கொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

யமுனா ராஜேந்திரன்


படைப்புக்கும் படைப்பாளிக்கும் இருக்கும் உறவு தொடர்பான விஷயங்கள் நிரந்தரமாகத் தொடரும் விவாதங்களில் ஒன்றுதான். ஆசிரியன் செத்துவிட்டான் என்று முழங்குகிறவரும் கூட தனது நாவல் பற்றிய விமர்சனங்களுக்குப் பதறியடித்துக் கொண்டு விளக்கம் சொல்வதை நாம் தொடர்நது பார்த்துக் கொண்டிருக்கிறறோம. படைப்பாளியைப் பாரக்காதே படைப்பைப் பார் என்பதும் ஒரு பழைய அணுகுமுறைதான். ஆனால் படைப்பாளியை சந்தர்ப்த்திற்கேற்ப நார்நாராகக் கிழித்துக் கொண்டிருப்பவர்களும் இவர்கள்தான். இந்த வாதங்கள் அவரவர் அரசியல் சாதுரியங்களுக்கு அவ்வப்போது தோதான வகையில் பாவிக்கப்படும் என்பதும் நாம் அறிந்தவைதான். படைப்பை நிகழ்விலுள்ள சாமானிய அறிவின் அடிப்படையில்  (common sense) வாசிக்கும் வாசகன் பற்றி – படைப்பாளியின் தகிடுதித்தங்கள் பற்றி அறியாத நிலையில் வாசிக்கும் வாசகனின் அனுபவ சுதந்திரத்தை நாம் அங்கீகரிக்கிறோம். வாசகன் மனதில் ஏற்படுத்தும் படைப்பு சொல்லும் வாழ்வு பற்றிய சித்திரம் குறித்து அவன் பெறுகிற அனுபவத்தையும் நாம் அங்கீகரிக்கிறோம்.

மாறாக விமர்சகன் என்பவன் வாசகன் எனும்  அளவில் நாவல் முன்வைக்கிற பொது அறிவுசார்ந்த சமூக அனுபவத்தை அப்படியே நம்பகிறவனோ ஏற்றுக் கொள்கிறவனோ அல்லன். படைப்பும் ஆசிரியனும் ஒன்றே என மயங்குகிறவனும் அல்லன். அறிந்த வாசகன் (informed reader) எனும் அளவில் படைப்புக்கும் அது சொல்லும் சமூகத்தின் படிநிலைகட்கும் ஆசிரியனுக்கும் இடையிலான சிக்கலான உறவை உள்நோக்கிச் சென்று காண்பவன்தான் விமர்சகன். இவன் புனைவுக்கும் நிகழ்வுக்கும் – நிகழ்வு படைப்புத் தன்மைபெறுகிற ஆசிரியன் அழிந்த நிலைக்கும் ஆன உறவைத்தான் படைப்புத்தன்மை வாய்ந்த நிலையாகக் காண்கிறான். புனைவை ஆசிரியனின் அதிகாரத்தின் பொருட்டு நிகழ்வாக்குதலையும் நிகழ்வைப் புனைவாக்குதலையும் தனது தர்க்கவறுமையை மறைப்பதற்கான மறுதலையாக எழுத்தைப் பாவிப்பதையும் கண்டு சொல்ல இவன் கடமைப்பட்டவன்.

படைப்பு மொழியில் செயல்படும் சாமானிய அறிவைக் கட்டுடைத்து அதில் மறைபொருளாய் உள்ளுறையும் அதிகாரத்தையும் பிறழ்வான சமூகச் சித்தரிப்பையும்  முன் வைப்பவன்தான் விமர்சகன். அவ்வகையில் அவன் படைப்பில் வெளிப்படும் அறிவை அதன் பொய்மையை சுட்டிக் காட்டுகிறவனாகச் செயல்படுகிறான். அவ்வகையில் இக்கட்டுரையில் வெளிப்படும் பார்வை படைப்பு முன்வைக்கும் சாமானிய அறிவை நிராகரித்த பார்வையாகும். படைப்பில் படைப்பாளியின் தலையீடு மற்றும் அதிகாரம்  குறித்து அக்கறைப்படாதவர்கள் இந்தக் கட்டுரையை வாசிக்காமல் விடுவது நல்லது என முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நாவலின் அச்சுநேர்த்தி-வட்டாரவழக்கு போன்றன பற்றிய விசாரங்கள் இருக்கிறது. இவையெல்லாம் நாவலைப் புரிந்து கொள்வதற்கு அப்பலான பிரதேசத்தின் சமாச்சாரங்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. சில ஒப்பீடுகளைச் செய்ய சங்கடமாகத்தான் தோன்றுகிறது. வெகுஜனக் கலாச்சாரம் குறித்து சீரியசான ஷோபாசக்தி -மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ரசிகர் அவர்- இதைக் கட்டாயம் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். சங்கரின் படங்களையும் கமல்ஹாஸனின் ஆளவந்தானையும் எடுத்துக் கொள்ளுங்கள். தியேட்டரைவிட்டு வெளியில் வரும்போது மூளையளவில் பிளந்தவாயன் மாதிரி வெளிவரலாமே ஒழிய கடைசியில் தேர்ந்து கொள்ள என்று போகும்போது நிறையச் சங்கடப்பட வேண்டியிருக்கும். ஆனால் ஆளவந்தானில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மேக்கப் கமலின் நடிப்பு குழந்தையின் மீதான அத்துமீறல் என்று எத்தனை விஷயங்கள் பேச இருக்கிறது பாருங்கள். அப்படித்தான் கிரியா புத்தகங்களின் வெளியீட்டு நேர்த்தி அக் பரந்தாமனின் வெளியீட்டு நேரத்தி மாதிரி அடையாளம் பதிப்பகத்தின் வெளியீட்டு நேர்த்தி போன்றன பற்றிப் பேசுவது நாவலின் தகைமை சாரந்த விஷயம் அல்ல என்பதை முதலில் நமக்குள் அறிவுறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று தோன்றுகிறது..

கொரில்லா நாவல் தொழிற்படுகிற 180 பக்கங்கள் பற்றிய அபிப்ராயங்களை மட்டுமே எதிர்பார்க்கிறவர்கள் இக்கட்டுரையைத் தவிர்த்துவிடுவது நல்லது. இது நாவல் குறித்து நாவலுக்கு உள்ளும் வெளியிலும் -நாவல் பேசும் மனிதர்களுக்கு உள்வெளியலும் வெளிமனிதரிலும் சஞ்சரிக்கும் கட்டுரை. ஆனால் நான் பேசுகிற அனைத்து விஷயங்களும் நாவலின் உருவாக்கதத்ில் சம்பந்தபபட்ட காரணிகள் என்கிற தெளிவுடன்தான் இக்கட்டுரை எழுதப்படுகிறது. கொரில்லா நாவல் இரண்டாம் பகுதி நிகழ்ந்து அநேகமாக பதினெட்டு ஆண்டுகளின் பின் சமகாலம் தழுவியதாக நாவலில் பாவிக்கப்பட்டுவருகிறதை நாம் பார்க்கமுடியும். நாவலில் நடவடிக்கைகள் போலவே சொற்கள் தேர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது அடிப்படைப் பாத்திரங்கள் தேர்வு பெற்றிருக்கிறது. தனிநபர் எனும் அளவில நாவலாசிரியன் தனது தனிப்பட்ட வாழ்வில் புனைவற்ற தெளிவான சொற்களில் விளக்கப்படடவேண்டிய சம்பவங்கள் (personal issues which needs to be clarify for the wider society) புனைவு கலந்து சொல்லத் தேர்வு பெற்றிருக்கிறது. நிகழ்காலத்தில் சில குறிப்பிட்ட பாத்திரங்கள் உயிர்த்தெழுவதற்கான – குறிப்பாக ரொக்கிராஜ் என்கிற- கொரில்லா என்கிற-அந்தோணி என்கிற- ஷோபா சக்தி என்கிற பாத்திரத்தின் உயிர்த்தெழுதலுக்கான (biblical resurrection) சொல்நெறி (narration) உருவாக்கப்பட்டிருக்கிறது. தானின்  மறுதலையாக (alter ego) தலைப்படுகிற கதை சொல்லியின் இன்றைய கருத்தியல் நம்பிக்கைகள் உப-பிரதியாகக் கதையில் இருக்கிறது.

நாவல் நிச்சயமாகவே ஷோபா சக்தியின் வாதப் பிரதிவாதங்களை அறிந்தவர்களுக்கு சுயகதை என்பது தெரிந்து விடும். ஷோபா சக்தியும் அந்தோணியும் கதைசொல்லியும் தம்மைக் குறித்த மிக உன்னதர்களான நேர்மறையான தோற்றத்தைக் கட்டமைக்கிறவர்கள் (constructing and establishing a sympathetic positive posture) எனும் அளவில் வேறு வேறு நபர்கள் அல்லர்.

கதையின் படி அந்தோணி தீவுப் பகுதியைச் சார்ந்தவர். அந்தோணியின் கதையைச் சொல்லிக் கொண்டு வருகிற கதை சொல்லிக்கு வட்டார அடையாளங்கள் ஏதும் நாவலில் இல்லை.

அவர் புவியியல் அளவில் மத சாதிய அளவில் சார்பு நிலையற்றவராக இருக்கிறார். இன்னும் அவர் வழியிலும் அந்தோணியின் அற்புத குணங்களே வெளிப்படுகிறது. ஆனால் என்ன துரதிருஷ்டம்- அந்தோணியின் கதை தீவுப் பகுதி மக்களின் பிரத்யேக மொழியைக்கொண்டிருக்க- கதைசொல்லியின மொழியை மிகுந்த திட்டமிடலுடன் நவீன- மதநீக்கம் பெற்ற- மேலைத் தேயம் வாழ் தமிழ் மொழியாக உருவாக்கியவர் நாவலின் இறுதியில் தவிர்க்க இயலாமல் தன்னிலைக்குத் தாவி விடுகிறார் ( ‘படைப்பாலற்ற நிலை-சொல்நெறியின் தோல்வி – எங்கப்பன் குதிருக்குள் இல்லை ‘ என்பது இங்கு தெரிந்துவிடுகிறது). ‘எமது தீவுப் பகுதிகளில் மட்டுமே வழங்கப்படுகிற ஒரு அருமையான விளிப்புச் சொல்லாய் இருக்க வேண்டும் என ‘அப்பன் ‘ சொல்லைச் உணர்ச்சிவசப்பட்டுச் சிலாகிக்கிறபோது கதைசொல்லியும் நானே ‘ என அந்தோணி நமக்குச் சொல்லிவிடுகிறார்.

கதை மூன்று பிரிவுகளால் ஆனது- இதைப் பிரிவுகளாகக் காட்டுவது தொடரும் எனும் ஒற்றைச் சொல்தான்- மற்ற்படி கால இட விஷயப் பரிமானத்தில் படி இந்தப் பிரிவுக்கு இந்தப் பிரதியில் ஏதும் அர்த்தமேயில்லை- அந்தோணியின் அகதி மேன்முறையீடு விண்ணப்பம் முதல் பகுதி. ரொக்கிராகின் சரிதம் மற்றும் சில உதிரிக்கதைகள் அதனோடு சில சமகால நிகழ்வுகள் இரண்டாம் பகுதி அந்தோணிக்கும் அவனது நண்பனும் பெயரிலியும் அடையாளமற்றவனும் ஆன கதை சொல்லிக்கும் இடையில் இருக்கும் உறவு பற்றியதும் தொடர்ந்து கதைசொல்லியும் அந்தோணி அல்லது ரொக்கிராஜின் நண்பன்  ஆனவனும் அவனுக்குத் தெரிந்தவனும் சபாலிங்கத்தைக் கொலை செய்கிற தருணத்துக்குப் போவதும் மூன்றாவது பகுதி..

