்டிருந்த செல்வாவை ஒரு விஷமப்புன்னகையுடன் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜி.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்