கொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

ஹெச்.ஜி.ரசூல்



கொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றிய
உபாயங்களைக் கண்டறிய
வெற்றுடம்போடு காத்திருக்கிறேன்
பூமி விசித்திரமாய் தன்னை நனைத்துக் கொள்ள
தொடுதல்களில் விரிகிறது சிலிர்ப்பு.
உள்ளுக்குள் ஊறும் சூட்டின் ஆவியை
மாயமான கதிர் கொம்புகளால் கிழித்தும்
பிறக்குமொரு சமன் குலைவு
உறைந்த பனிச்சிலைகளாய் உருமாற
உடல்களற்ற உடல்களோடு எரிகிறது காற்று.
இன்றிரவின் உரக்கத்தைக் கலைத்துவிட்ட
சந்தோஷமிகுதி எங்கும் தொடர
குழந்தையின் அழுகை விடாது
எங்கிருந்தோ கேட்க கேட்க
மாசிப்பனி விடாது பெய்கிறது என்மீது
எந்தப் பாதங்களுக்கும் தெரியவில்லை
வெலவெலவென் விறைத்து நடுங்கும்
தன் காலடியின் கீழ் துடித்துக் கொண்டிருக்கும்
ஏதோ ஒன்றின் மிதிபடுதலின் வலிபற்றி
இரவின் தவம் முடிய கொடும்பனியில்
எப்போதும் நனைந்து கொண்டிருக்கும்
பெரண்டைக் கொடிகளும் கேட்பதில்லை
ஒரு கம்பளிப் போர்வையை
உன் பதட்டம் தணியாத பொழுதின்றில்
அந்த திரைச் சீலையை விரித்துப் போட்ட
பனி இரவின் கைகளில்
சில பொம்மைகள் உடைபட்டுக் கிடக்கின்றன.
விடிந்ததும் விலகிப்போன திசை தேடி
நீயும் நானும் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
கொடும்பனி இரவிலிருந்து தப்பிக்க
இரவினுள்ளிருந்தே ஒரு பகலை உண்டாக்குகிறேன்.
படைத்தலின் பேதம் கலைந்தபோது
மீளமுடியாத குளிர் பள்ளத்தாக்கில்
தலைகீழாய் தொங்குதல் திரும்பவும் நிகழ்கிறது.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்