இரண்டாம் பகுதியோடு ஒப்பிட (சில சிறுகதைகள் நிகழ்காலப் புனைவுகள் தவிர ரொக்கிராஜின் கதை) பிற பகுதிகள் சமகாலத்தில் புகலிடத்தில் இடம் பெறுபவை. கதை புத்தகத்துக்கு வெளியிலிருந்து தொடர்வதாக தொடரும் எனும் குறி அத்தியாயங்களின் இடையில் வருகிறது. ஆனால் சபாலிங்கத்தின் கொலையுடன் முடிவு பெறுகிறது அல்லது அந்தரத்தில் நிற்கிறது. பிறகு வாழ்வுக்கும் கதைக்கு அப்பால் நிகழ்வுக்கும் ஏதும் தொடர்ச் சியில்லை என நாவலாசிரியன் கருதுகிறார் போலும். எவ்வறாயினும் வாழ்வு தொடர்ச்சியிலிருந்து முடிவிலி நோக்கித் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடிவதில்லை. கதைசொல்லியான அடையாளமற்ற ஏதிலி உணர்ச்சிவசத்தில் அந்தோணி போலவே ரொக்கிராஜ் போலவே தீவு மனிதனாகிவிடுவது நாவலின் மிகப் பலவீனமான படைப்பாற்றலற்ற தன்மைக்குச் சாட்சியமான-மிகப் பலவீனமான கண்ணி.

கதையின் படி கதை சொல்லி சபாலிங்கத்தின் கொலையை நேரில் பார்த்தவராக இருக்கிறார். ஆனால் இந்த நேரில் பார்த்தவரை ஷோபாசக்திக்குத் தெரியும் என பிரெஞ்சு போலீஸார் அவரைத் தேடித் தருமாறு ஷேபாசக்தியடம்  கேட்பார்கள் என வாசகர்கள் நம்பினால் இந்தக் கதையில் வருகிற- செய்நேர்த்தியிலும் சொல்நெறியிலும் வெளியாகிற அனைத்தையும் நிகழ்ந்தவை என வாசகர்கள் நம்ப வேண்டும். ஆனால் சபாலிங்கத்தின் கொலை நடந்தபோது இருந்ததாகக் கட்டமைக்கப்படும் கதைசொல்லி ஷோபா சக்தியின் தானின் மறுதலைதான் (alter ego) என்று நம்புவோமாயின் அவரது சுயசரிதையாகப் படும் இந்த நாவல் எத்தனை புனைவுகளையும் கால இட சம்பவ மனிதத் தேர்வையும் தவிர்ப்பையும் கொண்டிருக்கும் என ஒருவர் சொல்லத் தேவையில்லை.

இத்தகைய நாவல்கள் சமூக வெளியில் ஒரு பிரதானமான ஆபத்தைக் கொண்டிருக்கின்றன. பல வாசகர்கள் இத்தகைய சொல் நெறியைக் (narration) கொண்டிருக்கும் நாவல்களைப் பற்றிய ஒரு மயக்கமான பார்வையைக் கொண்டு விடுகிறார்கள்.

அவர்கள் நாவலாசிரியனின் அறியப்படாத வாழ்க்கை பற்றிய பற்றிய பல்வேறு நிஜங்கள் நிகழ்வுகள் வரலாற்றுச் சம்பவங்கள் இதில் இருக்கிறது – நாவலாசிரியன் பற்றிய பல்வேற கேள்விகளுக்கு இந்நாவல் பல்வேறு முறைகளில் பத்ில் சொல்கிறது என நம்புகிறார்கள். இத்தகையதொரு மயக்கத்தை உருவாக்குவது சமூக அளவில் நாவலாசிரியருக்கு மிகவும் அனுகூலமாக இருக்கிறது. இவ்வகையில் சமூக மதிப்பிடுகள் சார்ந்து அவன் தனக்கான நேர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்கிறான் – சமூகத்திடம் தனது இருப்புக்கான ஒரு அனுதாபத்தை உருவாக்குகிறான் – தன்னளவில் இந்த அனுதாபத்தை கதைக்குள் மீகுந்த சம்பவத் தேர்வுகள் மனிதத் தேர்வுகள் எனும் வகையில் சாதிக்கிறான். அதாவது புனைவையும் பிம்பத்தையும் நிஜம் போல முன்வைககிறான். தனக்கான அனுதாபத்தையும் தனக்கான மீட்சியையும் கதைக்குள் கட்டமைத்து சமூக அளவில் பொது வாசகனிடத்தில் இந்த கெளரவத்தை அடைய நினைக்கிறவன் இயல்பாகவே தான் அல்லாதவர்கள் பற்றிய பாத்திரங்கள் எனும் அளவில் தன்னிலை சார்ந்து அவர்களைப் பற்றிய எதிர்மறையான சித்திரத்தையே தருகிறான். இத்தகைய நாவல்களில் அறுதியாக நமக்குத் தெரியவருவது சுயதம்பட்டமும் வாழ்கிற மனிதர்கள் சிலர் குறித்து எழுத்தை ஒரு பழிவாங்கலாகப் பாவிப்பதும் வாழ்வு குறித்த வரலாறு குறித்த தரிசனம் இன்மையும்தான் தான்.

தமிழகச் சூழலில் இந்த விகாரமான எழுத்து வகையை உருவாக்கியவர்  என ஸீரொ டிகிரி உன்னத சங்கீதம் என்கிற எழுத்துக்களைத் தந்த சாருநிவேதிதாவைச்  சொல்லலாம். இம்மாதிரி எழுத்துக்களுக்கு ஒரு சித்தாந்தப் பின்னணியைத் தந்தவர் என இலக்கிய நுண்ணுணர்வற்ற ஆசானான அ.மார்க்ஸைக் குறிப்பிடலாம்.

அ.மார்க்ஸின் இலக்கிய விமர்சன உலகில் இரண்டு விஷயங்கள்தான் இருக்கிறது. பிராமணியம் மற்றது எதிர் பிராமணியம். மற்ற உரையாடல்கள் வன்மமாக மறுக்கப்படும். திருட்டு, கொலை, களவு, விபச்சாரம், பாலியற்பலாத்காரம், குழந்தைக்கொலை, குழந்தைகள் மீதான பாலியல் நிந்தனை எல்லாம் எதிர்-பிராமணியமாக இருந்தால் அது புரட்சிகரத் தன்மை வாய்ந்தது என்பது இவரது அபத்த அல்லது புனித வாய்ப்பாடு. இவரது சிஷ்யப்பிள்ளை இதற்காக இவருக்கு கதாநாயக மகுடங்களும் சூட்டுவார் : அ மார்க்ஸ் ஈஸ் ஈகுவல் டு மம்முட்டி : எதிரிக்கு எதிரி தோழனுக்குத் தோழன் பீடியும் குடிப்பார் சிகரெட்டும் அடிப்பார்-அ.மார்க்ஸ் ஈஸ் ஈகுவல் டு மம்முட்டி (எக்ஸில் இதழ்- சாருநிவேதிதா குறிப்புகள் – அதென்னப்பா – பீடி சிகரெட் எதிர்மறை- இதிலிருக்கிற ஜாதிய வர்க்க வெள்ளைத் திமிர் அம்சங்களை அ.மார்க்ஸ் கட்டுடைத்துக் காண்பிப்பது நல்லது என்று கேட்டுக் கொள்கிறேன்).

ஆங்கிலச் சூழலில் கொரில்லா மாதிரி ஒரு நாவலைச் சொல்ல வேண்டுமானால் ஹனிப்குரேஸி எழுதிய ‘இன்டிமஸி ‘ நாவலைச் சொல்லலாம். இந்த நாவல் வெளியான போது விவாகரத்து செய்யப் பெற்ற அவரது முன்னாள் மனைவியும் குழந்தைகளும், அத்தோடு இந்த நாவலின் அப்பட்டமான சம்பவத் தேர்வுகள், சொல்நெறி போன்றவற்றால் அவரது தாயும் சகோதரியும் தாம் அடைந்த மன வலிகளைச் சொல்லியிருந்தார்கள். ஹனிப் குரேஸிய்ின் தந்தையின் வாழ்வை கதையின் நாயகனாக வரும் குரேஸியின் பிம்பத்தைத் தகவமைக்கும் பொருட்டு அவமானகரமாக அதில் சித்திரித்திருந்தார் என்பது அவர்களது துயரம்.

பிற மனிதர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களின் நிகழ்வுகளை தமது சமூகச் சித்திரத்தை உயர்த்திக் கொள்வதன் பொருட்டு தேர்ந்து எழுதப் புகுந்ததன் மூலம் பிறருக்கு வலியை உருவாக்குகிற தரிசனம் குறைந்த படைப்பாற்றலற்ற எழுத்து வகை கொரில்லாவின் பிரதி. அனுபவும்- நிகழ்வு- புனைவு- தான்- பிறமனிதர்- வரலாறு- காலம்- வாழ்வு போன்ற படைப்புக்கு மிக அடிப்படையான ஆதாரங்கள் குறித்து மிக அவதானமாகப் பார்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இந்நாவலில் துப்பரவாக உதாசீனப்படுத்தப்படடிருக்கிறது. அனுபவம் இல்லாது யாரும் எழுத முடியாது. ஆனால் அனுபவங்களை அதனது வறண்ட நிலையில் எழுதுவது மீகுந்த சுயமுனைப்பு கொண்ட தேர்ச்சியுடன் தன்னை முன்னிறுத்தி எழுதுவது பிறமனிதரைத் தூசிக்க நாவல் பாத்திரத் தேர்வுகளைப் பாவிப்பது படைப்புக் கலை சார்ந்த விஷயங்கள் அல்ல. பன்முகப் பார்வையும் ஆசிரியரின் பிரச்சியைிலிருந்த விட்டுவிலகி உடைத்துக் கொண்டு- பிரதியில் எழுத்தாளன் செத்து- தரிசனத்தை முன்வைக்க வேண்டியும்  ஆன காலத்தில் நாம் வாழ்கிறோம்.

கொரில்லா பிரதியில் நாம் சில காலங்கள் சில பாத்திரங்கள் பற்றி பிரதியிலிருந்தே ஆதாரம் திரட்டிச் சில விஷயங்களைப் புரிந்து கொள்வது நல்லது.

1 175 ஆம் பக்கத்தில் 13 ஆம் பத்தியின் படி அந்தோணிதான் கொரில்லா என்பது சொல்லப்படுகிறது. இயக்கத்தவரிடையில் ரொக்கிராஜின் இன்னொரு பெயரும் கொரில்லா என்பதாக 115 ஆம் பக்கத்தின் 4 ஆவது பத்தித் தகவல் இருக்கிறது. ஆக சஞ்சய், ரொக்கிராஜ், கொரில்லா, அந்தோணி, ஷோபா சக்தி போன்றவர்கள் எல்லோரும் ஒரே நபர் தான்.

2. புகலிட எழுத்தை அறிந்தவர்களுக்கு ஜேக்கப்பு அந்தோணிதாசன் என்கிற ஷோபாசக்தி மீது வைக்கப்பட்ட மணல் திருட்டு குற்றச்சாட்டு அல்லது அவதூறு நாம் அறிந்ததே. இது சம்பந்தமாகவும் இரண்டு தகவல்கள் பிரதிக்குள் இருக்கிறது. முதல்பகுதி சொல்கிறபடி அந்தோணி அவரது தந்தை இராணுவத்தினரால் கால் முறிபடுகிறபோது அவரது தந்தையின் மணல் அள்ளும் தொழிலை ஏற்கிறார். அந்த விண்ணப்பத்தின்படி அந்தோணி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விளம்பரம் எழுதுகிறார், நாடகம் போடுகிறாரே ஒழிய இயக்கத்தின் நடவடிக்கையாளராக இல்லை. அரசியல் பாஷையில் அவர் உறுப்பினர் இல்லை; ஆதரவாளர்.

3. இரண்டாம் பகுதியின்படி ரொக்கிராஜ் இயக்க உறுப்பினர். இன்னும் இயக்கத்தின் நடவடிக்கையாளர் இன்னும் மணற்றிருட்டுக்கு எதிராகச் செயல்படுபவராக அவரே இருக்கிறார். அநியாயமாக அவர் மீது அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இன்னும் மூன்றாம் பகுதியில் மிகுந்த கால இடத் தெளிவுடன் விவரிக்கப்படும் (மூன்றாம் பகுதியிலும் இரண்டாம் பகுதியின் சில சிறுகதைகளிலும் குறிப்பாக டாவிட்டு பற்றிய அத்தியாயத்திலும் திட்டமிட்ட வகையில் கால இடப் பரிமாணம் குழப்பியடிக்கப்படுகிறது அல்லது அழிக்கப்படுகிறது- உதாரணமாக 35 ஆம் பக்கத்தில் ‘சென்ற வருடம் மற்றும் இன்று லிபரேஷன் பத்திரிக்கையில் வெளியானது ‘ போன்ற பதங்களுக்கு அர்த்தமேயில்லை- ஏனெனில் எண்பதுகளில் நிகழ்ந்த ரொக்கிராஜ் பற்றிய வட்டார வழக்கு விவரணங்களுக்கிடையில் இக்கதை நவீன புகலிடத்தில் 1990 களில் நடந்த விஷயம் என விரிக்கப்படுகிறது) பகுதியும் வட்டார வழக்குடன் மீகுந்த ஆதாரத்தன்மையுடன் மிகவும் சாதகமான வகையில் நெகிழ்ச்சியுடன் சித்தரிக்கப்படும் பகுதியும் அந்தக் கதைப்பகுதிதான். ரொக்கிராஜின் கதை நேரடியான மொழியில் சொல்லப்பட்ட தெளிவான கதை. இந்தக் கதை மிகத் தெளிவாக வாசகனுக்குப் பரியவேண்டும் என்கிற மிகுந்த கவனத்துடன் யதார்த்தவாத நடையில் செய்யப்பட்ட கதையாகும்.

4. முதல் பகுதியின்படி அந்தோணியின் வாழ்வில் 1984 ஆம் ஞண்டிலிருந்து 1990 இல் அவர் கொழும்புக்குச் செல்லும் வரை நடந்த சம்பவங்கள் வேறு. அதே ஆண்டுகளில் அந்தோணி என்று நமக்குக் காட்டப்படுகிற ரொக்கிராஜின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் வேறு. அந்தோணிக்கு மூன்று ஆண் சகோதரர்கள் ஒரு சகோதரி. இதில், மூத்த சகோதரர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் போய் என்ன ஆனார் என்கிற செய்தியே இல்லாதவர். மற்ற இருவர் இராணுவத்தினால் கொல்லப்படுகிறார்கள்.பிறரான அவரது சகோதரி தாய் தந்தை போன்றோர் 1991 ஆம் ஆண்டு வரை உயிருடன் இருக்கிறதாக இப்பகுதி விவரணம்சொல்கிறது.

இதே ஆண்டுகளில் ரொக்கிராஜின் ஒரே சகோதரர் இயக்கதத்வரால் சுடப்பட்டு இறந்து போகிறார். தாய் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார். சகோதரி தற்கொலைப் போராளியாக இறந்து போகிறார். பிற்பாடு 1996 ஆம்ஆண்டு அவரது தகப்பன் தமிழ்நாட்டுக்குத் தப்பிச்செல்கையில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

5. இரண்டாம் பகுதியில் மிகுந்த தெளிவுடன் நெகிழ்சியுடன் ஒரே பிரச்சினையை மையமாக்கொண்டு நிகழும் கதை ரொக்கிராஜின் கதை. பிரதியின் பிரதான பகுதியும் ரொக்கிராஜ் என்கிற அந்தோணி எனக்ிற ஷோபா சக்தி என்கிற நாவலாசிரியன் மீது அனுதாபம் கொள்ள வாசகனை மயக்கி ஏதுவாக்கம் பகுதியும் இதுதான். ஆவனது அனைத்தச் சொந்தங்களும் இறந்து போகிறார்கள். அநியாயமாக அவர் மீது திருட்டுக் குற்றமும் துரோகிக் குற்றமும் சுமத்தப் படுகிறது. ஆனால் ரொக்கிராஜன் அநியாயமாக ஆன்மா சிதைக்கப்பட்ட அப்பாவி. இக்கதை நிகழ்வா புனைவா என்பதை அந்தோணியின் முதல்பகுதி விண்ணப்ப விவரங்களுடன் ஆர்வலர் ஒப்பு நோக்கிப் பாரத்துக் கொள்வது நல்லது என்று சொல்லத் தோன்றுகிறது. இவ்வகை மயக்கம் அரசியல் வன்முறை சார்ந்த இப்பிரச்சினையைச் சொல்லத் தேவையற்றதாகும்.

6. மூன்றாம் பகுதியில் மூன்று விதமான விவரணம் கடைபிடிக்கப்படுகிறது. இம்மூன்று விவரணங்களில் இரண்டு விவரணங்கள் அந்தோணியின் சமகாலமான தொண்ணுாறுகளில் பாரிஸில் நிகழ்கிறது. டாவிட்டினுடைய கதை ஒன்று. மற்றது 45 ஆம் பக்கம் 1 ஆம் பத்தியில் தன்னிலையுடன் தொடங்கும் கதைசொல்லியின் கதையாகும். இரண்டாவது வகை குஞ்சன் பிரின்ஸி போன்றோரின் கதைகள் சொல்லப்டுகிறது. இவை ரொக்கிராஜின் கதைக்குச் சம்பந்தமற்ற தன்னளவில் முழுமை எய்திய சிறுகதைகள். இக்கதைகளில் ஈழப்போராட்டத்தில் சாதியம் பெண்களின் சாகசம் போன்றன சொல்லப்படுகிறன. இந்தப் பகுதியில் இடம் பெறும் டாவிட்டின் அத்தியாயம் கதை சொல்லியின் அத்தியாயம் என்பன இயல்பாக கால இடப் பரிமாணத்தின் படி தொண்ணுாறுகளில் விவரிக்கப்படும். மூன்றாம் பகுதியில் சாதாரணமாகவே இடம் பெற்றுவிடுவன. கால இடப் பரிமாணத்தை குழப்பவெனவே இக்கதைகள் இரண்டாம் அத்தியாயத்துக்கு நகர்த்தப்பட்டிருக்கிறது.

கால இடப் பரிமாணம் அர்த்தமிழந்துவிட்டது என்பதும் ஒரு பின்நவீனத்துவ நிலையாகும் – உதாரணமாக வரலாறு முன்னோக்கிப் போகிறது என்கிற கூற்று இவர்களுக்கு உடன்பாடானதல்ல. ஆனால் ஷோபா சக்தி இவ்வளவு கோட்பாட்டுத் தெளிவுடன் இதைச் செய்கிறாரா என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியது. சாதாரணமாகக் கணணி பாவிக்கத் தெரிந்தவர்க்கு பிரதியில் இந்தக் கால இடப் பரிமாணத்தை அழிப்பதென்பது சாதாரணமான வெட்டி ஒட்டுதல் வேலை ( cut and paste ) வேலை என்பது தெரியும். இப்படியான வெட்டி ஒட்டுதல் வேலையையும் சொற்களை இடமாற்றிப் போடுகிற வேலையையும் சாருநிவேதிதாவின் பிரதியில் நிறையப் பார்க்கலாம். ஆசானிடமிருந்து இந்த வெட்டி ஒட்டுகிற வேலையை ஷோபாசக்திக்கு சும்மா சகட்டு மேனிக்கு கொரில்லாவில் பின்பற்றுகிறார் என்பது தெரிகிறது. நாவலில் கதை தொடங்கியதிலிருந்து இறுதிவரை சில சமயங்களில் ஒரு வார்த்தைக்கு எண்ணிடப்படுகிறது; சில இடங்களில் வார்த்தைக்கு எண்ணிடப்படுகிறது; சில இடங்களில் பத்திக்கு எண்ணிடப்படுகிறது.

இந்த எண்ணிடப்படுகிற சமாச்சாரம் இரண்டு இடங்களில் நடக்கும். ஓன்று சுவிசேஷத்தில் எண்ணிடப்படுகிறது. மற்றது மேற்கில் குடியேற்ற மேன்முறையீட்டு வழக்கு சார்ந்த ஆவணங்களில் எண்ணிடப்படுகிறது. முதல் பகுதியின் விண்ணப்ப எண்ணிடல் இயல்பானது. மிகுந்த நம்பகத்தன்மையானது. இந்த எண்ணிடுதலின் அபத்தம் இழித்துக் கொண்டு நிற்குமிடம் ரொக்கிராஜ் அல்லது அந்தோணியின் மேன்முறையீட்டுடன் சம்பந்தமற்று நிற்கிற டாவிட்டு பற்றிய கதைக்கு எண்ணிடும் போதுதான் – ஏனெனில் பிற பகுதிகளையாவது கதைசொல்லியான மொழிபெயர்ப்பாளன் குடியேற்ற வழக்குகளுக்கு உதவுபவன் எனும் அளவில் அவன் அந்தோணியின் கதையைச் சொல்பவன் எனும் அளவில்- அந்தோணியின் மேன்முறையீட்டு வழக்குக்கு பிற கதைகள் பயன்படக்கூடும் எனும் அளவில் விண்ணப்ப வடிவிலேயே எண்ணிட நியாயங்கள் உண்டெனக் கொள்ளலாம். ஆனால் டாவிட்டின் பகுதிக்கும் மேன்முறையீட்டு விண்ணப்பத்துக்கும் மூணுகாசுக்குக் கூடச் சம்பந்தமில்லை.

பிரதியில் பாவிக்கப்படடிருக்கம் தகிடுதித்தங்களைப் பாரக்கும் போது ஷோபாசக்தியின் எழத்து வகை சமூகத்தில் தான் எட்டமுடியாத உயிர்த்தெழுப்பை நாவலில் சாதிக்கும் ஒர் காரியமாகப் படுகிறது.

ஷோபாசக்தியின் புனைவல்லாத எழுத்துக்களை வாசித்திருக்கிற வாசகர்களுக்கு இந்தப் புனைவில் சுட்டப்படுகிற கலாமோகனின் அகதிகள் பற்றிய அவமானமான கூற்றெனச் சொல்லப்படுகிற எழுத்து ஷோபாசக்தியின் படைப்பாற்றலற்ற மனிதப் பாவனைக்கு ஒரு சான்றாகத் தோன்றுகின்றது. இம்மாதிரியானவர்கள் மிக நேர்மையாகச் சில காரியங்கள் செய்வதில்லை. கலாமோகன் அவர் மீதான குற்றச் சாட்டுகளுக்கு ஒரு பதில் பதிவு செய்திருக்கிறார். அவ்வாறு தான் சொல்லவில்லை என்பதையும் பத்திரிக்கையின் விவரணம் தவறானதென தான் பத்திரிக்கைக்கு எழுதிய மறுப்பையும் கூட பதிவு செய்திருக்கிறார். நாவலில் இந்த விவரணம் இந்த நிஜம் இல்லை. நாவலின் மூடுண்ட அமைப்பில் அவர்மீதான அவதூறு மட்டுமே தரப்பட்டிருப்பது ஒரு மோசடியாகும். இவையெல்லாவற்நுக்கும் அப்பால் இந்த நாவல் வரலாற்றையோ வாழ்வின் நிஜங்களையோ கொண்டிருக்கிறது என எவரேணும் நம்புவார்களானால் அவர்களை அந்தோணியைப் போலவோ கர்த்தரும் சுவிசேஷ நுாலும்தான்  காப்பாற்ற வேண்டும்.

விடுதலைப் போராட்டம் சார்ந்த எழுத்துக்களுக்கு தேசவிடுதலைச் சமூகங்களிலும் ஈழவிடுதலைப் போராட்ட நாவல்கள் எனினும் கூட சில முன்னோடிகள் உணடு. நாட்குறிப்புக்கள் என்பது போராளிகளின் எழுத்தில் ஒரு பிரதான வகையினதாகும்.

நாட்குறிப்புகள் கால அவகாசம் கிடைக்கிறபோது சில கருத்தியல் விவாதங்களுடன் கோட்பாடும் படைப்பாற்றலும் கொண்ட எழுத்துக்களாகவும் மாறுவதுண்டு. நாட்குறிப்புகளுக்கென உலக அளவில் சேகுவேராவின் ‘பொலிவியன் டைரி ‘யையும் ஈழச்சூழலில் செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்புக்க ‘ளையும் கேப்டன் மலரவனின் ‘போர் உலா ‘வையும் சொல்லாம். கோட்பாட்டுத் தன்மை எய்திய எழுத்தாக எல்ஸால்வடோர் கவியும் போராளியும் ஞன ரோக் டால்டனது ‘மிகுவல் மர்மல் ‘ எனும் நூலைச் சொல்லலாம் . வரலாற்று ாீதியான துயரையும் தனிநபர் வலியையும் அரசியல் கருத்தியல் விவாதங்களையும் கொண்டதாக ஈழச் சூழலில் எழுதப்பட்ட கோவிந்தனின் ‘புதியதோர் உலகம் ‘ நாவலைச் சொல்லலாம்.

எனது வாசிப்பில் ஈழப்  போராட்டம் குறித்து தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் மனித வலியும் அரசியல் வாதப்பிரதிவாதங்களும் வரலாறும் தரிசனமும் கொண்ட நாவலாக நான் கருதுவது கோவிந்தனின் நாவலைத் தான். அவருக்கு தன்னை- தானெனும் அகந்தையை விட்டு விலகத்  தெரிந்திருந்தது- வரலாற்றுச் சந்திப்பில் கருத்தியல் மோதல்களுக்கிடையில் தமது வாழ்வு கிடக்கிறது என அவருக்குத் தெரிந்திருந்தது. இலட்சியத்திற்காகப் புறப்பட்ட இயக்கத்தினுள் அதிகாரவர்க்கம் எவ்வாறாக உருவாகிறது என்பதை கருத்தியல் மற்றும் மனித உறவுகளின்  சிக்கலுடன் அவரால் சொல்ல முடிந்தது. கோவிந்தனின் நாவலில் நிஜத்திற்கும் வரலாற்றுக்கும் வாழ்வுக்கும் புனைவுக்கும் இடையிலான கறாரான வித்தியாசத்தையும் படைப்பியல் ரீதியிலான உறவையும்  வாசகனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த நாவலைப் புரிந்து கொள்வதில் எந்த விதமான மயக்கங்களும் இல்லை. அவருக்குத் தன்னை ஸ்தாபிக்க வேண்டும் என்கிற தன் முனைப்பு இல்லை- மரணத்திற்கு முன் தனது கருத்தியல் அரசியல் மானுடத் தேடலைப் பதிந்துவிட வேண்டும் எனும் தரிசனமும் வேட்கையும் தான் அவருக்கு இருந்தது. கோவிந்தனின் ‘புதியதோர் உலகம் ‘ நாவலில் வரலாற்றுக்கு ஆதாரமாக வாழ்ந்த மனிதர்களும் அவர்களுக்கிடையில் நிகழ்ந்த கருத்தியல் மோதல்களும் இருந்தன; இன்றும் இருக்கிறன. புனைவு இந்தக் கருத்தியல் மோதல்கள் குறித்த மனித வலிகளிலிருந்து ஒரு சமூகத்திற்கு மீட்சியையும் புத்துயிர்ப்பையும் உயிர்த்தெழுதலையும் வேண்டியதாக இருந்தது. தானெனும் அகந்தையைத் தூர நிறுத்தி ஈழத்தைச் சார்ந்த சமூக மனிதனின் ஆத்ம வேதனையை அந்நாவல் நமக்குள் எழுப்பியது.

ஷோபாசக்தி தனது நாவலில் பதியப்பட்ட சம்பவங்கள்  முழக்க நிஜம் போன்ற தோற்றத்தை உருவாக்க குறிப்புகளைப்  பாவித்திருக்கிறார். இதனால் நாவலின் நம்பகத் தன்மையோ நம்ப இடமற்ற தன்மையோ எதவும் அர்த்தமிழந்தவைதான். ஏனெனில் இம்மாதிரிக் குறிப்புகள் நிறைய மனித உரிமை இயகக்ங்களால் திரட்டப்படடிருக்கிறது. பல ஆயிரம் பக்கங்கள் இவ்வாறு தொகுக்க்ப்பட்டிருக்கிறது. இதனது முக்கியத்தவம் குறித்து எவுரும் சம்சயப் படப் போவதில்லை. ஆனால் நாவலின் ஆதாரத் தன்மைக்கு கட்டமைக்கப்பட்ட புனைவு கலந்த குறிப்புகள் எதவும் முக்கியத்தவம் தந்தவிடப் போவதில்லை. செழியனின் குறிப்புகள் தந்த அளவிலேனும் கூட நம்பகத் தன்மையை கொரில்லா தந்துவிடப் போவதில்லை. இன்னும் ஒரு மிக மோசமான ஆபத்திருக்கிறது. ‘கொரில்லா ‘ நாவலை வாசித்தவிட்டு நிஜத்தைத் தேடுகிறவர்களுக்கு இத்தகைய சாவுகள் கூட நிஜமா புனைவா என்கிற சந்தேகம் கூட சிலருக்கு வந்துவிடக் கூடும்.

உதாரணத்துக்கு ஒரு குறிப்பு : ஒல்லாந்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்த வாகனத்தில் வந்த அகதிகள் உறைகுளிரில் செத்தார்கள் என்பது ஒரு பதியப்பட்ட ஆவணச் செய்தி. இது வரலாறு. ஆனால் இந்த வாகனத்தில் வந்த சீனர்களை அனுப்பியவர் தொழிலாளர் பாதையைச் சார்ந்த நான்காம்  அகிலத்தைச் சார்ந்தவர் டிராடஸ்கியர் என அடிக் குறிப்புச் சொல்கிறது. இந்தக் குறிப்பில் இரண்டு அயோக்கியத்தனங்கள் இருக்கிறன. ஒன்று, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நிஜக் குறிப்பு போல இது தரப்பட்டிருக்கிறது. ஆனால், குறிப்பின் பகுதியான தொழிலாளர் பாதையினர் பற்றிய குறிப்பு முழுப்பொய். ஷோபா சக்தியின் படைப்பாளுமையற்ற வறுமைக்கு அரசியல் ாீதியில் அவர்களை எதிர்கொள்ள முடியாமைக்கான அறிவு வறுமையிலான அவரது ஆத்திரமூட்டி கவனம் பெறும் மனோ வக்கிரதத்திற்கு இன்னுமொரு சான்று இக்குறிப்பு. மற்றது பல்வேறு சந்தர்ப்பங்களில் கொலையுண்ட ஈழமக்கள் பற்றிய குறிப்புகள் வருகிறது. இவைகளும் பொய்யாகிப்போகிற ஆபத்து இவ்வாறான நாவல் சொல்நெறியால் உருவாக்கப்படுகிறது. ஷோபா சக்திக்கு ஒரு கேள்வி: ஈழத்தில் நடந்த கொலைகளும் பாலியல் பலாத்காரங்களும்  பொய்யா புனைவா ? அதற்குக் காரணமான வரலாறும் வரலாற்று மனிதர்களும் பொய்யா புனைவா ?. ஷோபா சக்தியின் நாவலின் சொல்நெறி யாருக்குச் சேவகம் செய்ய உருவாக்கப்பட்டது ? இந்த போலி தலித்தியருக்கு இன்னும் சில கேள்விகளையும் முன் வைப்பது நன்று. கன்னியாஸ்திரிகள் இந்தியாவில் எரித்துக் கொல்லப்பட்டது பாரதீய ஜனதாவின்மீது களங்கமேற்படுத்த ஆதிவாசிகளால் திட்டமிட்டுச் செய்யப்ட்டது என பாரதீய ஜனதா சொல்கிறதே; அது நிகழ்வா புனைவா ?

இன்றைய கோட்பாட்டுச் சரச்சைகளில் புனைவுக்கும் நிகழ்வுக்குமான இடைவெளி மறைந்துவிட்டது என்கிற விமர்சனமும் புனைவே நிகழ்வாகக் கட்டமைக்கப்படுகிறது எனும் விமர்சனம் உண்டு. அதாவது மொழியியல்  பாஷையில் குறியீடே குறிப்பானாக மாறிப்போவதான நிலை இது. ஊடகவியலாளரின் பாஷையில் பிம்பமே பொருண்மையாகிப் போவதான திரிபு இது. கார்ல் மார்க்ஸின் பாஷையில் சொன்னால் பிறழ்ந்த பிரக்ஞையே இன்று நிஜ பிரக்ஞையாக இருக்கிறது. இதன் அர்த்தம் பிரக்ஞையோ பொருண்மையோ நிகழ்வோ குறிப்பானோ இல்லை என்பது அல்ல. மாறாக இவை தலைகீழாக்கப்பட்டு பிரமையே நிஜமாக ஆகியிருக்கிறது என்பது தான் இதனது அர்த்தம். இந்தச் சர்ச்சைகள் அரசியல் அதிகாரத்தோடும் அதற்கு எதிரான போராட்டத்தோடும் தொடர்புடையது. இந்த நிஜத்தையும் நிகழ்வையும் பொருண்மையையும் மறுபடி தெளிவுபடுத்திக் காட்டத்தான் நடவடிக்கையாளன் சமூகப் பொறப்புள்ளவன் வேண்டும். ஆனால்  இதையே ஒரு வரலாற்று நிலையாக்கி இதையே ஒரு மனித நிலையாக்கி பொருண்மையையும் குறியீட்டையும் ஒன்றே எனச் சாதிக்கிற குழப்பியடிக்கிறவனின் நோக்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதன்றி வேறேதும் இல்லை. ஷோபா சக்தியின் மூச்சும் சரி பேச்சும் சரி ஆசான் அ.மார்கஸிலிருந்தும் சகத்தோழன் சாருநிவேதிதாவிலிருந்தும் தான் தொடங்குகிறன. தப்பான ஆசான்களுக்குத் தப்பாமல் ஜனித்திருக்கிற சீடன்.

ஓரு நாவல் அல்லது படைப்பு பற்றிய விமர்சனத்தில் ஏன் இவ்வளவு அரசியல் என்று எவருக்கேனும் சந்தேகம் வரக் கூடும். ஆனால் இலக்கியம் பற்றிய அரசியல் சர்ச்சையில் ஆசான் அ.மார்கசுக்கும் ஷோபா சக்திக்கும் சந்தேகம் வந்துவிடாது என நிச்சயமாகவே நம்புகிறேன்.

எனது வாதமெல்லாம் இரண்டு அடிப்படைக் காரணங்களை வலுவாகக் கொண்டது. ஷோபா சக்தியின் இந்த எழுத்து வகையும் சொல்நெறியும் படைப்பாற்றல் குறைந்த பின்நவீனத்தவ எழுத்துவகை என்பது ஒன்று. அதனோடு இந்த எழுத்து படைப்பாற்றல் குறைந்த அரசியல் கோட்பாட்டு வறுமை நிறைந்த ஒரு அரைகுறைப் பிண்டம் என்பதுதான் என் வாதம். இன்னும் இம்மாதிரி வகை எழத்துக்களின் ஆபத்தைச் சுட்டிக்காடடுவது ஒரு சமூகக் கடமை என்றே நான் கருதுகிறேன். நிஜத்தில் அ.மார்க்சும் சாருநிவேதிதாவும் ஷோபா சக்தியும் சுகனும் ஒரு வகையிலான அச்சத்தையும் கிலியையும் சக எழுத்தாளர்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கூசத் தகுந்த சொற்களில் இவர்கள் இவர்களை விமர்சிக்கறவர்களைப் பற்றி வன்மமாக எழுதுகிறார்கள். தனிமனித வாழ்வு என்பதே ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடாது என்பது மாதிரியிலான ஒரு அச்சததை எழுதுகிறவர்களுக்கு உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களை விமர்சனரீதியில் பாரக்கிறவர்களைத் தொடர்ந்து செல்லும் இவர்கள் அவர்கள் சாப்பாடுகிற சாப்பாட்டிலிருந்து சிறுநீர் கழிக்கப் போகிற இடத்திலிருந்து படுக்கையறைவரை ஒலிப்பதிவுக்கருவிகளையும் காமெராவையும் எழுதுகோலையும் கொண்டு திரிகிறார்கள். சாருநிவேதிதாவுக்கு ஆசான் அ.மார்க்ஸ் மம்மட்டி அப்புறம் கதைத்தோழன் ஷோபாசக்தி பார்த்திபன் அப்பறமாகத் தான் கதாநாயகன் கமல்ஹாஸன். இவர்களும் இவர்களது அடிப்பொடிகளும் தமிழ்சினிமா ரசிகர் சங்கம் கொண்ட கதாநாயகர்கள் மாதிரி என்கிறார்கள். மிக மிக நல்லது. இதிலொன்றும் நமக்குச் சர்ச்சைகள் இருக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் இவர்களோடு முரண்படுகிறவர்கள் விமர்சன உணர்வு கொண்டவர்கள் எல்லாம் ஜோதிலட்சுமிகள் பிந்து கோஸ்கள் நம்பியார்கள் ராமநாராயணன்கள்  மன்சூர் அலிகான்கள் என்கிற மாதிரியலான வில்லன்கள் விதுாஷகன்கள் கவர்ச்சி நடனக்காரிகள் என்பது இவர்களின் இலக்கியத் தகமைக்கு கோட்பாட்டுத் தெளிவுக்குச் சில சான்றுகள். இதுதாண்டா தலித்தியம் அதுதாண்டா பின்நவீனத்துவம் என ரஜினி பாணியில் அ.மார்க்ஸ் சொன்னாலும் சொல்லக்கூடும். என்னவானாலும் இந்த அயோக்கியத்தனத்தில்  இருக்கிற அதிகாரத்தையெலல்ாம் அ.மார்கஸ் கட்டுடைக்கமாட்டார்.

மற்றது நிச்சயமாக எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு எழுத்து வகைக்கு ஒரு கோட்பாட்டு உருவாக்கத்தையும் செய்த அவக்காரியத்தை அ. மார்கஸ் செ¢யது வைத்திருக்கிறார் என்பது பிரிதொன்று. சான்று சாருநிவேதிதாவின் நாவல் பற்றிய அ.மார்க்ஸின் கோட்பாட்டு வறுமை மிக்க அணுகுமுறை. அ.மார்க்ஸ் இலக்கிய அரசியல் செய்கிற நேர்மையற்ற சார்பாளர் எனபதில் ரகசியம் எதுவும் இல்லை.

அ.மார்க்ஸ்  வலியுறுத்திய சில கோட்பாடுகளின் அபத்தம் அவருக்கே எதிராக நின்றது. தலித் அல்லாத அவர் தலித்துகள் பற்றி தலித்துகள்தான் எழுதமுடியும் என்று வலியுறுத்தி வந்தது ஒரு முரண்நகை. தலித்தியரான ரவிக்குமார் அ.மார்க்ஸ் மீது வைத்த விமர்சனத்தையும் இங்கு நினைவு கூர விரும்புகிறேன். தானெனும் நோக்கு அ.மார்க்ஸிடம் நிறைந்து கிடக்கும் ஒரு போக்கென அவர் சொல்கிறார். அவர் சொல்வது மிகச்சரியானது. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள அ.மார்க்ஸ் தனக்குப் பாதகமான விஷயங்களில் கபடத்தனமான மெளனம் காப்பார். தனக்குச் சாதகமானதெனில் சிஷயர்களை சகட்டுமேனிக்குத் தாங்கிப்பிடிப்பார். காவச்சுவடு கண்ணனின் சில் அபத்தமான நடவடிக்கைகள் கூட கண்டு கொள்ளப்படாமல் போய்விட்டதற்கு அ.மார்க்ஸின் தடாலடி நடவடிக்கைகளே காரணம். இந்தியா டுடே விவகாரத்திலிருந்து புதுமைப்பித்தன்  விவகாரம் அப்புறம் தமிழினி மீதான அவதூறுகள் வரை அ.மார்கஸின் அதர்க்க அரசியலே இதற்குச்  சாட்சி. புகலிடத் தமிழர்கள் பற்றிப் பொதுவாக நல்லவிதமான அபிப்ராயங்களை தெரிவித்துக்கொண்டு அவர்களில் சிலர் மீதான சிஷ்யகோடிகளின் அவதூறுகளை மெளனமாக வாழ்த்திக் கொண்டிருந்தவரும் அவர்தான். வளர்மதியின் சண்டித்தனத்துக்கு ஊற்றுக்கண்ணும் அவர்தான். புகலிட பின்நவீனத்துவக் கொழுந்துகளின் சித்தாந்த பிதாவும் அவர்தான் என்பது சிதம்பர ரகசியம்.

தனிநபர்த்தாக்குதல்களை ஒரு விமர்சன நெறியாக ஆக்கியவரும் நிந்தனைச் சொற்களையும் ஆத்திரமூட்டுதலையும் விமர்சன நெறியாக ஆக்கியவரும் வலியறுத்தப்படவேண்டிய சமப்பாலுறவு போன்றவற்றைச் சுற்றி வழிபாட்டைக் கட்டமைத்தவரும் அ.மார்க்ஸ்தான்.

இதன் தொடர்ச்சியாகத்தான். மேற்கில் மிகச்சாதாரணமாக இருக்கிற திருமணத்திற்கு அப்பாலான பாலுறவு குடிப்பது போன்றவைகளை இவரது சீடர்கள் இங்கு சவலைத்தனமாக எதிர்கலாச்சார நடவடிக்கையாக முன் வைத்தார்கள். தமிழ் சமூகத்துள் இல்லாத கூட்டுக்கலவி போன்ற விந்தைக் கதைகளை எல்லாம் வலிந்து எழுதினார்கள். விமர்சனத்திற்குரிய பின்நவீனத்துவத்தை எல்லாப் பிரக்ஞையும் போலவே பிறழ்ந்த பிரக்ஞையாக ஆகிவிடும் அதனது பண்பை வரலாறு கடந்து சரியான ஒரே பிரக்ஞை என்று காட்ட இவர்கள் முயன்றார்கள். தலித்தியம் பற்றியும் பின்நவீனத்துவம் பற்றியும் எவர் எதைப்பேசினாலும் தன் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று விஷயங்களைத் திசை திருப்பினார் அ.மார்க்ஸ். இந்த அபத்தங்களின் உச்சமாகத்தான் காலச்சவடு கண்ணனும் மிகுந்த எள்ளல் வாய்ந்ததும் வன்முறைத் தன்மை கொண்டதுமான கட்டுரைகளை இன்று எழுத முனைவதும் நடக்கிறது..

அ.மார்க்ஸ் ஒரு பக்கம் இப்படியிருந்தாலும்  அவருக்கு இன்னுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பக்கமும் உண்டு. அது இந்திய புவியியல் அரசியல் எல்லைகளுக்குள்ளானது. அது வகுப்புவாதத்துக்கும் இந்துத்துவத்துக்கும் எதிரான அவரது சளையாத போராட்டம். இந்த விஷயங்களில் அவரைப் பொறுத்து புனைவுகட்கும் நிகழ்வுக்கும் இருக்கும் இடைவெளியைத் தெளிவாக உணர்நது கொண்டிருப்பது ஒரு சந்தோஷமான விஷயமாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் பாலான அவரது பாராட்டுணர்வு கொண்ட அணுகுமுறை – நடவடிக்கைகளில் அவர்களோடு இணைந்து செயல்படுவது போன்றவை அவரது நேர்மறையான பக்கங்கள். ஆனால் அதே வேளை சொந்தவாழ்வில் கடைந்தெடுத்த சனாதனிகளும் இனவாதிகளும் கேனத்தனமான அறிவிலி கம்யூனிஸ எதிர்ப்பாளர்களும் மார்க்சிஸ்ட்டுகளை அசட்டுத்தனமாக நையாண்டி செய்பவர்களும் சில தனிமனிதர்களுக்கு சதா வலிகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களும் எப்படி அவருக்குச் சீடர்களாக இருக்கிறார்கள் என்பதும் இவர்களின் சார்பிலான அவரது மெளனமும் அவரது தனிநபர் மோகத்தின் அரசியலன்றி வேறு எதுவாக இருக்க முடியும். ரவிக்குமார் சொல்கிறபடி தனது சுய முனைப்பக்காக அவர் சீடர்களை வைத்திருக்க முனைகிறார் தவறாக வழி நடத்துகிறார் என்பதுதான் உண்மை. அவரது சீடர்களின் நடவடிக்கைகளுக்கு புகலிட அதிகாரங்களை எதிர்த்த போராட்டத்தில் இங்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை. மூலைக்கு மூலை முளைத்துக்கொண்டிருக்கிற இந்துக் கோயில்களுக்கு எதிராக இந்துத்துவ மாநாட்டு அரங்குகளுக்குச் சென்று தம் கலாச்சாரக் குரல்களை எழுப்பியதற்கும் எதுவிதமான சான்றுகளும் இல்லை. தேசியத்தின் பெயரில் அதிகாரம் எழுப்புவர்களுக்கு எதிராக நடைமுறையில் ஏதும் செய்யவில்லை. மாறாக அதிகாரமற்ற தனிமனிதர்களை நரகல் நடையில் வைததும் அடுத்த மனிதரின் படுக்கையறைவரை சென்று ‘கலாச்சாரம் ‘ செய்ததும்  தான் இவர்களது தலித்திய நடவடிக்கை அல்லது எதிர்கலாச்சார நடவடிக்கையாக இருக்கிறது.

தப்புத் தப்பாக பின் நவீனத்துவத்தைப் புரிந்து வைத்திருப்பதால் வருகிற ஆபத்துகள் இது. நவீன ஊடகங்களின் புனைவை விமர்சிக்கப் புகுந்த போர்தியோ வளைகுடா யுத்தம் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் நடந்தது நிஜத்தில் நடக்கவேயில்லை என்றார். அதாவது பிம்பங்கள் நிஜமில்லை எனச் சாதிக்க முனைகிறாராம்.

வேறோரு வகையில் யூதக் கொலையும் வளைகுடா யுத்தக் கொலைகளும் நடக்கவேயில்லை என்றல்லவா வலதுசாரிகளும் பாசிஸ்ட்டுகளும் சொல்கிறார்கள். இதுவரை ஐந்துலட்சம் குழந்தைகள் ஈராக்கில் மரணமடைந்திருககின்றன. இன்றும்கூட வருடந்தோறும் ஆயிரக் கணக்கில்  குழந்தைகள் ஈராக்கில் இறந்து கொண்டல்லவா இருக்கிறது. போர்தியோவின் ஊடகவியல் பற்றிய பின்நவீனத்துவ ஆய்வு யாருக்குச் சேவகம் செய்கிறது ? நிஜத்தையும் புனைவையும் கலங்கடிக்கிற ஷோபாசக்தியின் எழுத்து வகையைப் பாரத்தவிட்டு எவரேனும் ஈழக் கொலைகள் அத்தனையும் புனைவு என்றும் சொல்கிற ஆபத்திருக்கிறது. அந்தோணியை அடுத்த இயேசுநாதர் ஆக்கும் புனிதக் கடமையில் ஷோபா சக்திக்கு புலன்களும் கூட மங்கிப் போகிறது. கொழும்பில் தலைவருக்கு எழுதிய கடிதத்தைச் சதா பாக்கெட்டில் வைத்த அலைகிறாராம் ரொக்கிராஜ் என்கிற அந்தோணி. அப்புறம் அவர் சித்திரவதைகளிலிருந்து தப்பி பிரான்சுக்கும் வந்துவிடுகிறராம். தினம் தினம் பாக்கெட்டில் தலைவருக்கான கடிதத்தை வைத்துக் கொண்டு கொழும்பில் திரிகிற ஒருத்தர் உயிர்தப்பி வருவதில்  உள்ள நம்பகத் தன்மையை வாசகர்களின் யூகத்துக்கே விட்டுவிடுவதுதான் நல்லது. தன்முனைப்பை நிலைநாட்டுகையில் பகுத்தறிவு வேலை செய்யாது என்பது பாலபாடம். என்னே துரதிருஷ்டம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனக் கருதி அவரைக் கைது செய்கிற ராணுவதத்தின் கண்களில் அவர் தலைவருக்கு எழுதிய கடிதம் அகப்படாதததுதான் மிகப் பெரிய ஆச்சர்யம்.

விடுதலைப் போராட்டம் சார்ந்த எழுத்துக்களை வாசகன் எந்த அக்கறைகளின் பொருட்டு இன்று தேடிப் போகிறான் ? கருத்தியல் நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன. போராட்ட முறைகள் திரிந்துவிட்டன. மனித உடலுக்குத் தீர முடியாத வேதனைகளை சித்திரவதை முறைகள் தந்திருக்கிறது. மீளமுடியாத உளவில் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. சொல்லமுடியாத வேதனைகள் சொல்லப்படமுடியாத தணிக்கை முறை வெளியில்- உள்ளில் என சுயதணிக்கை முறை நிலவுகிறது.

எழுதுவதற்கான முற்தெரிவுகளும் இருக்கிறது. எதை எழுதுவது எதை எழதாமல் விடுவது என்னும் பிரச்சினையும் இருக்கிறது. ஷோபா சக்தியின் நாவலின் கதை அமைப்பு (story structure) இரண்டு தாரைகளாக அமைகிறது. ரொக்கிராஜ் கொரில்லா அந்தோணி அல்லது ஷோபா சக்தி என்கிறவர் மீது சுமத்தப்படுகிற பாவங்கள் சிலவற்றிலிருந்து அவர் மீண்டு உயிர்த்தெழுவதற்கான (resurrection from the sins ) மீள் அமைப்பாக்கமாக இந்நாவல் இருக்கிறது. உதாரணமாக, திருட்டு, துரோகம் என்கிற இரண்டு குற்றங்கள் அவரைப்பிடித்து சதா ஆட்டிப் படைக்கிற மீளமுடியாத துயரங்களாக இருக்கிறன. வேதாகமத்தை விரும்பித் தேர்கிற ஒருவரின் உளவியலிருந்து உருவாகிற இந்த ஆன்மீக நெருக்கடியை ஒருவர் புரிந்து கொள்வதில் பிர்ச்சினையேதுமில்லை. கிறித்தவ நம்பிக்கையில் பத்துக் கட்டளைகளும் திருட்டும் துரோகமும் இறையியல் நம்பிக்கையாளர்க்குத் தருகிற துயரம் ஆற்றமுடியாதவை என்பத்ில் சந்தேகமில்லை.

மற்றது மேற்கில் வாழ்கிற ரொக்கிராஜின் அல்லது அந்தோணியின் சமகாலப் புகுதிகாளக நாவல் விரிகிறது. மேற்கில் முதலாளித்துவ அறிவுஜீவி உருவானபோது தனிநபர் உரிமைகள் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு உருவானபோது நாவலின் வளர்ச்சியும் தொடங்குகிறது என்பது வரலாறு.

இதில் இர்ண்டு முனைகள் உண்டு. தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி தன்னைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக்கொண்டவன் ஒருவன். தனது அனுபவங்களை பிறமனிதரோடு வைத்துப் பார்த்து ஒடுக்கு முறையிலிருந்து அனைத்து மனிதர்க்குமான மீட்சியைக் கோரியவன்  மற்றொருவன். இவன தனது உன்னதங்கள் துர்க்குணங்களை விறுப்பு வெறுப்பற்று விசாரணை செய்ததைப் போலவே தான் வாழும் காலத்திலிருந்த பிற மனிதரின் துர்ககுணங்களையும் உன்னதங்களையும் விசாரணை செய்தவன். தனது உன்னதங்களுக்காக பிற மனிதரைத் திட்டமிட்டு அவமானம் செய்கிறவன் கலைஞனோ படைப்பாற்றலோ கொண்டவன் இல்லை. மாறாக முதலாளித்துவத் தனிநபர் அகந்தையும் விகார சிந்தையும் கொண்ட அற்ப மனிதன்.

கோவிந்தனிடம் சகமனிதனை விடுவிக்கிற நோக்கம் இருந்தது. அரசியல் கருத்தியல் தரிசனம் இருந்தது. ஷோபா சக்தியிடம் தனிநபர் மோகமும் அரசியல் வங்குரோத்தும்தான் இருக்கிறன.

நாவலில் வருகிற மற்ற விஷயங்கள் – ரொக்கிராஜ் வாழ்வின் பின்புலமாக வருகிற காலம் இடம் போன்றன- பல்வேறு கொலைகள் இயக்க மோதல்கள் மின் கம்பக் கொலைகள் சித்திரவதைகள் புகலிட வாழ்வின் துயரம் போன்றவைகள் ஏற்கனவே இதயத்தைப் பிழியும்  வகையில் குமார்மூர்த்தியின் பார்த்திபனின் கதைகளில்  செழியனின் நாட்குறிப்புகளில்  கோவிந்தனின் நாவலில் மிகுந்த படைப்பாற்றலுடன் வெளியாகியிருக்கிறன. இன்னும் இயக்க நடைமுறைகள்- அவர் குறிப்பிடுகிற ரொக்கிராஜன் சார்ந்த விடுதலைப் புலிகளின் இயக்க நடைமுறைகள் – பிற இயக்கங்கள் போல் மக்களுக்கு ஏற்படுத்திய ரணங்களையோ- கோவிந்தனின் நாவல் பேசுகிற எவ்வாறாக இயக்கத்திறகுள் அதிகாரவர்க்கப் படிநிலையும் சந்தேகமுமே வாழ்நிலையாக முடியும் என்பது மாதிரியிலான ஒரு சித்தரிப்போ கொரில்லா நாவலில் துப்புரவாக இல்லை. நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் ரொக்கிராஜ் என்கிற அந்தோணி என்கிற ஷோபா சக்தி என்கிறவர் இயக்கத்தலைமைக்கு மிக மிக விசுவாசமாக இருக்கிறார். தொடரா நாவலின் முடிவிலும் அவர் அப்படித்தான் இருக்கிறார். இன்னும் கதை சொல்லிக்கும் அந்தோணிக்கும் நடக்கிற கொலைகள் பற்றின உரையாடல்களில் கூட அவரது இயக்க விசவாசம் இருக்கிறது.

நாவலுக்கு அப்பால் தொடரும் வாழ்வில் கூட அவரது பாக்கெட்டில் அவர் தலைவருக்கு எழுதிய கடிதம் இருந்து கொண்டுதான் இருக்கும். மீட்பருக்குக் காத்திருக்கிறமாதிரி அவர் தலைமையிருந்து தனது பாவங்களைத் துடைத்தெறியும் பதிலுக்காகக் காத்திருக்கவும் செய்கிறார்.

இயக்கத்தின்  அனைத்து நடவடிக்கைகளுக்கும் நியாயம் கற்பிக்கும் வகையிலான காரணகாரியத்தொடர்பும் நாவலில் ரொக்கிராஜின் விவரணங்களின்படி அமைந்திருக்கிறன. இயக்கங்கள் திரிவுபடுவதற்கு தனிநபர்களின் குணச்சித்திரங்கள் காரணமாக அமைவதில்லை. அவர்கள் தேர்நது கொள்கிற கருத்தியலும் நம்பிக்கையும்தான் காரணங்களாக அமைகிறன. இந்தக் கருத்தியல் தேர்வுடன் மனித விசித்திரங்களும் சேர்கிறபோது உன்னதர்களும் அதில் சில் வேளைகளில் வெளிப்படுவார்கள் விகாரங்களும் அவர்களிலிருந்து தோன்றக் கூடும். ஷோபா சக்தி இத்தகைய வெளிகளுக்கெல்லாம் பிரவேசிக்கவேயில்லை. துரதிர்ஷ்டவசமாக ஷோபா சக்திக்கு முன்பாகவே கோவிந்தன், செழியன், குமார்மூர்த்தி, பார்த்திபன், சிவானந்தன், ஒன்டாஜி போன்றவர்கள் அத்தகைய பரந்த வெளிகளில் ஏற்கனவெ பயணம் செய்திருக்கிறார்கள்.

ஷோபாசக்தி நான்காவது அகிலம் டிராட்ஸ்க்கி பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். சாருநிவேதிதா இலங்கைப்பிரச்சினை பற்றி எழுதிய மாதிரி இருக்கிறது இக்கூற்று. தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.பி.கே.எப். பற்றி சாநிக்கு ஆனா ஆவன்னா தெரியாதது மாதிரித்தான் இவர் சீன அகதிகள் இறந்ததுக்கும்  டிராட்ஸ்கியவாதிக்கும் முடிச்சுப் போடுகிறார். இரண்டு தகிடுதித்தர்களுக்கும் அரசியல் தெரியாது-கோட்பாட்டுச் சர்ச்சைகள் தெரியாது என்பதற்கு இது சான்று.

இவர்கள்  செயய்ககூடியதெல்லாம் கவனம் பெறவதற்காக ஆத்திரமூட்டுவதுதான். இந்தத் தடாலடி அணுகுமுறையையும் கோட்பாட்டுச் சர்ச்சைகளிலும் விவாதங்களிலும் இந்த முறையை அறிமுகப்படுத்தியதும் ஞசான் அ.மார்க்ஸ்தான். சீடர்கள் அவர் அடியொற்றி கொஞ்சம் கூடுதலாக மொட்டைக் கடிதாசிக் கலாச்சாரத்தையும் துண்டுப்பிரசுரக் கலாச்சாரத்தையும் புகலிடத்தில் வளர்த்திருக்கிநார்கள். இப்போது கெட்டியான அட்டைபோட்டு சகல அதிகாரங்களுடன் பிக்ஸன் என்று கொட்டை எழுத்தில் சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஏன் கொட்டை எழுத்தில் பிக்ஸன் என்று சொல்கிறார்கள். ? அதில் சந்தேகம் வந்தவிட்டதா என்ன ? இது மணிரத்னம்  சென்ஸாரை ஏமாற்ற இது உண்மைக்கதை அல்ல என்று கொட்டை எழுத்தில் போட்டுவிட்டு இருவர் படத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி கதையைச் சொன்ன மாதிரி இருக்கிறது. இது புனைவு அல்ல என்பதும் புனைவை நிஜமாக்கியும் நிஜத்தைப் புனைவாக்கியும் எழுதப்பட்ட பசப்பு எழுவது என்பதும் ஷோபாசக்திக்குத் தெரிந்ததால்தான் இந்த ஆரம்பச் சாதுர்யம் செய்திருக்கிறார்.

நாவலின்- செளகரியத்தக்காகத்தான் அப்படிக் குறிப்பிடுகிறேன்- முக்கியமான விரிவான பகுதி ரொக்கிராஜின் இயக்க மற்றும் சுயவாழ்வு பற்றியது. வட்டார வழக்கு நடையில் எழுதப்பட்ட பகுதி. வட்டார வழக்கு என்பது மக்களின் ஆதாரமான வாழ்வுக்கான மிகந்த நம்பகத்தன்மையையும் கதைக் கட்டமைப்புக்கு உயிரோட்டமும் தருவதுமாகும். நாவலின் முழுமை இதன் வழிதான் உருவாகிறது என்பது சாத்தியமான நிஜம் அல்ல.

நாவலில் மொழிவெளிப்பாட்டுத்திறன் என்பது ஒரு பகுதிதான். வட்டார வழக்குச் சொற்களில் அவ்வட்டாரத்தைச் சாராதவன் முழுக்க வாழ்ந்து அனுபவம் பெறுவது என்பது கடினம். நாவலோ கவிதையோ மொழிபெயர்க்கப்படுவது எத்துனை தூரம் துரோகம் என்று சொல்கிறோமோ அவ்வகையிலான கூற்று இது. ஆயினும் பூமணி, கி.ராஜநாராயணன், சண்முகசுந்தரம், ஆ.மாதவன் போன்றோரது வட்டார நாவல்களில் நாம் இறுதியாகத் தேர்ந்து கொள்வது அம்மொழிவழி வெளிப்படும் மனிதரின் வாழ்வையும் அது குறித்த சிக்கலில் வெளிப்படும் தீவிரத்தையும் தான். எந்த வாசகனும் தனது வட்டார மொழியல்லாத நாவல்களில் தேர்ந்து கொள்வதும் அதுதான். என்னளவில் நாவலின் கட்டமைப்புக்கு உறுதியான அடிப்படையை வழங்குகிற மொழியையும் தாண்டி அதன் வாழ்வுதான் முக்கியமாகப் படுகிறது. இப்பகுதிக் கதையில் ரொக்கிராஜின் தந்தையின் குணச்சித்திரமும் அவரது மனைவி மகள் இளைய மகன் போன்றோருக்கும் ரொக்கிராஜூக்கும் இருக்கும் உறவும் ஜீவனுள்ள பகுதியாக இருக்கிறது. இதனை வேறுவிதத்தில் நாவலின் சொல்நெறியின் அடிப்படையில் இப்படி விளக்கலாம்: சில நல்ல சிறுகதைகள் சேர்ந்து நாவலாக வடிவம் கொள்கிறது என்பார்கள். விஷ்ணுபரத்தில் கூட இவ்வாறான பற்பல ஜீவனுள்ள சிறுகதைகளை நாம் காணமுடியும். ஆனால், நாவலில் – சிறுகதைகள் என்று சொல்லப்படுகிற அல்லது அத்தியாயங்கள் என்று சொல்லப்டுகிறவற்றுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமை போன்றவற்றில் – காலத்திலும் குறிப்பிட்ட இடத்திலும் அந்த ஒற்றுமை வேற்றுமை போன்றவை பெறும்  அர்த்தத்தில்தான் முழுமையான கட்டமைப்புப் பெறுகிறது. விஷ்ணுபரத்தை எவ்வாறாக பிற உரையாடல் தவிர்த்த இந்துத்துவப் பண்பாட்டை முன்வைக்கும் நாவல் எனறு சொல்ல முடியுமோ அதே அளவு பிற மனிதர்களின் வலி தவிர்த்த தன்வலியை மட்டுமே முனைப்பாக முன்வைக்கிற அரசியல் ரீதியில் வலதுசாரித் தேசியத் தன்மை கொண்ட நாவல் என்று கொரில்லா நாவலைச் சொல்ல முடியும்.

விஷ்ணுபரம் ஆன்மீகப் போர்வையில் வலதுசாரி நாவல் என்றால் கொரில்லா அதிதீவிர இடது பின்நவீனத்துவ போலி தலித்தியப் பார்வையில் விளைந்த வலதுசாரித் தேசிய நாவல் என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்.

இன்னும் இதை விளக்க வேண்டுமானால். மிகப் பழைய பழகிய உதாரணமொன்றை ஹாலிவுட் சினிமா மரபிலிருந்தும் தமிழ் சினிமா மரபிலிருந்தும்- மிட்டா மிராசு படததில் வருக்ிற பண்ணையாரின் குணச்சித்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அமர்க்களம் படத்தில் அஜீத்தின் தாய் தந்தையராக வருகிறன்றவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்- தன்னுடைய குணச்சித்திரத்தை உன்னதப்படுத்திக் கொள்வதற்காக தன்னுடன் பிறந்தவர்கள் தாய் தந்தையர் அல்லது மகன்கள், நண்பர்கள், தோழர்கள் போன்றோரின் கேடுகெட்ட குணங்களை மிக வெளிப்படையாகச் சித்தரிப்பதென்பது இயற்பண்புவாத அடிப்படையிலான ஒரு விவரண முறை. இந்த விவரண முறையில் கதையின் மையமான மனிதனின் கேடு கெட்ட குணச்சித்திரங்கள் வெளியாவதில்லை- மாறாக அவனது குணச்சித்திரத்தை ஒப்பீட்டளவில் உயர்த்திக் கொள்வதற்கான பிற சொந்த மனிதரின் கேடுகெட்ட குணச்சித்திரங்கள்தான் சித்தரிக்கப்படுகின்றன. தன்மூப்பின் இன்னொரு வடிவம்தான் இத்தகைய சித்திரிப்பு. இதன் மூலமும் அனுகூலமடைவது கதையின் மைய மனிதன் தானேயொழிய பிற மனிதர்கள் அல்லர். தனது நடவடிக்கைளுக்கு பண்ணிப் பண்ணிக் காரணம் சொல்கிற ஒரு மனிதன் பிற மனிதரை- அவ்ரகளது எதிர்மறை குணங்களை உள்ளது உள்ளபடியே சித்திரித்து விட்டுவிடுவுது ஒரு வகையிலான படைப்பு மோசடி.

இந்த பிரதியின் படைப்பாலற்ற தன்மையை இதன் சொல்நெறி குறித்த பிரக்ஞைபூர்வமான தர்க்க வகையாகச் சொல்லலாமா அல்லது ஷோபாசக்தியின் எழுத்துப்பயிற்சி சார்ந்த ஆரம்ப நிலைக் கோளாறாகக் காணலாமா என்கிற பிரச்சினை இங்கு வருகிறது. ஆரம்பநிலை விஷயங்களாக எழுத்துப் பயிற்சி சார்ந்த விஷயங்களாகக் காண்பதில் நியாயமில்லை என் பதை அவரது கதைகளைத் தொடர்ந்து வாசித்து வந்திருப்பவர்கள் அறிவர். எக்ஸில், அம்மா சஞ்சிகைகளில்  அற்புதமான கதைகளை அவரது புகலிட எழுத்துவாழ்வின் ஆரம்பத்தில் எழுதியிருக்கிறார்.

அ.மார்க்சின் கோட்பாட்டுப் போதனைகள் சீடர்களின் அறைகுறைப் பின் நவீனத்துவப் புரிதல் சாருநிவேதிதாவின் சவடால்களை ஆதரித்து நிற்பது எல்லாம் தோன்றியபின் ஷோபாசக்தியின் படைப்பில் வறுமையும் வன்மமும் அரசியல் குசும்பும் குடிகொள்ளத் தொடங்குகிறது.

இலக்கிய தனிநபர் சர்சசைகள் போன்றனவெல்லாம் கதை என்ற சொலலப்படுகிறவற்றுக்குள் அவர் அநாவசியமாகத் திணித்து எழுதத் தொடங்கினார். சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவர் கதைகளுக்குள் யமுனா ராஜேந்திரனும் வருவார் கலாமோகனும் வருவார் அவரோடு முரண்பாடு கொள்கிற யாரும் வருவார்கள். அவரது விகாரமனம் அவருக்குள்ளிருந்த படைப்பாளியை இப்படித்தான் கொன்றது. மனிதர்கள் உயிருடன் இருக்கும் போதே அயோக்கியத்தனமான கல்வெட்டுக்களை புனைவுத் தன்மை கொண்டதாக எழுதத் தொடங்கினார் (நிச்சயமாக இவர் இயக்கத்தலைவருக்கான கடிதத்தை புகலிடத்தில் பாக்கெட்டுக்கள் வைத்துக் கொண்டு திரிகிறார் என நம்பலாம்). அதாவது புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையிலான தர்க்கத்தை இவர்  அழிக்கத் தொடங்கிய காலம் இதுதான். இம்முறை இவர்கட்கு மிகச் சாதகமாகத்தான் இருந்தது. இவர்களது மனோ விகாரங்களை வெளிப்படுத்தத் தக்க எழுத்து வகையாக இது ஆகியது. இவர்களது கோட்பாட்டு அரசியல் வறுமையை மறைக்க இது தோதான வடிவமாக இருந்தது. அப்போதுதான் பின்நவீனத்தவம் என்கிற புரியாத சரக்கை தத்துபித்தென்று பேசிக் கொண்டிருந்த சாருநிவேதிதா (இவருக்கு உலகத்தில் தெற்கு அமெரிக்காதான் இருக்கிறது என்ற நினைப்பு- கிழக்கு ஐரோப்பா ஆப்ரிக்கா மத்தியகிழக்கு நாடுகள் அப்புறம் அக்டோபர் புரட்சி போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இந்த உலகத்தில்தான் இருக்கிறது என்று யாராவது இவருக்குச  சொன்னால் தேவலாம் -எல்லாம் தமிழனே தலை விதி) இவருக்கு கோட்பாட்டாசிரியராகவும்  போதனாசிரியரும் அவர்வழி குமுதத்தில் புளகாங்கிதப்படுகிறபடி பேர் உதிர்க்கிற அவாக்களுக்கெல்லாம் ஆளானார். அங்கீகாரம் பெற புழக்கடை வழிதான் சரியான வழி என்றும் நம்பினார். இதற்கு மிகச் சரியான வழிமறையாக இவர் தேர்ந்தததுதான் இந்தச் சொல்நெறி. இப்படி எழுத அரசியலும் தேவையில்லை கருத்தியலும்  தேவையில்லை. வரலாறும் தேவையில்லை. படைப்பாற்றலும் தேவையில்லை எழுத்து நேர்மையும் தேவையில்லை.

சவடால்கள் இத்துடன் நிற்கவில்லை. பிரதியின் ஆரம்பத்தில் மேற்கோள் ஒன்ற இருக்கிறது. அந்த மேற்கோளுக்கும் நாவலுக்கும் என்னப்பா சம்பந்தம் ? அந்த மேற்கோள் தெளிவாக இருக்கிறது. நாவலில் அப்படித் தெளிவான சமாச்சாரம் எதுவுமே தென்படவில்லையே என்ன செய்ய ? அப்புறமாக ஹெலன் டெமூத்துக்கு ஒரு சவடாலுடனான சமர்ப்பணம் இருக்கிறது.

ஹெலன் டெமுத்  பிரச்சினையைப் பற்றி ஞானி தொடங்கி என் வரையிலும் மிக நீண்டதாகக் கட்டுரைகள் எழுதியாகிவிட்டது. அப்புறமாக காலஞ்சென்ற தொ.மு.சி.ரகுநாதன், மு.பொன்னம்பலம், சிவசேகரம் உள்பட விவாதங்களும் நடத்தியாகிவிட்டது. இதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே – அரை நூற்றாண்டுகள் முன்னதாகவே- யுவன்னா காப்  மற்றும் ஷீலா ரோபோத்தம் போன்றோர் விரிவாக இது பற்றி கார்ல் மார்க்ஸின் செல்ல மகளான எலியனார் மாரக்ஸ் பற்றிய நுாலில் எழுதியிருக்கிறார்கள். அப்புறமாக ஸ்டாபன் ஸ்பெண்டர் நடத்திய என்கவுன்டரிலும் லண்டன் நியூ லெப்ட ரிவியூவிலும் இது பற்றி நீள நீளமாகக் கட்டுரைகள் வந்திருக்கிறன.. கூட்டத்தில் குடிப்பது மேடையில் சீமாறு செருப்பு வைப்பது மாதிரி – ஸர்ரியலிஸட்டுகள் கலக நடவடிக்கையாக கக்கூசில் பல பத்தாண்டுகளுக்கு முன்பு ஓவியக் கண்காட்சி நடத்திய பாரிஸிலிருந்து – எதையும் ரொம்பவும் லேட்டாகச் செய்கிற அசட்டுத் தமிழ்ப் பின்நவீனத்துவவாதிகளைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. சீடர்களுக்குத் தான் தெரியவில்லை¢ ஆசானுக்குமா புரியவலேலை ?

நாவலின் பூரண விநியோகஸ்தர் கவிசுகன் பற்றியும் அவரது கோட்பாட்டறிவு மற்றது விமர்சனங்களை எதிர்கொள்கிற தகைமை பற்ற்ியும் சொல்லவேண்டும். சாருநிவேதிதா குழந்தைப் பாலியல் பலாத்காரம் கொண்ட குற்றத் தன்மை கொண்ட எழுத்தை எழுதுகிறார் என்பது என் விமர்சனம். சில நாடுகளில் இதற்கு மரணதண்டனையே இருக்கிறது எனபது எனது கட்டுரையின் துணைச்செய்தி.

அதற்காக கொரில்லா நாவல் விமர்சனக் கூட்டத்தில் யமுனா ராஜேந்திரன் மீது மரணதண்டனையை ஆதரிக்கிறார்  எனக் கண்டனத் தீர்மானம் கலாச்சாரவாதிகளால் கொண்டுவரப்பட வேண்டும் என்கிறார் இந்தப் போலி தலித்தியர் (அதை நிராகரித்த அறப்பண்பு கொண்ட நண்பர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்) இப்படி இவர் நின்று சொல்கிற பாரிஸ் நகரில்தான்  சில ஆண்டுகள் முன்பு தமிழ்க் குழந்தையொன்று பாலியற்பலாத்காரவாதிகளால் கொல்லப்பட்டது. இவரது அண்டை நாடுகளான ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் இப்படியான குழந்தைக் கொலைகள் வெகுஜனங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறன. நான் இந்தப் பிரச்சினையின் பயங்கரம் சாருநிவேதிதாவின் சமூகவிரோத எழுத்தில் இருக்கிறது என்கிறேன். இந்த சின்னக்கதையாடல் பின் நவீனத்துவ மேதை தும்பைவிட்டுவிட்டு வாலைப்பிடிக்கிறார். ஒரு சமூக விரோத எழுத்தை விட்டுவிட்டு சுட்டுகிற விரல்களை ஒடியுங்கள் என இயக்கம் கேட்கிறார். இவரைத் தலித்திய பின்நவீனத்துவ தலித்தியராக இவர்களது ஆசான் தமிழகத்தில் வேஷம்கட்டிக் காட்டமுனைவது படுகேவலமான நடத்தையாகும். கடைந்தெடுத்த மார்கசீய விரோதிகளான கோட்பாட்டு படிப்பற்ற இவர்களை ஜனநாயக விரும்பிகளாக தமிழகத்தில் வேஷங்கட்டி அவர்களுக்கு அடைமொழிகளும் கொடுத்து விற்பது அப்பட்டமாக ஆபாச அரசியலாகும்.

இன்னும் சில சீடர்களின் கலாச்சார அணுகல்முறை மிகுந்த விநோதமான தன்மை கொண்டதாகும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வது நம் சமூகத்தில் இருக்கிறதுதானே – இதை இப்படியிருக்கிறது என எழுத்தில் வைப்பது என்ன குற்றம் என்றெல்லாம் சில சீடகோடிகள் கேட்கிறார்கள். இவர்களது அறவியல் உளவியல் நிலைபாடுகளை நினைக்க நடுக்கமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது.

பின் நவீனத்துவத்தையும்  சமூக விரோதிகளையும் சார்ந்து நிற்கப் போன இவர்கள் வந்து நிற்கிற அறமற்ற உளவியல் வெற்றிடத்தை நினைக்கப் பயமாக இருக்கிறது. கொலைகள் நடக்கிறது எனக் காண்பிக்க இனி எவரேனும் பாரிஸ் சதுக்கத்தில் கொலை செய்வதை நிகழத்திக் காட்டலாம். பாலியல் பலாத்காரம் நடக்கிறது எனக்காட்ட இனி எவராவது இலக்கியச் சந்திப்பில்  பலாத்காரத்தை கலை அரங்கேற்றம் எனப் போஸ்டர் அடித்து ‘குடிவகைகள் பரிமாறப்படும் ‘ என்கிற அழைப்புடன பலாத்காரம் செய்யலாம். இதற்கான மிகுந்த தர்க்கபூர்வமான அடிப்படையில் மொழி ஆளுமையுடன் எவரேனும் பிரசுரம் எழுதலாம். அதில் நீட்ஷே, பூக்கோ போன்றோரின் மேற்கோள்களும் எழுதப்படலாம். அறிவு வறுமையே அறிவுடமை எனக் கோலோச்சிக் கொண்டிருக்கிற புகலிடச் சுழலில் இவர்களது எழுத்தக்ளை உலக இலக்கியத்தின் கொடுமுடிகளின் பிறப்பிடம் என்றெல்லாம்  பதிப்பாசிரியர் எழுவது உற்சாகத்தின்  பொருட்டாயினும் அது அதீதம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது

ஷோபா சக்தி கறுப்பர்கள் அரேபியர்கள் வங்காளிகள் பற்றிய தனது இனத்துவேஷத்தை வெளிப்படையாக முன் வைத்திருக்கிறார்; அப்புறமாக இந்துக்களுக்கு எதிராக கிறித்தவப் பாசிசத்தை (இதைச் சரியானது என வாதிக்கிற கோட்பாட்டாளர்கள் இருப்பது ‘அட்றா சக்கை ‘ எனும் அளவில் நாவலாசிரியன் ஷோபாசக்திக்கு அனுகூலம்) என்று வாசகப் பார்வையொன்றுண்டு. இவ்வாறான அவதானங்களைத் தருவதற்கு இந்நாவல் முகாந்தரம் கொண்டிருப்பதான சொல்நெறிதான் இந்தப் பிரதியின் விஷமப் பகுதியும் என்று சொல்கிறேன்.

ஷோபாசக்தி பற்றிச் சொல்லியிருப்பது நேர்மையானது நிஜமானது எனில் கலாமோகன் பற்ற்ி தொழிலாளர் பாதை டிராட்ஸ்கியவாதி பற்றிச் சொல்லியிருப்பது நேர்மையானதா நிஜமானதா என்பதுதான் கேள்வி. பதில் எவ்வகையதானாலும் அனுகூலம் நாவலாசிரியன் ஷோபா சக்திக்கு உரியதுதான். நிஜத்திலும் புனைவிலும் ஷோபாசக்தி உன்னதன். நிஜத்திலும் புனைவிலும் பிறர் அயோக்கியன்கள். இந்தக் கழிசடைத்தனந்தான் இந்தச் சொல்நெறியின் அவமானகரமான பக்கம் என்று சொல்கிறேன். ஏனெனில் பிரதியில் ஷோபா சக்தியின் தானின் மறுதலை- நாவலாசிரியனுக் தான் சார்ந்த பிரச்சினையின் இன்னொருபக்கம் இருக்கிறது. பிற மனிதர் சார்ந்து அவர்களின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்துவதற்கான வெளி இந்த மூடுண்ட பிரதிக்குள் இல்லை. இதைப் பிரதி உருவாக்குகிற அதிகாரம் அல்லது சிந்தனை மறுப்பு பாசிச நிலை என்று சொல்லலாம்.

பிரதிபற்றிய விமர்சனத்தை ஏன ஷோபா சக்தி என்கிற படைப்பாளி பற்றிய விமர்சனமாக ஆகியிருக்க்ிறது எனும் சந்தேகம் ஒருவருக்கு வரலாம். இந்தக் கேள்வியை அதன் அடிப்படையான அர்த்தத்தில் எழுப்பலாம் என்பதை அநேகமாக ஷோபாசக்தி ஒப்பக் கொள்ள மாட்டார் என நினைக்கிறேன். அவர் இந்த நாவலுக்கு உரிமை கோருவதனின்று பின்வாங்கப் போவதில்லை. ஏனெனில் ஷோபாசக்தி என்கிற அந்தோணியின் பிரச்சினைதான் நாவலில் இருக்கிறது.

அவரது புனைவல்லா எழுத்துக்களையும் வாதப் பிரதிவாதங்களையும் அறிந்தவர்ககு இது சாதாராணமாக விளங்கிக் கொள்ளக் கூடிய உண்மை. இன்னும் புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பதுதான்  இத்தகைய எழுத்து வகையின் அடிப்படை நிலைபாடு.

இவ்வகையில் இத்தகைய நாவல்களை மதிப்பிடுவதற்கு இந்த நாவல்களை எழுதிய படைப்பாளிகளையும் கட்டாயம் விமர்சனத்திற்கு உட்படுத்தித்தான் தீரவேண்டும். ஏனென்ிவ் நேர்மையற்ற முறையிவ் தன்னைப் பற்றிய பிரமைகளை இந்தப் பிரதியின் வழி நாவலாசிரியன் கட்டியெழுப்ப முடியும் என்பதுதான் அதன் காரணம். அதே வகையில் பிற மனிதர் மீதான சமநிலையற்ற அவதுாறுகளையும் ஒருவர் நிஜம் போல் வைக்க முடியும் என்பதும் பிறிதொரு காரணமாகும். ஆகவே, இக்கட்டுரையில் வெளிப்படும் விமர்சன முறை என்பது தனிநபரின் மீதான விமர்சனமல்ல மாறாக புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையிலான உறவை இல்லாததாக்கி பிரதியில் உள் வெளியென ஒன்றியிருக்கிற தானெனும் நபரின் – ஆசிரியனின் – மீதான விமர்சனமாகும். இத்தகைய பிரதியின் சொல்நெறிதான் இத்தகைய விமர்சன அணுகுமுறையையும் கோருகிறது.

தீராத வேதனைகளை உடலுக்கும் தீராத ரணங்களை மனத்துக்கும் தந்திருக்கும் வன்முறை நிறைந்த பிரச்சினகளை எழுதுவதற்கு இந்நாவல் முன்வைத்திருக்கும் சொல்நெறி கபடத்தனமான சொல்நெறியாகும். அழிவும் பாலியல் பலாத்காரங்களும் அரசியல் படுகொலைகளும் ஆவணங்களாகத் திரட்டுப்பட்டு பதியப்பட்ட ஒரு வரலாற்றைச்  சொல்ல இந்நாவலின் சொல்நெறி போதுமானதல்ல. கருத்தியல்கள் சிதைந்து போன மிகச் சிக்கலான இன்றைய உலகையும் வாழ்வையும் எழுதுவதற்கான சொல்நெறி நிச்சயமாக இந்நாவல் முன்வைக்கும் சொல்நெறி அல்ல. நிகழ்வைப் புனைவாகவும் புனைவை நிஜமாகவும் ஆக்கியிருக்கும்  இன்றைய அதிகாரங்களை விலக்கிப் பார்க்கிற- நிகழ்வையும் புனைவையும் நிதானத்துடன் ஆழச் சென்று வேறுபடுத்துகிற சொல்நெறியே இந்நாவல் எடுத்துக் கொள்ளும் பிரச்சினைக்கும் வாழ்வுக்கும் நியாயம் செய்யும்  சொல்நெறியாகும். தனிநபர் குரோதங்களுக்கும் பாலியல் விகாரங்களுக்கும் பிளவுண்ட உளவியல் கெர்ண்ட சமகால முதலாளித்துவ தனிநபர் மூப்பாளனின் தன்மூப்புக்கு வடிகாலாகவும் திகழ்கிற இச்சொல் நெறி இந்நாவலில் செயல்பட்டிருப்பது இந்நாவல் பேசும் மனிதர்களுக்குச்  செய்கிற மிகப் பெரிய வரலாற்றுத் துரோகமாகும

அழகியல் கருத்தியல் அடிப்படைகளிலிருந்து நோக்குகிறபோது இந்நாவல் பிற மனிதருக்கான இயங்கும் சுதந்திரத்தை பிரதிக்குள் ஆசிரியனின் வன்மமான அதிகாரத்தினால் இழந்திருக்கிறது என்பதால் (நாவலின் இரணடாம் பகுதியில் கதையின் காலப் பகுதியின் வட்டாரவழக்கு செம்மையாகப் பாவிக்கபப்ட்டதால் இது செம்மையான நாவல் என்பதை ஏற்கமுடியவில்லை- வேண்டுமானால் ஈழ நாவல்கள் எழுதுமுறையில்  இதற்கிருக்கும் முக்கியத்துவத்தை வேண்டுமாயின் ஒப்புக் கொள்வது சரியாயிருக்கும்) இந்நாவல் ஒரு படைப்பாற்றலற்ற நாவலாகும். அரசியல் எனும் அளவிலும் இயக்கத்தின் அதிகாரப் படிநிலைகள் பற்றிய தலைமை பற்றிய தேசியத்தின் அவப்பக்கம் பற்றிய எந்தவிதமான தீவிரமான கருத்தியல் மற்றும் அமைப்புசார் விமர்சனங்களையும் வாசகர்களிடம் எழுப்பத் தயங்குவதால் இது அரசியல் ரீதியிலும் வரலாற்றின் முன்னோக்குக்கு எதிர்த்திசையில் நிற்கும் வலதுசாரித் தேசியத் தன்மை கொண்ட நாவலாக நிற்கிறது.

——————————–

5 ஜனவரி 2002

லண்டன்

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்